சென்னை - நாகர்கோவில், மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில்கள் எங்கு நிற்கும்? கட்டணம் எவ்வளவு?

மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில்

பட மூலாதாரம், RailMinIndia/X

படக்குறிப்பு, மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் தொடக்க நிகழ்வில் ஒரு காட்சி

பிரதமர் நரேந்திர மோதி இன்று (ஆக. 31) மூன்று அதிவிரைவு வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கிவைத்தார். மீரட் - லக்னோ, சென்னை எழும்பூர் - நாகர்கோவில் மற்றும் மதுரை - பெங்களூரு கண்டோன்மென்ட் இடையேயான மூன்று வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோதி காணொளி மூலம் டெல்லியிலிருந்து தொடங்கிவைத்தார்.

தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் பயன்பெறும் வகையில் இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதாக, இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

சொகுசு ரயில் பயணத்தை நோக்கமாகக் கொண்ட வந்தே பாரத் ரயில், ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் 2019-ம் ஆண்டில் முதன்முதலாக தொடங்கப்பட்டது.

தற்போது நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள், சுமார் 280 மாவட்டங்களில் இயக்கப்பட்டு வருவதாக, இந்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதிதாக தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் பயணிகளுக்கு உலக தரத்திலான பயண அனுபவத்தை வழங்கும் என, ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது.

வாட்ஸ் ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

“தமிழ்நாட்டில் இயங்கும் இரு ரயில்களும் மாநிலத்தில் மொத்தம் சுமார் 726 கி.மீ. தொலைவை கடந்து செல்கிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை ஆகிய 12 மாவட்டங்கள் வழியே இந்த ரயில் பயணிக்கும்” என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில், கன்னியாகுமரியில் உள்ள குமரி அம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் இந்த வந்தே பாரத் ரயில்களில் பயணிக்கலாம் என்று ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி வழியாக மதுரையிலிருந்து பெங்களூரு செல்லும் முதல் வந்தே பாரத் ரயில் இது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு பயனளிக்கும் வகையிலான சென்னை எழும்பூர் - நாகர்கோவில் மற்றும் மதுரை - பெங்களூரு கண்டோன்மென்ட் இடையேயான வந்தே பாரத் ரயில்கள் குறித்த சில முக்கிய தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

சென்னை எழும்பூர் - நாகர்கோவில் ரயில்

செப்டம்பர் 2-ம் தேதியிலிருந்து இந்த ரயில் (எண். 20627) வழக்கமான பயணத்தை ஆரம்பிக்கும். இன்று மட்டும் இந்த ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பயணத்தை தொடங்கியது.

வழக்கமான நாட்களில் காலை 5 மணிக்கு சென்னை எழும்பூரில் புறப்பட்டு மதியம் 01.50 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும். 724 கி.மீ தொலைவை இந்த ரயில், சுமார் 9 மணி நேரத்தில் கடக்கும். அதேபோன்று, நாகர்கோவில் ரயில் நிலைத்தில் மதியம் 2.20 மணிக்கு புறப்படும் ரயில் (எண்: 20628), இரவு 11 மணிக்கு சென்னை எழும்பூரை அடையும்.

எழும்பூர் - நாகர்கோவில் வந்தேபாரத் ரயில்

பட மூலாதாரம், RailMinIndia/X

எழும்பூர் - நாகர்கோவில் வந்தேபாரத் ரயில்

பட மூலாதாரம், RailMinIndia/X

வழக்கமாக, சென்னையிலிருந்து நாகர்கோவில் செல்ல பெரும்பாலான விரைவு ரயில்கள் சுமார் 11 முதல் 12 மணிநேரம் எடுத்துக் கொள்ளும்.

புதன்கிழமை தவிர்த்து வாரத்தின் மற்ற ஆறு நாட்களிலும் இந்த ரயில் இயங்கும்.

ஐ.ஆர்.சி.டி.சி. பயண முன்பதிவு இணையதள விவரங்களின்படி, சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலில் பயணிக்க உணவுடன் ஏசி சேர் கார் (AC chair car) வகுப்புக்கு 1,760 ரூபாயும், எக்ஸிகியூட்டிவ் வகுப்புக்கு (Executive chaircar) 3,240 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த ரயில் நிலையங்களில் நின்று செல்லும்?

இந்த ரயில், சென்னை எழும்பூரிலிருந்து, தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய ஏழு ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மதுரை - பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில்

காலை 5.15 மணிக்கு மதுரை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் இந்த ரயில், (எண். 20671), மதியம் 1 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தை சென்றடையும். அதேபோன்று, மதியம் 1.30 மணிக்கு பெங்களூருவிலிருந்து புறப்பட்டு (எண். 20672), இரவு 9.45 மணிக்கு மதுரையை மீண்டும் வந்தடையும்.

மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில்

பட மூலாதாரம், RailMinIndia/X

படக்குறிப்பு, மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவில்

செப்டம்பர் 2-ம் தேதியிலிருந்து இந்த ரயில் வழக்கமான பயணத்தை மேற்கொள்ளும். சுமார். 7.45 மணி நேரத்தில் 573 கி.மீ. தொலைவை இந்த ரயில் அடையும். மதுரை - பெங்களூருக்கு பயணிக்கும் மற்ற விரைவு ரயில்கள் சுமார் 10 முதல் 12 மணிநேரத்தை எடுத்துக்கொள்கின்றன.

ஐ.ஆர்.சி.டி.சி. பயண முன்பதிவு இணையதள விவரங்களின்படி, மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயிலில் பயணிக்க உணவுடன் ஏசி சேர் கார் (AC chair car )வகுப்புக்கு 1,575 ரூபாயும், எக்ஸிகியூட்டிவ் வகுப்புக்கு 2,865 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயிலில் எட்டு பெட்டிகள் இருக்கும்.

எந்தெந்த ரயில் நிலையங்களில் நின்று செல்லும்?

இந்த ரயில், திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் ஆகிய ஆறு ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

செவ்வாய்க் கிழமை தவிர்த்து வாரத்தின் மற்ற ஆறு நாட்களிலும் இந்த ரயில் இயக்கப்படும்.

மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில்

பட மூலாதாரம், RailMinIndia/X

மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில்

பட மூலாதாரம், RailMinIndia/X

என்னென்ன வசதிகள் உள்ளன?

புதிதாக தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரயில்களில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து இந்திய ரயில்வே தெரிவித்துள்ளதாவது:

  • நவீன தொழில்நுட்பம், ஜிபிஎஸ் அடிப்படையிலான தகவல் அமைப்பு, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தத்தக்க வகையிலான அம்சங்கள், தொடுவதற்கு தேவையில்லாத கழிவறைகள் ஆகிய வசதிகள்
  • ரயில் ஓட்டுநர் மற்றும் பாதுகாவலர்களுடன் பயணிகள் பேசுவதற்கான வசதி, நீண்ட நேர பயணத்திற்கு ஏற்ற இருக்கைகள்
  • அவசரகால மின்விளக்கு, நான்கு அவசரகால ஜன்னல்கள் மற்றும் வேறு இடத்தில் உள்ளவருடன் பேசுவதற்கான வசதி கொண்ட டாக்-பேக் யூனிட்
  • ஒரு மணிநேரத்திற்கு 160 கி.மீ. வேகத்தில் இந்த ரயில்கள் பயணிக்கும்.
  • ரயில்கள் மோதிக் கொள்வதை தடுக்கும் ‘கவாச்’ (Kavach) தொழில்நுட்பத்துடன் கூடிய அமைப்பு, 360 டிகிரி கோணத்தில் சுழலும் வகையிலான இருக்கைகள், உள்ளிட்ட வசதிகள் இந்த ரயில்களில் உள்ளன.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)