காலநிலை மாற்றத்துக்கு காரணமான பணக்கார நாடுகளை பணம் கொடுக்க வைக்கும் ஒப்பந்தம் கையெழுத்து

COP27

பட மூலாதாரம், Getty Images

காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் ஏழை நாடுகளுக்கு நிதியுதவி வழங்குவது தொடர்பான வரலாற்றுச் சிறப்புமிக்க ‘இழப்பு மற்றும் சேத’ ஒப்பந்தம் COP27 உச்சிமாநாட்டில் கையெழுத்தாகியுள்ளது.

எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக்கில் நடைபெற்றுவரும் காலநிலை உச்சிமாநாட்டில் இரவு முழுவதும் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர், இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தம் காலநிலை மாற்றத்தால் மோசமாக பாதிக்கப்படும் நாடுகளுக்கு நிதியுதவி அளிப்பதை மையமாகக் கொண்டது.

முன்னதாக, இந்த ஒப்பந்தம் தொடர்பாக பணக்கார நாடுகளிடம் அதிருப்தி இருப்பதாக COP27 உச்சி மாநாட்டின் எகிப்து தலைவர் ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால், சூழலைப் புரிந்து கொண்டு செயல்படும்படி அவர்களை அவர் வலியுறுத்தினார்.

உலக சராசரி வெப்பநிலையை தொழிற்புரட்சிக்கு முந்தைய காலத்தின் வெப்பநிலையில் இருந்து 1.5 செல்சியஸிற்கு மிகாமல் கட்டுப்படுத்தும் இலக்கு இந்த மாநாட்டில் உறுதிசெய்யப்படுமா என்பது குறித்து கவலை நிலவுகிறது.

தொழிற்புரட்சிக்கு முந்தைய காலத்தில் இருந்த வெப்பநிலையைவிட 1.5 செல்சியஸிற்கு மேல் வெப்பநிலை உயரும்போது, அது கோடி கணக்கான மக்களை காலநிலை பாதிப்பின் மோசமான நிலைக்குத் தள்ளும் என ஐநா தெரிவித்துள்ளது.

இழப்பு மற்றும் சேதம் என்றால் என்ன?

இந்த ஒப்பந்தம் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் இழப்பு மற்றும் சேதத்தை மையமாகக் கொண்டது. உண்மையில் அதற்கு என்ன அர்த்தம்?

காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு பணக்கார நாடுகள் நிதியுதவி வழங்க வேண்டும் என்பதை இந்த ஒப்பந்தம் வலியுறுத்துகிறது.

காலநிலை மாற்றத்தை ஏற்படுத்துவதில் பணக்கார நாடுகள் முக்கிய பங்கு வகிப்பதால், பல நூற்றாண்டுகளுக்கு தாங்கள் நிதியுதவி வழங்க வேண்டியிருக்கும் என்று அஞ்சி கடந்த 30 ஆண்டுகளாக நிதியுதவி பற்றிய விவாதத்தை பணக்கார நாடுகள் எதிர்த்து வந்தன.

இழப்பு மற்றும் சேதம்

பட மூலாதாரம், Getty Images

ஆனால், சமீபத்திய ஆண்டுகளில் பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் உலகின் பிற பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பு இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதை தீர்மானிக்கும் விஷயமாக மாறியது.

மேலும், எகிப்தில் அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக ஏற்படும் இழப்பு மற்றும் சேதங்களும், இந்த ஒப்பந்தத்தை மாநாட்டின் பேச்சுவார்த்தை நிரலுக்குள் கொண்டுவந்தது.

காலநிலை மாற்றத்தை தடுக்க நீங்கள் என்ன செய்யலாம்?

காலநிலை மாற்றத்தை தடுக்க உலகளாவிய நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தாலும், தனிநபராக நாமும் சில விஷயங்களைக் கடைபிடிக்கலாம். அதில் சிலவற்றைக் காண்போம்.

  • சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத பசுமை ஆற்றல்களுக்கு மாறவேண்டும்.
  • உணவுக்கழிவுகள் மற்றும் சிவப்பு இறைச்சியைக் குறைக்க வேண்டும். உலகளாவிய பசுமை இல்ல வாயுக்களில் 14 சதவிகிதம் கால்நடைகளால் உருவாகின்றன.
  • குறைவாக பயணிக்கும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும். உலகளாவிய கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வின் கால்பகுதிக்கு போக்குவரத்தே காரணம்.
  • எந்தவொரு பொருளையும் வாங்கும் முன் அது ஆற்றல் திறன் மிக்க பொருளா என்று யோசித்து வாங்க வேண்டும்.
காணொளிக் குறிப்பு, மழை நீரைப் பருகுவது உடலுக்கு நல்லதா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: