ரோகினி திரையரங்க சர்ச்சை வழக்கில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு திடீர் நீக்கம் - காவல்துறை பாரபட்சம் காட்டுகிறதா?

ரோகிணி திரையரங்க விவகாரம்
    • எழுதியவர், கவியரசு வி
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கடந்த மார்ச் 30-ம் தேதி சிம்பு நடித்த பத்து தல திரைப்படம் வெளியான அன்று, ரோகினி திரையரங்கில் நடந்த நிகழ்வு என்று கூறி ஒரு காணொலி சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த காணொலியில், குழந்தைகளுடன் படம் பார்க்கச் சென்ற பெண்ணை, கையில் டிக்கெட் வைத்திருந்தும் கூட உள்ளே விடாமல் திரையரங்க ஊழியர் ஒருவர் தடுப்பது பதிவாகியிருந்தது. இந்த சம்பவத்திற்கு அனைத்து தரப்பினரும் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். அதை தொடர்ந்து காவல்துறை எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 2 பிரிவுகளின் கீழ் அத்திரையரங்க நிர்வாகத்தின் மீது வழக்குபதிவு செய்து விசாரணையை தொடங்கியது.

தற்போது அவர்கள் நரிக்குறவர்கள் இல்லை என்று கூறி இந்த வழக்கிலிருந்து எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை பிரிவை காவல்துறை நீக்கியுள்ளது. பிபிசியிடம் அதற்கு காவல்துறை கூறும் காரணங்களில் பல முரண்கள் உள்ளன. எதன் அடிப்படையில் இப்பிரிவு நீக்கப்பட்டுள்ளது? அதில் உள்ள முரண்கள் என்ன? காவல்துறையின் விசாரணை நேர்மையாக நடக்கிறதா? பாதிக்கப்பட்டவர்கள் உண்மையில் எந்த இனத்தை சேர்ந்தவர்கள்?

2 பிரிவுகள் எவை?

இந்த விவகாரத்தில், எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் ஐபிசி (IPC) பிரிவு 341-ன் கீழ் வழக்கு பதிவு செய்தது காவல்துறை. ஐபிசி பிரிவு 341-ன் படி எந்த நபரையும் முறையற்றுத் தடுப்பது குற்றமாகும். இந்த குற்றத்திற்கு 500 ரூபாய் வரை அபராதம் அல்லது ஒரு மாதம் வரை வெறுங்காவல் தண்டனையாக விதிக்கப்படும்.

எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் என்பது இந்தியாவில் பட்டியல் மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுப்பதற்கும், அதை செய்பவர்களை கைது செய்து தகுந்த தண்டனை பெற்றுத் தரு‍வதற்கும் கொண்டு வரப்பட்டது. இந்த பிரிவு தான் இப்போது இவ்வழக்கில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

விசாரணை அதிகாரி கூறும் விளக்கம்

இது தொடர்பாக, பிபிசி தமிழிடம் பேசிய இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான கோயம்பேடு உதவி ஆணையர் ரமேஷ் பாபு கூறும்போது, “பாதிக்கப்பட்டதாக சொல்லப்படுபவர் ஒரே ஒரு பெண் தான். அவருடைய சொந்த ஊர் திருவள்ளூரில் உள்ள பொன்னேரி தாலுகாவுக்கு உட்பட்ட அலமாதி.

பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் பெண் வைத்திருந்த சாதி சான்றிதழை அப்பகுதியின் தாசில்தாரைக் கொண்டு சரிபார்த்தோம். அவர் நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர் அல்ல. அவர் தங்கள் உடம்பில் சாட்டையடித்துக் கொள்ளும் செம்படவர் இனத்தை சேர்ந்தவர். அவர் தெலுங்கு பேசும் இனம் என்பதும், இந்த இனம் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை (MBC) சேர்ந்த இனம் என்பதும் முடிவானது. அதன் அடிப்படையில் எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீக்கியுள்ளோம்” என்று கூறுகிறார்.

”எங்களிடம் சாதி சான்றிதழ் இல்லை” - பாதிக்கப்பட்டவர்கள்

பாதிக்கப்பட்டவர் என்று விசாரணை அதிகாரி குறிப்பிட்ட பெண்ணிடம் பிபிசி பேசியது. அப்போது அவர், தன்னிடம் சாதி சான்றிதழ் இல்லை என்று கூறினார். அவர் மட்டுமில்லாமல் அங்கு அவருடன் வசிப்பவர்களும் கூட தங்களிடம் சாதி சான்றிதழ் இல்லை என்று கூறுகிறார்கள். இன்றும் தாங்கள் உடம்பில் சாட்டையால் அடித்து பிச்சையெடுக்கும் தொழிலைத்தான் செய்து வருவதாக கூறுகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் இவ்வாறு கூறுவது விசாரணை அதிகாரியின் கூற்றுகளுக்கு முரணாக உள்ளது.

உதவி ஆணையர் ரமேஷ் பாபு ‘தங்கள் உடம்பில் சாட்டையடித்துக் கொள்ளும் செம்படவர்’ இனம் என்று குறிப்பிட்டிருக்கிறார். பாதிக்கப்பட்டவரும் அதே தொழில் செய்வதாக கூறியிருக்கிறர்கள். பிபிசி தமிழ் இந்த இனம் குறித்து நீலகிரி பழங்குடியினர் ஆராய்ச்சி நிலையத்தின் முன்னாள் இயக்குனர் சத்தியநாராயணனிடம் கேட்டது.

“தங்கள் உடம்பில் சாட்டையால் அடித்துக்கொள்ளும் இனத்தின் பெயர் செம்படவர் இனம் அல்ல. அந்த இனத்தின் பெயர் டோம்பரா. இவர்கள் பட்டியலினத்தவர்கள் (SC) ஆவார்கள். இந்த இனத்தவர்கள் பெரும்பாலும் தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர்கள். செம்படவர் என்னும் இனம் மீன் பிடிப்பதை தொழிலாக கொண்ட இனம். மற்றவர்களிடம் பிச்சையெடுக்கும் தொழிலை செய்ய மாட்டார்கள்” என்று அவர் கூறுகிறார்.

பாதிக்கப்பட்டவர்களுடைய தொழிலை தெளிவாக சொல்லும் விசாரணை அதிகாரி இனத்தின் பெயரை மாற்றி சொல்வதும் அதற்கு சான்று இருப்பதாக உறுதியளிப்பதும் முரணாக இருக்கிறது.

ரோகிணி திரையரங்க விவகாரம்
படக்குறிப்பு, சத்திய நாராயணன் - நீலகிரி பழங்குடியினர் ஆராய்ச்சி நிலையத்தின் முன்னாள் இயக்குனர்

“மனித உரிமை மீறல் நடக்கவில்லை” - விசாரணை அதிகாரி

மனித உரிமை ஆணையம் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை கேட்டது குறித்து பிபிசி நிருபர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த விசாரணை அதிகாரி, “இப்போது உங்களிடம் சொன்னதை தான் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப் போகிறோம். இதில் மனித உரிமை மீறல் நடைபெறவில்லை.

முதல் காரணம், அந்த படம் UA சான்றிதழ் பெற்ற படம். 18 வயதுக்கு உட்பட்டவர்கள் பார்க்கக் கூடாது. ஆனால் வந்தவர் குழந்தைகளுடன் வந்திருந்தார். இரண்டாவது காரணம், அவர்கள் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கவில்லை. அங்கு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த ரசிகர் மன்றத்தினர் ஒரே ஒரு டிக்கெட்டை இவர்களுக்கு இலவசமாக கொடுத்திருக்கிறார்கள். அந்த ஒரு டிக்கெட்டை கொண்டு இவர்கள் மூன்று பேர் உள்ளே நுழைய முயன்றிருக்கிறார்கள். அதனால் தான் ஊழியர் அவர்களை அனுமதிக்கவில்லை” என்று கூறுகிறார்.

ரோகினி திரையரங்க நிர்வாகம் அளித்த அதே UA விளக்கம்

சட்டப்படி, UA சான்றிதழ் பெற்ற திரைப்படத்தை 12 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் பெற்றோர் துணையுடன் பார்க்கலாம் (Unrestricted public exhibition subject to parental guidance for children below the age of twelve). ஆனால் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் அதை பார்க்க கூடாது என விசாரணை அதிகாரி ரமேஷ் பாபு கூறுகிறார். இதே UA சான்றிதழ் விளக்கத்தை தான் சம்பவம் நடந்த அன்று ரோகினி திரையரங்க நிர்வாகம் பத்திரிக்கை வெளியீடாக ட்வீட் செய்தது.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு

தகுதியற்ற நுழைவுச்சீட்டா?

படம் பார்க்க தங்களுடைய பிள்ளைகளுடன் வந்தவர்கள் சரியான நுழைவுச்சீட்டுகளை வைத்திருந்ததாக ரோகினி நிர்வாகம் மேற்கண்ட தனது பத்திரிக்கை வெளியீட்டில் உறுதி செய்துள்ளது. ஆனால், ஒரு நுழைவுச்சீட்டை கொண்டு மூவர் உள்ளே நுழைய முயற்சித்ததாகவும், பாதிக்கப்பட்டது ஒரே ஒரு பெண் தான் என்றும் விசாரணை அதிகாரி கூறுவது முற்றிலும் முரணாக உள்ளது.

ரோகிணி திரையரங்க விவகாரம்
படக்குறிப்பு, சுப்ரமணியன் - தமிழ்நாடு நரிக்குறவர்கள் சங்கத்தலைவர்

பாதிக்கப்பட்டவர்கள் நரிக்குறவர் இனமா? அல்லது டோம்பரா இனமா?

இச்சம்பவம் வைரலானபோது பாதிக்கப்பட்டவர்கள் நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர்கள் என்று அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டன. தற்போது அவர்களுடைய இனம் எது என்பது முக்கியமான கேள்வி ஆகியுள்ளதால், பிபிசி தமிழ் இது குறித்து தமிழ்நாடு நரிக்குறவர்கள் சங்கத்தலைவர் சுப்ரமணியனிடம் பேசியது.

அவர் கூறும்போது, “அந்த வீடியோ வைரல் ஆன அன்று அந்த செய்தியை பார்த்தோம். அதில் இருப்பவர்கள் தோற்றத்தில் நரிக்குறவர்களைப் போல் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் டோம்பரா இனத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் பட்டியல் பிரிவினர் (SC).

எங்களால் அவர்களை சுலபமாக அடையாளம் காண முடியும். அவர்கள் கழுத்தில் அணிந்திருக்கும் அணிகலன்கள் அந்த இனத்தவர் மட்டும் அணிபவை. அவர்கள் பேச்சில் தெலுங்கு சாயல் தெரியும். முக்கியமாக டோம்பரா இனத்தவர்கள் தங்கள் உடம்பில் சாட்டையடித்து பிச்சை எடுப்பார்கள். நரிக்குறவர்கள் சிறுசிறு வியாபாரங்கள் செய்வோம்; பிச்சை எடுக்கமாட்டோம்.

ஆனால் அவர்களும் பட்டியலினத்தவர்கள் தான். சாதாரண மக்களுக்கு இந்த வித்தியாசம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் நரிக்குறவர்கள் என்று செய்தி வெளியாகியிருக்கலாம்” என்று கூறினார். நீலகிரி பழங்குடியினர் ஆராய்ச்சி நிலையத்தின் முன்னாள் இயக்குனர் சத்தியநாராயணன் டோம்பரா இனம் பற்றி கூறியதை இங்கு சுப்பிரமணியன் கூறுவது உறுதிப்படுத்துகிறது.

ரோகிணி திரையரங்க விவகாரம்
படக்குறிப்பு, பாரதி அண்ணா - வழக்கறிஞர்

சாதி சான்றிதழ் இல்லாத பட்சத்தில் காவல்துறை என்ன செய்ய வேண்டும்?

பிபிசி தமிழிடம் பேசிய வழக்கறிஞர் பாரதி அண்ணா கூறியபோது,

“ஒரு வழக்கில், பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலினத்தவராக இருக்கலாம் என்ற சந்தேகம் இருந்து, அவர்களிடம் சாதி சான்றிதழ் இல்லாமல் இருந்தால், வழக்கை விசாரிக்கும் காவல்துறை இதை வருவாய் துறையிடம் (Revenue department) தெரியப்படுத்த வேண்டும்.

வருவாய் துறையினர் மானுடவியல் (Anthropology) துறை உதவியோடு பாதிக்கப்பட்டவர்களின் சாதியைக் கண்டறிந்து அவர்களுக்கு சாதி சான்றிதழை வழங்குவர். அதை கொண்டு தகுந்த பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரணையை தொடர வேண்டும். இதை செய்ய வேண்டிய பொறுப்பு காவல்துறை உடையது.

பாதிக்கப்பட்டவர்கள் அனைவருடைய சாதி சான்றிதழ்களும் இல்லாமல் இந்த வழக்கு விசாரணையை தொடர்வது அவர்களுக்கு நியாயம் கிடைப்பதை உறுதிப்படுத்தாது. மேலும் அது குற்றம் செய்தவர்களுக்கு சாதகமாக அமையலாம்” என்று கூறினார்.

இது தொடர்பாக ரோகினி திரையரங்க நிர்வாகத்தினரிடம் பேச பிபிசி மேற்கொண்ட அழைப்புகளுக்கு அவர்கள் பதிலளிக்கவில்லை. இந்த வழக்கில் சாதி சான்றிதழ் சரிபார்த்ததாக சொல்லப்படும் பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமாரிடம் பிபிசி விளக்கம் கேட்டது. அவரிடம் இருந்து இன்னும் பதில் கிடைக்கவில்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்

டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்