அதிமுகவை விட திமுகவுக்கு அதிக பங்களிப்பு செய்தாரா எம்ஜிஆர்?

எம் ஜி ஆர்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

கல்லூரி விழா ஒன்றில் சமீபத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எம்ஜிஆர் அதிமுகவை விட திமுகவிற்கே அதிக பங்களிப்பு செய்ததாக கூறியிருக்கிறார். உண்மை என்ன?

புதன்கிழமையன்று, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜானகி எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு துவக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுகவை விட, திமுகவில்தான் எம்ஜிஆரின் பங்களிப்பு அதிகம் என்று குறிப்பிட்டார்.

"இது சிலருக்கு வியப்பாக இருக்கும். அதிர்ச்சியாக இருக்கும். ஆச்சரியமாக இருக்கும். ஆனால், வரலாற்று உண்மையை மனசாட்சிப்படி சிந்திக்கும் யாருக்கும் இது அதிர்ச்சியாக இருக்காது. எம்ஜிஆர் ஒரு தனி இயக்கம் கண்டார். அந்த இயக்கத்தைப் பொறுத்தவரை அவருடைய பங்களிப்பு என்பது 15 ஆண்டுகள்தான்.

ஆனால், அதிக ஆண்டுகள் அதாவது 1952ஆம் ஆண்டு முதல் 1972வரை 20 ஆண்டுகள் திமுகவில்தான் இயங்கிக் கொண்டிருந்தார். இதை அவரே சுட்டிக்காட்டி எழுதியிருக்கிறார்," என்று குறிப்பிட்டார்.

தன் திரைவாழ்க்கையின் துவக்கத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்த எம்ஜிஆர் மெல்ல, மெல்ல திராவிட இயக்கத்தின் மீது ஈர்க்கப்பட்டார்.

முடிவில் 1953 ஜனவரி 17ஆம் தேதி தி.மு.கவில் முறைப்படி இணைந்தார் எம்ஜிஆர் இதற்குப் பிறகு, பல ஆண்டுகளுக்கு திமுகவின் முற்போக்கு சிந்தனைகளோடு பெரும்பாலும் ஒத்துச்செல்லக்கூடிய படங்களையே எம்.ஜி.ஆர். தேர்வு செய்தார்.

சில சமயங்களில் படங்களில் தன் கட்சிக் கொள்கைகளுக்கு ஏற்றபடி மாற்றங்களைச் செய்யச் சொன்னார். அப்படிச் செய்யாத பட்சத்தில் அந்தப் படங்களில் இருந்து அவர் விலகினார்.

1957இல் வெளிவந்த ராணி லலிதாங்கி திரைப்படம் இதற்கு ஒரு உதாரணம். இந்தப் படத்தில் கதாநாயகன் அனைத்துப் பெண்களையும் பாலியல் தொழிலாளியாகக் கருதி ஒதுக்குவதைப் போல காட்சிகள் இருந்ததால் அதனை ஏற்காமல் விலகியதாகச் சொன்னார். அதேபோல, 1958ல் வெளியான காத்தவராயன் படத்திலிருந்தும் விலகினார்.

எம்ஜிஆர், கருணாநிதி

இதற்குப் பிறகு, தான் நடித்த படங்கள், தன் படங்களின் பாடல்கள் ஆகியவற்றில் முடிந்த அளவுக்கு தி.மு.கவின் சின்னமோ, கொடியோ இடம்பெறும்படி பார்த்துக்கொண்டார் எம்ஜிஆர்.

அவர் நடித்த படங்களின் வசனங்களில் பல தருணங்களில் முற்போக்குச் சிந்தனைகள் தென்பட்டன. அதே நேரத்தில், தன்னுடைய இமேஜையும் தொடர்ந்து கவனமாகப் பேணிவந்தார்.

1958ல் வெளிவந்த நாடோடி மன்னன் எம்ஜிஆர் - தி.மு.க. இடையிலான உறவின் ஒரு முக்கியமான தருணமாக அமைந்தது. இந்தப் படம் வெற்றிகரமாக 100 நாட்களைத் தொட்டபோது, மதுரையில் மிக பிரமாண்டமான ஊர்வலம் ஒன்றை தி.மு.க. நடத்தியது. அதற்குப் பிறகு நடந்த பொதுக்கூட்டத்தில் சி.என். அண்ணாதுரை உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பேசினர்.

அந்த கூட்டத்தில் பேசிய எம்ஜிஆர், மக்களுக்கு சேவை செய்யும் கட்சி தி.மு.க. எனக் காட்டவே, நாடோடி மன்னன் படம் உருவாக்கப்பட்டதாகக் கூறினார். அக்கட்சியின் இருவண்ணக் கொடி இந்தப் படத்தில் காட்டப்பட்டது.

உதயசூரியன் சின்னமும் திரையில் தென்பட்டது. சக்கரவர்த்தித் திருமகள் படத்தில் கதாநாயகன் பெயரே உதயசூரியன்தான். 1963ல் வெளிவந்த ஒரு படத்திற்கு கட்சித் தலைவர் சி.என். அண்ணாதுரையை குறிக்கும் வகையில் 'காஞ்சித் தலைவன்' என பெயரிடப்பட்டது.

நம்நாடு திரைப்படத்தில் தி.மு.கவின் நிறமான கறுப்பு - சிவப்பு நிறத்தை அணிந்தே முதல் காட்சியில் வருவார் எம்.ஜி.ஆர். அவர் கையில் வைத்திருக்கும் புத்தகத்தில் அண்ணாவின் படமும் காந்தியின் படமும் இருக்கும். சுவர்களிலும் காந்தியின் படம் தென்படும்.

குடிசைப் பகுதிகளில் தி.மு.கவின் கொடி பறக்கும் காட்சிகளும் எம்.ஜி.ஆர். தேர்தலில் போட்டியிடுவது போல வரும் காட்சியில் அவருக்காக வாக்குக் கேட்டு கறுப்பு சிவப்பு நிறத்தில் போஸ்டர்களும் ஒட்டப்படும்.

அதேபோல, இவரது திரைப்படங்களில் காங்கிரஸ் கட்சி ஒரு சர்வாதிகாரத் தன்மைகொண்ட கட்சி என்பதைப் போலவே தொடர்ந்து உருவகப்படுத்தப்பட்டது. சினிமாவில் இதுபோல கட்சியை பிரச்சாரம் செய்த எம்.ஜி.ஆர். வேறு விதங்களிலும் கட்சிக்கு உதவியாக இருந்தார்.

கட்சிக்காக நிதி திரட்டுவது, தன்னுடைய 2000க்கும் மேற்பட்ட எம்.ஜி.ஆர். மன்றங்களைக் கட்சிக்காகப் பயன்படுத்துவது போன்ற விதத்திலும் தி.மு.கவிற்கு எம்.ஜி.ஆர். உதவினார். இதன் பலனாக, 1962ல் கட்சியின் சார்பில் மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

எம் ஜி ஆர், கருணாநிதி, ஜெயலலிதா

1967ஆம் ஆண்டில் முதல் முறையாக பரங்கிமலைத் தொகுதியில் போட்டியிட்டாலும், அந்தத் தருணத்தில் எம்.ஆர். ராதாவால் சுடப்பட்டார்.

அவர் கழுத்தில் கட்டுடன் இருக்கும் சுவரொட்டிகள் மாநிலம் முழுவதும் ஒட்டப்பட்டன.

இது தி.மு.கவிற்கு பெருமளவில் உதவியது. எம்.ஜி.ஆரும் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

அதேபோல, 1971ஆம் ஆண்டுத் தேர்தலிலும் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வாக்குகளைத் திரட்டினார் எம்ஜிஆர். தி.மு.க. மூன்றில் 2 பங்கு இடங்களைப் பிடித்து வெற்றிபெற்றது.

ஆனால், கட்சியின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆருக்கும் முதலமைச்சர் மு. கருணாநிதிக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றிவந்த நிலையில், 1972 அக்டோபரில் தி.மு.கவைவிட்டு விலகினார் எம்.ஜி.ஆர்.

திமுகவின் எழுச்சியில் சி.என். அண்ணாதுரை, மு. கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களின் பங்களிப்பு பெருமளவில் இருந்தது என்றாலும், எம்.ஜி.ஆர். தம் திரைவாழ்வின் மிக முக்கியமான காலகட்டத்தை தி.மு.கவின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தினார் என்பதும் கவனிக்கத்தக்கது. இதனை கட்சியின் நிறுவனர் சி.என். அண்ணாதுரை உணர்ந்திருந்தார்.

"முதலமைச்சர் சொல்வது பெருமளவு உண்மைதான். 1967ல் தி.மு.கவுக்குக் கிடைத்த வெற்றியில் எம்.ஜி.ஆரின் பங்கு மிகப் பெரியது. ஒரு முறை கோவில்பட்டிக்கு அருகில் எம்.ஜி.ஆரின் பிளைமவுத் காரில் அவருடன் அண்ணா சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். காரின் முன் பக்கம் பறந்த தி.மு.க. கொடியைப் பார்த்தவர்கள், 'எம்.ஜி.ஆர். கொடி, எம்.ஜி.ஆர். கொடி' என்று கத்தினார்கள்.

அப்போது அண்ணா முன் இருக்கையில் அமர்ந்திருந்தார். எம்.ஜி.ஆர். பின் இருக்கையில் அமர்ந்திருந்தார். இந்த நிகழ்வு குறித்து பிறகு ஒருவர் அண்ணாவிடம் கேட்டபோது, உங்களுக்குப் புரியாது. எம்,ஜி.ஆரின் பிரபலம் கட்சிக்குத்தானே உதவுகிறது. கட்சிக்குத்தானே லாபம்?என்றார்.

எம்ஜிஆர்

பட மூலாதாரம், அருண்

1964ல் எம்.ஜி.ஆர். சில காரணங்களால் தனது எம்.எல்.சி. பதவியை ராஜிநாமா செய்தபோது, அண்ணா மருத்துவமனையில் இருந்தார். அவருக்கு அந்த நிகழ்வு கவலையை ஏற்படுத்தியது. அடுத்த சில நாட்களில், தான் கட்சியிலிருந்து விலகப்போவதில்லை என அறிவித்தார் எம்.ஜி.ஆர்.

இதைக் கேட்டு அண்ணா ஆறுதலடைந்தார். எம்.ஜி.ஆர் இல்லாத கழகமோ, கழகத்தில் இல்லாத எம்ஜிஆரையோ நினைத்துப் பார்க்க முடியவில்லை என்ற பொருள்பட கூறினார் அண்ணா.

1967ல் அண்ணா அமைச்சரவையை முதன்முதலில் அமைத்தபோது, அமைச்சர்கள் பட்டியலை எம்.ஜி.ஆரிடம் காட்டி ஒப்புதல்கேட்டார்" என்கிறார் முன்னாள் முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை, எம்.ஜி.ஆர். ஆகியோரின் சரிதைகளை எழுதிய ஆர். கண்ணன்.

1972ல் அ.தி.மு.கவை துவங்கிய எம்ஜிஆர், 1977ல் முதலமைச்சரானார். அதற்குப் பிறகு 1987ல் உடல்நலக் குறைவால் உயிரிழக்கும்வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தார் எம்.ஜி.ஆர்.

1972ல் அ.தி.மு.கவை எம்.ஜி.ஆர். துவங்கிய பிறகு அவர் தனது ரசிகர் மன்றங்களின் தீவிரச் செயல்பாடுகளின் மூலமும் தன்னுடைய களச் செயல்பாடுகள் மூலமுமே கட்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டியிருந்தது.

எம்.ஜி.ஆர். கட்சியை ஆரம்பித்த பிறகு, உலகம் சுற்றும் வாலிபனில் துவங்கி, மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்வரை மொத்தமே 16 படங்களில்தான் நடித்தார். இதில் இதயக்கனி போன்ற படங்களில் தனது கட்சிக் கொடியை பயன்படுத்தினார் என்றாலும், எம்.ஜி.ஆரின் திரை வாழ்க்கை தி.மு.கவுக்கு உதவியதைப்போல அ.தி.மு.கவுக்கு உதவவில்லை.

ஆனால், பொதுக்கூட்டங்கள், மாநாடுகள் மூலம் தன் தொண்டர்களைச் சந்தித்து, ஆதரவு திரட்டியும் உற்சாகமூட்டியும் வந்தார் எம்.ஜி.ஆர். 1984ல் அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்படும்வரை இது தொடர்ந்து.

1984ல் அவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த பிறகு, அவருடைய செயல்பாடுகள் வெகுவாகக் குறைந்த நிலையில், 1972 முதல் 1984 வரையிலான 12 ஆண்டுகளையே அவர் அ.தி.மு.கவிற்காக தீவிரமாகச் செயல்பட்ட காலகட்டமாகக் கொள்ளலாம்.

தி.மு.கவைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட 19 ஆண்டுகளை, குறிப்பாக தன் வாழ்வின் மிக முக்கியமான ஆண்டுகளை தி.மு.கவின் வளர்ச்சிக்காகவே செலவழித்தார்.

"ஆனால், 1967ஆம் ஆண்டின் வெற்றிக்கு குண்டடி பட்ட எம்.ஜி.ஆரின் படத்துடன் கூடிய சுவரொட்டிகள்தான் காரணம் என்பதை முன்னாள் முதல்வரும் எம்.ஜி.ஆரின் நீண்ட கால சகாவும் தி.மு.கவின் மறைந்த தலைவருமான மு. கருணாநிதி சில தருணங்களில் ஏற்கவில்லை. சட்டமன்றத்திலேயே இதை ஒரு தருணத்தில் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

ஆனால், 1984ல் எம்.ஜி.ஆர். உடல்நலம் குன்றியபோது, அவரே எம்.ஜி.ஆரின் பங்களிப்புப் பற்றி அர்ஜுனனும் கர்ணனும்போல நாங்கள் இருவரும் கழகத்திற்காக வெற்றிகளைக் குவித்தோம் என்றார். ஆகவே முதலமைச்சர் சொன்னது பெருமளவு உண்மை.

சின்னச் சின்ன குக்கிராமங்களில்கூட தி.மு.க. கொடி பறந்ததற்கு எம்.ஜி.ஆர். காரணம் என்பதை மறுக்க முடியாது. அதேபோல, மு. கருணாநிதி மீதும், தி.மு.க. மீதுமான ஒரு பெரிய எதிர்ப்பு சக்தியை ஒருமுகப்படுத்தியதும் எம்.ஜி.ஆர்தான் என்பதையும் மறுக்க முடியாது" என்கிறார் ஆர். கண்ணன்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: