You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இஸ்ரேல் - இரான் மோதலால் கிருஷ்ணகிரி மாம்பழ ஏற்றுமதி பாதிப்பா? விவசாயிகள் வேதனை
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் மாம்பழங்களுக்குப் போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் சூழலில், இரான்-இஸ்ரேல் மோதலால் மாம்பழ ஏற்றுமதியில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளதாக ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர்.
தமிழ்நாட்டில் இருந்து ஆண்டுக்கு சுமார் 600 கோடி ரூபாய் அளவிலான மாம்பழம் மற்றும் மாம்பழக்கூழ் ஏற்றுமதி நடந்து வந்த நிலையில், அதிக விளைச்சல் மற்றும் போர்ச் சூழலால் கொள்முதல் குறைந்துவிட்டதாக ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர். மாம்பழ வியாபாரத்தில் என்ன நடக்கிறது?
இந்தியாவில் உத்தர பிரதேசம், ஆந்திரா, பிகார், கர்நாடகா, தெலங்கானா, மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் மாம்பழம் சாகுபடி செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் மாம்பழ விவசாயிகள் அதிக அளவில் உள்ளனர்.
இந்த மாவட்டங்களில் சுமார் 3.60 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மாமரங்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இதன் மூலம் ஆண்டுக்கு ஒரு ஏக்கருக்கு சுமார் 2 டன் வரையில் மாம்பழங்கள் அறுவடை செய்யப்படுகின்றன.
மாம்பழ வர்த்தகத்தில் 25.76 சதவிகிதத்தை உத்தர பிரதேச மாநிலம் தருவதாக இந்திய வணிகம் மற்றும் தொழில்துறையின் இணையதள தகவல்கள் கூறுகின்றன. ஏற்றுமதி செய்வதிலும் இந்தியா பிரதானமாகப் பங்கு வகிக்கிறது.
கடந்த 2023-24ஆம் நிதி ஆண்டில் 32,104 மெட்ரிக் டன் மாம்பழத்தை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. இதன் மதிப்பு அமெரிக்க டாலரில் 60 மில்லியன் எனவும் அந்த இணையதளம் தெரிவித்துள்ளது.
இவை ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன், அமெரிக்கா, குவைத், கத்தார் ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மாம்பழங்கள் தவிர மாம்பழக் கூழ் ஏற்றுமதியும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
மாம்பழக் கூழ் ஏற்றுமதி எப்படி நடக்கிறது?
இந்தியா முழுவதும் 65 மாம்பழக் கூழ் ஆலைகள் இயங்கி வருகின்றன. கூழ் தயாரிப்பில் தோத்தாபுரி மற்றும் அல்போன்ஸா வகை மாம்பழங்களை ஆலை உரிமையாளர்கள் பயன்படுத்துகின்றனர்.
ஆந்திர மாநிலம் சித்தூரிலும் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரியிலும் மாம்பழக் கூழ் ஆலைகள் செயல்படுகின்றன. சில ஆலைகள் மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் செயல்படுகின்றன.
கடந்த 2023-24ஆம் நிதி ஆண்டில் 60,900 மெட்ரிக் டன் மாம்பழக் கூழ் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இவை 75 மில்லியன் அமெரிக்க டாலர் என இந்திய வணிகத்துறையின் இணையதளம் தெரிவித்துள்ளது.
இவற்றில் பெரும்பாலானவை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. அடுத்ததாக, அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இந்திய அரசின் வணிக நுண்ணறிவு மற்றும் புள்ளி விவர இயக்குநரகம் (DGCIS) கூறியுள்ளது.
முன்னதாக, 2022-23ஆம் ஆண்டில் 48.53 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள 22,963.78 மெட்ரிக் டன் மாம்பழங்களை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. 2023-24 (ஏப்ரல்-ஆகஸ்ட்) வரையிலான காலகட்டத்தில் மட்டும் 47.98 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள 27,330.02 மெட்ரிக் டன் மாம்பழங்களை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளதாக மத்திய அரசின் தகவல் பணியகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் பங்களிப்பு என்ன?
தமிழ்நாட்டில் விளையும் தோத்தாபுரி மற்றும் அல்போன்ஸா வகை மாம்பழக் கூழ், ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன், அமெரிக்கா, கத்தார், குவைத் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
அதிலும், மாம்பழக் கூழ் தயாரிப்பதில் தோத்தாபுரியை அதிகம் பயன்படுத்துவதாகக் கூறுகிறார், தருமபுரி வேளாண் துணை இயக்குநர் இளங்கோவன், "இது பெங்களூரான் என்றும் கிளி மூக்கு எனவும் அழைக்கப்படுவதாக" அவர் குறிப்பிட்டார்.
இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி (FIEO), இந்தியாவில் மாம்பழங்களை உற்பத்தி செய்யும் முதல் ஆறு மாநிலங்களில் தமிழ்நாடு உள்ளது. கூழ் தயாரிக்கும் ஆலைகளில் தமிழ்நாடு முக்கியப் பங்கு வகிக்கிறது.
தமிழ்நாட்டில் 24 மாம்பழக் கூழ் ஆலைகள் செயல்படுகின்றன. இவற்றில் கிருஷ்ணகிரியில் 23 கூழ் தயாரிப்பு ஆலைகளும் தருமபுரியில் ஒரு ஆலையும் செயல்படுவதாகவும் தருமபுரி மாவட்ட வேளாண் துணை இயக்குநர் இளங்கோவன் தெரிவித்தார்.
"வளைகுடா நாடுகளுக்கு மாம்பழக் கூழ் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது ஏற்றுமதி குறைந்துள்ளது மட்டுமின்றி, மாம்பழத்தின் விலையும் சரிந்துவிட்டது. அதிக விளைச்சலும் அதற்கு ஒரு காரணம்" என்கிறார், கிருஷ்ணகிரி மாவட்ட மாம்பழ விநியோகஸ்தரான முபாரக்.
மாம்பழ விளைச்சலில் முதல் தரத்தை ஏற்றுமதிக்கும் இரண்டாம் தர மாம்பழத்தை உள்நாட்டு விற்பனைக்கும் மூன்றாம் தர மாம்பழத்தை கூழ் தயாரிக்கவும் பயன்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ரூ.600 கோடிக்கு மாம்பழ வர்த்தகம்
இரான்-இஸ்ரேல் மோதலால் நடப்பு ஆண்டில் கணிசமான கொள்முதல் ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும் சில ஆர்டர்களுக்கு உரிய ஒப்புதல் கிடைக்காமல் கால தாமதம் ஏற்படுவதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத ஏற்றுமதியாளர் ஒருவர் பிபிபி தமிழிடம் தெரிவித்தார்.
கடந்த 2022-23ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் இருந்து 660 கோடி ரூபாய் அளவுக்கு மாம்பழம் மற்றும் மாம்பழக் கூழ் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழத்தின் வேளாண் வர்த்தக மேலாண்மைத் துறையின் இயக்குநர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.
இவை 66,879 மெட்ரிக் டன் எனவும் அவர் கூறியுள்ளார். வேளாண் பல்கலைக்கழகத்தின் பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரியில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற மாம்பழ உற்பத்தி தொடர்பான கருத்தரங்கில் அவர் இவ்வாறு பேசினார்.
'இரான் - இஸ்ரேல் மோதலால் பாதிப்பு'
இரான்-இஸ்ரேல் மோதல் மாம்பழ ஏற்றுமதியில் தமிழ்நாட்டுக்குப் பிரதான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறுகிறார், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாம்பழக் கூழ் உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் மாதவன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "2022 வரையிலும் மாம்பழக் கூழ் வர்த்தகம் நல்ல முறையில் சென்று கொண்டிருந்தது. 2023 முதல் 2024 வரை செங்கடலை மூடிவிடுவது போன்ற காரணங்களால் ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்பட்டது" எனக் கூறுகிறார்.
ஏற்றுமதியைப் பொறுத்தவரை தற்போது எல்லா நாடுகளும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வதாகக் கூறும் மாதவன், "2023ஆம் ஆண்டு இந்தியாவில் மாம்பழத்தின் விலை அதிகரித்தது. அப்போது கிலோவுக்கு 70 ரூபாய் வரை போனது. இதனால் பிரேசில், கொலம்பியா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் குறைந்த விலைகளில் மாம்பழங்களை தேடுவது அதிகரித்தது" என்கிறார்.
"இந்தியாவில் மாம்பழத்தின் விலை ஏற்றத்தால் சுமார் 1 லட்சம் டன் வரை மாம்பழக் கூழ் வாங்கிய வணிகர்கள், அதை 50 ஆயிரம் டன் அளவுக்குக் குறைத்துவிட்டனர். போர் உள்படப் பல்வேறு காரணங்களால் கூழ் ஏற்றுமதிக்கான கொள்முதலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது" என்கிறார் மாதவன்.
'கடும் மன உளைச்சல்' - விவசாயிகள் சங்கம்
ஆனால், இதை மறுத்துப் பேசும் சேலம் மாவட்ட மாம்பழ விவசாயிகள் சங்கத் தலைவர் செளந்தரராஜன், "ஒவ்வோர் ஆண்டும் ஏதாவது ஒரு நாட்டில் சண்டை நடந்து கொண்டுதான் இருக்கிறது. கடந்த ஆண்டு ரஷ்யா-யுக்ரேன் மோதல் நடந்தது. ஆனால், ஒரு கிலோ மாம்பழத்தை 28 ரூபாய்க்கு எடுத்தனர்" எனக் கூறுகிறார்.
"நடப்பு ஆண்டில் ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஒருசேர விளைச்சல் அதிகரித்துவிட்டது. இதை அறிந்து, ஒரு கிலோவுக்கு 5 ரூபாய் மட்டுமே கொள்முதல் செய்யவுள்ளதாக அறிவித்தனர். இதனால் விவசாயிகள் கடும் மன உளைச்சலில் உள்ளனர்" என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கு விளக்கமளித்த கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாம்பழக் கூழ் உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் மாதவன், "இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளாக காலநிலை சரியில்லை. தற்போது விளைச்சல் அதிகரித்தாலும் எங்களிடம் அதிகளவில் மாம்பழக் கூழ் இருப்பில் உள்ளது" எனக் கூறுகிறார்.
அதோடு, "வெளிநாட்டில் இருந்து ஏற்றுமதிக்கான ஆர்டர்கள் எதுவும் போதிய அளவில் உறுதி செய்யப்படவில்லை. இதுதான் விலை குறையக் காரணம்" எனவும் குறிப்பிட்டார்.
'இரானுடன் நேரடி வர்த்தகம் கிடையாது'
"இரான் - இஸ்ரேல் மோதல் நடந்தாலும், தமிழ்நாட்டில் இருந்து இரானுக்கு நேரடியாக மாம்பழக் கூழ் கன்டெய்னர்களை அனுப்புவதில்லை" எனக் கூறுகிறார், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாம்பழக் கூழ் உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் மாதவன்.
"தமிழ்நாட்டில் இருந்து துபையில் உள்ள ஜபல் அலி துறைமுகத்திற்கு மாம்பழக் கூழ் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அங்கிருந்து இரானுக்கு வணிகர் ஒருவர் அனுப்பி வைப்பார். அவர் மூலமாக மட்டுமே எங்களுக்கு பணம் வந்து சேரும். இரானுடன் எங்களுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை," என்கிறார் அவர்.
பிபிசி தமிழிடம் பேசிய தருமபுரி மாவட்ட வேளாண் துணை இயக்குநர் இளங்கோவன், "போர் நடப்பதால் முன்னரே உற்பத்தி செய்து வைத்துள்ள மாம்பழக் கூழை அனுப்ப முடியவில்லை. தற்போது நிலைமை சீரடைந்து வருகிறது," எனக் கூறினார்.
ஏறக்குறைய 2 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு மாம்பழக் கூழ் கொள்முதல் செய்வதற்கான உத்தரவு பெறப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
- அமெரிக்காவில் பல டன் இந்திய மாம்பழங்கள் மொத்தமாக அழிக்கப்பட்டது ஏன்? என்ன நடந்தது?
- நீரிழிவு நோய் உள்ளவர்கள் மாம்பழம் சாப்பிடலாமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?
- பேரரசர் அக்பரை பித்து பிடிக்க வைத்த மாம்பழம் - வரலாற்றில் என்னவெல்லாம் செய்தது?
- மாம்பழம்: செயற்கையாகப் பழுக்க வைக்கும் பழத்தைக் கண்டறியும் வழிகளும் அதனால் ஏற்படும் ஆபத்துகளும்
அமைச்சர் சக்கரபாணி கூறுவது என்ன?
தமிழ்நாட்டில் மாம்பழ விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் தொடர்பாக இந்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகானை புதன்கிழமையன்று தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி நேரில் சந்தித்துப் பேசினார்.
"மாம்பழ வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பைச் சரிசெய்வதற்கு சந்தை கூட்டுத் திட்டத்தில் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அளிக்க வேண்டும்" என மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
மாம்பழ விவசாயிகளுக்கு 62 கோடி ரூபாயை ஊக்கத்தொகை அளிக்குமாறு கோரியுள்ளதாகக் கூறிய அமைச்சர் சக்கரபாணி, "இதில் மாநில அரசின் பங்கு 31 கோடி ரூபாயாக இருக்கும்" என்றார்.
மாம்பழக் கூழுக்கு 7 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதால் கூழ் தயாரிப்பு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் இதை 5 சதவிகிதமாக மாற்றுமாறு மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு