'உயரம் செல்ல உருவம் தடையில்லை' - மும்பை ஐஐடியில் படிக்க தேர்வான விருதுநகர் அரசுப் பள்ளி மாணவி

    • எழுதியவர், சாரதா வி
    • பதவி, பிபிசி தமிழ்

உருவத்தில் குள்ளமாக இருந்தாலும், 17 வயது யோகேஸ்வரி அடைந்திருக்கும் உயரம் அதிகமானது.

விருதுநகர் மாவட்டம் பரந்தாலூர் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயதான யோகேஸ்வரி. அவரது தந்தை செல்வம் டீக்கடையில் பணி புரிகிறார். அவரது தாய் பட்டாசு ஆலையில் பணியாற்றி வருகிறார். அவர்களின் மூன்றாவது பிள்ளையான யோகேஸ்வரி 125 செ.மீ மட்டுமே உயரம் கொண்ட ஒரு மாற்றுத் திறனாளி.

அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்று வந்த அவர், ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வுகள் எழுதி, அதில் தேர்ச்சி பெற்று, மும்பையில் உள்ள ஐஐடி நிறுவனத்தில் ஏரோஸ்பேஸ் பிரிவில் பொறியியல் படிப்பதற்குத் தேர்வாகியுள்ளார்.

ஜேஇஇ தேர்வுக்காக தனியார் பயிற்சி மையங்களில் பலரும் நிறைய தொகையைச் செலவு செய்யும் நிலையில், அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வந்த யோகேஸ்வரி, அரசு வழங்கிய 40 நாள் பயிற்சியை மட்டும் பெற்று இந்த இடத்தைப் பெற்றுள்ளார். தற்போது ஏரோஸ்பேஸ் பொறியியல் படிப்பில் சேரவுள்ள யோகேஸ்வரி, ஏழாம் வகுப்பு முதல் அறிவியலில் ஆர்வம் கொண்டுள்ளதாகக் கூறுகிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய யோகேஸ்வரி, "நான் சிறு வயதில் இருந்து மருத்துவராக வேண்டும் என்றுதான் நினைத்து வந்தேன். படிப்பில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவி அல்ல நான், சராசரியாகவே படிப்பேன். ஆனால் இந்தப் பயிற்சியைத் தீவிரமாக எடுத்துக் கொண்டேன். நாற்பது நாட்கள் ஈரோட்டில் தங்கியிருந்து பயின்றேன். தமிழ் வழியில் பயின்ற எனக்கு ஆங்கிலத்தில் எல்லா பாடங்களையும் புரிந்து கொள்வது கடினமாக இருந்தது. ஆனால் பயிற்சி மையத்தில் இருந்த ஆசிரியர்கள் எனக்கு மிகவும் உதவியாக இருந்தனர்" என்கிறார்.

தனது தங்கைக்கு ஐஐடியில் இடம் கிடைத்துள்ளது குறித்து மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்திய யோகேஸ்வரியின் அண்ணன் பாண்டீஸ்வரன், "என்னால் இன்னும் நம்பவே முடியவில்லை. எங்களைப் போன்றோருக்கு ஐஐடி எட்டாத உயரத்தில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தேன். எனக்கும்கூட அங்கு படிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. இன்று என் தங்கைக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.

இன்று ஐஐடியில் இடம் கிடைத்த மகிழ்ச்சி யோகேஸ்வரியின் குடும்பம் முழுவதும் பரவியிருந்தாலும், அவர் கடந்து வந்த பாதை கடினமானது. ஏழாம் வகுப்பு வரை, மற்ற மாணவர்களைப் போலவே காணப்பட்டாலும், அதன் பிறகு யோகேஸ்வரி மற்ற பிள்ளைகளைவிட உயரம் குறைவாக இருப்பது வெளியில் கவனிக்கப்பட்டது.

இளமையில் சந்தித்த கேலியும் கிண்டலும்

"யோகேஸ்வரியைவிட இளையவர்கள் சில நேரங்களில் அவரைப் பார்த்து, வயதில் சிறியவர் என்று நினைத்துக் கொண்டு 'சொல்லு பாப்பா' என்று கூறிவிடுவார்கள். அவர்கள் தெரியாமல் கேட்டாலும் அதுபோன்ற தருணங்கள் வலி மிகுந்ததாக இருக்கும்" என்கிறார் பாண்டீஸ்வரன்.

விழாக்கள், திருமணங்களுக்குச் செல்லும்போது இன்னும் வேதனையாக இருக்கும் என்கிறார் பாண்டீஸ்வரன். "அவர் 12ஆம் வகுப்பு படிக்கிறார், உயரம் குறைவாக இருக்கிறார் என்று கூறியவுடன், அப்படியா என்று ஆச்சர்யத்துடன் பார்ப்பார்கள். ஏன் இதைச் சரி செய்ய மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை என்று எங்களிடம் கேட்பார்கள். ஒரே பதிலை குறைந்தது 20 முறையாவது சொல்ல வேண்டியிருக்கும். அதுவும் வலியை மறைத்துக்கொண்டு, முகத்தில் புன்னகையுடன் பதில் சொல்வது இன்னும் துயரம்" என்கிறார் அவர்.

யோகேஸ்வரிக்கு 11 அல்லது 12 வயதாகும்போது அவர் உயரம் குறைவாக இருக்கிறார் என்பதைக் கவனித்த பெற்றோர்கள், அரசு மருத்துவமனை, தனியார் சிகிச்சை மையங்கள் எனப் பல இடங்களில் அவருக்கு மருத்துவம் பார்த்ததாகக் கூறுகின்றனர்.

அவரது தாய் விருதுநகரில் உள்ள பட்டாசு ஆலையில் மருந்து துறையில் பணியாற்றி வருகிறார். "எப்படி மீனவர்கள் கடலுக்குச் சென்றால் உயிருடன் திரும்புவது உறுதி கிடையாதோ, அதே போலத்தான் எங்கள் அம்மா வீடு திரும்புவதும். அந்த ஆலைக்குச் சென்று வீடு திரும்பும் வரை பயமாகவே இருக்கும். எங்கள் குடும்பத்திற்குப் பல லட்சம் ரூபாய் கடன் உள்ளது" என்கிறார் பாண்டீஸ்வரன்.

யோகேஸ்வரியுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளியில் படித்து வரும் எஸ்.ரேகா, அவருக்கு ஐஐடியில் சீட் கிடைத்தது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறுகிறார்.

"நாங்கள் இருவரும் பள்ளியில் எப்போதும் ஒன்றாக இருப்போம், நான் கணினி பாடப்பிரிவு படித்ததால், உயிரியல் வகுப்பில் மட்டும் அவரும் நானும் தனியாகச் செல்ல வேண்டியிருக்கும். தினமும் காலையில் நான் அவரது வீட்டுக்குச் செல்வேன், அங்கிருந்து இருவரும் பள்ளிக்கு ஒன்றாக நடந்து செல்வோம். அவரது அம்மா மிகவும் அன்பாகப் பேசுவார். எனக்கு என் வீட்டில் இருப்பது போலவே தோன்றும்," என்றார் ரேகா.

அவருக்கு சீட் கிடைத்தது மகிழ்ச்சி என்றாலும், அவர் தன்னை விட்டு வெகுதொலைவாகச் செல்லப் போவது குறித்த வருத்தம் சற்று இருப்பதாகக் கூறுகிறார் ரேகா.

யோகேஸ்வரியின் 12ஆம் வகுப்பு கணித ஆசிரியர் உமா மகேஸ்வரி, அவர் வகுப்பில் மிகவும் அமைதியானவராக இருப்பார் என்கிறார். "யோகேஸ்வரி மிக அமைதியாக இருப்பார், யாரிடமும் தேவையின்றிப் பேச மாட்டார். அவரால் வகுப்பில் எந்தத் தொந்தரவும் இருக்காது. பாடங்களைச் சிரத்தையுடன் கவனிப்பார்" என்கிறார்.

அரசுப் பயிற்சி மையத்தில் தங்கிப் படித்தவர்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி வழங்கும் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் அவர்களது பள்ளியில் இருந்து இரண்டு பேர் பங்கேற்றதாக ஆசிரியர் உமா மகேஸ்வரி கூறுகிறார்.

"ஜேஇஇ தேர்வுப் பயிற்சிக்கு விருப்பமாக இருக்கும் மாணவர்கள் பற்றிக் கேட்டவுடனே ஆர்வத்துடன் யோகேஸ்வரி முன்வந்தார். இன்று கிடைத்திருப்பது அவரது முயற்சிக்கான அங்கீகாரம்" என்கிறார் அவர்.

உயரம் தனக்கு எப்போதுமே தடையாக இருந்ததில்லை என்று பிபிசி தமிழிடம் பேசிய யோகேஸ்வரி கூறினார். இதே கருத்தை அவரது தோழியும், ஆசிரியரும் குறிப்பிட்டனர்.

"அவர் எப்போதும் போலவே, எல்லா மாணவர்களையும் போலவே இருப்பார். படிப்பில் மட்டுமின்றி எல்லாவற்றிலும் தைரியமாக முதல் ஆளாக நிற்பவர். காலையில் மாணவர் கூட்டங்களில் பாடுவது, விழாக்களில் ஆடுவது என அனைத்திலும் பங்கேற்பார். ஒரு முறை சென்னைக்கு சுற்றுலா சென்றபோது, சில விளையாட்டுகளில் உயரம் காரணமாக அவர் அனுமதிக்கப்படவில்லை. எங்களுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அந்த ஒரு நிகழ்வு தவிர வேறு எங்கும் அவருக்கு உயரம் ஒரு பிரச்னையாக இருப்பதை நான் பார்த்ததில்லை" என்கிறார் ஆசிரியர் உமா மகேஸ்வரி.

யோகேஸ்வரியை நேரில் அழைத்துப் பாராட்டிய விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், அவரது உயர் கல்விக்கான செலவுகளை அரசு ஏற்றுக்கொள்ளும் என்று உறுதி அளித்துள்ளதாக யோகேஸ்வரி கூறினார்.

உயரம் குறைவானவர்கள் யார்?

வயது வந்தோரில் ஒருவர், அவர் எந்தப் பாலினமாக இருந்தாலும், 147 செ.மீக்கு (4 அடி,10 அங்குலம்) குறைவான உயரம் கொண்டவராக இருந்தால் அவர் உயரம் குறைவானவர் (dwarf) என்று கருதப்படுவதாக மத்திய அரசு வரையறுக்கிறது. இது மரபணு காரணமாகவோ அல்லது மருத்துவக் காரணங்களாலோ ஏற்படலாம்.

நான்கு அடி, 10 அங்குலம் உயரத்தில் இருந்து ஒவ்வொரு அங்குலம் குறையும்போதும், அது 4% இயலாமை என்று கருதப்படும். உதாரணமாக, 4 அடி 9 அங்குலம் உயரம் கொண்டவருக்கு 4% இயலாமை இருப்பதாகவும், 4 அடி 8 அங்குலம் உயரம் கொண்டவருக்கு 8% இயலாமை இருப்பதாகவும் கணக்கிடப்படும்.

அகோண்ட்ரோபிளாசியா என்பது எலும்பு வளர்ச்சியைப் பாதிக்கும் ஒரு மரபணுக் கோளாறு. மனிதர்கள் குள்ளமாக இதுவே 70% காரணமாக இருக்கிறது. மேலும் பலருக்கு, வளர்ச்சி ஹார்மோன் குறைபாடு காரணமாக இருக்கலாம். இவை தவிர வேறு சில காரணங்களும் இருக்க வாய்ப்பு உண்டு.

குள்ளமாக இருப்பவர்களில் இரண்டு வகை உண்டு. சிலருக்கு, உடலின் எல்லா பாகங்களும் சிறியதாக இருக்கும். சிலருக்கு தலை பெரிதாகவும், கை கால்கள் மட்டும் சிறியதாகவும் இருக்கும்.

குள்ளமாக இருப்பவர்களின் அறிவுத்திறனும் சராசரி வாழ்நாளும் இயல்பாகவே இருக்கும். பொதுவாக அவர்களால் குழந்தைகள் பெற்றுக் கொள்ள முடியும் என்று மத்திய அரசின் இயலாமை அறியும் வழிகாட்டு நெறிகள் கூறுகின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு