செயற்கை நுண்ணறிவைக் கொண்டு உங்கள் வங்கிப் பணத்தை திருடிவிட முடியுமா?

    • எழுதியவர், கார்த்திகேயா
    • பதவி, பிபிசிக்காக

செயற்கை நுண்ணறிவு (AI) தற்போது கார்ப்பரேட் நிறுவனங்கள், திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் கவலையாக உள்ளது.

செயற்கை நுண்ணறிவு என்பது தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்பட்ட பல மாற்றங்களில் ஒன்றாகும். இந்த செயற்கை நுண்ணறிவு கொண்டு வந்துள்ள ஆழமான போலி தொழில்நுட்பம் குறித்து பல்வேறு தரப்பினரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில், சில பிரபல நடிகர்களின் வீடியோக்கள் டீப் ஃபேக்(Deep Fake) மூலம் வைரலாகி வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தால் வரவிருக்கும் பிரச்னைகள் குறித்து தொழில்நுட்ப நிபுணர்கள் கவலைப்படுகின்றனர்.

இப்போது இந்த தொழில்நுட்பத்தால் நிதிக் குற்றங்களுக்கு என்ன வாய்ப்புகள் உள்ளது? அதில் சிக்காமல் இருக்க என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்? உள்ளிட்டவை குறித்து இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

இரண்டு வகை நிதிக்குற்றங்கள்

தற்போது வரை, மக்களின் வங்கிக்கணக்கில் இருந்து இரண்டு வகையில் மோசடி செய்து பணத்தை திருடுகின்றனர்.

1. மக்களிடம் அதிக வருமானம் கிடைக்கும் எனக்கூறி அவர்களின் அனுமதியுடனேயே அவர்களின் ஓடிபி மற்றும் கடவுச்சொல்லைப் பெற்று அவர்களது வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை எடுப்பது போன்ற குற்றச்செயல்கள் நடக்கிறது. இது ஒரு வகை

2019 ஆண்டில் மட்டும், மக்கள் தங்களின் தனிப்பட்ட விவரங்களை தெரியாதவர்களிடம் கொடுத்து இழந்த பணம் சுமார் ரூ 50 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

பல்வேறு நிதி நிறுவனங்கள் மற்றும் செயலிகள் தரும் தனிநபர் கடன் மற்றும் UPI மூலம் இவ்வகை மோசடிகள் நடக்கிறது. நமது தனிப்பட்ட தகவல்களை பிறரிடம் கொடுக்காமல் இருப்பதன் மூலம் இதுபோன்ற மோசடிகளை தவிர்க்கலாம்.

2. இதில் மக்கள் தங்களின் வங்கிக்கணக்கின் விபரம் மற்றும் இதர தகவல்களை யாரிடமும் பகிராமலேயே, வங்கிக்க கணக்கை ஹேக்கிங் செய்து அல்லது கடவுச்சொல்லை திருடி, மக்களின் பணத்தை மோசடி செய்வது இரண்டாவது வகை. இதுபோன்ற மோசடிகளைத் தடுக்க அரசும், வங்கிகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

ஆனால், செய்றகை நுண்ணறிவால் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் டீப் ஃபேக்கால்(Deep Fake) ஏற்படக்கூடிய பிரச்சனைகள், இந்த இரண்டு வகையில் இருந்தும் முற்றிலும் வேறுபட்டவை. ஏனென்றால் டீப்ஃபேக் மூலம் ஒரு நபரைப் போன்று டிஜிட்டலாக போலி நபரை உருவாக்க முடியும்.

தேர்தலின் போது சில வேட்பாளர்கள் போலி சுயவிவரங்களை உருவாக்கி, மற்ற வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பை சேதப்படுத்துவதை நாம் பார்த்திருக்கிறோம். போலி சுயவிவரம் மூலம் நிதி பரிவர்த்தனைகளை நடத்தவும் முடியும்.

உதாரணமாக, நம் குடும்ப உறுப்பினர்கள் நமக்கு போன் செய்து, ஒரு வங்கிக்கணக்கு எண்ணுக்கு பணம் அனுப்பச் சொன்னால், தயக்கமின்றி அனுப்புவோம். ஏனென்றால் அழைத்தவர் நம் குடும்ப உறுப்பினர் என்று நாம் நம்புவோம்.

ஆனால், அது செயற்கை நுண்ணறிவைக் கொண்டு, நம் குடும்ப உறுப்பினர் போல வேறு ஒருவர் பேசுவதற்கான வாய்ப்பு உள்ளது. வங்கிகள் கூட இந்த பரிவர்த்தனையை மோசடியாக அங்கீகரிக்காது.

2019 ஆம் ஆண்டில், வால் ஸ்ட்ரீட் ஜர்னல், ஒரு பிரிட்டிஷ் எரிசக்தி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி இதேபோன்ற மோசடிக்கு பலியானதாக எழுதியது. இத்தகைய மோசடிகளின் அச்சுறுத்தல் பிரபலங்கள் முதல் சாமானியர்கள் வரை அனைவரையும் தொந்தரவு செய்ய வாய்ப்புள்ளது.

இந்த டீப் ஃபேக் (Deep Fake)தொழில்நுட்பத்தின் மூலம் என்ன வகையான நிதிக் குற்றங்களைச் செய்ய டியும் என்பதை இப்போது பார்க்கலாம்:

செயற்கை நுண்ணறிவால் ஏற்படவுள்ள பாதிப்புகள் என்னென்ன?

மேலே குறிப்பிட்டுள்ளபடி, ஒரு நபரைப்போலவே டிஜிட்டல் நகலை உருவாக்கி, அதன் மூலம் லாபம் ஈட்டுவது எதிர்காலத்தில் ஒரு பெரிய பிரச்சினையாக உருவாகும். தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் இதை எளிதாக்கும்.

நிதி நிறுவனங்களின் செயல்பாடு அல்லது சில நிறுவனங்களின் செயல்பாடு குறித்த வதந்திகளை அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை போல பரப்புவதற்கான வாய்ப்பு உள்ளது.

கடந்த காலங்களில் ஐசிஐசிஐ வங்கியின் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் வரவில்லை என சில வதந்திகள் பரவியதால் அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்க வரிசையில் காத்திருந்தனர்.

இவ்வாறு ஒரு நிறுவனத்தின் செயல்பாடு சரியில்லை என்று முதலீட்டாளர்களுக்கு ஒரு நிறுவனம் தவறான தகவலை அளித்தால், அது அந்த நிறுவனத்திற்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும்.

எக்ஸ் (ட்விட்டர்) ஊடகத்தில் புளூடிக் தொடர்பான விதிகள் மாற்றப்பட்ட பிறகு, சிலர் பிரபல நிறுவனங்களின் பெயரில் கணக்கை தொடங்கி தவறான செய்திகளைப் பரப்பினர்.

இதுபோன்ற சம்பவங்கள் நடந்தபோது, எக்ஸ் நிறுவனம் அவர்களை அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுத்தது. ஆனால் 'டீப் ஃபேக்' தொழில்நுட்பத்தில் இருந்து வரும் செய்திகள் அல்லது நிகழ்வுகளைத் தவிர்ப்பது மிகவும் கடினம்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

அரசாங்கங்கள் அல்லது நிதி நிறுவனங்கள் தங்கள் விதிகளை மாற்றிவிட்டதாக மக்களை நம்ப வைப்பதும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் செய்ய முடியும்.

உதாரணமாக, ஒரு துறைக்கான நிதி ஆதரவை அரசாங்கம் திரும்பப் பெறுகிறது என்ற செய்தி பரவினால், முதலீட்டாளர்கள் அந்தத் துறையிலிருந்து தங்கள் முதலீட்டை திரும்பப் பெறுவார்கள். இப்படிச் செய்வதால் அந்தத் துறை நிறுவனங்களின் சந்தை மதிப்பு மிகக் குறைந்த நிலைக்குச் சென்று முதலீட்டாளர்களுக்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும்.

மேலும் ஒரு குறிப்பிட்ட துறைக்கு முன்னுரிமையளிக்க அரசு அடையாளம் கண்டுள்ளது என்ற செய்தி இயற்கையாகவே முதலீடுகளை அந்த துறையை நோக்கி திருப்பிவிடும். டீப் ஃபேக் தொழில்நுட்பம் மூலம் இதுபோன்ற போலிச் செய்திகளைப் பரப்புவது மிக எளிதாகிறது.

நமது நிதிப் பாதுகாப்பு பாதிக்கப்படாமல் இருக்க, சராசரி முதலீட்டாளர் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பதைப் பார்ப்போம்:

1. அதிக வருமானத்தை நம்பாதீர்கள்

அதிக வருமானம் தரும் எந்தவொரு திட்டமும் முழுமையாக ஆராயப்பட வேண்டும்.

யாருடைய வார்த்தைகளையும் கருத்துக்களையும் நம்பாதீர்கள். உங்கள் நேரத்தை ஒதுக்கி நீங்களே படிக்கவும். கடந்த காலங்களில் இதுபோன்ற திட்டங்கள் ஏதேனும் வந்துள்ளதா என்று பாருங்கள்.

சந்தேகத்திற்குரியதாகத் தோன்றினால், அவற்றில் முதலீடு செய்ய வேண்டாம்.

ஏனென்றால் நமக்கு சேரும் வட்டியை விட நம்மிடம் இருக்கும் பணத்தை பாதுகாப்பதே முக்கியம். இது தனிப்பட்ட நிதிக் கொள்கைகளில் ஒன்றாகும்.

2. OTP, PIN போன்ற தகவல்களை யாரிடமும் பகிராதீர்கள்

எந்த சூழ்நிலையிலும் OTP மற்றும் PIN போன்ற தகவல்களை மற்றவர்களுடன் பகிர வேண்டாம். உங்கள் OTP போன்ற தகவல்களைப் பெற எந்த நிறுவனத்திற்கும் உரிமையோ அல்லது தேவையோ இல்லை.

3. மன அழுத்தத்திற்கு ஆளாகாதீர்கள்

நீங்கள் முதலீடு செய்த பாலிசிகள் அல்லது நிறுவனங்களைப் பற்றி எதிர்மறையான செய்திகள் வந்தால், உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சில நாட்கள் காத்திருக்கவும். அதிகாரப்பூர்வ ஊடகங்களில் வரும் செய்திகளை மட்டுமே நம்புங்கள்.

செயற்கை நுண்ணறிவு முக்கிய ஊடகங்களில் கூட ஊடுருவும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

4. நீண்ட காலத் திட்டம்

நீண்ட காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது தனிப்பட்ட நிதி மேலாண்மையின் அடிப்படையாகும். இப்படி முதலீடு செய்வதன் மூலம் நிறுவனங்கள் டீப் ஃபேக் தாக்குதல்களில் இருந்து மீண்டு வரும்.

சிறப்பாகச் செயல்படும் நிறுவனங்கள் விரைவாக முந்தைய நிலைக்குத் திரும்புகின்றன. வாரன் பஃபெட் பல தசாப்தங்களாக கோகோ கோலா நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்ட பங்குகளை வைத்திருந்தார். நீண்ட காலத்திட்டத்திற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

(குறிப்பு: இந்தக் கட்டுரை குறிப்பிட்ட தலைப்பைப் பற்றிய பொதுவான புரிதலுக்காக மட்டுமே. உங்கள் தனிப்பட்ட நிதி ஆலோசகர்களுடன் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.)

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)