கர்நாடகாவில் பாம்புகள் சூழ்ந்த மலைக் குகையில் 2 குழந்தைகளுடன் தனியே வசித்த ரஷ்ய பெண் நாடு திரும்பினார்

- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசிக்காக
கர்நாடகாவில் உள்ள ஒரு குகையில் தனது இரண்டு குழந்தைகளுடன் கண்டுபிடிக்கப்பட்ட ரஷ்யப் பெண், ஞாயிற்றுக்கிழமை (செப்டெம்பர் 28) இரவு ரஷ்யாவுக்குப் புறப்பட்டார். கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, அவருக்கும் அவரது குழந்தைகளுக்கும் பயணத்திற்கான தேவையான ஆவணங்கள் வழங்கப்பட்டன.
ஜூலை மாத தொடக்கத்தில், கர்நாடகாவின் கடலோர மாவட்டமான உத்தர கன்னடத்தின் கோகர்ணாவில் உள்ள ராமதீர்த்த மலைகளில் உள்ள ஒரு குகையில் 40 வயதான நீனா குடினாவும், அவரது குழந்தைகள் பிரேமா (6) மற்றும் அமா (4) ஆகியோரும் வசித்து வந்தது கண்டறியப்பட்டது.
அவர் சுமார் இரண்டு மாதங்களாக அங்கு வசித்து வந்தார். உத்தர கன்னட மாவட்டம் சுற்றுலாவுக்கு உகந்த மாநிலமான கோவாவின் எல்லையில் உள்ளது.
இந்தியாவில் தங்குவதற்கு நீனா குடினாவிடம் செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லை. இதனால் குகையிலிருந்து மீட்கப்பட்ட பிறகு, பெங்களூருவிலிருந்து சுமார் 76 கி.மீ தொலைவில் உள்ள தும்கூரில் உள்ள வெளிநாட்டுப் பெண்களுக்கான காப்பகத்திற்கு அவர் அனுப்பப்பட்டார்.
"தாயும் அவரது முந்தைய உறவில் இருந்து வந்த ஒரு குழந்தை உள்பட மூன்று குழந்தைகளும் ஞாயிற்றுக்கிழமை இரவு ரஷ்யாவுக்குச் சென்றனர்" என்று வெளிநாட்டு பிராந்திய பதிவு அலுவலக (FRRO) வட்டாரங்கள் பிபிசி இந்தியிடம் தெரிவித்தன.
ஷ்லோமோ கோல்ட்ஸ்டைன் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி பி.எம். ஷ்யாம் பிரசாத் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
இரு சிறுமிகளின் தந்தையான கோல்ட்ஸ்டைன், தனது மகள்களை தன்னுடைய பொறுப்பில் இருக்க அனுமதிக்கவும், அவர்கள் நாடு கடத்தப்படுவதைத் தடுக்குமாறும் நீதிமன்றத்தை கோரியிருந்தார்.

பட மூலாதாரம், ANI
இந்த சம்பவத்திற்கு முன், இரு குழந்தைகளையும் அவர்களின் தாயாருடன் (நீனா) சேர்ந்து கவனித்து வந்ததாகவும் கோல்ட்ஸ்டைன் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இஸ்ரேலிய தொழிலதிபரான கோல்ட்ஸ்டைன் ஒரு தொலைக்காட்சி சேனலிடம், "நீனா தனக்குத் தெரியாமல் கோவாவை விட்டு வெளியேறிவிட்டதாகவும், கோவா காவல்துறையில் இது குறித்து புகார் அளித்துள்ளதாகவும்" கூறியிருந்தார்.
"நீனா ரஷ்யாவுக்குச் செல்வதைத் தடுக்க முடிந்த அனைத்தையும் செய்வேன்" என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, நீனா அவரது குழந்தைகளுக்கும் பயணத்திற்கான தேவையான ஆவணங்கள் வழங்கப்பட்டு, அவர் ரஷ்யா சென்றுள்ளார்.

வழக்கின் பின்னணி என்ன?
கடந்த ஜூலை மாதம், கர்நாடகாவின் கடலோர மாவட்டமான உத்தர கன்னடத்தின் கோகர்ணாவில் உள்ள ஒரு குகையில் தனது இரண்டு இளம் குழந்தைகளுடன் வசித்து வந்த ரஷ்யப் பெண்ணை காவல்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
ரோந்துப் பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள், ஒரு மலைக்குக் கீழே சுமார் 700–800 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு குகையின் நுழைவாயிலில் துணிகள் தொங்கிக்கொண்டிருப்பதைக் கவனித்தனர்.
அவர்கள் ஆபத்தான காட்டுப் பாதை வழியாக குகையை நோக்கிச் சென்றபோது, தங்க நிற முடியுடன் கூடிய ஒரு சிறுமி குகையிலிருந்து வெளியே ஓடி வருவதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர்.
"குகையைச் சுற்றி பாம்புகள் திரிவதைக் காண முடிந்தது. கடந்த ஆண்டு ராமதீர்த மலைகளைச் சுற்றி நிலச்சரிவுகள் ஏற்பட்டதால் இந்தப் பகுதி ஆபத்தானதாக உள்ளது. அதனால்தான் ரோந்துக் குழு சுற்றுப்புறங்களைச் சோதனை செய்து வருகிறது" என்று உத்தர கன்னட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம். நாராயணா அப்போது பிபிசியிடம் தெரிவித்திருந்தார்.
முன்னதாக, மலைக் குகையில் வசித்தபோது இயற்கையோடு ஒன்றி மகிழ்ச்சியுடன் வாழ்ந்ததாகவும், தனது மகள்களைக் கொல்வதற்காக அங்கு இருக்கவில்லை என்றும் தனது இரண்டு இளம் குழந்தைகளுடன் மீட்கப்பட்ட சமயத்தில் ரஷ்ய பெண் நீனா தெரிவித்திருந்தார்.

எப்போது முதல் அப்பெண் அங்கு வசித்து வருகிறார்?
நீனா, 2016 அக்டோபர் 18 முதல் 2017 ஏப்ரல் 17 வரை வணிக விசாவில் இந்தியாவில் இருந்தார்.
விசா காலாவதியான பிறகு, கோவாவில் உள்ள வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகம் (FRRO) அவருக்கு ஏப்ரல் 19, 2018 அன்று வெளியேறும் அனுமதியை வழங்கியது.
அதன்பின், நீனா நேபாளத்திற்குச் சென்று, 2018 செப்டம்பர் 8 அன்று மீண்டும் இந்தியா திரும்பி உள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு













