மகாராஷ்டிரா: உடைந்த சிவாஜி சிலை, 'தலைவணங்கி மன்னிப்பு' கேட்ட பிரதமர் மோதி - கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்

பட மூலாதாரம், ANI
மகாராஷ்டிர மாநிலம் சிந்துதுர்க் மாவட்டம் மால்வானில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் கட்டப்பட்ட சத்ரபதி சிவாஜி சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தில் சத்ரபதி சிவாஜியிடம் பிரதமர் நரேந்திர மோதி மன்னிப்பு கேட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மகாராஷ்டிரா அரசுக்கு எதிராக நாளை (செப்டம்பர் 1) மும்பையில் உள்ள இந்தியா கேட் அருகே இருக்கும் சிவாஜி சிலை அருகில் போராட்டம் நடத்துவதாகவும் பேரணியாகச் செல்வதாகவும் எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.
மகாராஷ்டிராவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, “இந்தச் சம்பவத்திற்கு நான் தலை வணங்கி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எங்களைப் பொறுத்தவரை சிவாஜி வணங்கத்தக்க கடவுள்” எனத் தெரிவித்தார்.
மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள வாத்வான் துறைமுகத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவின்போது வெள்ளிக்கிழமை அவர் இதைத் தெரிவித்தார்.
“சத்ரபதி சிவாஜி ஒரு மன்னர் மட்டுமல்ல, அவர் வணங்கத்தக்க ஒருவர். சத்ரபதி சிவாஜியின் காலடியில் தலை வணங்கி மன்னிப்பு கேட்கிறேன்” என்று மோதி கூறினார்.
ராஜ்கோட் கோட்டையில் நிறுவப்பட்ட 35 அடி சிவாஜி சிலை ஆகஸ்ட் 26 அன்று உடைந்து விழுந்தது. முன்னதாக, மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவும் இந்தச் சம்பவத்திற்கு நூறு முறை மன்னிப்பு கேட்கத் தயார் என்று கூறியிருந்தார். இந்தச் சம்பவத்திற்கு அம்மாநில துணை முதலமைச்சர் அஜித் பவாரும் மன்னிப்பு கேட்டுள்ளார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்த சிவாஜி சிலையைக் கடந்த ஆண்டு கடற்படை தினத்தன்று பிரதமர் மோதி திறந்து வைத்தார்.
இந்தச் சிலை நிறுவப்பட்டதன் நோக்கம், சிவாஜியின் மராட்டிய கடற்படைக்கும் கடல் எல்லைகளைப் பாதுகாப்பதற்கான அவரது முயற்சிகளுக்கும் மரியாதை செலுத்துவதாகும்.
சிலை உடைந்த விவகாரம் குறித்து, ஆளும் பாஜக - சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு) - தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் பிரிவு) அரசு மன்னிப்பு கோர வேண்டும் என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
மன்னிப்பு கேட்ட முதலமைச்சர், துணை முதலமைச்சர்
ஆகஸ்ட் 29 அன்று, மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவும் சத்ரபதி சிவாஜியிடம் மன்னிப்பு கேட்டார்.
செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, “சத்ரபதி சிவாஜியின் காலடியில் நூறு முறை தலை வணங்கத் தயார்” என்று கூறியிருந்தார்.
"சிவாஜி எங்கள் கடவுள், எங்கள் அடையாளம். இந்த விஷயத்தை அரசியலாக்க வேண்டாம். எதிர்கட்சியினர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறுகின்றனர். ஆனால், நான் சத்ரபதி சிவாஜியின் காலடியில் ஒரு முறை அல்ல, நூறு முறை தலை வணங்க விரும்புகிறேன். மன்னிப்பு கேட்பதற்காக நான் வெட்கப்பட மாட்டேன். சத்ரபதி சிவாஜியின் லட்சியங்களைப் பின்பற்றியே எங்கள் அரசு செயல்படுகிறது," என்று அவர் கூறியிருந்தார்.

பட மூலாதாரம், ANI
சத்ரபதி சிவாஜிக்கு வலுவான சிலையை விரைவில் நிறுவ என்ன செய்ய முடியும் என்பதை எதிர்க்கட்சிகள் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், ஆகஸ்ட் 29ஆம் தேதி முதலமைச்சர் இல்லமான 'வர்ஷா'வில் முக்கியக் கூட்டம் நடைபெற்றது. அதில், அதிகாரிகள் மற்றும் கடற்படை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
விசாரணைக் குழு உருவாக்கம்
ஆகஸ்ட் 29ஆம் தேதி சத்ரபதி சிவாஜி சிலை உடைக்கப்பட்ட வழக்கை விசாரிக்க கடற்படை தலைமையில் கூட்டுக் குழுவை மாநில அரசு அமைத்தது.
அந்தக் குழுவில் மாநில அரசின் பிரதிநிதிகள், கடற்படை அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோர் உள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் மற்றொரு குழுவையும் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். சேதமடைந்த சிலைக்குப் பதிலாக மற்றொரு சிலையை விரைவில் நிறுவ இந்தக் குழு செயல்படும்.

பட மூலாதாரம், ANI
பலத்த காற்று வீசியதால் சிலை உடைந்து விழுந்ததாக முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். சிலை விழுந்ததற்கு மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் புதன்கிழமை மன்னிப்பு கேட்டார்.
லத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "மகாராஷ்டிராவின் 13 கோடி மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். சத்ரபதி சிவாஜி நமது கடவுள், ஓராண்டில் அவரது சிலை உடைந்து விழுந்த சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது" என்றார்.
எட்டு மாதங்களுக்குள் சிலை உடைந்து விழுந்ததையடுத்து, சிலையின் தரம் மற்றும் அதைத் திறப்பதில் காட்டிய அவசரம் குறித்து எதிர்க்கட்சிகள் மாநில அரசைக் கடுமையாக விமர்சித்தன.
இந்த விவகாரத்தில் ஆளும் கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான மகாவிகாஸ் அகாடிக்கும் (காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் பிரிவு, சிவசேனா-உத்தவ் தாக்கரே பிரிவு) இடையே மோதல் ஏற்பட்டது.
சிலை தொடர்பான சர்ச்சை
சிலை உடைந்து விழுந்த சம்பவம் தொடர்பாக பாஜக தலைவர் நாராயண் ரானேவுக்கும், சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) தொண்டர்களுக்கும் இடையே புதன்கிழமை மோதல் ஏற்பட்டது, இதனால் பதற்றமும் ஏற்பட்டது.
புதன்கிழமை, சிவசேனா (உத்தவ் தாக்கரே) தலைவர் ஆதித்யா தாக்கரே ராஜ்கோட் கோட்டைக்குச் சென்று அங்கு போராட்டம் நடத்த முயன்றார்.
அப்போது, அம்பாதாஸ் தன்வே, வைபவ் நாயக், தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் பிரிவு) தலைவர் ஜெயந்த் பாட்டீல் மற்றும் பல ஆதரவாளர்கள் ஆதித்யா தாக்கரேவுடன் இருந்தனர்.
இதற்குப் பதிலடியாக நாராயண் ரானேவின் ஆதரவாளர்களும் முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்த முயன்றனர். அவருடன் நிலேஷ் ரானேவும் இருந்தார். இரு தரப்பினரிடமும் பேசி பதற்றத்தைக் குறைக்க போலீசார் முயன்றும் பலனளிக்கவில்லை.
அப்போது, குழப்பத்தைத் தவிர்க்கவும், மத்தியஸ்தம் மூலம் ஒரு வழியைக் கண்டறியவும், சரத் பவார் பிரிவுத் தலைவர் ஜெயந்த் பாட்டீலும் நிலேஷ் ரானேவுடன் கலந்துரையாடுவதைக் காண முடிந்தது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயந்த் பாட்டீல், "எட்டு மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்ட சிலை விழுந்துவிட்டது. விழுந்தது சிலை அல்ல, மகாராஷ்டிராவின் பெருமை" என்றார்.
ஜெயந்த் பாட்டீல் கூறுகையில், "பலத்த காற்று வீசியதால் சிலை விழுந்ததாக முதலமைச்சர் கூறுகிறார். அப்படி என்றால், சிலையுடன் 2-3 மரங்களும் விழுந்திருக்கும். ஆனால் அப்படி நடக்கவில்லை. சிலை அமைக்கும் பணி சரிவர நடக்கவில்லை என்பதுதான் இதன் அர்த்தம். பணி அனுபவம் குறைந்த ஒருவரிடம் அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டது. இரண்டு அடி சிலை அமைக்கும் ஒருவருக்கு 35 அடி சிலை செய்யும் பணி வழங்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.
"சிலையை கடற்படையினர் செய்ததாக அரசு கூறுகிறது. கடற்படையினர் சிலையை அங்கு நிறுவினர், ஆனால் சிலை அமைத்தவரைத் தேர்ந்தெடுத்தது யார்? சிலை அமைப்பது குறித்து கடற்படைக்குத் தகவல் கொடுத்தது யார்? சிலை அமைக்கும் ஒப்பந்தம் யாருக்குக் கிடைத்தது? இவை அனைத்தும் விசாரிக்கப்பட வேண்டும்” எனவும் அவர் கூறினார்.
எதிர்க்கட்சிகளின் போராட்டம்
செப்டம்பர் 1, ஞாயிற்றுக்கிழமை, மும்பையில் உள்ள இந்தியா கேட் அருகே உள்ள சிவாஜி சிலைக்கு அருகில் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவதாக எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.
தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் பிரிவு) தலைவர் சரத் பவார் மற்றும் காங்கிரஸ் மாநில தலைவர் நானா படோல் ஆகியோர் முன்னிலையில் மாடோஸ்ரீயில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உத்தவ் தாக்கரே, “மகாராஷ்டிர அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவோம். செப்டம்பர் 1 அன்று, ஹுதாத்மா சவுக் முதல் இந்தியா கேட் வரை வரை பேரணியாகச் செல்வோம்” என்றார்.
முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்த அவர், அவருடைய கருத்து "வெட்கமின்மையின் உச்சம்" என்று கூறினார்.

பட மூலாதாரம், ANI
உத்தவ் தாக்கரே, "இப்போது, ராஜ்கோட் சம்பவத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்தவிருக்கும் போராட்டத்தை, மோதி அரசின் தரகர்களும், துரோகிகளும் தடுக்கின்றனர். காற்றின் வேகம் காரணமாகப் பேரரசரின் சிலை விழுந்ததாகக் காரணம் சொல்வது மிகவும் வெட்கக்கேடானது" என்றார்.
“மகாஷ்டிராவில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும், ஊழலும் அதிகரித்து வருகிறது. ஆளும் கூட்டணி அரசின் ஊழல் உச்சத்தை எட்டியுள்ளதால், நிர்வாகத்தின் நிலைமை படுமோசமாக உள்ளது” எனவும் அவர் தெரிவித்தார்.
'எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன'
இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாக அம்மாநில துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து சரத் பவார் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், “இதில் எங்கே அரசியல் இருக்கிறது? சிவாஜியின் ஆட்சியில் சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டபோது குற்றவாளியின் கை, கால்களை சிவாஜி வெட்டினார். அவர் மக்கள் முன்னிலையில் குற்றங்களுக்கு எதிரான கண்டிப்பான நிலைப்பாட்டை எடுத்தார். ஆனால், இன்று சிவாஜி சிலையில் ஊழல் நடந்துள்ளது” என்றார்.
மேலும், “பிரதமர் சென்ற இடமெல்லாம் சிலைகள் விழுந்து கிடக்கின்றன. இது ஊழல் எந்த அளவுக்குச் சென்றுள்ளது என்பதைக் காட்டுகிறது. அதனால்தான் மகாராஷ்டிரா மக்களிடம் இதை முறையிட்டு போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன" எனக் கூறினார்.

பட மூலாதாரம், ANI
இதுகுறித்து நானா படோல் கூறுகையில், “சிலை திறப்பு விழாவில் நரேந்திர மோதி, பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் மாநில முதலமைச்சர் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆனால், சிலையை நிறுவுவதற்கான அனைத்துப் பணிகளும் நிறைவடையவில்லை.
கலாசார அமைச்சகம் சிலைக்கு சான்றளிக்கும் வரை அதைத் திறந்து வைத்திருக்கக் கூடாது. ஆனால், இவையெல்லாம் பிரதமர் எவ்வளவு சிவாஜி பக்தர் என்பதைக் காட்டுவதற்காகச் செய்யப்பட்டவை" என்றார்.
எதிர்க்கட்சியை விமர்சித்த ஆளும் அரசு
இதற்குப் பதிலடியாக, பாஜக எம்.பி. நாராயண் ரானேவும் செய்தியாளர் சந்திப்பு நடத்தி எதிர்க்கட்சி கூட்டணியைக் கடுமையாக விமர்சித்தார்.
அப்போது அவர், “சிவாஜி சிலை விழுந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. மழைக் காலத்தில் ஏற்பட்ட பாதகமான சூழல்களால் சிலை உடைந்து விழுந்தது.
யாரையும் குறை கூறாமல், இந்தச் சிலையை செய்தவர்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்பதையே நானும் பொதுமக்களும் விரும்புகிறோம். இந்தச் சிலை விழுந்ததற்கான காரணத்தை வெளிப்படுத்த வேண்டும்” என்று கூறினார்.

பட மூலாதாரம், ANI
நாராயண் ரானே கூறுகையில், "சிவசேனாவின் துரோகிகள் என்று எங்களை விமர்சித்துள்ளனர், அதேநேரம் சிவசேனா உருவானதில் இருந்து அவர்களே சத்ரபதி சிவாஜி மற்றும் இந்துத்துவாவை அரசியல் ஆதாயத்திற்கான வழிமுறையாக மாற்றியுள்ளனர்" என்றார்.
“சத்ரபதி சிவாஜிக்கு நாங்கள் ஒரு சிலையையாவது நிறுவியுள்ளோம். அவர் (உத்தவ் தாக்கரே) தனது தந்தையின் சிலையை மகாராஷ்டிரா அரசின் செலவில் கட்டினார், எனவே இந்த விஷயத்தில் பேச அவருக்கு தார்மீக உரிமை இல்லை” எனக் கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












