லவ் ஜிகாத், மத மாற்றம் சர்ச்சைகளில் சிக்கிய 'ஹாதியா' தற்போது எங்கே? தந்தை ஆட்கொணர்வு மனு

    • எழுதியவர், இம்ரான் குரேஷி
    • பதவி, பிபிசி இந்தி

ஏழு ஆண்டுகளுக்கு முன் 'லவ் ஜிஹாத்’ என கூறப்படும் வழக்கால் பிரபலமடைந்த கேரளப் பெண் ஹாதியா மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளார்.

ஹாதியாவின் தந்தை பல ஆண்டுகளுக்குப் பிறகு தன் மகளை சந்திப்பதற்காக அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருப்பதால், அவர் மீண்டும் பேசுபொருளாகியுள்ளார்.

2017-ஆம் ஆண்டு ஷஃபீன் ஜஹானுடனான ஹாதியாவின் திருமணத்தை கேரள உயர் நீதிமன்றம் ரத்து செய்தபோது அவரது பெயர் வெளிச்சத்துக்கு வந்தது. ஹாதியா இந்து மதத்தைச் சேர்ந்தவர், அவரது பெயர் அகிலா அசோகன். ஆனால், அவர் இஸ்லாம் மதத்தைத் தழுவி ஷஃபீன் ஜஹானை மணந்தார்.

2018-இல், உச்ச நீதிமன்றம் அவர்களின் திருமணத்தை அங்கீகரித்தது. இந்த வழக்கின் விசாரணையின் போது, ​​தேசிய புலனாய்வு நிறுவனமான என்.ஐ.ஏ, ஹாதியாவின் கணவர் அவரை மதம் மாற வற்புறுத்தவில்லை என்று கண்டறிந்தது.

மேலும், தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் ஹாதியாவின் கணவருக்கு தொடர்பு இல்லை என்பதும் தெரியவந்தது.

ஹாதியாவின் அறிக்கை மற்றும் அவரது தந்தையின் குற்றச்சாட்டுகள்

ஆனால், சில நாட்களுக்கு முன்பு ஷஃபீனை விவாகரத்து செய்துவிட்டு வேறு ஒரு இளைஞரை ஹாதியா திருமணம் செய்ததால் இப்பிரச்னை மீண்டும் கிளம்பியுள்ளது.

இது தனது தனிப்பட்ட விஷயம் என்று கூறி அந்த இளைஞரின் பெயரை வெளியிட மறுத்துள்ளார் ஹாதியா.

அவரது தந்தை கே.எம்.அசோகன், "ஹாதியாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நான் அவளைத் தேடிச் சென்றேன், ஆனால் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளேன்." என பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.

"அவள் மறுமணம் செய்து கொண்டதாக என்னிடம் சொன்னாள். அவளுடைய புதிய கணவரின் பெயர் கூட எனக்குத் தெரியாது. முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டார். அவள் ஏன் திருமணத்தை முறித்துக் கொண்டாள் என்று எனக்குத் தெரியவில்லை. அவள் முதலில் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக நடித்தாள். இப்போது அவர் வேறொருவரை திருமணம் செய்து கொண்டதாக கூறியிருக்கிறார். அவர் என்ன செய்யப் போகிறார் என எனக்குத் தெரியவில்லை,” என்கிறார்.

மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு வழங்கிய தீர்ப்பை அடுத்து ஹாதியாவின் திருமண பிரச்னை தீர்க்கப்பட்டது.

இந்த தீர்ப்பு குறித்து ஹாதியாவிடம், “உங்கள் பெற்றோர் உங்களின் திருமணத்திற்கு ஆசீர்வாதம் அளித்தார்களா?" என பிபிசி இந்தி அச்சமயத்தில் கேள்வி எழுப்பியது.

அதற்கு அவர், "என் பெற்றோர்கள் என் உணர்வுகளைப் பற்றியோ, மகிழ்ச்சியை பற்றியோ கவலைப்படவில்லை," என்று கூறினார்.

"எனது முதல் திருமணம் முறிந்ததும், என் பெற்றோர் என்னை திரும்பி வரச் சொன்னார்கள். ஆனால், என்னால் அதை செய்ய முடியவில்லை, நான் இஸ்லாத்தை நம்புகிறேன், அதை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை," என்று கூறினார்.

'மீண்டும் இந்துவாக மாற அழுத்தம்'

கடந்த வாரம் ஹாதியாவை அழைத்தபோது அவளது தந்தை அவளிடம் ஏன் பேசவில்லை என்று பிபிசி இந்தி கேட்டது.

இதுகுறித்து ஹாதியா கூறுகையில், "எனக்கு எனது தந்தையுடன் நல்ல உறவு இருந்தது. ஆனால், அவர் செய்த ஒரு மோசமான விஷயம் என்னவென்றால், ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்து எனது தனிப்பட்ட வாழ்க்கையை பொது விஷயமாக்கிவிட்டார். எனது இரண்டாவது திருமணம் குறித்து அவருக்குத் தெரியும். வெளிப்புற அழுத்தத்தால் இவை அனைத்தையும் செய்ததாக ன்று அவர் என்னிடம் தெளிவாக கூறியிருக்கிறார்,” என தெரிவித்தார்.

ஹாதியா கூறுகையில், "எனது தந்தை யாரோ ஒருவரின் செல்வாக்கில் இவற்றை செய்கிறார் என்பது எனக்குத் தெரியும். நான் இஸ்லாம் மதத்திற்கு மாறிய பிறகு வீட்டுக் காவலில் இருந்தபோது, ​​​​எங்கள் வீட்டுக்கு சிலர் வருவதை அறிந்தேன். அவர்கள் நான் மீண்டும் இந்துவாக மாற வேண்டும் என்று விரும்பினர்," என தெரிவித்தார்.

'லவ் ஜிஹாத்' வழக்கு

ஹாதியா ஒரு குறிப்பிட்ட சூழலில் 'வீட்டுக் காவல்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். உண்மையில், ஹாதியாவை அவரது பெற்றோர் அவரது வீட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு கூறியது.

இவரது தந்தை கடந்த 2016-ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

அப்போது ஹாதியா தனது தந்தையின் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிப்பதை நிறுத்திவிட்டார். ஹாதியா வலுக்கட்டாயமாக முஸ்லிம் மதத்திற்கு மாறியது தெரியவந்தது.

அப்போது ஹாதியா கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் ஹோமியோபதி படித்து வந்தார்.

ஆனால், தனது வீட்டில் வசிக்கும் இரண்டு முஸ்லிம்களின் பிரார்த்தனை மற்றும் மத பற்று தன்னை பெரிதும் பாதித்ததாக ஹாதியா நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

ஹாதியா தான் விரும்பியதை செய்ய சுதந்திரம் இருப்பதாக நீதிமன்றம் அப்போது கூறியது.

தனது மகள் மூளைச்சலவை செய்யப்பட்டதாக, அந்த சமயத்தில் அசோகன் பிபிசியிடம் தெரிவித்தார்.

"என் மகளை அவர்கள் சிரியாவுக்கு அனுப்ப விரும்பினார்கள். இதை அவர் என்னிடம் போனில் சொன்னார். அப்போதுதான் எனக்கு இது தெரிய வந்தது. இந்த உரையாடலைப் பதிவுசெய்துவிட்டு வழக்குப் பதிவு செய்தேன்," என்று அசோகன் அப்போது கூறியிருந்தார்.

ஹாதியா இந்தியாவை விட்டு வெளியேறுவதாக நம்புவதாகக் கூறி அசோகன் 2017-இல் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

ஹாதியா ஷஃபீன் ஜஹானை மணந்த வழக்கில், ஹாதியா தனது சொந்த விருப்பத்தின் பேரில் மதம் மாறினாரா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

பின்னர் உயர் நீதிமன்றம் ஹாதியாவை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்ததால், அவர் வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் ஒரே அறையில் வசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

ஹாதியாவுக்கு இப்போது என்ன வேண்டும்?

அதன் இரண்டாவது தீர்ப்பில், ஹாதியா இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டது குறித்து உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. தீவிரவாத அமைப்புகள் காதல் என்ற போர்வையில் இந்து மதத்தைச் சேர்ந்த சிறுமிகளை மதமாற்றம் செய்கின்றனர் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. நீதிமன்றத்தின் இந்த கருத்து 'லவ் ஜிகாத்' என்பதன் மென்மையான வரையறையைப் போலவே இருந்தது.

ஆனால், கேரள உயர் நீதிமன்றத்தின் நடுவர் அமர்வு ஹாதியா - ஷஃபின் ஜஹான் திருமணத்துக்கு அனுமதி அளித்த உத்தரவை உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அமர்வு ரத்து செய்தது.

ஹாதியா மற்றும் அவரது மறுமணம் குறித்து அசோகன் சில நாட்களுக்கு முன்பு கருத்துகளை தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து மலையாள தொலைக்காட்சி சேனலான ‘மீடியா ஒன்’-னுக்கு அளித்த பேட்டியில் ஹாதியா, "நான் மறுமணம் செய்து கொண்டேன், இதை விவாதப் பொருளாக ஆக்க வேண்டாம் என நினைக்கிறேன். சட்டப்படி திருமணம் செய்யவும், பிரிந்து கொள்ளவும், மறுமணம் செய்யவும் அனைவருக்கும் உரிமை உண்டு. நான் இதை செய்தால் ஏன் மக்கள் எரிச்சல் அடைகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. நான் என் பெற்றோரிடம் இந்தக் கேள்வியைக் கேட்கிறேன். இது என் உரிமை. நான் சிறுமி அல்ல. நான் வயதுக்கு வந்த பெண்," என தெரிவித்தார்.

ஹாதியா (31 வயது) பிபிசி இந்தியிடம், "நான் சுதந்திரமாக வாழ உச்ச நீதிமன்றம் எனக்கு சுதந்திரம் அளித்துள்ளது. ஆட்கொணர்வு மனுவின் பின்னணியில் உள்ளவர்களுக்கு உயர் நீதிமன்றம் தண்டனையை வழங்கும் என்று நான் நம்புகிறேன். இது ஒரு முன்மாதிரியாக இருக்கும்,” என தெரிவித்தார்.

திருவனந்தபுரத்தில் தனது சொந்த மருந்தகத்தைத் திறக்க ஹாதியா திட்டமிட்டுள்ளார். திருமணத்திற்குப் பிறகு இங்கேயே வாழ விரும்புகிறார். ஹோமியோபதியில் முதுகலைப் படிப்பையும் படிக்க விரும்புகிறார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)