You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வெள்ளக் காடாக மாறிய இலங்கை - பாதிப்புகளை காட்டும் புகைப்படத் தொகுப்பு
இலங்கையில் இயற்கை சீற்றத்தால் 40 பேர் உயிரிழந்ததாகவும், 21 பேர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் மழையால் 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அங்குள்ள நிலவரம், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளின் நிலை ஆகியவற்றைக் காட்டும் சில புகைப்படங்களை இங்கு பார்க்கலாம்.
கொத்மலை பகுதியில் உள்ள இரத்தினபுரியில் மண் சரிவு ஏற்பட்டதில் ஒரு வீடு கிட்டத்தட்ட முழுமையாக அழிந்தது.
நல்வாய்ப்பாக இதில் யாரும் காயமடையவில்லை. அப்பகுதியில் இருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கொழும்பு - பதுளை பிரதான சாலையில் உள்ள ஒய் சந்திப்பில் இருந்து பண்டாரவெல செல்லும் சாலை மூடப்பட்டுள்ளது.
அந்த சாலையைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் தியத்தலாவ வழியாகச் செல்லும் சாலையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நாவலப்பிட்டி - தலவாக்கலை வீதியில் உள்ள காடியன்லெனா நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள ஒரு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது.
காடியன்லேன அருவிக்கு அருகில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக, நாவலப்பிட்டி - தலவாக்கலை வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது பெய்து வரும் கனமழை மற்றும் பலத்த காற்று அடுத்த சில நாட்களுக்குத் தொடரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த சில நாட்களில் தீவு முழுவதும் 100 மி.மீ-ஐ தாண்டி கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பதுளை மாவட்டத்தின் பல பிரதேச செயலகப் பிரிவுகளில் மண் சரிவுகள் காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளதாக, பதுளை இடர் முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் உதய குமார தெரிவித்துள்ளார்.
ஒஹிய பகுதியில் பாலம் ஒன்று மூழ்கியதால் ஓஹிய - ஹார்டன் சமவெளி சாலை மூடப்பட்டது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக மாஹோ எல்ல பிரதேசத்தில் வெள்ளப் பெருக்கில் சிக்கிய பொதுமக்களை இலங்கை விமானப் படை உதவியுடன் மீட்டுள்ளனர். பெல் -212 ஹெலிகாப்டர் மூலம் இவர்கள் மீட்டுள்ளனர்.
இலங்கையில் பெய்து வரும் கடும் மழையுடனான வானிலையை அடுத்து, நாடு முழுவதும் சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதை அடுத்து, தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்லுமாறு அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு