You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஒரே நாளில் அரசு மதரஸாக்கள் அனைத்தையும் பள்ளிகளாக மாற்றிய பா.ஜ.க. அரசு - எங்கே தெரியுமா?
- எழுதியவர், திலீப் குமார் சர்மா
- பதவி, கவுஹாத்தியில் இருந்து பிபிசி இந்திக்காக
அசாமில் ஆளும் பா.ஜ.க. அரசு அரசு 1,281 மதரஸாக்களை 'ஆங்கில நடுநிலைப் பள்ளிகள்' என பெயர் மாற்றம் செய்துள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் 'எம்.இ. மதரஸாக்கள்' அனைத்தையும் தடை செய்து அசாம் தொடக்கக் கல்வி இயக்குநர் அலுவலகம் கடந்த புதன்கிழமை உத்தரவு பிறப்பித்தது. அவை சாதாரண பள்ளிகளாக உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
அந்த பள்ளிகள் அனைத்தும் கல்வி வாரியத்தின் கீழ் பொதுப் பள்ளிகளாக மாற்றப்பட்டதன் விளைவாக, 1,281 எம்.இ மதரஸாக்களும் எம்.இ. பள்ளிகள் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக, அசாம் கல்வி அமைச்சர் ரனோஜ் பெகுவும் சமூக ஊடக தளத்தில் பதிவிட்டிருந்தார்.
அசாமில் பல தசாப்தங்களாக இயங்கி வந்த இந்த மதரஸாக்களை மூடுவது தொடர்பான சர்ச்சை ஒருபுறம் இருக்கையில், மறுபுறம் பாஜக தலைமையிலான அரசு பிரித்தாளும் அரசியலில் ஈடுபடுவதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அனைத்து அசாம் மதரஸா மாணவர் சங்கத்தின் தலைவராக இருந்த வஹிதுஸ்ஸாமான் கூறுகையில், இந்த மதரஸாக்களை மூடுவது என்பது அங்கு படிக்கும் மாணவர்களுக்கு அநீதி இழைப்பதாகும் என்றார்.
’மதரஸா’க்களை சுற்றி நடக்கும் அரசியல்
"மத்ரஸாக்கள் பற்றி தவறான கருத்து பரப்பப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளாக மாற்றிய மதரஸாக்களில் மதக் கல்வியுடன் அறிவியல், கணிதம், ஆங்கிலம், சமூக அறிவியல் போன்ற பொதுப் பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன" என வஹிதுஸ்ஸாமான் கூறுகிறார்.
மதரஸாக்களில் படிக்கும் பல மாணவர்கள் மருத்துவர்களாகவும், வழக்கறிஞர்களாகவும், பல தொழில்களில் சாதனையாளர்களாகவும் மாறியுள்ளனர் என்கிறார் அவர்.
அவர் கூறுகையில், "அரசியல் ரீதியான முடிவு இது. ஏனெனில் இதற்கு முன் ஹிமந்த பிஸ்வா சர்மா காங்கிரஸ் ஆட்சியில் கல்வி அமைச்சராக இருந்தபோது மதரஸாக்களின் வளர்ச்சிக்காக பல கோடி ரூபாய் செலவழித்தவர். ஆனா ல், பாஜகவில் இணைந்த பிறகு முற்றிலும் மாறிவிட்டார்" என்றார்.
உண்மையில் சொல்லப்போனால், அசாமில் பாஜக தலைமையிலான அரசு 2020-ஆம் ஆண்டிலேயே அனைத்து அரசு மதரஸாக்களையும் மூட முடிவு செய்தது.
அசாம் அரசாங்கத்தின் அமைச்சரவை 13 நவம்பர் 2020 அன்று ஒரு கூட்டத்தை நடத்தியது. அந்த கூட்டத்தில் மதரஸாக்களை வழக்கமான உயர்நிலைப் பள்ளிகளாக மாற்றவும், மதம் சார்ந்த பாடங்கள் நடத்தப்படுவதைத் திரும்பப் பெறவும் முடிவு செய்யப்பட்டது.
அந்த அமைச்சரவை முடிவின்போது, தற்போதைய முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா மாநிலத்தின் கல்வி அமைச்சராக இருந்தார்.
அதைத்தொடர்ந்து, 2021-ஆம் ஆண்டில், மதரஸா கல்வி தொடர்பான இரண்டு சட்டங்களை இயற்றுவதன் மூலம் அனைத்து அரசு மற்றும் மாகாண மதரஸாக்களை மூடும் முயற்சிகள் தொடங்கப்பட்டன.
எனவே, ஜனவரி 27, 2021 அன்று, அசாம் ஆளுநரின் ஒப்புதலுடன், அசாம் மதரசா கல்வி (மாகாணமயமாக்கல்) சட்டம், 1995 மற்றும் அசாம் மதரஸா கல்வி (ஆசிரியர் சேவைகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் மறுசீரமைப்பு) சட்டம், 2018 ஆகியவை ரத்து செய்யப்பட்டன.
நீதிமன்றம் என்ன சொல்கிறது?
அசாமில் அரசு மதரஸாக்களை மூடுவது தொடர்பான மாநிலத்தின் சட்டமன்ற மற்றும் நிர்வாக முடிவுகளை எதிர்த்து கவுஹாத்தி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் அம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 4 பிப்ரவரி 2022 அன்று, அசாம் அரசால் உருவாக்கப்பட்ட அசாம் ரத்துச் சட்டம், 2020 செல்லுபடியாகும் என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்தது.
தற்போது இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது.
கவுஹாத்தி உயர் நீதிமன்றத்தில் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஏ.ஆர்.புயான், "வழக்கமான பள்ளிகளாக மாற்றப்பட்டுள்ள மதரஸாக்கள் முழு மதரஸாக்கள் அல்ல. இந்த மதரஸாக்களில், உயர் நிலைப் பள்ளியில் நடத்தப்படும் அனைத்துப் பாடங்களும் அரபுக் கல்வித் திட்டத்துடன் சேர்த்துக் கற்பிக்கப்படுகின்றன" என கூறுகிறார்.
"ஆனால் அரசு பணத்தில் மதக் கல்வி அளிக்க முடியாது என்று அரசு சொல்கிறது. இந்த காரணத்திற்காக இந்த மதரஸாக்கள் சாதாரண பள்ளிகளாக மாற்றப்பட்டன" என்றார் அவர்.
"ஆனால், இந்திய அரசியலமைப்புச் சட்டம், குறிப்பாக விதிகள் 25, 29 மற்றும் 30-ன் கீழ் வழங்கப்பட்ட உரிமைகளை அரசாங்கம் மீறுகிறது. மதரஸாக்களில் என்ன கற்பிக்கப்படும் என்பதை அரசால் கட்டுப்படுத்த முடியாது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு தற்போது விசாரணைக்காக காத்திருக்கிறோம்" என அவர் தெரிவித்தார்.
அசாம் அரசு அனைத்து அரசு மதரஸாக்களுடன் சேர்த்து அரசு நடத்தும் சமஸ்கிருத மையங்களையும் அதாவது சமஸ்கிருத மையங்களையும் மூட முடிவு செய்துள்ளது.
"மாநில அரசு அனைத்து சமஸ்கிருத மையங்களையும் குமார் பாஸ்கர் வர்மா சமஸ்கிருதம் மற்றும் பண்டைய ஆய்வுகள் பல்கலைக் கழகத்துடன் இணைத்துள்ளது. அதேசமயம் சமஸ்கிருத மையங்களின் பாடத்திட்டத்தில் அதிகம் மாற்றம் செய்யப்படவில்லை" என புயான் தெரிவித்தார்.
மதரஸா பின்னணியில் உள்ள அரசியல்
அசாமில் இரண்டு வகையான மதரஸாக்கள் உள்ளன. ஒன்று அரசு அங்கீகாரம் பெற்ற மதரஸா, இது முழுக்கமுழுக்க அரசு மானியத்துடன் நடத்தப்பட்டது, மற்றொன்று தனியார் நிறுவனங்களால் நடத்தப்பட்ட கெராஜி.
1934-இல் அசாமின் கல்விப் பாடத்திட்டத்தில் மதரஸா கல்வி சேர்க்கப்பட்டது, அதே ஆண்டில் மாநில மதரஸா வாரியமும் உருவாக்கப்பட்டது.
ஆனால், மாநில மதரஸா வாரியம் 12 பிப்ரவரி 2021 அன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டு கலைக்கப்பட்டது.
அசாமில் உள்ள மதரஸாக்கள் 1995-ஆம் ஆண்டு அரசாங்கமயமாக்கப்பட்டது. அரசு நிதியுதவி பெறும் இந்த மதரஸாக்கள் தொடக்க நிலை, நடுநிலை மற்றும் முதுநிலை மதரஸாக்களாக பிரிக்கப்பட்டன.
தொடக்கநிலை மதரஸாவில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை கல்வி அளிக்கப்பட்டது. நடுநிலை மதரஸாவில், 8-ஆம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலும், உயர்நிலை மதரஸாவில், இளங்கலை மற்றும் முதுகலை நிலையிலும் கல்வி கற்பிக்கப்பட்டது.
இதுதவிர, மாநிலத்தில் நான்கு அரபிக் கல்லூரிகளில் ஆறாம் வகுப்பு முதல் முதுகலைப் பட்டம் வரை கல்வி கற்பிக்கப்படுகிறது.
ஆனால், 2020-ம் ஆண்டு அசாம் அரசு ரத்துச் சட்டத்தை கொண்டு வந்ததால் இந்த மதரஸாக்கள் மற்றும் அரபிக் கல்லூரிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மதரஸாக்களுக்காக அரசாங்கம் ஆண்டுதோறும் சுமார் மூன்று முதல் நான்கு கோடி ரூபாய் வரை செலவு செய்து வருகிறது.
தற்போது, அசாமில் மொத்தம் 2,250 தனியார் மதரஸாக்கள் ஏழு வாரியங்களின் கீழ் இயங்கி வருகின்றன. அனைத்து அசாம் தன்சீம் மதரிஸ் கௌமியாவின் கீழ் அதிகபட்சமாக 1,503 தனியார் மதரஸாக்கள் உள்ளன.
அனைத்து அசாம் தன்சீம் மதர்சிஸின் செயலாளரான மௌலானா அப்துல் காதர் காஸ்மி பிபிசியிடம், "அறிவியல் மற்றும் கணிதம் போன்ற பொதுப் பாடங்களை தனியார் மதரஸாக்களில் கற்பிக்க வேண்டும் என்று முதலமைச்சர் கூறுவது முரணாக உள்ளது. அவர்கள் மூடும் அரசு மதரஸாக்களில் அரபு-உருது தவிர அனைத்துப் பொதுப் பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன" என்றார்.
"மதரஸாக்களில் முல்லாக்களையும் மௌல்விகளையும் அரசு உருவாக்காது என்று முதலமைச்சர் கூறும்போது, மிகவும் வேதனையாக இருக்கிறது. நாட்டின் கல்விக்காக கொள்கைகளை வகுத்த மௌலானா அப்துல் கலாம் ஆசாத் தான் இந்த நாட்டின் முதல் கல்வி அமைச்சர் என்பதை அவர்கள் அறிவர். மதரஸாக்களை பிரச்னையாக்குவதன் பின்னணியில் உள்ள அரசியல் என்ன என்பது அனைவருக்கும் தெரியும்” என அவர் தெரிவித்தார்.
மதரஸாக்கள் மீதான சர்ச்சை மற்றும் புதிய விதிகள்
அசாம் முதலமைச்சர் 2020 முதல் பல நிகழ்வுகளில் மதரஸாக்கள் குறித்து ஆக்ரோஷமான கருத்துகளை தெரிவித்து வந்தார்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் கர்நாடகாவின் பெலகாவியில் பாஜகவின் விஜய் சங்கல்ப் யாத்ராவில் உரையாற்றிய போது, “நான் 600 மதரஸாக்களை மூடிவிட்டேன். ஆனால், எல்லா மதரஸாக்களையும் மூடுவதே என் எண்ணம். ஏனென்றால் எங்களுக்கு மதரஸாக்கள் தேவையில்லை. மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்களை உருவாக்க எங்களுக்கு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தேவை" என தெரிவித்தார்.
இந்த மதரஸாக்களில் நடைபெறும் ஆய்வுகள் தொடர்பாகவும் கடந்த காலங்களில் சில சர்ச்சைகள் நிகழ்ந்துள்ளன. வழக்கமான பள்ளிகள் இல்லாத தொலைதூரப் பகுதிகளில், சில மதரஸாக்களில் தீவிர இஸ்லாம் கற்பிக்கப்படுவதாக தீவிர இந்து அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன.
கடந்த ஆண்டு, அசாமில் தேச விரோத மற்றும் ஜிகாதி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி நான்கு மதரஸாக்கள் இடிக்கப்பட்டன.
இந்த ஆண்டு பிப்ரவரியில், அசாம் காவல்துறை தலைவர் தனியார் மதரஸாக்களை நடத்துபவர்களுடன் ஒரு கூட்டத்தை நடத்தி சில விதிகளை முடிவு செய்தார்.
இந்த விதிகளின்படி, 5 கிலோமீட்டர் சுற்றளவில் ஒரே ஒரு மதரஸா மட்டுமே இருக்கும். 50-க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட மதரஸாக்கள் அருகில் உள்ள பெரிய மதரஸாவில் சேர்க்கப்படும்.
இதுதவிர, மதரஸாக்களில் படிக்கும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர், தலைமை ஆசிரியர் உட்பட அனைத்து ஆசிரியர்கள் பற்றிய முழுமையான தகவல்களை அவ்வப்போது அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
பாஜக என்ன சொல்கிறது?
மாநிலத்தில் அரசு மதரஸாக்கள் மூடப்படுவது குறித்து, அசாம் மாநில பாஜக மூத்த தலைவர் பிரமோத் சுவாமி கூறுகையில், அரசின் மானியத்துடன் மதக் கல்வியை வழங்க முடியாது என தெரிவித்தார்.
அவர் கூறுகையில், 'அதனால்தான் அரசு மதரஸாக்கள் அசாம் இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் சாதாரண பள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளன” என்றார்.
மேலும், "முஸ்லிம் குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதே எங்கள் நோக்கம். இதன் மூலம், எதிர்காலத்தில் அவர்கள் மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும் மாறி மற்ற குழந்தைகளைப் போல நாட்டுக்கு சேவை செய்ய முடியும். சிறுபான்மையின குழந்தைகளின் நலன் கருதி அரசு இந்த முடிவை எடுத்துள்ளது" என்றார்.
அரசியல் நோக்கங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, "எங்கள் கட்சி முஸ்லிம் சமூகத்தை வாக்கு வங்கி அரசியலுக்கு பயன்படுத்துவதில்லை. இதில் எந்தவித அரசியலும் இல்லை" என தெரிவித்தார்.
தனியார் மதரஸாக்கள் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறும் அவர், 'தனியார் மதரஸாக்கள் மதக் கல்விக்காக தொடர்ந்து செயல்படும்' என்கிறார்.
அசாமின் மொத்தம் 19 மாவட்டங்களில் உள்ள 1,281 அரசு மதரஸாக்கள் தற்போது சாதாரண பள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளன.
வங்கதேச எல்லையில் உள்ள அசாமின் துப்ரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 269 மதரஸாக்கள் சாதாரண பள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளன.
அதேசமயம், நாகோன் மாவட்டத்தில் 165 மதரஸாக்களும், பார்பேட்டாவில் உள்ள 158 மதரஸாக்களும் சாதாரண பள்ளிகளாக இணைக்கப்பட்டுள்ளன.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)