தொழில் யோசனை இருக்கிறது, கையில் பணம் இல்லையா? - இந்த தேவதைகளை அணுகுங்கள்

தொழில்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், அ.தா.பாலசுப்ரமணியன்
    • பதவி, பிபிசி தமிழ்

உங்களிடம் அற்புதமான புத்தாக்க யோசனை இருக்கிறது, அதை வணிகமாக செய்யும் வழிமுறையும் தெரிகிறது. நீங்கள், நண்பர்களிடம் உள்ள பணத்தை வைத்து தொழிலைத் தொடங்கி முதல் அடிகளை எடுத்துவைக்கத் தொடங்கிவிட்டீர்கள். ஆனால், அதற்குமேல் வளரப் பணம் வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

இது போன்ற தொடக்க நிலைத் தொழில்களில் முதலீடு செய்து உடன் சேர்ந்து வளரும் ஆசையோடு பல முதலீட்டாளர்கள் இருக்கிறார்கள். இப்படி தொடக்க நிலைத் தொழில்கள் தேடுவதற்கு என்று சில முதலீட்டு வாய்ப்புகள் இருக்கின்றன.

முதன்மையாக அவற்றை ஏஞ்சல் இன்வெஸ்டர்ஸ் (பணம் இல்லாமல் தவிக்கும் தொடக்க நிலை தொழில் முனைவோர் நிறுவனங்களில் முதலீடு செய்து அவர்கள் வளர வழி செய்கிறவர்கள் தேவதைகள்தானே?), வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள் என்று அழைப்பார்கள்.

ஏஞ்சல் இன்வெஸ்டர்கள் எனப்படும் தேவதை முதலீட்டாளர்கள் என்பவர்கள் யார்?

இவர்கள் மிகையாகப் பணம் வைத்திருக்கும் தனி நபர்கள். புதுமையான தொழில் திட்டங்கள் இன்றைக்குப் பார்ப்பதற்கு எளிமையாக இருக்கலாம். அவர்களிடம் பெரிய நிறுவனமாக வளர்ந்துவிடுவார்கள் என்ற அறிகுறி இருக்கும். இந்த அறிகுறியைப் பிடித்துக்கொண்டு அவர்களது தொடக்க நிலையில் முதலீடு செய்து அதற்கு ஈடாக அவர்கள் நிறுவனங்களில் கொஞ்சம் பங்கு வாங்கிக்கொள்ளும் புத்திசாலிகள் இவர்கள். ஒரு வகையில் புத்திசாலிகள். இன்னொரு வகையில் வளர்வதற்கு முன்பே வளர்வார்கள் என்று தெரிகிறவர்களை அங்கீகரித்து ரிஸ்க் எடுக்கிற தேவதைகள்.

அதனால்தான் இத்தகைய முதலீட்டாளர்கள் ஏஞ்சல் இன்வெஸ்டர்கள் என்று பெயர் பெற்றார்கள். இவர்கள் தனித்தனியாகவும் செயல்படலாம். ஆனால், பெரும்பாலும் இத்தகைய தேவதை (பெயர்தான் அப்படி... அதற்காக இவர்கள் பெண்ணாக இருக்கவேண்டும் என்பதில்லை) முதலீட்டாளர்கள் ஒரு குழுவாக செயல்படுவார்கள். இந்தக் குழு கூட்டாக முதலீட்டு முடிவுகளை எடுக்கும்.

இவர்கள் எதன் அடிப்படையில் முதலீடு செய்கிறார்கள், யாருக்கு முதலீடு செய்வார்கள்? முதலீடு செய்வதற்கு என்ன விதமான அளவுகோல்களை பயன்படுத்துகிறார்கள்? எவ்வளவு அளவுக்கு அவர்கள் முதலீடு செய்வார்கள்?

ஏஞ்சல் இன்வெஸ்டர்

பட மூலாதாரம், Getty Images

சென்னையில் இருந்து செயல்படும் முன்னணி ஏஞ்சல் முதலீட்டு நிறுவனமான ‘சென்னை ஏஞ்சல்ஸ்’ நிறுவனத்தின் இணை துணைத் தலைவரான (associate vice president) தர்ஷண் எம் குமாரிடம் இது குறித்து கேட்டது பிபிசி தமிழ்.

சாதாரணமான துணிக் கடை, சூப்பர் மார்க்கெட் போன்ற தொழில்களை ஸ்டார்ட் அப் நிறுவனம் என்று கருதுவதில்லை. தாங்கள் அளிக்க விரும்பும் பண்டம், சேவை அல்லது மென்பொருள் ஆகியவை என்ன விதமான சிக்கலுக்குத் தீர்வு அளிக்கப்போகிறது என்பதை ஒருவர் முதலில் முடிவு செய்துகொள்ளவேண்டும். இருக்கும் சிக்கலின் தன்மை என்ன? அதற்குத் தீர்வாக தாங்கள் முன்வைக்கப்போகும் பண்டமோ, மென்பொருளோ எத்தகையது என்ற தெளிவு அவர்களிடம் இருக்கவேண்டும். இந்த தீர்வு ஏற்கெனவே சந்தையில் உள்ள தீர்வைவிட மேம்பட்டதாக, தனித்துவமானதாக இருக்கவேண்டும்.

தர்ஷண் குமார்

பட மூலாதாரம், Dharshan Kumar

படக்குறிப்பு, தர்ஷண் குமார்

இந்த தீர்வைக் கொண்டு நிறுவனம் தொடங்க குறைந்தபட்சம் இரண்டு நிறுவனர்களாவது இருக்கவேண்டும். ஏனென்றால், ஒருவரே சந்தைப்படுத்துதல், நிதி மேலாண்மை, நிர்வாகம் என்று எல்லாவற்றையும் பார்க்க முடியாது. எனவே குறைந்தபட்சம் இரண்டு நிறுவனர்கள் இருக்கவேண்டும். அந்த நிறுவனர்களில் ஒருவருக்காவது தொடங்கப் போகிற தொழில் தொடர்பான அறிவு, அனுபவம் இருக்கவேண்டும்.

இப்படிப்பட்டவர்கள், தங்கள் சொந்தப் பணத்தை, நண்பர்கள் உறவினர்கள் பணத்தைப் போட்டு தொழிலை தொடங்கி நகர்த்தி இருக்கவேண்டும். இப்படி நகர்த்தும் நிலையில் அவர்களுக்கு கொஞ்சம் வாடிக்கையாளர்கள் கிடைத்து, அதன் மூலம் அவர்களுக்கு மாதம் 5-6 லட்சம் வருமானம் தொடர்ந்து 3 மாதங்களுக்காவது வரவேண்டும்.

இத்தகைய தொழில் முனைவோர் தொடர்ந்து வளர்வதற்கு நிறுவனத்தை விரிவாக்குவது அவசியம் என்று கருதினால், அத்தகைய தொழில் நிறுவனங்களுக்கு சென்னை ஏஞ்சல்ஸ் நிறுவனம் மூலம் ஏஞ்சல் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வார்கள். இந்த முதலீடு என்பது தோராயமாக 50 லட்சம் ரூபாய் முதல் 2.5 கோடி ரூபாய் வரை இருக்கும் என்றார் தர்ஷண்.

மென்பொருள் நிறுவனங்களுக்கு மட்டும்தான் முதலீடு செய்வீர்களா என்று அவரிடம் கேட்டபோது, கட்டாயமாக அது ஐ.டி துறையாகதான் இருக்கவேண்டும் என்பதில்லை. வெவ்வேறு துறை சார்ந்த தொழில்களாகவும் இருக்கலாம். ஆனால், அவர்களின் வணிக மாதிரியில் தொழில்நுட்பத்துக்கு முக்கியப் பங்கு இருக்கவேண்டும் என்றார் அவர்.

முதலீடு கேட்டு விண்ணப்பிக்கிறவர்களில் எத்தகையவர்களுக்கு முதலீடு வழங்குவது என்று முடிவு செய்வீர்கள் என்று கேட்டபோது, அவர்களது குறிப்பிட்ட நிறுவனம் இந்திய அரசின் தொழில், DIPP எனப்படும் உள்நாட்டு வணிக மேம்படுத்தல் துறையிடம் பதிவு செய்யப்பட்டதாக இருக்கவேண்டும். இதன் மூலம் அவர்கள் நிறுவனத்துக்கு 3 ஆண்டுகள் வரை வரி விலக்கு கிடைக்கும்.

அவர்களது வணிகத்தின் அடிப்படையாக இருக்கிற தொழில்நுட்பம் அல்லது மென்பொருள் காப்புரிமை பெற்றதாக இருக்கவேண்டும். அப்போதுதான் சந்தையில் உள்ள மற்றவர்கள் உடனடியாக அதை காப்பி அடிக்க முடியாது. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வேறுவிதமாக அவர்களுடையதைப் போன்ற பொருளை, மென்பொருளைத் தயாரிக்க மற்றவர்களுக்கு சிறிது காலம் பிடிக்கும். அதற்குள் லாபம் ஈட்டிவிட முடியும் என்பதாக அந்த தொழில் இருக்கவேண்டும்.

இந்த தொழில் முனைவோர் அளிக்கிற தீர்வு மற்றவர்கள் அளிக்கிற தீர்வில் இருந்து மாறுபட்டதாக, மேம்பட்டதாக, மற்ற போட்டியாளர்களை விட அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கக்கூடியதாக இருக்கவேண்டும்.

வென்ச்சர் கேபிடல்

பட மூலாதாரம், Getty Images

தவிர, சென்னை ஏஞ்சல்ஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரை பிரைவேட் லிமிட்டட் கம்பெனியில்தான் முதலீடு செய்கிறோம். பார்ட்னர்ஷிப், லிமிட்டட் லயபிளிடி பார்ட்னர்ஷிப் போன்ற வகை நிறுவனங்களில் நாங்கள் முதலீடு செய்வதில்லை என்றார் அவர்.

இத்தகைய நிபந்தனைகள் சென்னை ஏஞ்சல்ஸ் நிறுவனத்துக்கு மட்டுமே உரியது. தொடக்கத்துக்கே முதலீடு செய்கிற நிறுவனங்கள், ஐடியாவை உருவாக்கவே முதலீடு செய்யும் நிறுவனங்கள் போன்றவையும் உண்டு என்கிறார் ‘பூவுலகின் நண்பர்கள்’ சுந்தர்ராஜன் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளராக பெரிதும் அறியப்பட்ட இவர், வெற்றிகரமான தொழில்முனைவோர். மிக எளிய நிலையில் ஒரு மென்பொருள் நிறுவனத்தை தொடங்கி கணிசமான நிலைக்கு அதை வளர்த்திருப்பவர்.

ஆனால், ஐடியாவுக்கே முதலீடு செய்வது என்று வரும்போது, எல்லோருக்கும் அப்படி தந்துவிடமாட்டார்கள் என்கிறார். ஏற்கெனவே, மிக சாதாரண நிலையில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி வளர்த்து பெரியதாக்கி பிறகு அதை நல்ல லாபத்துக்கு விற்றுவிட்டு மீண்டும் புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் உண்டு. அத்தகையவர்களின் நிறுவனத்தை தொடங்கி நடத்தும் திறன் நிரூபிக்கப்பட்டது.

இப்படி நிரூபிக்கப்பட்ட தொழில் முனைவோருக்குதான் இத்தகைய முதலீடு கிடைக்கும். ஆனால், நல்ல வணிக யோசனை இருப்பவர்கள் இன்குபேஷன் சென்டர் என்று சொல்லப்படும் அடைகாப்பு மையங்களை அணுகி அவர்களின் வழிகாட்டுதலை ஏற்று செயல்பட்டு பலன் கிடைத்தால், அவர்களே முதலீட்டுக்கு ஏற்பாடு செய்வார்கள் என்கிறார் சுந்தர்ராஜன்.

தமிழ்நாடு அரசின் புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் சார்பில் தமிழ் முதலீட்டாளர்களை உள்ளடக்கிய ‘தமிழ் ஏஞ்சல்ஸ்’ என்ற ஏஞ்சல் முதலீட்டாளர் நிறுவனம் தொடங்கப்பட்டிருப்பதாக இயக்கத்தின் முதன்மை செயல் அலுவலர் சிவராஜா ராமநாதன் பிபிசி தமிழிடம் தெரிவித்திருந்தார்.

சுந்தர்ராஜன்

பட மூலாதாரம், Sundarrajan/FB

படக்குறிப்பு, சுந்தர்ராஜன்

தடைக்கற்கள்

முதலீடு கேட்டு தொழில்முனைவோர் விண்ணப்பிக்கும்போது பொதுவாக அந்த விண்ணப்பங்களில் உள்ள குறைபாடுகள் என்ன? தடைகள் என்ன என்று சென்னை ஏஞ்சல்ஸ் தர்ஷணிடம் கேட்டோம்.

சில நேரங்களில் அவர்கள் அளிக்கும் விண்ணப்பங்களில் தேவைப்படும் தரவுகள் இல்லாமல் இருக்கலாம். அந்த நேரங்களில் அவர்களை அழைத்து, இத்தகைய தரவுகள் வேண்டும் என்று கூறுவோம். பிறகு அந்த தரவுகளை ஆராய்வதற்காக அவர்களோடு அமர்ந்து உரையாடுவோம். அதன் பிறகு விண்ணப்பங்களை முதலீட்டு முடிவுகளுக்காக ஆராய்வோம்.

அடைகாப்பு, வழிகாட்டல்

முதலீட்டு விண்ணப்பம் செய்கிற தொழில் முனைவோர் கேட்டால், அவர்களுக்கு வழிகாட்டுதல், இன்குபேஷன் எனப்படும் அடைகாப்பு ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்வீர்களா என்று கேட்டபோது, தாங்கள் அப்படி அடைகாப்பு செய்வதில்லை என்றும், ஆனால், தங்கள் அலுவலகமே சென்னை ஐஐடி இன்குபேஷன் சென்டரில்தான் இருக்கிறது என்றும், ஐஐடி இன்குபேஷன் சென்டர் இதுவரை 180க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களை அடைகாத்து வெற்றிகரமாக வெளியில் அனுப்பி இருப்பதாக குறிப்பிட்டார்.

தமிழ்நாடு முழுவதும் பல பொறியியல் கல்லூரிகள் இப்படி அடைகாப்பு மையங்களை நடத்துகின்றன. ஆனால், ஐஐடி அடைகாப்பு மையத்தில் கிடைக்கும் பேராசிரியர்களின் தரம், அங்கே அறிவைப்பெறுவதற்கு கிடைக்கும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. பேராசிரியர்கள் தங்கள் நேரத்தையும் ஆற்றலையும் செலவிட்டு இந்த அடைகாப்புப் பணியை செய்கிறார்கள்.

எல்லா இடங்களிலும் அடைகாப்பு என்பது இப்படித்தான் நடக்கிறது. எங்களிடம் முதலீடு கேட்கும் நிறுவனங்கள் அப்படி இன்குபேஷன் வேண்டும் என்று கேட்டால், அத்தகைய இன்குபேஷன் மையங்களுக்கு அவர்களைப் பரிந்துரைப்போம் என்றார்.

தொடங்கி 10 ஆண்டுகளுக்கு மேலே ஆன நிறுவனங்களை ஸ்டார்ட் அப் நிறுவனம் என்று கருதுவதில்லை என்பதையும் அவர் தெரிவித்தார்.

என்ன விதமான தொழில்களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டப்படுகிறது என்று கேட்டபோது, மெட்டாவெர்ஸ் தொழில்நுட்பம், வெப்3 தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் நீடித்த நிலைத்த தன்மைக்கு உதவும் வகையிலான பண்டங்களை, சேவைகளை வடிவமைக்கும் நிறுவனங்கள், நீர் மேலாண்மை, வேளாண் தொழில்நுட்பம், கழிவு மேலாண்மை, ஓடிடி தளங்கள், SAS போன்ற துறைகளில் புத்தாக்கம் செய்யும் நிறுவனங்களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இப்படி ஏஞ்சல் முதலீட்டாளர்கள் தாங்கள் செய்யும் முதலீட்டுக்குப் பிரதிபலனாக நிறுவனத்தில் 10-15 சதவீதம் பங்கு வாங்கிக்கொள்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதன் பிறகும் மேற்கொண்டு வளரவேண்டும் என்ற நிலை வரும்போது, வென்ச்சர் முதலீட்டு நிறுவனங்கள் பெரிய அளவிலான தொகையை முதலீடு செய்யும்.

ஏஞ்சல் முதலீட்டாளர்களுக்கும் வென்ச்சர் முதலீட்டாளர்களுக்கும் உள்ள வேறுபாடு என்பது ஏஞ்சல் முதலீட்டாளர்கள் தனி நபர்கள். வென்ச்சர் முதலீட்டாளர்கள் என்போர் நிறுவனங்கள்.

ஏஞ்சல் முதலீட்டாளர்கள் அளிக்கும் முதலீடு சிறிய அளவில் இருக்கும். வென்ச்சர் முதலீட்டாளர்கள் அளிக்கும் மூலதனம் அளவில் பெரியதாக இருக்கும். ஆனால், கொஞ்சம் வளர்ந்த நிலையில் உள்ள நிரூபித்த நிறுவனங்களுக்குதான் இந்த வென்ச்சர் முதலீட்டாளர்கள் முதலீடு தருவார்கள் என்கிறார்கள் வல்லுநர்கள்.

இது தவிர, நிறுவனம் மேலும் வளர்ந்து கூட்டுப் பங்கு நிறுவனமாக மாறி, பங்குச் சந்தையில் முதலீடு திரட்டுவதற்கு முன்பாக சீரிஸ் ஏ, சீரிஸ் பி, சீரிஸ் சி என வெவ்வேறு வகை முதலீடு திரட்டும் கட்டங்கள் இருப்பதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

ராணுவத் தளவாடங்கள், மென்பொருள், வேளாண் தொழில்நுட்பம் என்று ஒவ்வொரு குறிப்பிட்ட துறைகளில் மட்டுமே முதலீடு செய்கிற வென்ச்சர் நிதி நிறுவனங்கள் உள்ளன என்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் 100 கோடிக்கு குறைவில்லாமல் முதலீடு செய்யும் வென்ச்சர் நிறுவனங்கள் கூட உள்ளன என்றும் கூறினார் பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன்.

காணொளிக் குறிப்பு, பங்குச் சந்தையில் பணம் சம்பாதிக்க Algo Trading உதவுமா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: