You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வாச்சாத்தி வன்கொடுமை: 215 பேருக்கு தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் - தீர்ப்பு விவரம்
தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமத்தில் அரசு அதிகாரிகளால் 18 இளம் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயை வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்ட 17 பேர் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கை நீதிபதி வேல்முருகன் விசாரித்து வந்தார்.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும், சுய தொழில் செய்ய உதவி செய்யவேண்டும் என்று அரசுக்கு நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டிருக்கிறார். அவர்கள் இறந்து போயிருந்தால் அவர்களது குடும்பத்துக்கு இந்த உதவிகளைச் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி குறிப்பிட்டிருக்கிறார்.
"பாதிக்கப்பட்டவர்கள் இறந்த விட்டிருந்தால் அவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். இதில் குற்றம் புரிந்தவர்களிடம் ₹5 லட்சம் வசூலிக்க வேண்டும்," என்றும் நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டிருக்கிறார்.
"அப்போதைய எஸ்.பி, மாவட்ட ஆட்சியர், வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்திருக்கிறார்.
குற்றம் சாட்டப்பட்ட 269 பேரில், உயிருடன் இருந்த 215 பேர் குற்றவாளிகள் என்று கடந்த 2011ஆம் ஆண்டு தருமபுரி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது
அதில், 12 பேருக்கு 10 ஆண்டு சிறை, 5 பேருக்கு 7 ஆண்டு சிறை, மற்றவர்களுக்கு 1 முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
'போராடி நீதியை பெற்றுள்ளோம்'
“அரசுத்துறை அதிகாரிகளால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியும், அவர்களது கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகியும் பல இன்னல்களைச் சந்தித்த நாங்கள், 30 ஆண்டுகளாகப் போராடி இந்த நீதியைப் பெற்றுள்ளோம்,” என்று வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.
தீர்ப்பு மிகத் தாமதமாக வந்திருந்தாலும், தங்களின் உண்மையான போராட்டத்திற்கும் தாங்கள் சந்தித்த துயரத்திற்கும் நீதி கிடைத்துள்ளதாக அவர்கள் நினைக்கின்றனர். அதோடு வாச்சாத்தி மக்கள் இந்தத் தீர்ப்பையொட்டி இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் கொடுப்பதாக அரசு அறிவித்துள்ளதையும் இந்தப் பெண்கள் வரவேற்கின்றனர்.
அதேநேரம், இந்த 18 பேர் மட்டுமின்றி 80 பெண்கள் 3 மாதங்களுக்கு மேல் சிறையில் இருந்துள்ளனர். அவர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டுமென்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது.
இந்த வழக்கில், “ஏற்கெனவே பலருக்கும் நிவாரணம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. எனவே காலதாமதமின்றி நிவாரணத்தை வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று பாதிக்கப்பட்ட பெண்கள் முன்வைக்கின்றனர்.
மேலும், “சம்பவம் நடந்தபோது வழக்கை முறையாக விசாரிக்காத முன்னாள் ஆட்சியர், வனத்துறையினர் போன்ற அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளதற்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இறுதியில் உண்மை வென்றுள்ளது. எந்தக் குற்றமும் செய்யாத எங்களுக்கு நீதி கிடைத்துள்ளது,” என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
“புதிய நம்பிக்கை பிறந்துள்ளது”
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் டெல்லி பாபு, “வாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் தீர்ப்பு, இந்தியாவிற்கே ஒரு முன்னுதாரணம். அதிகாரத்தை எப்படி வேண்டுமானாலும் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தலாம் என்ற மனநிலை கொண்ட அதிகாரிகளுக்கு இதுவோர் எச்சரிக்கை,” என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
“இந்தத் தீர்ப்பின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியின மக்கள் புதிய நம்பிக்கையைப் பெற்றுள்ளனர். தங்களுக்கு எதிராக எந்த அநீதி நடந்தாலும், நீதியைப் பெற முடியும் என்ற நம்பிக்கை பழங்குடியின மக்களிடம் துளிர்விட்டுள்ளது.
மிகத் தாமதமாக தீர்ப்பு வந்திருந்தாலும், நாங்கள் எதிர்பார்த்தபடி நீதி கிடைத்திருக்கிறது. ஒருவேளை குற்றவாளிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால், அதையும் சட்டரீதியாக எதிர்கொண்டு வெல்வோம்,” என்றும் டெல்லி பாபு கூறினார்.
வாச்சாத்தி கிராமத்தில் நடந்தது என்ன?
சந்தன மரக்கடத்தல் வீரப்பன் நடமாடி வந்த தருமபுரி மாவட்டத்தில் இருக்கும் வாச்சாத்தி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சந்தன மரங்களை வெட்டி கடத்துவதாக தமிழ்நாடு வனத்துறையினர் புகார் தெரிவித்தனர்.
