மலேசியாவில் 26 அடி குழிக்குள் விழுந்த இந்திய பெண் - சுற்றுலா சென்ற இடத்தில் என்ன நடந்தது?

பட மூலாதாரம், EPA and NISHANTH
- எழுதியவர், கெல்லி என்ஜி
- பதவி, பிபிசி நியூஸ்
மலேசியா தலைநகரம் கோலாலம்பூரில் நடைபாதையில் திடீரென ஏற்பட்ட குழிக்குள் (sinkhole) விழுந்து காணாமல் போன இந்திய பெண்ணைத் தேடும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எட்டாவது நாளாகத் தொடரும் தேடுதல் பணியில், இதற்கு மேல் முக்குளிக்கும் வீரர்கள்(divers) உள்ளே செல்வது "மிகவும் ஆபத்து" என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவை சேர்ந்த விஜயலக்ஷ்மி கலி என்ற 48 வயது பெண் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபாதையில் திடீரென ஏற்பட்ட குழிக்குள் விழுந்து காணாமல் போனார். அவரைத் தேடும் பணியில் 110 மீட்புப் பணியாளர்கள் கடந்த ஒரு வாரமாகத் தீவிரமாக ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் மலேசியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மீட்புப் பணியில் முதல் 17 மணிநேர தேடுதலில் ஒரு ஜோடி செருப்புகள் மட்டுமே கிடைத்தன. அதன் பிறகான முயற்சிகள் பலனளிக்கவில்லை.
வெள்ளிக்கிழமை (30 ஆகஸ்ட்) உள்ளூர் நேரப்படி 04:00 மணியளவில் முக்குளிக்கும் திறனுள்ள இரண்டு மீட்புப் பணியாளர்கள் அந்தக் குழி ஏற்பட்ட பகுதிக்கு அருகே இருந்த கழிவுநீர் வடிகால் வலையமைப்பு வழியாக இறங்கித் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் இருவரும் வலுவான நீரின் வேகம் மற்றும் கடினமான குப்பைகளை எதிர்கொண்டதாக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை தெரிவித்துள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
குழிக்குள் இறங்கிய வீரர்களில் ஒருவர் தீயணைப்பு வீரர் மற்றொருவர் பாதாள சாக்கடை பராமரிப்புப் பணியாளர். அந்தக் குழிக்குள் செல்லும் பாதை குறுகியதாக இருந்ததால், அவர்களால் அசைய முடியவில்லை. நீண்டநேரம் உடலைத் தட்டையாக (lie flat) வைக்க வேண்டியிருந்தது என்று மீட்புக் குழுவின் இயக்குநர் ஜெனரல் நோர் ஹிஷாம் முகமது தெரிவித்தார்.
"கான்கிரீட் பிளாக்ஸ் போன்று திடப்படுத்தப்பட்ட குப்பைகளை உடைப்பது சாத்தியமற்றது, இது மிகவும் கடினமான பணி" என்று அவர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.
"எட்டு நபர்களைக் கொண்டு கயிறுகளால் அந்த திடக் குப்பைகளைத் தகர்க்க நாங்கள் முயன்றபோது முடியவில்லை,” என்றார்.
முன்னதாக முழு ஸ்கூபா உடையில் சாக்கடையில் இறங்கிய முக்குளிக்கும் வீரர்கள் உள்ளே ஒன்றுமே தெரியவில்லை என்றும் கனமழையுடன் போராட வேண்டியிருந்தது என்று கூறினர்.

பட மூலாதாரம், EPA
"குழிக்குள் இறங்கும்போது மிகவும் பயமாக இருந்தது, ஆனால் இது உண்மையில் ஒரு தீயணைப்பு வீரரின் கடமை; நான் பயத்தை விடுத்து, பணியில் ஈடுபட வேண்டும். மற்றதை கடவுள் பார்த்து கொள்வார்” என்று தீயணைப்பு வீரர் அலிமடியா புக்ரி இந்த வாரத் தொடக்கத்தில் உள்ளூர் செய்தித்தாள் சிமர் ஹரியனுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
"அந்தக் குழியில் வெளிச்சம் இல்லை. முற்றிலும் இருட்டாக இருந்தது" என்று குழிக்குள் இறங்கிய மற்றொரு வீரர் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகத்திடம் கூறினார்.
"அந்த சாக்கடைக் குழி முழுவதுமாக மனிதக் கழிவுகள் மற்றும் பிற குப்பைகளால் நிரம்பியுள்ளது. ஒவ்வொரு முறையும் தேடும் பணியில் உள்ளே சென்று வெளியே வரும்போது ,நாங்கள் உடனடியாகக் கிருமி நாசினி கொண்டு எங்களைத் தூய்மைப்படுத்தி கொள்கிறோம்” என்றார்.
இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலத்தில் இருந்து மலேசியாவுக்கு சுற்றுலா சென்ற விஜயலக்ஷ்மி கலி, தனது குடும்பத்தினருடன் அருகிலுள்ள கோவிலை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ஜாலான் மஸ்ஜித் இந்தியா (Jalan Masjid India) தெருவில் திடீரென உருவான 8 மீட்டர் (26 அடி) ஆழமான பள்ளத்தில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.

பட மூலாதாரம், EPA
சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே மீட்புக் குழுவினர் அந்த குழியைச் (sinkhole) சுற்றியுள்ள பகுதியைத் தோண்டியெடுத்தனர். அதே நேரத்தில் பிற மீட்புப் பணியாளர்கள் மோப்ப நாய்கள் மற்றும் கிராலர் கேமராக்களை பயன்படுத்தினர். நிலத்துக்கு அடியில் என்ன நடக்கிறது என்பதை நன்கு உணரவும், குழியை ஆய்வு செய்யவும் ரோபோடிக் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன.
உயர் அழுத்த நீர் ஜெட் இயந்திரங்கள், இரும்புக் கொக்கிகள், கயிறுகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி கடினமான குப்பைகளை உடைக்க முயன்றுள்ளனர்.
செவ்வாயன்று, அதிகாரிகள் தரையில் ஊடுருவக்கூடிய ரேடார் சாதனத்தை அந்தக் குழிக்குள் செலுத்தி ஆய்வு மேற்கொண்டனர்.
அடுத்த நாள், பெண்ணை உள்ளிழுத்த அந்தக் குழி இருக்கும் இடத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவில் மற்றொரு குழி தோன்றியது. மலேசிய புவியியலாளர் ஒருவர், உள்ளூர் செய்தித்தாள் மலேசியாகினியிடம் பேசுகையில், தற்போது நடைபெற்று வரும் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் விளைவாக இந்தப் புதிய குழி உருவாகியுள்ளது என்று கூறினார்.
கடந்த இரண்டு நாட்களாக, தேடுதல் பணியின் முக்கியக் குறிக்கோள், விஸ்மா யாகின் அடியிலுள்ள கழிவுநீர் பாதைகளில் இருக்கும் 15 மீட்டர் அடைப்பை அகற்றுவதாகும்.
மனிதக் கழிவுகள், டயர்கள், முடி மற்றும் திடப்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் போன்றவற்றால் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜலான் மஸ்ஜித் இந்தியா என்னும் பகுதியில் சில இடங்களில் தேடுதல் பணி தொடர்கிறது.
பொதுவாக சுற்றுலாப் பயணிகளின் வருகையால் பிரபலமான இப்பகுதி, தற்போது இந்தச் சம்பவத்தால் வழக்கத்திற்கு மாறான அமைதியுடன் காணப்படுகிறது.
உள்ளூர் செய்திகளின்படி, இந்தப் பகுதியில் வியாபாரிகள் 50% முதல் 70% வரை விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளனர், சிலர் கடைகளைத் திறக்கவே இல்லை.
குழிக்குள் விழுந்த விஜயலக்ஷ்மி கலி குறித்த செய்திக்காக அவரது குடும்பத்தினர் காத்திருக்கும் நிலையில், மலேசிய அரசாங்கம் அவர்களுக்கான விசாவை ஒரு மாதத்திற்கு நீட்டித்துள்ளது. அவர்கள் கடந்த சனிக்கிழமை இந்தியா திரும்ப இருந்தனர்.
அந்தக் குடும்பத்தினரின் நிலையைக் கருத்தில் கொண்டு, கோலாலம்பூரின் சிட்டி ஹாலில் நடக்க இருந்த தேசிய தின கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் மலேசியர்களிடையே அச்சத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது, திடீரென அந்தக் குழி உருவானது எப்படி எனப் பலர் கேள்வி எழுப்புகின்றனர்.
அதன் காரணத்தைக் கண்டறிய தணிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கனிமங்கள் மற்றும் புவி அறிவியல் துறையின் அதிகாரி ஒருவர் கூறுகையில், மனித செயல்பாடுகள் மற்றும் காலநிலை நெருக்கடியின் கலவையால் இது நடந்திருக்கலாம் என்று ஆரம்ப அவதானிப்புகள் தெரிவிப்பதாகக் கூறினார்.
கூடுதல் தகவல்கள்: சிங்கப்பூரில் இருந்து கவின் பட்ல
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












