You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்
- எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த 6 காவலர்களில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஜித்குமார் தாக்கப்பட்டதாக கூறப்படும் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் மாட்டுத் தொழுவத்தில் நீதிபதி நேரில் ஆய்வு செய்துள்ளார்.
கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவரின் நகை திருடு போனதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் காவல்துறையினர் தாக்கியதால் உயிரிழந்தார் என்பது குற்றச்சாட்டு. திருப்புவனம் காவல் நிலையத்தை மடப்புரம் கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
உயிரிழந்த அஜித்குமாருக்கு போலீஸ் காவலில் என்ன நடந்தது?அவருடன் காவல்துறையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டிருந்த அவரது சகோதரர் நவீன் குமார் பிபிசி தமிழிடம் கூறியது என்ன?
10 பவுன் நகை திருடு போனதாக புகார்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவிலில் காவலாளியாக அஜித் குமார் (வயது 27) பணியாற்றி வந்தார். அந்த கோவிலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்ற போது தங்களது நகை காணாமல் போய் விட்டதாக மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த மருத்துவர் நிகிதா என்பவர் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தங்களது காரை பார்க்கிங்கில் விடுமாறு காவலாளி அஜித்குமாரிடம் சாவியை கொடுத்ததாகவும், திரும்பி வந்து பார்த்த போது காரின் பின்சீட்டுக்கு அடியில் வைத்திருந்த 10 பவுன் நகையை காணவில்லை என்றும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். நிகிதா மற்றும் கோவில் ஊழியர்களே அஜித்குமாரை திருப்புவனம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
'வெள்ளிக்கிழமை மாலை தாயிடம் பேசிய அஜித் குமார்'
தகவலறிந்ததும் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு சென்று பார்த்து பேசிய போது நகையை தான் திருடவில்லை என்று அஜித் தன்னிடம் கூறியதாக பிபிசி தமிழிடம் அவரது தாயார் மாதவி தெரிவித்தார்.
திருப்புவனம் காவல் நிலையத்தில் நடந்த விசாரணைக்குப் பிறகு வெள்ளிக்கிழமை இரவு அஜித் குமாரை மானாமதுரை குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் அழைத்துச் சென்றுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை (ஜூன் 28) மாலை சுமார் 6 மணி அளவில் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் அலுவலகத்தின் பின்புறம் உள்ள மாட்டு தொழுவத்தில் வைத்து காவல்துறை நடத்திய விசாரணையின் போது அஜித்குமார் கடுமையாக தாக்கப்பட்டதை பார்த்ததாக அப்பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
மாட்டுத் தொழுவத்தில் இருந்து அஜித்தை காவல்துறையினர் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர். திருப்புவனம் அரசு மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள், அஜித் உயிரிழந்துவிட்டதை உறுதிப்படுத்திய பிறகு அஜித்தின் உடல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
காவல் நிலையம் முற்றுகை, கடையடைப்பு
திருப்புவனம் காவல் நிலையத்தை அஜித்குமாரின் உறவினர்களும் மடப்புரம் கிராம மக்களும் சனிக்கிழமை இரவு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவலறிந்து அங்கே வந்த சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷீஷ் ராவத் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அஜித்குமாரின் உறவினர்களை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது அஜித்குமார் உயிரிழந்து விட்டதை அவரது குடும்பத்தினரிடம் திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் உறுதிப்படுத்தினார். இதனால் பதற்றம் அதிகரித்ததால் திருப்புவனம் காவல் நிலையத்தில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். அஜித்குமாரின் சொந்த ஊரான மடப்புரத்தில் கடைகள் அடைக்கப்பட்டன.
அஜித் குமாரின் சகோதரர் கூறியது என்ன?
"எனது அண்ணன் அஜித்தை போலீசார் கோவிலுக்கு பின்புறம் அழைத்துச் சென்ற போது அவன் நடந்து தான் சென்றான். ஆனால் திரும்பும் போது அவனை தூக்கிக் கொண்டு வந்தனர்," என்கிறார் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நவீன் குமார்.
பிபிசியிடம் பேசிய அவர், "வெள்ளிக்கிழமை மதியம் எனது அண்ணன் அஜித்குமார் கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவர் காரில் இருந்த தங்க நகையை திருடியதாக திருப்புவனம் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். அஜித்துக்கு கார் ஓட்ட தெரியாது என்பதால் சாவியை அஜித்தின் நண்பர்கள் அருண்குமார், வினோத் குமார் ஆகியோரிடம் கொடுத்து காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு வருமாறு கூறியுள்ளார்.
ஆனால் காரை எடுத்து சென்ற இருவரும் வெகு நேரமாக காரை பார்க்கிங்கில் நிறுத்தாமல் நீண்ட தூரம் ஓட்டிச் சென்றுள்ளனர். நீண்ட நேரத்திற்கு பிறகு தான் காரை அவர்கள் கொண்டு வந்து கொடுத்துள்ளனர். கேட்டதற்கு பார்க்கிங்கில் இடமில்லாததால் வெகு தூரம் சென்று காரை நிறுத்தி இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலை அஜித் போலீசாரிடம் கூறியதையடுத்து வெள்ளிக்கிழமை இரவு மானாமதுரை குற்றப்பிரிவு காவல் துறையினர், நான் மற்றும் பிரவீன்குமார், அருண்குமார், வினோத் குமார், அஜித் குமார் 5 பேரையும் மடப்புரம் அருகே உள்ள கண்மாய் கரை உள்ளிட்ட பல இடங்களுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்," என்றார்.
காவல்துறையினர் தங்களை கடுமையாக தாக்கியதாகக் குற்றம்சாட்டிய அவர், "அஜித்தை இரண்டு நாட்களாக தொடர்ந்து அடித்தால் அவனுக்கு காயம் அதிகமாக இருந்தது," என்று கூறினார்.
மேலும் பேசிய நவீன்குமார், "காரை ஓட்டி சென்ற அருண்குமார், வினோத் குமாரை காவல்துறையினர் தனித்தனியாக அழைத்து சென்று விசாரித்தனர். ஆனால் அவர்கள் காருக்குள் இருந்த நகையை பார்க்கவில்லை என கூறியதால் ஒரு கட்டத்தில் போலீசார் யாருக்கோ போன் செய்து காரில் நகை இருந்தது உண்மைதானா என கேட்டனர். அதற்கு அவர்கள் 10 பவுன் தங்க நகை இருந்தது என கூறியதை அடுத்து மீண்டும் அஜித்தை போலீசார் சனிக்கிழமை காலையில் இருந்து கடுமையாக அடித்தனர்.
அடி தாங்காமல் இறுதியில் அஜித் தான் அந்த நகையை திருடியதாகவும், அந்த நகையை கோவில் பின்புறம் உள்ள கோவில் அலுவலகத்தின் பின்னால் உள்ள மாட்டு தொழுவத்தில் மறைத்து வைத்திருப்பதாக சொன்னான். மடப்புரம் கோவில் பின்புறம் எங்கள் அனைவரையும் அழைத்து சென்றனர். எங்கள் நால்வரையும் வேனில் இருக்க வைத்து விட்டு 3 காவலர்கள் அஜித்தை மட்டும் அழைத்து சென்றனர்.
காவல் நிலையத்தில் வைத்து ஏற்கனவே போலீசார் கடுமையாக தாக்கியிருந்ததால் அஜித் மிகவும் கஷ்டப்பட்டு நடந்து சென்றான். சிறிது நேரத்திற்குப் பின் போலீசார் அஜித்தை தூக்கி கொண்டு மற்றொரு வாகனத்தில் சென்றதை பார்த்தேன்." என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து, தாம் உள்பட மற்ற நால்வரையும் வேனில் இருந்து இறங்கிச் செல்லுமாறு காவல்துறை கூறியதாக நவீன்குமார் தெரிவித்தார்.
"நான் வீட்டிற்குச் சென்று நடந்ததை கூறிய பின் குடும்பத்துடன் காவல் நிலையம் சென்று கேட்டதற்கு அஜித் இறந்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்," என்றார் நவீன் குமார்.
மகனை இழந்த வேதனையில் இருக்கும் மாதவி பிபிசி தமிழிடம் பேசிய போது, "இன்னொரு மகனுக்கு இந்து சமய அறநிலையத்துறையில் நிரந்தர அரசு பணி வழங்குவதாகவும், நிதி உதவி வழங்குவதாகவும் கூறுகின்றனர். இதை கொடுத்தால் என் மகன் உயிருக்கு ஈடாகுமா? அவன் திரும்பி வருவானா?" என்று கேள்வி எழுப்பினார்.
நீதிபதி நேரில் ஆய்வு
அஜித் உயிரிழந்தது தொடர்பாக, திருப்புவனம் காவல் நிலையத்தில் நீதிபதி வேங்கட பிரசாத் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தாசில்தார், ஆர்டிஓ உள்ளிட்ட அரசு அதிகாரிகள் நீதிபதி முன் ஆஜராயினர். பின்னர் பெற்றோரின் சம்மதத்துடன் அஜித்தின் உடலை உடற்கூறாய்வு செய்து, குடும்பத்திடம் ஒப்படைக்க இருப்பதாகக் கூறி அவரின் குடும்பத்தினரை அழைத்துச் சென்றனர்.
அஜித் குடும்பத்தினரை காவல்துறையினர் அழைத்து செல்லும் போது அதிமுக, நாம் தமிழர் கட்சி, தவெக மற்றும் கிராம இளைஞர் சபையினர் உள்ளிட்டடோர் அஜித்தை தாக்கிய காவலர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.
இதன் தொடர்ச்சியாக, நீதிபதி வேங்கட பிரசாத் சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் மடப்புரம் கோவில் மாட்டுத்தொழுவத்திற்கு நேற்று மாலை நேரில் சென்று பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டார்.
5 காவலர்கள் கைது
முதல் கட்ட நடவடிக்கையாக, மானாமதுரை குற்றப்பிரிவு தனிப்படைக் காவலர்களான பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்தன், மணிகண்டன் 6 பேரை சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
அதன் பின்னர், பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன் அஜித்குமார் மரண வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பிரேதப் பரிசோதனை அறிக்கை முடிவுகள் இன்று இரவு (நேற்றிரவு) கிடைத்தவுடன் அந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, அதில் தொடர்புடைய 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக, திருப்புவனம் காவல் நிலையத்தில் பிஎன்எஸ்எஸ் (BNSS) சட்டப் பிரிவு எண். 196(2)(a) ன் கீழ், வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதி விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இத்தகைய சம்பவங்கள் நடைபெறும் போது எவ்வித தயவு தாட்சண்யமும் இன்றி உடனடியாக உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தமிழ்நாடு காவல்துறை உறுதியளித்துள்ளது.
அஜித் குமார் உடல் தகனம்
இதற்கிடையே, உயிரிழந்த இளைஞர் அஜித்குமாரின் உடல் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கே அவரது குடும்பத்தினர் உடலைப் பெற்று தகனம் செய்தனர்.
காவல்துறை தடயங்களை அழிக்க முயற்சி என்று குற்றச்சாட்டு
திருப்புவனத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் காவல்துறை தடயங்களை அழிக்க பார்க்கிறது என்று மக்கள் கண்காணிப்பக நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் குற்றம்சாட்டியுள்ளார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "திருப்புவனம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞரை போலீசார் சட்டவிரோதமாக தாக்கியதில் அவர் உயிரிழந்தது தெரிய வருகிறது. அஜித் இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. அஜித்குமாரின் இறப்பை போலீசார் மறைக்க பார்க்கின்றனர். அதன் ஒரு பகுதியாக தான் திருப்புவனம் நீதிமன்ற நீதிபதி விசாரணை செய்வதற்கு முன் 6 காவலர்களையும் அவசர அவசரமாக சஸ்பெண்ட் செய்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது" என்றார்.
"ராஜாஜி அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு நடந்துள்ளது. உடற்கூராய்வு வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. தடயங்கள் அழிக்கப்பட்டாலும் உடற்கூறு ஆய்வில் முடிவில் உண்மை நிச்சயம் வெளியே வரும். தென்மண்டல ஐஜி நேரடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று ஹென்றி திபேன் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சிகள் கண்டனம்
'ஜெய்பீம் படம் பார்த்தேன். உள்ளம் உலுக்கியது' என சினிமா Review எழுதிய முதலமைச்சர் எங்கே இருக்கிறார்? மு.க. ஸ்டாலின், விக்னேஷ் லாக்கப் மரணத்தின் போது, சட்டப்பேரவையில் பொய் பேசியவர் தானே நீங்கள்? இதற்கும் அதே போல் பொய் தான் பதிலாக வருமா?," என தனது எக்ஸ் பக்கத்தில் அஜித் மரணம் குறித்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
"காவல்துறை விசாரணையின் பேரில் ஒருவரை அடித்து தாக்கி படுகொலை செய்து விட்டு, அதற்கான நடவடிக்கையாக வெறும் பணியிடை நீக்கம் மட்டும் போதும் என்று கருதுவது வெகுஜனங்களை ஏமாற்றும் நடவடிக்கையாகும். அஜித்தின் மரணம் போலீசார் தாக்குதலால் நேர்ந்தது வெளிச்சமான நிலையிலும், ஏன் அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்படவில்லை? ஏன் கைது செய்து விசாரணை நடத்தப்படவில்லை?," என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
தி.மு.க., ஆட்சியில் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தாலே ஏழை, எளியோரின் உயிருக்கு பாதுகாப்பில்லை என தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
"காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணம் அடைந்துள்ள நிலையில், தவறிழைத்த காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும்," என தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு