தமிழக மீனவர்கள் கைதுக்கும் இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கும் தொடர்பா? இவர்கள் கூறுவது என்ன?

இலங்கை அதிபர் தேர்தல், தமிழ்நாடு மீனவர்கள் கைது
    • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழக கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஜூன் 18 முதல் செப்டம்பர் 4 -ஆம் தேதி வரை மீன்பிடிக்க சென்ற மீனவர்களில்,160-க்கு அதிகமான மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த எண்ணிக்கையை பிபிசி தமிழிடம் தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அவ்வப்போது கைது செய்யப்பட்டாலும், இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு இலங்கை மீனவர்கள் வாக்குகளை பெறுவதற்காக திட்டமிட்டு கைது நடவடிக்கையை இலங்கை அரசு அதிகரித்துள்ளதாக தமிழக மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆனால் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் இதனை மறுத்துள்ளார்.

இலங்கை அதிபர் தேர்தல், தமிழ்நாடு மீனவர்கள் கைது
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தமிழக மீனவர் உயிரிழப்பு

இலங்கையில் வரும் 21-ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி சார்பில் சஜித் பிரேமதாச, அனுரா குமார திசநாயக்க ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது.

மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் வட மாகாண மீனவர்கள் வாக்குகளை பெறுவதற்காக இலங்கை கடற்படை சமீப காலமாக எல்லை தாண்டி மீன்பிடிப்பில் ஈடுபட்டதாக தமிழக மீனவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தமிழக மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், தமிழக மீனவர்கள் கைதாவது அதிகரித்து வருகிறது என்பதை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ தரவுகள் ஏதும் இருதரப்பில் இருந்தும் வெளியாகவில்லை.

நூற்றுக்கணக்கான மீனவர்களை இலங்கை அரசு அடுத்தடுத்து கைது செய்துள்ளதாகவும், மீனவர்களை சிறை பிடிக்கும் போது கடற்படை ரோந்து படகு மோதி தமிழக மீன்பிடி படகுகள் மூழ்கடிக்கப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதாகவும் தமிழக மீனவர்கள் கூறுகின்றனர்.

கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீன்பிடி படகின் மீது நடுக்கடலில் இலங்கை கடற்படை ரோந்து படகு மோதியது. 4 மீனவர்கள் சென்ற அந்த படகு மூழ்கியது.

அவர்களில் முத்து முனியாண்டி, மூக்கையா ஆகிய இருவர் உயிருடன் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டனர். அவர்கள் பின்னர் இலங்கை யாழ்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

எஞ்சிய இரண்டு மீனவர்களில் ஒருவரான மலைச்சாமி உயிரிழந்த நிலையில் சடலமாக இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டார். மற்றொரு மீனவர் ராமச்சந்திரன் தற்போது வரை கிடைக்கவில்லை.

பின்னர் உயிரிழந்த மீனவர் மலைச்சாமி உடல் மற்றும் உயிருடன் மீட்கப்பட்ட முத்து முனியாண்டி, மூக்கையா இருவருரையும் சர்வதேச கடல் எல்லையில் இலங்கை கடற்படையினர், இந்திய கடற்படையிடம் ஒப்படைத்தனர். அவர்கள் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

இலங்கை அதிபர் தேர்தல், தமிழ்நாடு மீனவர்கள் கைது
படக்குறிப்பு, முத்து முனியாண்டி, மூக்கையா ஆகியோரை இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கும் இலங்கை கடற்படை

உயிர் தப்பி வந்த மீனவர் மூக்கையா பிபிசி தமிழிடம் பேசுகையில், "ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நள்ளிரவு புறப்பட்டு நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையின் ரோந்து படகில் உள்ள மின் விளக்குகளை எரிய விடாமல் வந்து எங்கள் படகின் மீது வேகமாக மோதினார்கள். அதில் படகு உடைந்து நடுக்கடலில் மூழ்கியது" என்று விவரித்தார்.

"படகில் இருந்த நாங்கள் நால்வரும் கடலில் தத்தளித்த நிலையில் என் கண் முன்னே என்னுடன் இருந்த இரண்டு மீனவர்கள் கடலில் மூழ்கினர். நானும் மற்றொரு மீனவரும் படகில் இருந்த ஐஸ் பாக்ஸ், டீசல் கேன் உள்ளிட்டவற்றை பிடித்தவாறு வெகு நேரம் கடலில் மிதந்ததை கண்ட இலங்கை கடற்படையினர் எங்களை மீட்டு யாழ்ப்பாணம் அழைத்து சென்று தூதரகத்தில் ஒப்படைத்தனர்."

கடந்த 15 வருடங்களாக ராமேஸ்வரத்தில் மீன்பிடி தொழில் செய்து வரும் நிலையில், இவ்வாறு கடற்படை ரோந்து படகு விளக்குகளை அனைத்து மற்ற படகு மீது மோதி மூழ்கடித்ததாக தான் கேள்விப்பட்டதில்லை என்கிறார் மூக்கையா.

இலங்கை அதிபர் தேர்தல், தமிழ்நாடு மீனவர்கள் கைது
படக்குறிப்பு, சேதமடைந்த படகு

இதேபோல் செப்டம்பர் 10-ஆம் தேதி தமிழக மீனவர்களின் மற்றொரு படகு மீது இலங்கை கடற்படை ரோந்து படகு மோதி விபத்து ஏற்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ள செருதூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த தர்மன் என்பவருக்கு சொந்தமான ஃபைபர் படகில் மீன் பிடிக்கச் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல், தேவராஜ், கார்த்திகேயன், சதீஷ் ஆகியோர் அந்த விபத்தில் சிக்கினார்கள்.

“நாங்கள் இந்திய எல்லைக்குள் மீன் பிடித்து வந்ததாகவும் இலங்கை கடற்பரப்பிற்குள் வரவில்லை என்று இலங்கை கடற்படையிடம் கூறினோம். ஆனால் அவர்கள் அதை ஏற்க மறுத்து நீண்ட நேரத்திற்கு பிறகு அப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த சக மீனவர்களிடம் எங்கள் நால்வரையும் ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர்.”

சக மீனவர்கள் உதவியுடன் நடுக்கடலில் கவிழ்ந்த படகை மீட்டு காயங்களுடன் கரை வந்து சேர்ந்ததாக இந்திய மீனவரான கார்த்திகேயன் கூறினார்.

இலங்கை அதிபர் தேர்தல், தமிழ்நாடு மீனவர்கள் கைது
படக்குறிப்பு, நாகப்பட்டினம் மாவட்டம் செருதூரை சேர்ந்த மீனவர்கள்

'மீனவ மக்களின் வாக்குகளை பெற இப்படி செய்கின்றனர்'

இந்திய அரசு இது தொடர்பாக விரைவில் இலங்கையிடம் பேசி தீர்வை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மீனவ சங்க அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன.

பிபிசி தமிழிடம் பேசிய இந்திய இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை குழு தலைவர் ஜேசுராஜா, “சமீப காலமாக சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களுக்கு கோடிக்கணக்கில் அபராதம் விதிப்பது, இரண்டாவது முறையாக சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிப்பது, தண்டனை விதிக்கப்படும் தமிழக மீனவர்களுக்கு மொட்டை அடிப்பது உள்ளிட்டவற்றை இலங்கை அரசு செய்து வருகிறது.” என்றார்.

“இலங்கை மீனவ மக்களின் வாக்குகளை ரணில் விக்ரமசிங்க பெறுவதற்காக தமிழக மீனவர்களை கைது செய்து, மீனவர்களுக்கு மொட்டை அடிப்பது, படகுகளை மூழ்கடிப்பது என இலங்கை அரசு செய்து வருவதாக தெரிகிறது.” என கூறினார்

இலங்கை அதிபர் தேர்தல், தமிழ்நாடு மீனவர்கள் கைது

பட மூலாதாரம், Facebook

படக்குறிப்பு, ஜேசுராஜா

‘கைது நடவடிக்கை அதிகரித்துள்ளதை உணர முடிகிறது'

தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் பேசுகையில், சமீப காலமாக தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது அதிகரித்துள்ளதை உணர முடிகிறது என்றார்.

“மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, ஆ.ராசா, தமிழக மீனவ அமைப்பினர் உள்ளிட்டோருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து மீனவர் பிரச்னை குறித்து விரிவாக எடுத்துரைத்தேன். இலங்கையில் தேர்தல் முடிந்த பின்னர் இருநாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தை விரைவில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்து தருவதாக ஜெயசங்கர் தெரிவித்தார்,” என்று பிபிசி தமிழிடம் விவரித்தார் அனிதா ராதாகிருஷ்ணன்.

மீனவர்கள் கைது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கும், இந்திய பிரதமருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கை அதிபர் தேர்தல், தமிழ்நாடு மீனவர்கள் கைது

பட மூலாதாரம், Facebook

படக்குறிப்பு, தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

இலங்கை மீனவர்கள் கூறுவது என்ன?

இலங்கை மீனவர்கள் மீது உள்ள அக்கறையால் தமிழக மீனவர்களை, இலங்கை அரசு கைது செய்வதாக தங்களுக்கு தெரியவில்லை என்கிறார் இலங்கை மீனவ சங்க பிரதிநிதி.

இது குறித்து அகில இலங்கை மீனவர் மக்கள் தொழிற்சங்க வடமாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா பிபிசி தமிழிடம் பேசுகையில், இலங்கை வடமாகாண மீனவர்கள் வன்முறை மற்றும் உயிரிழப்புகளை ஒருபோதும் விரும்புவதில்லை, என தெரிவித்தார்.

“எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் வந்து கடல் வளங்களை அழித்து, இலங்கை மீனவர்களின் பொருட்களை சேதப்படுத்தும் தமிழக மீனவர்களை கைது செய்ய வேண்டும் என கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியுள்ளோம்.

ஆனால் அப்போதெல்லாம் இலங்கை அரசு மௌனம் காத்தது. பெயரளவில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை அரசு, இலங்கையில் தற்போது தேர்தல் நடைபெறுவதால் அதிகளவு தமிழக மீனவர்கள் கைது செய்கிறது என்று நான் கருதுகிறேன்,” என்கிறார் அன்னலிங்கம்.

தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடியில் ஈடுபடுவார்கள் என்றும் அப்போது இதே எண்ணிக்கையில் கைது நடவடிக்கை நடக்காது என்றும் அவர் கூறுகிறார்.

இலங்கை அதிபர் தேர்தல், தமிழ்நாடு மீனவர்கள் கைது
படக்குறிப்பு, இலங்கை மீனவர்கள் மீது உள்ள அக்கறையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படவில்லை என இலங்கை மீனவ சங்க பிரதிநிதி கூறுகிறார்

இலங்கை அமைச்சர் கருத்து என்ன?

இலங்கையில் நடைபெறும் தேர்தலை கருத்தில் கொண்டு தமிழக மீனவர்கள் அதிகளவில் கைது செய்யப்பட்டு வருவதாக எழும் குற்றச்சாட்டை இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மறுத்துள்ளார்.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இரு நாட்டு மீனவர்கள் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. தமிழக மீனவர்களால் இலங்கை வடமாகாண மீனவர்களின் உடைமைகள் பாதிக்கப்படுவதுடன் கடல் வளம் அழிவதால் இலங்கை மீனவர்களின் தொடர் புகார்கள் பேரில் எல்லை தாண்டும் தமிழக மீனவர்கள் கைது எண்ணிக்கை அதிகரித்துள்ளது" என்றார்.

அரசியல் நோக்கத்துடன் மீனவர்கள் கைது செய்யப்படவில்லை என்கிறார் டக்ளஸ் தேவானந்தா.

“இரு நாட்டு மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக ஆகஸ்ட் 29-ஆம் தேதி அல்லது செப்டம்பர் 5-ஆம் தேதி என இரு தேதிகளில் பேச்சுவார்த்தை நடத்த இந்திய அரசு ஊடாக தமிழக மீனவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தேன். ஆனால் இலங்கையில் தேர்தல் நடப்பதாக கூறி இந்திய அரசும் தமிழக மீனவர்களும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. இலங்கையில் தேர்தல் நடைபெற இருந்தாலும் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு எப்போதும் தயாராக இருக்கிறோம்.” என்றார் அவர்.

இலங்கை அதிபர் தேர்தல், தமிழ்நாடு மீனவர்கள் கைது

பட மூலாதாரம், Facebook

படக்குறிப்பு, பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அரசு தயாராக இருக்கிறது என அமைச்சர் அறிவித்துள்ளார்

இலங்கை கடற்படை விளக்கம் என்ன?

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் கேப்டன் கயான் விக்ரமசூரிய, ''எல்லை தாண்டி மீன் பிடித்த ராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்ய முயன்ற போது, இலங்கை கடற்படையிடம் இருந்து அவர்களது படகு தப்பிக்க முயன்றது. அப்போது இலங்கை கடற்படையின் ரோந்து படகு மோதி விபத்துக்குள்ளானது. திட்டமிட்டு கடற்படை படகை மோதி மூழ்கடிக்கவில்லை'' என்றார்.

அதேபோல அண்மையில் நடந்த நிகழ்வுகள் குறித்து தனக்கு தெரியாது, அது குறித்து விசாரிப்பதாக தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)