200 ஆண்டு பழமையான இந்த ஆணுறை எதனால் ஆனது? அதில் தென்படும் உருவம் எதைக் குறிக்கிறது?

பட மூலாதாரம், Rijksmuseum
- எழுதியவர், பார்பரா தாய்ஷி & தனாய் நெஸ்த குபெம்பா
- பதவி, பிபிசி நியூஸ்
ஏறக்குறைய 200 ஆண்டுகள் பழமையான ஆணுறை ஒன்று, "புதிது போல் பாதுகாக்கப்பட்ட நிலையில்" ஆம்ஸ்டர்டாமில் உள்ள ரிஜ்க்ஸ் மியூசியத்தில் ஒரு கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
இது செம்மறி ஆட்டின் செரிமான அமைப்பின் ஒரு சிறிய குழாய் போன்ற பகுதியால் தயாரிக்கப்பட்டதாக கருதப்படுகிறது.
அதில் ஒரு கன்னியாஸ்திரியும் மூன்று மத குருமார்களையும் காட்டும் அச்சு ஒன்று உள்ளது.
1830-ஆம் ஆண்டைச் சேர்ந்த இந்த அரிய கலைப்பொருள், கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு ஏலத்தில் அந்த அருங்காட்சியகத்தால் வாங்கப்பட்டது.
இந்த ஆணுறை, 19-ஆம் நூற்றாண்டின் பாலியல் தொழில் மற்றும் பாலியல் வரலாற்றைப் பற்றிய கண்காட்சியில் இடம்பெறுகிறது.
இதில் அச்சுப் படங்கள், வரைபடங்கள் மற்றும் புகைப்படங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
ரிஜ்க்ஸ் மியூசியத்தின் கண்காணிப்பாளர் ஜாய்ஸ் ஜெலன் பிபிசியிடம் கூறுகையில், அவரும் அவரது சக ஊழியரும் முதன்முதலில் ஆணுறையை ஏலத்தில் பார்த்த போது "சிரித்துக் கொண்டிருந்தோம்" என்றார்.
"வேறு யாரும் அதை கவனிக்கவில்லை" என்றும் , அவர்கள் மட்டுமே அதை ஏலம் எடுத்தவர்கள் என்றும் ஜெலன் கூறினார்.
அதனைப் பெற்ற பிறகு, புற ஊதா ஒளியைக் கொண்டு அதனை ஆய்வு செய்து, அந்த ஆணுறை பயன்படுத்தப்படவில்லை என்பதை அவர்கள் உறுதி செய்தனர்.
அது "புதிது போல் பாதுகாக்கப்பட்ட நிலையில்" உள்ளது என்கிறார் ஜெலன்.

பட மூலாதாரம், Rijksmuseum
"ஆடம்பர நினைவுச் சின்னம்"
அந்த ஆணுறை காட்சிக்கு வைக்கப்பட்டதிலிருந்து, இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை பலரும் அருங்காட்சியகத்தை பார்வையிட்டு வருகின்றனர்.
"பார்வையாளர்களின் வரவேற்பு அருமையாக இருந்தது," என்றும் ஜெலன் கூறினார்.
இந்த ஆணுறை பிரான்சில் உள்ள ஒரு பிரபலமான பாலியல் விடுதியில் இருந்து வந்த "ஆடம்பர நினைவுச் சின்னம்" என்று நம்பப்படுகிறது. இதுபோன்ற இரண்டு பொருட்கள் மட்டுமே இன்றுவரை எஞ்சியிருப்பதாக அறியப்படுகிறது என்றும் ஜெலன் குறிப்பிட்டார்.
தேவையற்ற கர்ப்பம் மற்றும் பாலியல் நோய்கள், குறிப்பாக சிபிலிஸ் போன்றவை பரவுவதற்கான பயம் நிறைந்திருந்த காலத்தில், பாலியல் இன்பத்திற்கான வேட்கை அதிகம் இருந்த அந்தக் காலகட்டத்தில், இந்த அசாதாரணமான பொருள் "பாலியல் ஆரோக்கியத்தின் இலகுவான மற்றும் இருண்ட பக்கங்களையும் பிரதிபலிக்கிறது" என்று அருங்காட்சியகம் கூறியது.

பட மூலாதாரம், Rijksmuseum
ஆணுறையில் உள்ள உருவம் எதை குறிக்கிறது?
இந்த ஆணுறையில், கன்னியாஸ்திரி ஒருவர் தன் ஆடையை உயர்த்தி மூன்று ஆண்களுக்கு முன் அமர்ந்திருப்பது போல் அச்சிடப்பட்டுள்ளது. அந்த அச்சில், அவர் கால்களை விரித்து மத குருமார்களை நோக்கி விரலைக் காட்டுகிறார். மத குருமார்களான அந்த 3 ஆண்களும் அவருக்கு முன்னால் நின்று தங்கள் அங்கிகளை (habits - ஹாபிட்ஸ் என்று அழைக்கப்படுகிறது) உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஆணுறையில் "Voilà mon choix" என்ற எழுத்துகளும் பொறிக்கப்பட்டுள்ளன. அதற்கு "இது என் விருப்பம்" என்று பொருள்.
இந்த ஓவியம், "பிரம்மச்சரியம் மற்றும் பாரிஸின் தீர்ப்பு எனும் இரு கிரேக்க புராண கதைகளையும் பகடி செய்யும் கேலிச்சித்திரமாக" கருதப்பட வேண்டும் என்று அருங்காட்சியகம் கூறியுள்ளது.
பாரிஸின் தீர்ப்பு என்பது பாரிஸ் என்ற ட்ரோஜன் இளவரசரைப் பற்றிய ஒரு புராணக் கதையைக் குறிக்கிறது. அப்ரோடைட், ஹேரா மற்றும் அதீனா எனும் மூன்று பெண் தெய்வங்களில் மிக அழகானவரை தேர்ந்தெடுக்கும்படி அவரிடம் கேட்கப்பட்டது.

"அச்சிடப்பட்ட முதல் ஆணுறை"
இந்த டச்சு அருங்காட்சியகம், அதன் அச்சுப் பொருட்களின் சேகரிப்பில் சுமார் 7,50,000 அச்சுகள், வரைபடங்கள் மற்றும் புகைப்படங்கள் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளது.
ஆனால், அருங்காட்சியகம் அதன் சேகரிப்பில் வைத்திருக்கும் அச்சிடப்பட்ட முதல் ஆணுறை இது தான்.
"எங்களுக்குத் தெரிந்தவரை, அச்சிடப்பட்ட ஆணுறை கொண்ட ஒரே கலை அருங்காட்சியகம் நாங்கள் மட்டுமே" என்கிறார் ஜெலன்.
தன்னுடைய நிறுவனம் இந்த கலைப்பொருளை மற்ற அருங்காட்சியகங்களுக்கு "கடனாக அளிக்க தயாராக உள்ளது" என்று கூறிய அவர், ஆனால் அந்த ஆணுறை மிக மென்மையானது என்றும் குறிப்பிட்டார்.
இது நவம்பர் இறுதி வரை காட்சிக்கு வைக்கப்படும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












