ஜம்மு-காஷ்மீர்: சட்டப்பிரிவு 370 என்பது என்ன? எப்படி அமலுக்கு வந்தது?

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்யும் குடியரசுத் தலைவரின் நடவடிக்கை செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த 370-வது சட்டப்பிரிவு ஜம்மு காஷ்மீருக்கு என்னென்ன சிறப்புரிமைகளை வழங்கியது? அது எப்படி அமலுக்கு வந்தது? இந்திய சுதந்திரத்தின் போது நிலவிய சூழல் என்ன?

சட்டப்பிரிவு 370 எப்படி அமலுக்கு வந்தது?

இந்திய அரசமைப்பின் சட்டப்பிரிவு 370, ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து பெற வழிவகை செய்கிறது.

1947ஆம் ஆண்டு, இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது, ஜம்மு காஷ்மீர் தனிச்சையாக சுதந்திரமாக இருக்க வேண்டும் என அம்மாநிலத்தின் கடைசி மகாராஜாவாக இருந்த ராஜா ஹரி சிங் விரும்பினார். ஆனால் பின்னர் சில நிபந்தனைகளுக்கு பிறகு, இந்தியாவுடன் அம்மாநிலத்தை சேர்க்க ஒப்புக் கொண்டார்.

அந்த நேரத்தில்தான், இந்திய அரசமைப்பு சட்டத்தில், பிரிவு 370 இயற்றப்பட்டு, அதன் கீழ் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது.

அம்மாநிலத்தில் பாதுகாப்பு, வெளியுறவுத்துறை மற்றும் தகவல் தொடர்பு ஆகியவை குறித்து சட்டம் இயற்ற, நாடாளுமன்றத்துக்கு உரிமை உள்ளது. ஆனால், அம்மாநிலத்துக்கென தனி அரசமைப்பு கோரப்பட்டது.

1951ஆம் ஆண்டில், ஜம்மு காஷ்மீருக்கு என தனியே சட்டமன்றம் கூட்ட அனுமதி வழங்கப்பட்டது. நவம்பர் 1956 அன்று அம்மாநிலத்துக்கான அரசமைப்பு எழுதி முடிக்கப்பட்டு, 1957ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று சிறப்பு அந்தஸ்து அமலுக்கு வந்தது.

சட்டப்பிரிவு 370 என்பது என்ன?

இந்திய அரசமைப்பின் 370 சட்டப்பிரிவானது, மத்திய அரசுக்கும், ஜம்மு காஷ்மீருக்குமான உறவின் ஒரு எல்லைக் கோடாக பார்க்கப்படுகிறது. அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அப்போதைய முதல்வராக இருந்த ஷேக் மொஹமத் அப்துல்லாவும், இது தொடர்பாக ஐந்து மாத காலம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே இச்சட்டப்பிரிவு அரசமைப்பில் சேர்க்கப்பட்டது.

சட்டப்பிரிவு 370ன் படி, பாதுகாப்பு, வெளியுறவு விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு விஷயங்களை தவிற, வேறு ஏதேனும் குறித்து சட்டம் இயற்ற வேண்டும் என்றால், மத்திய அரசு அம்மாநிலத்தின் அனுமதியை பெற வேண்டும்.

இந்த சிறப்பு அந்தஸ்தால், அரசமைப்பின் சட்டப்பிரிவு 356, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு பொருந்தாது. இதனால், அம்மாநில அரசை கலைக்கும் அதிகாரம், இந்திய குடியரசுத் தலைவருக்கு கிடையாது.

சட்டப்பிரிவு 370 இருக்கும் காரணத்தினால் -

  • ஜம்மு காஷ்மீர் மாநிலத்து மக்களுக்கு இரட்டை குடியுரிமை உள்ளது.
  • இந்திய தேசிய கொடி அல்லாது, அம்மாநிலத்துக்கு என்று தனி கொடி உள்ளது.
  • ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சட்டசபை காலம் ஆறு ஆண்டுகள் ஆகும்.

அம்மாநிலத்தின் 'நிரந்தர குடியாளர்கள்' யார் என்பதை வரையறுப்பது அரசமைப்பின் பிரிவு 35A. இது சட்டப்பிரிவு 370-ன் ஒரு பகுதியாகும். இதன்படி, இந்தியாவின் மற்ற மாநிலங்களில் வசிப்பவர்கள், ஜம்மு காஷ்மீரில் நிலமோ அல்லது சொத்தோ வாங்க முடியாது.

நாட்டில் பொருளாதார அவசர நிலையை அமல்படுத்த வழிவகை செய்யும் சட்டப்பிரிவு 360-ம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு பொருந்தாது.

அதாவது அம்மாநிலத்தில் பொருளாதார அவசர நிலையை அறிவிக்க குடியரசுத்தலைவருக்கு அதிகாரம் கிடையாது. மற்ற நாடுகளுடன் போர் ஏற்பட்டால் மட்டுமே அங்கு அவசர நிலையை பிரகடனப்படுத்த முடியும்.

அம்மாநிலத்தில் அமைதியற்ற சூழல் மற்றும் வன்முறை நிலவினால்கூட, குடியரசுத்தலைவரால் அவசர நிலை அறிவிக்க முடியாது என்று இதன்மூலம் தெளிவாகிறது. ஜம்மு காஷ்மீர் அரசு பரிந்துரை செய்தால் மட்டுமே அவசர நிலையை பிரகடனப்படுத்த முடியும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்

டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்