You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்னை வெள்ளம்: ஊடகவியலாளர்களுக்கு மிரட்டல் - பா.ஜ.க.வை அப்படியே பின்பற்றுகிறதா திமுக?
- எழுதியவர், பாலசுப்ரமணியம் காளிமுத்து
- பதவி, பிபிசி தமிழ்
மிக்ஜாம் புயல் காரணமாக டிசம்பர் 4-ஆம் தேதி பெய்த கனமழையால் சென்னை மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ளது. பல இடங்களில் மழை நின்று மூன்று, நான்கு நாட்களுக்கு மேல் ஆகியும் தண்ணீர் வடியாததால் மக்கள் வீட்டிற்குள்ளேயே உணவு, தண்ணீர் இல்லாமல் சிக்கியிருக்க வேண்டிய சூழல் உருவானது. மேலும் மின்சாரம் மற்றும் தொலைதொடர்பு இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால் உதவி கோருவதிலும் உதவி பெறுவதிலும் கால தாமதம் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், திமுக அரசின் வெள்ள நிவாரண பணிகளில் குறைகள் இருப்பதாக செய்தி வெளியிட்ட சில ஊடகவியலாளர்களுக்கு திமுக ஆதரவாளர்கள் சிலர் சமூக வலைதளங்களில் மிரட்டல் விடுத்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஷபீர் அகமது, தன்யா ராஜேந்திரன், ஃபெலிக்ஸ் ஜெரால்ட் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் திமுக அரசின் மழை நிவாரண பணிகள் குறித்து வெளியிட்ட செய்திகளுக்காக திமுக ஆதரவாளர்கள் சிலர் மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசியுள்ளனர்.
ஊடகவியலாளர்களை மிரட்டுவதில் பாஜகவை திமுக அப்படியே பின்பற்றுகிறதா?
சமூக வலைதளங்களில் தனிப்பட்ட ரீதியில் தாக்குதல்
தி நியூஸ் மினிட் தமிழ் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஷபீர் அகமது குறித்து எக்ஸ் சமூக வலைதளத்தின் ஸ்பேசஸ் பகுதியில் திமுக ஆதரவாளர்கள் தரக்குறைவாக பேசுவதாக கூறப்படும் ஆடியோ டிசம்பர் 8ம் தேதி வெளியானது. அதில் திமுக ஆதரவாளர் ஒருவர், “2015ல் செம்பரம்பாக்கம் ஏரியை ஜெயலலிதா திறந்து விட்டதையும் தற்போது ஏற்பட்டுள்ள மழை பாதிப்பையும் ஷபீர் ஒப்பிடுவது தவறு" என்று கூறி அவருக்கு மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசுகிறார்.
மற்றொரு பதிவில் 2016ல் அரசு ஒப்பந்ததாரரான சேகர் ரெட்டியின் அலுவலகங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் கைப்பற்றப்பட்ட டைரியின் புகைப்படம் என ஒரு புகைப்படம் பகிரப்பட்டது. அந்த பதிவில், அந்த டைரியில் பத்திரிகையாளர்கள் சபீர் அகமது, தன்யா ராஜேந்திரன் உள்ளிட்டோரின் பெயர்கள் இருப்பதாக திமுக ஆதரவாளர் ஒருவர் அந்த டைரியின் புகைப்படம் என ஒரு புகைப்படத்தை X சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
ஆனால், அது கடந்த அதிமுக ஆட்சியில் அக்கட்சி ஆதரவாளர்கள் சிலரால் வெளியிடப்பட்ட போலியான புகைப்படம் ஆகும். இந்த புகைப்படம் போலியானது என அந்தப் பதிவின் கீழ் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளரும் தொழில்துறை அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜா கமெண்ட் செய்திருந்தார்.
அந்தக் கமெண்டில் அவர் கூறியதாவது, “இந்தப் புகைப்படம் போலியானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. நமது தலைவர் இந்த மாதிரியான போலியான கருத்துகளை சகித்துக்கொள்ள மாட்டார். நமக்கு என்ன வேண்டுமானாலும் காரணங்கள் இருக்கலாம். ஆனால் இப்படி ஒருவர் மீது சேற்றை வாரி இறைப்பதை திமுக ஆதரிக்காது” என அவர் குறிப்பிட்டிருந்தார்.
“பா.ஜ.க.வை திமுக அப்படியே பின்பற்றுகிறது”
இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் மணியிடம் பிபிசி தமிழ் பேசியது. அவர் கூறுகையில், “ஊடகவியலாளர்களை மிரட்டுவதில் திமுகவிற்கு முன்னோடி அண்ணாவோ, கலைஞரோ கிடையாது. திமுக இணைய அணிக்கு முன்னோடி மோதிதான். ஆட்சியாளர்கள் மீது எத்தகைய விமர்சனங்கள் வந்தாலும் தாங்கக்கூடிய மனம் வேண்டும் என கலைஞர் கூறுவார். ஆனால் கலைஞரின் வாரிசுகள் அவரை பின்பற்றாமல் பா.ஜ.க.வையும் நரேந்திர மோதியையும் பின்பற்றுகிறார்கள்” என அவர் தெரிவித்தார்.
மேலும் கூறுகையில்,“திமுகவிற்கு மக்கள் மத்தியில் அவப்பெயர் அதிகமாகி வருவதால் என்ன செய்வது என்று தெரியாமல் ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் விமர்சிக்கிறார்கள். ஊடகவியலாளர்கள் மக்களின் பிரச்னையை எதிரொலிக்க கூடிய கண்ணாடியாக இருக்கிறார்கள். ரஷ்ய பழமொழி ஒன்று உள்ளது. முகங்கள் மோசமாக இருப்பதற்கு கண்ணாடியை உடைத்து பயனில்லை என்று. அந்த ரஷ்ய மொழியை திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் செயல்பாட்டோடு பொருத்திப் பார்க்கலாம்,” என அவர் தெரிவித்தார்.
திமுக தகவல் தொழில்நுட்ப அணியில் இருக்கும் இளைஞர்களை யாரும் சரியாக வழிநடத்துவதில்லை என அவர் தெரிவித்தார். அவர் கூறுகையில், “திமுக அரசின் குறைகளை சுட்டிக்காட்டும் பத்திரிகைகளுக்கு திமுக நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால், சென்னை மழை குறித்த பிரச்னைகளை பல ஊடகங்கள் முழுமையாக பேசவில்லை. எனவே பத்திரிகையாளர்கள் உண்மையான நிலவரத்தை சொல்வது தங்களை திருத்திக்கொள்ள அரசிற்கு உதவும்,” என அவர் தெரிவித்தார்.
திமுகவின் செயல்பாட்டை அதிமுகவுடன் ஒப்பிடலாமா என்ற கேள்விக்கு அந்த ஒப்பீடே தவறு என மணி தெரிவித்தார்.
மேலும், “தங்களை அண்ணா மற்றும் கலைஞரோடு ஒப்பிட வேண்டிய திமுக, ஜெயலலிதா உடன் ஒப்பிடுவது அவலமானது. பத்திரிகையாளர்களை மிரட்டுவதில் இரண்டு திராவிட கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். இப்போது அதிமுகவை விட திமுக சிறிது அதிகமாக மிரட்டுகிறது. சென்னை மழையில் அரசின் குறைகளை வெறும் 40 சதவீதம்தான் ஊடகங்கள் காட்டியுள்ளன. அதற்கே திமுகவிற்கு இத்தனை கோபம் வருகிறது. எனவே, பாஜகவிற்கும் திமுகவிற்கும் எந்த வேறுபாடும் கிடையாது” என மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் கூறுவது என்ன?
இது குறித்து தி நியூஸ்மினிட் தமிழில் பணிபுரியும் பத்திரிகையாளர் ஷபீர் அகமதுவிடம் பிபிசி தமிழ் பேசியது. அவர் கூறுகையில், “திமுகவால் பத்திரிகையாளர்கள் கூறும் உண்மைகளை தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதுதான் கள நிலவரம் என்று நாங்கள் கூறும்போது அதனை திமுகவில் சிலர் ஏற்க மறுக்கிறார்கள். எங்களால் உண்மைக்கு புறம்பாக எதுவும் சொல்ல முடியாது. மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்றால் கஷ்டப்படுகிறார்கள் என்றுதான் செய்தி வெளியிட முடியும். அந்த உண்மைகளை ஏற்றுக்கொள்ளக் கூடிய சகிப்புத்தன்மை திமுக நிர்வாகிகள் இடையே குறைந்துள்ளது.” என அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “திமுக தலைமை நாங்கள் சுட்டிக்காட்டும் பிரச்னைகள் இருப்பதை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், சமூக வலைதளங்களில் இயங்கும் திமுக ஆதரவாளர்கள் செய்தி வெளியிட்ட ஊடகத்தையும் சம்பந்தப்பட்ட ஊடகவியலாளர்களையும் குறிவைக்கிறார்கள். தனிப்பட்ட பத்திரிகையாளர்களை மிரட்டுவது நீண்ட காலமாக நடக்கிறது. ஆனால், தற்போது அதை ஒரு ஒருங்கிணைவோடு செய்கிறார்கள். இதன் மூலம் சம்பந்தப்பட்ட பத்திரிகையாளரின் கவனத்தை பிரச்னைகளை தெரிவிப்பதில் இருந்து திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். ஆனால், இதெல்லாம் எங்களைப் போன்ற பத்திரிகையாளர்களை நிறுத்தாது” என சபீர் தெரிவித்தார்.
"பத்திரிகையாளர்களை மிரட்டுவதில் கட்சி பாகுபாடே கிடையாது. பாஜக, அதிமுக ஆகிய கட்சிகளும் இதற்குமுன்பு இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தற்போது திமுக அவர்களோடு இணைந்துள்ளது" என்றும் பத்திரிகையாளர் ஷபீர் அகமது தெரிவித்தார்.
“தனி நபர்களின் கருத்திற்கு திமுக பொறுப்பேற்காது”
இது குறித்து திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணைச் செயலாளர் பத்மபிரியாவிடம் பிபிசி தமிழ் பேசியது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் விதமாக அவர் கூறுகையில், “எனக்கு தெரிந்தவரை திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் சமூக வலைதளப் பக்கங்களில் இருந்தோ திமுகவின் உறுப்பினர்களோ இந்த மாதிரியான மிரட்டல்களில் ஈடுபடவில்லை. அப்படி ஒன்றிரண்டு சம்பவங்கள் நடந்திருந்தால் அதற்கான நடவடிக்கை கட்சிக்குள் எடுக்கப்படுகிறது. எனவே திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியினர் குறிப்பிட்ட பத்திரிகையாளர்கள் மிரட்டுகிறார்கள் என்பதில் உண்மை கிடையாது” என அவர் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட நபர்கள் மீது எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்ற கேள்விக்கு,“இந்த விவகாரம் என்றில்லாமல் இதுபோன்ற மற்ற பிரச்னைகளில் கருத்து கூறிய திமுகவினர் தனிப்பட்ட ரீதியில் தான் கருத்து தெரிவித்திருக்கின்றனர். எனவே எந்த ஒரு தனிப்பட்ட நபரின் கருத்திற்கும் திமுக பொறுப்பாகாது. ஆனால், ஒரு தனி நபரை இவ்வாறு மிரட்டுவதை திமுக என்றும் ஆதரிக்காது. அவர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, பெண்கள் குறித்து தரக்குறைவாக பேசிய திமுகவினர் மீது கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது” என அவர் தெரிவித்தார்.
மேலும், “இந்த மாதிரியான புகார்கள் சமீபத்தில் வந்தபோது சம்பந்தபட்ட பத்திரிகையாளர்களுக்கு சாதகமாகத்தான் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளர் டி.ஆர்.பி ராஜா கருத்து தெரிவித்தார். பாஜக உடன் இந்த விவகாரத்தில் திமுகவை ஒப்பிடுவதே தவறு.” என பத்மபிரியா தெரிவித்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)