You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்னை: சாவின் விளிம்பில் இருந்த பெண்ணை சாதுர்யமான பேச்சால் காப்பாற்றிய பெண் எஸ்.ஐ.
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
[எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் தற்கொலை குறித்த தகவல்கள் உள்ளன.]
"நானா தெருவில் உள்ள அபார்ட்மென்ட் ஒன்றில் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக ஒரு பெண் மிரட்டிக் கொண்டிருக்கிறார்."
கடந்த 23ஆம் தேதியன்று, பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் மீரா அந்த வழியாக வந்தபோது, அவரிடம் ஒருவர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் வருகையையொட்டி பாதுகாப்புப் பணிக்காக மீரா செல்ல வேண்டியிருந்தது. ஆனால், இளம்பெண்ணைக் காப்பாற்றுவதற்காக அவர் சம்பவ இடத்திற்கு விரைந்தார்.
அடுத்த ஒரு மணிநேரத்தில் தற்கொலை எண்ணத்தில் இருந்த இளம்பெண் மீட்கப்பட்டார். அவரை தற்கொலை முயற்சியை மேற்கொள்ள விடாமல் மனதை மாற்றி மீட்பதற்கு, பெண் உதவி ஆய்வாளர் மீரா செய்தது என்ன?
அடுக்குமாடி குடியிருப்பில் தற்கொலை மிரட்டல்
சென்னை தியாகராய நகரில் உள்ள நானா தெருவில் வசித்து வரும் தம்பதியின் 27 வயது மகள், பெங்களூருவில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.
அங்கு "அவர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் இடையில் பிரிவு ஏற்படவே, தங்கள் மகளை அந்தத் தம்பதி அழைத்துக் கொண்டு சென்னை வந்துள்ளனர். ஆனால், இந்தப் பிரிவை அந்த இளம்பெண் ஏற்கவில்லை," என்று காவல்துறை நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
"அது மாம்பலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி. ஆனால், நான் பணிபுரியும் காவல் நிலையத்திற்கு மிக அருகில் அந்தத் தெரு இருந்தது. எனவே விவரம் அறிந்தவுடன் அவரைக் காப்பாற்றுவதற்காக ஓடினேன். அதற்குள் புகார் கூற வந்த நபரே தனது டூவீலரில் என்னை அழைத்துச் சென்றார்" என நடந்ததை விவரித்தார் உதவி ஆய்வாளர் மீரா.
"நான்கு மாடிகளைக் கொண்ட அந்தக் குடியிருப்பின் வீட்டு ஜன்னல்களுக்கு தடுப்புக் கம்பிகள் எதுவும் அமைக்கப்படவில்லை" என்பதைக் குறிப்பிட்ட காவல் உதவி ஆய்வாளர் மீரா, பிபிசி தமிழிடம் விரிவாகப் பேசியபோது, "சம்பவ இடத்திற்குச் சென்றபோது பெண்ணின் தாய், பாட்டி ஆகியோர் பதற்றத்துடன் காணப்பட்டனர். அவரது தாய் தனது மகளை எப்படியாவது காப்பாற்றுமாறு கூறினார். பெண்ணின் படுக்கையறை கதவு உள்புறமாகத் தாழிடப்பட்டு இருந்தது," என்றார்.
போர்வைகளால் உருவாக்கப்பட்ட வலை
தனது அறையில் இருந்து தற்கொலைக்கு முயலப் போவதாக அந்தப் பெண் சத்தம் போட்டுள்ளார். அதுகுறித்து விளக்கிய மீரா, "அவர் பேசுவது வீட்டின் ஹாலில் கேட்டது. யாரும் காப்பாற்ற உள்ளே வரக்கூடாது என மிரட்டினார். என்னால் எதுவும் செய்ய முடியாமல் தரைத் தளத்திற்கு வந்தேன்" என்றார்.
இதற்கிடையே இளம்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள தகவலை மாம்பலம் மற்றும் சௌந்தரபாண்டியனார் அங்காடி காவல் நிலைய ஆய்வாளரைத் தொடர்பு கொண்டு மீரா தெரிவித்துள்ளார். தியாகராய நகரில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறைக்கும் காவல் நிலையத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்ணை மீட்பதற்கு வலை போன்று மீட்பு உபகரணங்கள் எதுவும் இல்லாததால், வீட்டில் இருந்த போர்வைகளைக் கட்டி அதன் மூலம் வலை போன்ற ஒன்றை உருவாக்கும் முயற்சியிலும் மீரா ஈடுபட்டார்.
ஆனால், அப்படியே அந்தப் பெண்ணை தாங்கிப் பிடிக்க நினைத்தாலும் எடை தாங்க முடியாமல் பலத்த காயம் அடைய வாய்ப்புள்ளதையும் அவர் கணித்தார். மீட்பு முயற்சிக்கு மாற்று வழிகள் இல்லாத சூழலில், அவரது கையில் செல்போன் இருந்ததை உதவி ஆய்வாளர் மீரா கவனித்துள்ளார்.
அதுகுறித்து விவரித்த அவர், "அவரை மீட்க அதுதான் ஒரே வழியாக இருந்தது. ஏனெனில், அவரை ஜன்னல் வழியாக மட்டுமே மீட்க முடியும். வேறு வழிகளும் இல்லை. எனவே, தீயணைப்பு வீரர் ஒருவரை அழைத்துக் கொண்டு மீண்டும் வீட்டுக்குள் சென்றேன்" என்றார்.
சமாதானம் ஏற்பட்டது எப்படி?
இளம்பெண்ணின் செல்போன் எண்ணை வாங்கி அவரை மீரா தொடர்பு கொண்டுள்ளார். "யார் நீ?" எனக் கேட்டு ஒருமையில் உதவி ஆய்வாளரைத் திட்டியுள்ளார். அதற்குப் பதிலளித்த மீரா, "உன்னைக் காப்பாற்றவே வந்திருக்கிறேன். எந்தப் பிரச்னையாக இருந்தாலும் நான் தீர்த்து வைக்கிறேன். என்னை நம்பி வெளியில் வா" எனக் கூறியுள்ளார்.
"எனக்கு யார் மீதும் நம்பிக்கை இல்லை" எனக் கூறி அந்தப் பெண் தொடர்பைத் துண்டித்துவிட்டார். மீண்டும் தொடர்பு கொண்டபோது மீராவின் அழைப்பை அவர் ஏற்றுள்ளார்.
"சுமார் 8 நிமிடம் கடும் கோபத்துடன் அவர் பேசினார். ஒரு நபரின் பெயரைக் கூறி, 'அவன் என்னை விட்டுட்டுப் போய்விட்டான்' எனக் கூறினார். ஏற்கெனவே தற்கொலைக்கு முயன்றதாகவும் அவர் தெரிவித்தார்" என்கிறார் மீரா.
அவரைச் சமாதானப்படுத்திய மீரா, "அப்படியெல்லாம் உன்னை விட்டுவிட மாட்டேன். ஒரு தங்கையாக நினைத்து என்னிடம் பிரச்னையை கூறினால் சரி செய்து தருகிறேன். வேறு யாரையும் நம்ப வேண்டாம்" எனக் கூறியதாகத் தெரிவித்தார்.
இளம்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டபோது தாயுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் அவரது அம்மாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டதாகவும் உதவி ஆய்வாளர் மீரா தெரிவித்தார்.
"ஒரு கட்டத்தில், 'நீ மட்டும் உள்ளே வா' என அந்தப் பெண் கூறினார். இந்த வார்த்தையைக் கேட்ட மறு விநாடியே, தீயணைப்பு வீரர் மூலமாகக் கதவை உடைத்து உள்ளே சென்றேன். அந்தப் பெண்ணை உடனடியாக உள்ளே இழுத்துப் போட்டுவிட்டேன்" என்று விவரித்தார்.
'நம்பிக்கை கொடுத்தால் மனநிலை மாறும்'
தற்போது தனியார் மருத்துவமனையில் அந்தப் பெண் சிகிச்சை பெற்று வருகிறார். "பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தபோது காதல் விவகாரத்தில் அவருக்கு ஏதோ பிரச்னை ஏற்பட்டுள்ளதாக அறிந்தேன். அந்த நேரத்தில் அவரது உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று மட்டுமே யோசித்தேன்" என்கிறார் மீரா.
"அவர் கையில் செல்போன் இருந்ததால் அவரை அமைதிப்படுத்த முடியும் எனத் தோன்றியது. மேலும், அவரது மனநிலை தெரியாமல் உள்ளே நுழைந்தால் விபரீதமாகிவிடுமோ என்ற அச்சமும் இருந்தது" எனவும் அவர் குறிப்பிட்டார்.
"ஒருவர் தற்கொலைக்கு முயலும்போது பிரச்னையை அறிந்து, உணர்ந்து அதில் நம்பிக்கை கொடுத்தால் மனநிலை மாறும் என நினைத்தேன். வேறு காவல் எல்லையாக இருந்தாலும் அந்தப் பெண்ணை மீண்டும் சந்தித்துப் பேசுமாறு உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர்" என்கிறார் மீரா.
தருமபுரி மாவட்டம் அரூர் தாலுகாவில் உள்ள செல்லம்பட்டி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மீரா. தமிழ்நாடு காவல் துறையில் காவலராகப் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு நேரடி உதவி ஆய்வாளராகத் தேர்வானார்.
தருமபுரி அரசு மேல்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்துள்ளார். திருமணத்துக்குப் பிறகு பட்டப்படிப்பில் தமிழ் இலக்கியத்தைத் தேர்வு செய்து படித்துள்ளார். உதவி ஆய்வாளர் பணிக்கு மூன்றாம் முறையாக முயற்சி செய்து தேர்வானதாக அவர் பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார்.
தொடரும் காவல்துறையின் மீட்பு சம்பவங்கள்
மீராவை போலவே, கடந்த சில வாரங்களாக தற்கொலை முயற்சியில் ஈடுபடும் நபர்களைக் காவல்துறை மீட்கும் சம்பவங்கள் நடந்துள்ளன.
கடந்த மார்ச் 30 அன்று மெரினா கடற்கரையில் இரண்டு பெண்கள் தற்கொலைக்கு முயன்றதைப் பார்த்த, அப்போது பணியில் இருந்த மெரினா காவல் நிலைய தலைமைக் காவலர் குமரேசன், காவலர்கள் சங்கர் குமார், முருகன் ஆகியோர் மீட்டனர்.
பெற்றோர் உடனான கருத்து வேறுபாடு காரணமாக மனமுடைந்து அப்படியான முயற்சியில் ஈடுபட்டதாக, போலீஸ் விசாரணையில் சகோதரிகள் கூறியுள்ளனர். அவர்களை உறவினர்களிடம் காவல் துறை ஒப்படைத்தது.
திருவொற்றியூரைச் சேர்ந்த பெண் ஒருவர் கோடம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் மனநல சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த ஏப்ரல் 19ஆம் தேதியன்று உயிரை மாய்த்துக் கொள்வதாக மிரட்டினார். அவரிடம் சமாதானமாகப் பேசி சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு காவலர் தேவராஜ் மீட்டுள்ளார்.
தற்கொலையை தடுக்க உதவும் 4 முக்கிய வழிகள்
தற்கொலை மற்றும் அதற்கான முயற்சிகளைத் தடுப்பதற்கு தனிநபர், சமூகம் மற்றும் தேசிய அளவில் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள முடியும் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இதைத் தடுப்பதற்கு நான்கு முக்கிய வழிகளையும் பட்டியலிட்டுள்ளது.
- தற்கொலை செய்வதற்கான வழிமுறைகளை அணுகுவதைக் கட்டுப்படுத்துதல்
- தற்கொலை பற்றிய செய்திகளை வெளியிடும்போது அதற்கான பொறுப்புகள் குறித்து ஊடக நிறுவனங்களுக்குத் தெரிவித்தல்
- வளரிளம் பருவத்தினர் இடையே சமூகம் சார்ந்த திறன்களை (socio-emotional life skills) வளர்த்தல்
- தற்கொலை நடத்தைகளால் பாதிக்கப்பட்ட நபர்களை முன்கூட்டியே அடையாளம் காணுதல், மதிப்பீடு செய்தல், அவர்களைப் பின்தொடர்தல்
தற்கொலை தடுப்பு முயற்சிகளுக்கு சுகாதாரம், கல்வி, தொழிலாளர், விவசாயம், வணிகம், நீதி, சட்டம், பாதுகாப்பு மற்றும் ஊடகங்கள் எனப் பல துறைகளின் ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்பும் தேவைப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், தற்கொலைகளைத் தடுப்பதில் சமூகங்களுக்கு முக்கியப் பங்கு உள்ளதாகவும் கூறுகிறது. இதே கருத்தை முன்வைத்து பிபிசி தமிழிடம் பேசிய கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் மாலையப்பன், "இந்திய சமூகத்தில் தற்கொலை எண்ணம் என்பது இயல்பாகவே உள்ளது. குடும்ப உறவுகள் இடையே வாக்குவாதம் ஏற்படும்போது, தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறுவது வழக்கம்" என்கிறார்.
"தேர்வு, காதல், வணிகம் ஆகியவற்றில் தோல்வி வரும்போது தற்கொலை எண்ணம் வரும். உளவியல்ரீதியாக பலவீனமாக உள்ளவர்கள், எந்தவித திட்டமிடலும் இல்லாமல் கோபத்தில் இந்த முடிவை எடுப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன," எனக் கூறுகிறார் மருத்துவர் மாலையப்பன்.
தொடர்ந்து பேசிய அவர், "மனச்சோர்வு (Depression) உள்ளவர்களுக்கு தற்கொலை எண்ணம் ஏற்படும். அதைச் செயல்படுத்தவும் திட்டமிடுவார்கள். இதைக் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் எளிதில் குணமாக்கிவிடலாம்" என்கிறார். அதோடு, மனச்சோர்வுக்கான அறிகுறிகளையும் மருத்துவர் மாலையப்பன் பட்டியலிட்டார்.
"போதிய உற்சாகம் இல்லாமல் இருப்பது, மெதுவாக நடப்பது, மெதுவாகப் பேசுவது போன்றவற்றின் மூலம் கண்டறியலாம். முன்பு போல வேகமாகச் செயல்பட மாட்டார்கள். உறக்கம் குறைந்துவிடும். எதிலும் ஈடுபாடு காட்ட மாட்டார்கள்" எனக் குறிப்பிட்டார்.
"பிரச்னைகள் வரும்போது மரணம் ஒரு தீர்வல்ல என்ற எண்ணம் வர வேண்டும். மானம் போனால் உயிர் வாழக்கூடாது என்ற எண்ணம் உள்ளது. மானத்தைவிட உயிர் மிக முக்கியம் என எண்ணும் அளவுக்கு கலாசார மாற்றம் ஏற்பட வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார்.
"உளவியல் ரீதியாக பலவீனமாக உள்ளவர்களுக்கு வாழ்வியல் பயிற்சிகளை அளிக்கலாம். நேரத்தைக் கடைபிடிப்பது, கோபத்தை எவ்வாறு வெளிக்காட்டக் கூடாது, உற்சாகமாக இருப்பது எப்படி என்பதைக் கற்றுக் கொடுத்தால், அவர்களின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்" எனக் கூறுகிறார் மாலையப்பன்.
உதவி எண்கள்
நீங்களோ அல்லது உங்களின் அன்புக்குரிய நபர்களோ மன அழுத்தத்தில் இருந்தால் அல்லது மனநலம் சார்ந்த பிரச்னைகளை எதிர்கொண்டால் அவர்களுக்குத் தேவையான உதவிகளைக் கீழ்கண்ட உதவி எண்கள் மூலமாகப் பெற்றுக்கொள்ள இயலும்.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்: 044 -24640050 (24 மணிநேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம்: 104 (24 மணிநேரம்)
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண்: 1800-599-0019
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு