நூறாண்டுக்கு முன் காணாமல் போன ஜெர்மனி நீர்மூழ்கி கப்பல் என்ன ஆனது?

நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த போரின் போது காணாமல் போன ஜெர்மன் யு-படகு (நீர்மூழ்கிக் கப்பல்) இருக்கும் இடத்தை டைவர்ஸ் (ஆழ்கடல் நீச்சல் வீரர்கள்) கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் நீண்ட நாட்களாக நீடித்து வந்த அதன் மர்மம் விலகியுள்ளது.

1917 ஆம் ஆண்டில், ஆங்கிலக் கால்வாயில் ராயல் கடற்படையின் 'லேடி ஆலிவ்' கப்பலுக்கும், ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல் UC-18 க்கும் இடையில் நடைபெற்ற போரின் போது இந்த UC-18 நீர்மூழ்கி கப்பல் காணாமல் போனது.

அதோடு சேர்த்து இந்த மோதலில் லேடி ஆலிவ் கப்பலும் கடலுக்குள் மூழ்கிப்போனது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பிபிசி ஆவணப்படம் ஒன்றை எடுத்துள்ளது.

அதற்கான படப்பிடிப்பு ஆழ்கடலுக்குள் நடந்து கொண்டிருக்கும் போது இந்த UC-18 நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் அதன் எஞ்சிய பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த கப்பலை கண்டுபிடிக்கவும், அதை அடையாளம் காணவும் டைவர்ஸ் (ஆழ்கடல் நீச்சல் வீரர்கள்) குழுவுக்கு நான்கு ஆண்டுகள் ஆகியுள்ளன.

ஆழ்கடல் திரைப்பட தயாரிப்பாளரான கார்ல் டெய்லர், தற்போது மிகவும் மகிழ்ச்சியில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த கப்பல்கள் குறித்து எடுக்கப்பட்டுள்ள 'The Hunt for Lady Olive and the German Submarine' என்ற பிபிசியின் ஆவணப்படம் ஜூன் மாதம் வெளியாக உள்ளது.

230 அடி ஆழத்தில் நீர்மூழ்கிக் கப்பல்

UC-18 மற்றும் லேடி ஆலிவ் ஆகிய இரண்டு கப்பல்களுமே இந்த போரில் மூழ்கின. இதனால், UC-18 நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த 28 பணியாளர்கள் உயிரிழந்தனர்.

பிபிசி ஆவணப்படத்திற்கான படைப்பின்போது, UC-18 இன் எஞ்சிய பாகங்கள் இருக்கும் இடத்தை அடையாளம் கண்ட நீச்சல் வீரர்கள் குழு, லேடி ஆலிவ் மூழ்கிய இடத்தையும் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய கார்ல் டெய்லர், குறைந்த வெளிச்சத்தில் கடலின் அடித்தளத்தை ஆராய்வது சவால்கள் நிறைந்தது என்று கூறினார்.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள UC-18 நீர்மூழ்கிக் கப்பல் கடலுக்குள் 70 மீட்டர் (230 அடி) ஆழத்தில் நீச்சல் வீரர்களால் அடையாளம் காணப்பட்டது.

இந்த தேடுதல் பணியில் ஈடுபட்ட குழு, கடல் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் மற்றும் யு-படகு நிபுணரான தாமஸ் டெர்னாட்டுடன் இணைந்து பணியாற்றியது.

வரலாற்றுச் சான்றுகளின்படி, ஆங்கிலக் கால்வாயில் ஜெர்சி கடற்கரையிலிருந்து 13 கிமீ தொலைவில் இந்த கப்பல்களுக்கிடையில் போர் நடந்துள்ளது.

ஆனால், UC-18 மற்றும் லேடி ஆலிவ்ஸ் ஆகிய கப்பல்கள் மேற்கில் 64 கி.மீ. தொலைவில் காணப்பட்டதாக கார்ல் டெய்லர் கூறியுள்ளார்.

ஆழ்கடல் நீச்சல் குழுவினர் தங்கள் தேடுதலின் போது, இந்த மோதலில் மூழ்கிய இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களின் எச்சங்களையும் கண்டுபிடித்தனர்.

இந்த குழுவின் கண்டுபிடிப்புகள் குறித்து பிரெஞ்சு அதிகாரிகள் மற்றும் ஜெர்மன் கடற்படைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மேலும் பேசிய கார்ல் டெய்லர், “இந்தக் கப்பல்களுக்குப் பின்னால் இருந்த நீண்டகால மர்மம் விலகியுள்ளது போல் தெரிகிறது. ஐரோப்பாவின் வரலாற்றில் மிகவும் கொந்தளிப்பான காலகட்டத்திற்குப் பின்னால் உள்ள தியாகங்களை மக்கள் புரிந்துகொள்ள இந்த ஆவணப்படம் உதவும் என்று நம்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)