குற்றவியல் சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் 6 முக்கியமான மாற்றங்கள் என்ன?

புதிய குற்றவியல் சட்டங்களில் 6 முக்கியமான மாற்றங்கள்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, கடந்த ஆகஸ்ட் மாதம், மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதிய குற்றவியல் சட்டங்கள் தொடர்பான மூன்று மசோதாக்களை மக்களவையில் தாக்கல் செய்தார்.
    • எழுதியவர், உமங் போட்டர்
    • பதவி, பிபிசி நியூஸ்

கடந்த செவ்வாய் கிழமையன்று, மத்திய அரசு இந்திய நீதிச் சட்டம், இந்திய குடிமைத் தற்காப்புச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றை புதிதாக அறிமுகப்படுத்தியது.

இந்த மசோதாக்கள் இந்தியாவில் தற்போதுள்ள இந்திய தண்டனைச் சட்டம் (IPC), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC) மற்றும் இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றை மாற்றி, புதிய சட்டங்களை இயற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகும்.

இந்த மசோதாக்கள் ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன் பிறகு அவை நாடாளுமன்றத்தின் நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டன.

நிலைக்குழு பரிந்துரைத்த மாற்றங்களை இணைக்க இந்த மசோதாக்கள் திரும்பப் பெறப்பட்டன.

இப்போது இந்த மசோதாக்கள் வியாழக்கிழமை விவாதிக்கப்பட்டு, வெள்ளிக்கிழமையன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்த புதிய மசோதாக்களில் செய்யப்பட்ட ஆறு மாற்றங்களைப் பார்ப்போம்.

புதிய குற்றவியல் சட்டங்களில் 6 முக்கியமான மாற்றங்கள்

பட மூலாதாரம், ANI

1) கும்பலாகச் சேர்ந்து கொலை செய்வது மற்றும் வெறுப்பு குற்றங்களுக்கான தண்டனையை அதிகரித்தல்

இதற்கு முன் இந்த மசோதாக்கள் வந்த போது, கும்பல் சேர்ந்து கொலை செய்வது மற்றும் வெறுப்பு குற்றங்களுக்கு குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது.

சாதி அல்லது சமூகம் போன்றவற்றின் அடிப்படையில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களால் கூட்டாக கொலை செய்யப்பட்டால், குற்றமிழைத்த குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் ஏழு ஆண்டுகளுக்கு குறையாத சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்படுவார்கள் என்று அது கூறுகிறது.

தற்போது இந்த காலம் ஏழு ஆண்டுகளில் இருந்து ஆயுள் தண்டனையாக உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய குற்றவியல் சட்டங்களில் 6 முக்கியமான மாற்றங்கள்

பட மூலாதாரம், SPL

2) பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான வரையறை

முதன்முறையாக இந்திய நீதித்துறை சட்டத்தின் கீழ் பயங்கரவாத நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. முன்னதாக, இவற்றுக்கு என பிரத்யேகமாக குறிப்பிட்ட சட்டங்கள் இருந்தன.

இதில் ஒரு பெரிய மாற்றம் என்னவெனில், பொருளாதாரப் பாதுகாப்பிற்கு எதிரான அச்சுறுத்தலும் பயங்கரவாத நடவடிக்கையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

கள்ள நோட்டுகளை தயாரித்தல், அவற்றை கடத்துதல், புழக்கத்தில் விடுவது போன்ற நடவடிக்கைகளின் மூலம் நிதி ஸ்திரத்தன்மைக்கு தீங்கு விளைவிப்பதும் பயங்கரவாத சட்டத்தின் கீழ் வரும்.

மேலும், இந்தியாவில் பாதுகாப்புக்காகவோ அல்லது அரசின் தேவைகளுக்காகவோ வைத்திருந்த சொத்துகளை அழிப்பதும் ஒரு பயங்கரவாதச் செயலாகும் என்று கூறுகிறது.

இப்போது இந்தியாவில், அரசை வற்புறுத்துவதற்காக ஒரு நபரை பணயக் கைதியாகக் காவலில் வைப்பது அல்லது கடத்துவது கூட பயங்கரவாத செயலாகும்.

புதிய குற்றவியல் சட்டங்களில் 6 முக்கியமான மாற்றங்கள்

பட மூலாதாரம், Getty Images

3) மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் குற்றங்களுக்கான தண்டனை

தற்போதைய இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குற்றங்களுக்கான தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கிறது.

இந்திய நீதித்துறை சட்டத்தின் பழைய பதிப்பில் இது "மனநோய்" என்ற சொல்லாக மாற்றப்பட்டது. இப்போது 'குழப்பமான மனம்' என்ற வார்த்தைகள் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.

4) பாலியல் வழக்குகள் தொடர்பான தகவல்களை வெளியிட்டால் தண்டனை

பாலியல் கொடுமைகள் குறித்த வழக்குகளில் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக எந்தத் தகவலையும் நீதிமன்றத்தின் அனுமதியின்றி வெளியிடுபவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்று மசோதாவின் புதிய பதிப்பில் புதிய விதி கூறுகிறது.

5) சிறிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்திற்கான வரையறை

முந்தைய மசோதா, குடிமக்களிடையே பொது பாதுகாப்பின்மை போன்ற உணர்வை ஏற்படுத்தினால், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களால் செய்யப்படும் வாகனத் திருட்டு மற்றும் பிக்பாக்கெட் போன்ற சிறிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு தண்டனை வழங்க வழிவகை செய்யப்பட்டது.

ஆனால், தற்போது, பாதுகாப்பு அச்சம் என்ற சொற்கள் நீக்கப்பட்டுள்ளன.

புதிய குற்றவியல் சட்டங்களில் 6 முக்கியமான மாற்றங்கள்

பட மூலாதாரம், Getty Images

6) சமூக சேவைக்கான வரையறை

புதிய 'இந்திய சிவில் பாதுகாப்பு சட்டம்' சமூக சேவையை தண்டனையாக விதிப்பது குறித்து வரையறுக்கிறது.

சமூக சேவை செய்ய உத்தரவிடுவது என்பது சமூகத்திற்கு நன்மை பயக்கும் வகையில் ஒரு குற்றவாளிக்கு விதிக்கப்படும் தண்டனையாக இருக்கும் என்றும் அதற்காக குற்றவாளிக்கு எந்த ஊதியமும் வழங்கப்பட மாட்டாது என்றும் கூறுகிறது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மசோதாக்களில் சிறு திருட்டு, குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் பல குற்றங்களுக்கு, சமூக சேவை செய்ய உத்தரவிடுவதை அறிமுகப்படுத்தியுள்ளது.

இருப்பினும், ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாக்களில் இது வரையறுக்கப்படவில்லை.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)