விபத்தில் இறந்தவர்களின் உடல் அடையாளம் காணப்படாமலே இருந்தால் என்ன செய்யப்படும்?

ஒடிஷா ரயில் விபத்தில் இறந்தவர்களின் உடல்கள்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்
    • இருந்து, புவனேஸ்வர், ஒடிஷா

ஒடிஷா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது மாநிலத் தலைநகரான புவனேஷ்வரில் இருக்கும் மருத்துவமனைகளுக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டன.

விபத்து குறித்த செய்தி பரவிய உடனேயே, விபத்தில் சிக்கிய பயணிகளின் குடும்பத்தினர் பாலாசோர் மாவட்டத்தை நோக்கி கனத்த இதயத்துடன் படையெடுக்கத் தொடங்கிவிட்டார்கள்.

புவனேஷ்வர் மருத்துவமனைகளில் இதுவரை தங்களுடைய குடும்ப உறுப்பினர்களைத் தேடி காயமடைந்தவர்களில் கண்டுபிடிக்க முடியாமல் போன பிறகு, பிணவறைகளின் முன்பாகப் பலரும் தங்கள் மகன், மகள், தந்தை, தம்பி, தங்கை யாரைப் பற்றியேனும் ஒரு தகவல் கிடைத்துவிடாதா என்றும் காத்திருக்கிறார்கள்.

அதில் பிணவறையின் முன்பாகக் காத்திருப்பவர்களின் எண்ண ஓட்டம் முழுவதும், அந்த இடத்தில் தாங்கள் தேடி வந்தவரின் பெயர் அழைக்கப்பட்டுவிடக்கூடாது என்பதாகவே இருந்தது.

இதற்கிடையே உயிரிழந்தவர்களில் பலரது சடலங்கள் இன்னும் அடையாளம் காணப்படாமலே இருக்கின்றன. அப்படி வைக்கப்பட்டிருக்கும் சடலங்கள் என்ன ஆகும் என்று ஒடிஷா மாநிலத்தின் வளர்த்தித் துறை ஆணையரும் கூடுதல் தலைமை செயலருமான அனு கார்கிடம் பிபிசி தமிழ் கேள்வியெழுப்பியது.

அதற்குப் பதிலளித்த அவர், “அதற்கென அரசாங்க செயல்முறை இருக்கிறது. பெரும்பாலும் உறவினர்கள் உடல்களைப் பெற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறோம். அடையாளம் காணப்படாத உடல்கள் இருந்தால், அவற்றின் மரபணு மாதிரிகளைச் சேகரித்து, உரிய ஆவணங்களைத் தயாரித்த பிறகு, அந்த உடல்களுக்கான இறுதிச் சடங்குகள் உரிய மரியாதையுடன் செய்யப்படும்,” என்று தெரிவித்தார்.

அவரிடம் இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண பலர் வருவதில்லை என்று கூறப்படுவது குறித்துக் கேட்டபோது, “மெல்ல மெல்ல ஆட்கள் வரத் தொடங்கியுள்ளார்கள். பிணவறைகளும் மருத்துவமனைகளும் இங்குதான் இருக்கின்றன என்று தெரியத் தெரிய குடும்பத்தினர் இங்கு சிறிது சிறிதாக வரத் தொடங்கியுள்ளனர்,” என்று தெரிவித்தார்.

இறந்தவர்கள் உடல்களை அடையாளம் காண எடுக்கப்படும் முயற்சிகள் என்ன?

ஒடிஷா ரயில் விபத்தில் இறந்தவர்களின் உடல்கள்

மேலும் அவரிடம் இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண்பதற்கு என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று கேட்டபோது, “88 உடல்கள் ஏற்கெனவே ஒப்படைக்கப்பட்டுவிட்டன. 190 உடல்களை இரவோடு இரவாக புவனேஷ்வருக்கு கொண்டு வந்தோம். விபத்து நடந்த இடத்தில்கூட ஒரு தற்காலிகப் பிணவறையை உருவாக்கியிருந்தோம்.

ஆனாலும் இறந்தவர்களுக்கான மரியாதையைக் கொடுப்பதற்கு, அந்த உடல்களை முறையான பிணவறைகளுக்குக் கொண்டு வந்தோம். குளிரூட்டப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்களில் இரண்டிரண்டு உடல்களாகக் கொண்டு வந்து இங்கிருக்கும் பிணவறைகளில் வைத்திருக்கிறோம்.

குடும்பத்தினர் இந்த உடல்களை அடையாளம் காணும் வகையில், ரயில் நிலையம், விமான நிலையம், பேருந்து நிலையம் அகிய இடங்களில் உதவி மையங்களை நிறுவியுள்ளோம். இலவச உதவி எண்களையும் பகிர்ந்துள்ளோம்," என்று கூறினார்.

அதோடு, “இணையதளம், சமூக ஊடகங்கள், மற்ற மாநிலங்களில் இருக்கும் அதிகாரிகள் ஆகிய வழிகளிலும் விவரங்களைப் பகிர்ந்துள்ளோம். வேறு மாநில அதிகாரிகளும் பாதிக்கப்பட்டவர்களுடன் வரத் தொடங்கியிருக்கிறார்கள்.

குடும்பத்தாருக்குத் தகவல் தருவது மட்டுமல்ல, அவர்களுக்கு பிணவறைக்கோ மருத்துவமனைக்கோ செல்ல வாகனங்களும் தருகிறோம். தேவைப்படுவோருக்குத் தங்கும் வசதிகள் செய்து தருகிறோம். உடல்கள் அடையாளம் காணப்பட்டால், அவற்றைக் கொண்டுசெல்லத் தேவையான வாகன வசதிகளையும் ஏற்பாடு செய்து தருகிறோம்.

அனைத்தும் இலவசமாக, மாநில அரசால் என்னென்ன முடியுமோ அவ்வளவும் செய்கிறோம்,” என்று தெரிவித்தார்.

ஒடிஷா ரயில் விபத்து
படக்குறிப்பு, பிணவறையின் முன்பாக காத்திருக்கும் குடும்பத்தினர்

மேலும் அவரிடம் இந்த விபத்து நிகழ்ந்ததைக் கேள்விப்பட்டபோது எப்படி எதிர்வினையாற்றினீர்கள் என்று கேட்டபோது, விபத்து குறித்துக் கேட்ட உடனேயே மாவட்ட நீதிபதி அங்கு சென்று தமது பணியைத் தொடங்கிவிட்டதாகக் கூறினார் அனு கார்க்.

“ஒடிஷாவின் பேரிடர்க்கால நிவாரணப் படையினரைத் தொடர்புகொண்டு அவர்களைத் திரட்டத் தொடங்கினோம். அவர்களிடம் கேஸ் கட்டர்கள் போன்ற உபகரணங்களும் இத்தகைய சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் அனுபவமும் உண்டு.

அவர்களோடு தேசியப் பேரிடர் மீட்புப் படையினரையும் தீயணைப்புப் படையினரையும் திரட்டி தாமதிக்காமல் விபத்து நடந்த இடத்திற்குப் போகுமாறு கூறினோம். அவர்களில் சிலர் 20 நிமிடங்களில் விபத்து நடந்த இடத்தைச் சென்றடைந்தனர்,” என்று கூறுகிறார்.

ஒடிஷா ரயில் விபத்து

விபத்து நடந்தவுடன் அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?

மேற்கொண்டு பேசியவர், “அதற்குப் பிறகு, விபத்து நடந்த மாவட்டத்தில் இருந்த மருத்துவமனைகள், அருகிலிருந்த மாவட்டங்களில் இருந்த மருத்துவமனைகள், இங்கிருக்கும் மருத்துவக் கல்லூரி அனைத்தையும் தயாராக இருக்கும்படி கூறினோம்.

மூன்றாவதாக, அந்த மாவட்டத்தில் இருந்தும் அருகிலிருக்கும் பகுதிகளில் இருந்தும் 100 ஆம்புலன்ஸ் வாகனங்களை அந்த இடத்திற்கு அனுப்பினோம்.

மேலும், அங்கிருப்பவர்கள் அனைவருக்கும் ஆம்புலன்ஸ் தேவைப்படாது, சிலர் வேறு இடத்திற்குச் செல்ல வேண்டி வரும் என்பதால் பேருந்துகளையும் அனுப்பினோம்,” என்றார்.

விபத்து நடந்த இடம் ஒரு சிறு நகரம். எனவே அங்கு 100 ஆம்புலன்ஸ், 30 பேருந்துகள் ஆகியவற்றை அனுப்பி வைத்த கையோடு, அங்கும் இங்கும் இரண்டு கட்டுப்பாட்டு அறைகளை நிறுவி சூழ்நிலையைக் கண்காணிக்கத் தொடங்கியதாகக் கூறுகிறார் அனு கார்க்.

ஒடிஷா ரயில் விபத்து

“அங்கு செல்வதற்கு இரண்டரை மணிநேரம் ஆகும் என்பதால், சிறப்புப் பேரிடர் மீட்பு ஆணையர், தீயணைப்புப் படையின் இயக்குநர் ஆகியோர் அடங்கிய மூத்த அதிகாரிகள் சிலரைக் கொண்ட ஒரு குழுவையும் முக்கிய முடிவுகளை அங்கிருந்தே எடுப்பதற்காக அனுப்பி வைத்தோம்.

அவர்கள் அங்கிருந்த இளம் மாவட்ட நீதிபதிக்கு உதவியாக இருந்தார்கள். பொதுவாக விரைவாகச் செயல்படுவதன் மூலம் சூழ்நிலைகளைச் சிறப்பாகக் கையாளும் முறையை நாங்கள் பின்பற்றுகிறோம். அதன்மூலம் அதிகாரிகளையும் வாகனங்களையும் அங்கு அனுப்ப முடிந்தது.

பல்வேறு துறைகள் குழுவாகச் செயல்பட்டு இந்தப் பேரிடரைக் கையாண்டோம். மருத்துவத் துறை, உள்துறை, போக்குவரத்துத் துறை, ஒடிஷாவின் பேரிடர்கால நிவாரணப் படையினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், போக்குவரத்துத் துறை, ஒடிஷாவின் பேரிடர்கால நிவாரணப் படையினர், மத்திய அரசு, ரயில்வே துறை என அனைவரும் இணைந்து பணியாற்றினோம்.

விபத்து நடந்த இடத்தில் மக்களும் உதவினார்கள். அவர்கள் ரத்த தானம், உணவு, குடிநீர் போன்றவற்றை வழங்கினார்கள்.

உடனே 1175 மக்களுக்குப் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிலரை மருத்துவக் கல்லூரிகளுக்குச் செல்லும்படி பரிந்துரைத்தோம். பலர் சிகிச்சை முடிந்து திரும்பிவிட்டனர். சிலர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்,” என்று தெரிவித்தார் அனு கார்க்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: