You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பி.சுசீலா: 70 ஆண்டுகளாக இனிமையான குரலால் மக்களை ஈர்த்துவரும் 'மெல்லிசைப் பாடகி'
- எழுதியவர், பாமார்தி ஹேமசுந்தர்
- பதவி, பிபிசிக்காக
தனது தேன் போன்ற இனிமையான குரலுடன் பின்னணி பாடகி பி. சுசீலா பல்வேறு பாடல்களைப் பாடி, நமது மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார். 'தென்னகத்தின் பாடகி' என்று அன்பாக அழைக்கப்படும் சுசீலா, 70 ஆண்டுகளுக்கும் மேலான தனது திரையுலக வாழ்க்கையில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்.
அவரது பாடல் தாயின் மடியில் படுத்து தாலாட்டு கேட்பது போல நம்மை தூங்க செய்திருக்கிறது. சோகம், மோகம், ஊக்கமூட்டுதல், பக்தி, பரவசம் என எந்த ஒரு உணர்வாக இருந்தாலும் அவரது குரல் எல்லா பாடல்களுக்கும் பொருத்தமாக இருக்கும். எந்த ஒரு குறிப்பிட்ட உணர்வையும் அவரது குரல் மூலம் கடத்தும் பண்பு அவருக்கு உண்டு.
இன்று (நவம்பர் 13) பி. சுசீலா தனது 89வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 90 வயதில் காலடி வைத்திருக்கும் அவர் இன்னும் கூட இசைத்துறைக்கு அவரது அற்புதமான பங்களிப்பு பாராட்டுக்குறியதாக இருக்கிறது.
தமிழ், தெலுங்கு மட்டுமின்றி, கன்னடம், மலையாளம், ஹிந்தி, பெங்காலி, ஒரியா, சமஸ்கிருதம், துளு, படாகா, சிங்களம் என 12 மொழிகளில் சுசீலா பல பாடல்கள் பாடியுள்ளார்.
இசை வாழ்க்கையின் தொடக்கம்
1935-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13-ஆம் தேதி அன்று விஜயநகரத்தில் வழக்கறிஞர் புலப்பாக்க முகுந்த ராவ் என்பவருக்கு மகளாக சுசீலா பிறந்தார்.
அவர் ஒரு இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை ஒரு வயலின் கலைஞர் ஆவார். இதன் காரணமாக சுசீலா சிறுவயதிலேயே கர்நாடக இசையில் பயிற்சி பெற்றார். அவரது தந்தை அடிக்கடி இசை அறிஞர்களையும், கலை விமர்சகர்களையும் அவரது வீட்டிற்கு அழைத்து வருவார்.
அவரது மகளான சுசீலா பிரபல பாடகி எம்.எஸ். சுப்புலக்ஷ்மி போல கர்நாடக இசையில் சிறப்படைய வேண்டும் என்பதே அவரது ஆசை. ஆனால் சுசீலாவுக்கு திரை இசையின் மீதே ஆர்வம் இருந்தது.
பள்ளி பருவத்தில் அவர் பல்வேறு பாட்டுப் போட்டிகளில் பங்கேற்றார். அவரது வீட்டில் இருந்த அலமாரிகள் அனைத்தும் பரிசு பொருட்களால் நிறைந்திருந்தன.
விஜயநகரத்தில் உள்ள மகாராஜா இசை மற்றும் நடனக் கல்லூரியில் இசைத் துறையில் அவர் டிப்ளமோ படித்தார்.
கலை உலகில் தனக்கு பத்தாண்டுகளுக்கு முன்பே வந்த லதா மங்கேஷ்கரின் பாடல்கள் சுசீலாவை மிகவும் ஈர்த்தது.
1950-ஆம் ஆண்டு நடந்த ஒரு வானொலி போட்டியில், சுசீலா பாடிய பாடலே அவரது இசை வாழ்க்கையின் தொடக்கமாக அமைந்தது.
பி. சுசீலாவின் முதல் பாடல்
திரைத்துறையில் பாடகியாக பி. சுசீலாவின் முதல் பாடலாக , 'எதுக்கு அழைத்தாய்?", என்ற பாடல் அமைந்தது.
1952-ஆம் ஆண்டு இசையமைப்பாளர் பெண்டியாலா நாகேஸ்வரராவ் தனது புதிய படமான ‘பெற்றதாய்' படத்தில் பாட ஒரு புதிய பாடகர்களைத் தேடிக்கொண்டிருந்தார்.
அப்போது வானொலியில் சுசீலா பாடிய பாடலைக் கேட்டு அவருக்கு பாடுவதற்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார். நாகேஸ்வர ராவ் இசையில், ஏ.எம். ராஜாவுடன் இணைந்து இந்த பாடல் பாடி சுசீலா திரைத்துறையில் அறிமுகமானார்.
ஏற்கனவே திரைத்துறையில் ராவ் பால சரஸ்வதி தேவி, பி.லீலா, ஜிக்கி, எம்.எல். வசந்தகுமாரி போன்ற புகழ்பெற்ற பாடகிகள் இருக்கும்போது, அவர்கள் அனைவருக்கும் மத்தியில் சாதிக்க , மனதில் நீங்காமல் நிலைத்து நிற்கும் பாடல்கள் பாடுவதே சுசீலாவுக்கு அவசியமாக இருந்தது.
1956 முதல் 1980 வரை சுசீலா அதிகமான பாடல்களை பாடியுள்ளார். இந்த சமயத்தில் அவரது பாடல்கள் இல்லாத படங்கள் வெளியாவது அரிதாக இருந்தது.
1956-ஆம் ஆண்டிற்கு முன் சுசீலாவுக்கு சிறு படங்களில் மட்டுமே பாட வாய்ப்புகள் கிடைத்தது. 'எங்கள் வீட்டு மகாலட்சுமி' திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியானது. இரண்டு மொழிகளிலும் சாவித்திரிதான் இப்படத்தின் கதாநாயகியாக நடித்திருந்தார்.
சுசீலாவின் குரலிலும் சாவித்ரியின் நடிப்பிலும் 'ஆடி பாடி வேலை செஞ்சா' என்ற பாடல் மிகவும் பெரிய ஹிட் ஆனது.
பெங்காலி நாவலாசிரியர் சரத் சந்திர சாட்டர்ஜி எழுதிய 'நிக்சுருதி' என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் வெற்றி சுசீலாவின் வாழ்க்கையையே மாற்றியது.
தனது இனிமையான குரல், தெளிவான உச்சரிப்பு, நடிகைகள் பலருக்கு பொருந்திப்போகும் குரல் எனப் பல வகையிலும் சுசீலா சிறப்பான இசைக்கலைஞர் உருவெடுத்தார்.
சாவித்திரி, ஜமுனா, சௌகார் ஜானகி, வாணிஸ்ரீ முதல் ஜெயப்பிரதா, ஜெயசுதா வரை பல முன்னணி நடிகைகளுக்கு பி.சுசீலா பாடல்கள் பாடியுள்ளார்.
"சுசீலா எனக்கு மிகவும் பிடித்தமான பாடகி" – ரஹ்மான்
பெண்டியாலா நாகேஸ்வரராவ், சுசீலாவை திரைப்பட பாடகியாக அறிமுகப்படுத்தினார். ஒரு பாடலை உணர்ச்சியுடன் எப்படிப் பாடுவது என்பதை அவருக்கு இசைக்கலைஞர் கன்டாசாலா கற்றுக் கொடுத்தார்.
சாலூரி ராஜேஸ்வர ராவ், கே.வி. மகாதேவன் போன்ற இசையமைப்பாளர்கள் அவருக்கு மெல்லிசைப் பாடல்களைப் பாட வாய்ப்பளித்தனர். சினிமாவின் பொற்காலத்தின் போது பல இசைத்துறை பிரபலங்களுடன் பாடியது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்று சுசீலா கூறியிருக்கிறார்.
அது டூயட் பாடலாக இருக்கலாம், உணர்ச்சிபூர்வமான பாடலாக இருக்கலாம், தாலாட்டாக இருக்கலாம், காதல் பாடலாக இருக்கலாம், எல்லா உணர்ச்சிகளிலும் பாடி சுசீலா மக்கள் மனதில் தடம் பதித்திருக்கிறார்.
“நான் ரசிக்கும் பாடகி என்றால் அது சுசீலாதான்” என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஒருமுறை கூறியிருக்கிறார்.
"நான் இறப்பதற்கு முன் கதவை மூடிக்கொண்டு தனிமையில் சுசீலா பாடிய பாடலைக் கேட்க வேண்டும் என்பதே எனது கடைசி ஆசை", என்று திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து கூறியிருக்கிறார்.
இரண்டு தலைமுறை இசைக்கலைஞர்களுடன் பணிபுரிந்தவர்
சுசீலா ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு தலைமுறை இசைக்கலைஞர்களுடன் பணிபுரிந்துள்ளார்.
சுசீலா எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன் மட்டுமின்றி அவரது மகன் சரணுடனும் பாடியுள்ளார். கே.ஜே.யேசுதாஸ் மற்றும் அவரது மகன் விஜய் யேசுதாஸூடனும் இணைந்து பாடியுள்ளார். இளையராஜாவின் இசையிலும் அவரது மகன் கார்த்திக் ராஜாவின் இசையிலும் குரல்கொடுத்துள்ளார்.
அது மட்டுமின்றி நடிகை ஜெயசித்ரா மற்றும் அவரது தாயார் அம்மாஜி ஆகியோருக்கும் பல பாடல்கள் பாடியுள்ளார்.
மேலும் பாடகர்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியம் , எஸ். ஜானகியுடன் இணைந்து சுமார் 90 காதல் பாடல்களைப் பாடியுள்ளார். அதுமட்டுமின்றி சுசீலா எஸ்.பி. பாலசுப்ரமணியத்துடன் இணைந்து பல வெற்றிப் பாடல்களையும் கொடுத்துள்ளார்.
1970க்குப் பிறகு சினிமாவின் போக்கு மாறியது. இந்தக் காலக்கட்டத்தில் சுசீலாவின் உடல்நலம் குன்றியது, சமீபத்தில் கூட அவர் நோய்வாய்ப்பட்டு, குணமடைந்தார். ஆனால் 90 வயதை எட்ட இருக்கும்போது, அவரது பாடலில் உள்ள இனிமை சிறிதும் குறையவில்லை.
ஐந்து தேசிய விருதுகள்
இந்திய அரசு சுசீலாவுக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவம் செய்தது. சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான தேசிய திரைப்பட விருதை சுசீலா ஐந்து முறை பெற்று இருக்கிறார்.
ஒரு பாடகியாக, சுசீலா தமிழ்நாடு அரசின் விருதுகளுடன் சேர்த்து இன்னும் பல்வேறு விருதுகளையும் பாராட்டையும் பெற்றுள்ளார். அவர் ரகுபதி வெங்கையா நாயுடு விருதும் பெற்றுள்ளார்.
கின்னஸ் புத்தகத்திலும், ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்திலும் அவரது பெயர் உள்ளது.
2008-ஆம் ஆண்டு பி.சுசீலா அறக்கட்டளையை ஒன்றைத் தொடங்கினார். அதன் மூலம் இசைக்கலைஞர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதற்காக நிதி திரட்டுவதற்காக ஒவ்வொரு நவம்பர் மாதமும் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
மேலும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகளும் அந்த அறக்கட்டளையின் மூலம் வழங்கப்படுகின்றன.
பி.பி.ஸ்ரீனிவாஸ், எஸ்.ஜானகி, வாணி ஜெயராம், எல்.ஆர். ஈஸ்வரி, பி.ஜெயச்சந்திரன், எஸ்.பி.பாலசுப்ரமணியம், கே.ஜெ, யேசுதாஸ் போன்றோர் இதுவரை இந்த விருதினை பெற்றுள்ளனர்.
பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ள பி. சுசீலாவின் இசைப்பயணம் பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)