இத குறித்து விசாரிப்பதற்காக காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்களின் உதவியுடன் 1992ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதியன்று ஒட்டுமொத்த கிராமத்தையும் சுற்றிவளைத்து பலமணி நேர தேடுதல் நடத்தினர்.
இதன் முடிவில், வாச்சாத்தி கிராமத்தைச் சேர்ந்த 133 பேரைக் கைது செய்தனர். அவர்களில் 90 பேர் பெண்கள், 28 பேர் குழந்தைகள், 15 பேர் ஆண்கள்.
அதேநேரம், சந்தனக் கட்டை கடத்தலுக்கும் தங்களுக்கும் எந்த விதத் தொடர்பும் இல்லை என்று தெரிவித்த வாச்சாத்தி கிராமத்தினர், இந்த விசாரணை மற்றும் தேடுதல் நடவடிக்கையின்போது கூட்டுக்குழுவில் இடம்பெற்ற வனத்துறை மற்றும் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் வாச்சாத்தியைச் சேர்ந்த 18 பெண்களை பாலியல் வன்புணர்வு செய்ததாக புகார் தெரிவித்தனர்.
மேலும் கிராம மக்கள் அனைவரும் அடித்துத் துன்புறுத்தப்பட்டதாகவும், அவர்களின் குடிசைகள் தகர்க்கப்பட்டு, வீட்டிலிருந்த பொருட்கள் நாசப்படுத்தப்பட்டதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தினார்கள்.
சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
இந்தப் புகார்களை அன்றைய மாநில அரசு ஆரம்பத்தில் மறுத்தது. இது தொடர்பாக 1992ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி முறையான புகார் பதிவு செய்யப்பட்டது.
இதன் மீதான விசாரணையை தமிழக காவல்துறை முறையாக நடத்தவில்லை என்கிற புகாரைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வுத்துறைக்கு மாற்றப்பட்டது.
சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்கை விசாரித்து, 4 ஐ.எஃப்.எஸ். அதிகாரிகள் உள்பட வனத்துறையினர், காவல்துறை, வருவாய்த் துறையினர் என்று 269 பேர் மீது பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
215 பேர் குற்றவாளிகள் என்று செஷன்ஸ் கோர்ட் தீர்ப்பு
வழக்கு நடந்த 19 ஆண்டுகளில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நபர்களில் 54 பேர் இறந்துவிட்டனர். இந்தப் பின்னணியில், குற்றம் சாட்டப்பட்டிருந்தவர்களில் மீதமுள்ள 215 பேரும் குற்றவாளிகள் என்று தருமபுரி மாவட்ட செஷன்ஸ் நீதிபதி குமரகுரு 2011ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி தீர்ப்பளித்தார்.
அவர்களில் 126 பேர் தமிழக அரசின் வனத்துறை அலுவலர்கள். 84 பேர் தமிழக காவல்துறையினர். மீதமுள்ள ஐந்து பேர் தமிழக வருவாய்த் துறை ஊழியர்கள். அவர்களுக்கு ஓர் ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு
தருமபுரி மாவட்ட செஷன்ஸ் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்குகளை நீதிபதி பி.வேல்முருகன் விசாரித்து வந்தார். மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கோபிநாத், ஜான் சத்தியன், ரமேஷ் உள்பட பலர் ஆஜராகி வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார். மேலும்,சம்பவம் நடந்த வாச்சாத்தி மலை கிராமத்தில் நேரிடையாகவும் சென்று ஆய்வு செய்தார். இந்த நிலையில் இந்த வழக்கில் நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளித்துள்ளார்.
நீதி கிடைக்காமலே இறந்துபோன கொடுமை
கிருஷ்ணகிரியில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் 1996இல் வாச்சாத்தி வழக்கில் விசாரணை தொடங்கியது. ஆனால் இந்த வழக்கில் 269 அதிகாரிகள், கிராம மக்களில் 100-க்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் விசாரிக்கப்படவேண்டும் என்பதால், நீதிமன்ற நடைமுறைகளின்படி, ஒவ்வொருவரின் பெயர்களும் வாசிக்கப்பட்டு, அவர்கள் வந்துள்ளதை உறுதிப்படுத்தவே பாதி நாள் முடிந்துவிடும் என்பதால், ஆரம்ப கட்ட விசாரணையில் ஆறு ஆண்டுகள் உருண்டோடின.
வழக்கில் விரைவில் நீதி வேண்டுமென்று மலைவாழ் சங்கத்தினர் கோரியதால், 2002ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது.
நூற்றுக்கணக்கானவர்கள் ஆஜராக வேண்டும் என்பதால், கிருஷ்ணகிரி சிறப்பு நீதிமன்றம் விரிவாக்கம் செய்யப்பட்டது என்று 2002இல் செய்தித்தாள்களில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு நீதிமன்றத்தின் விசாரணைக்குப் பலமுறை அதிகாரிகள் ஆஜராகவில்லை என்று நீதிபதிகள் கடிந்துகொண்டதாகச் சொல்கிறார் எழுத்தாளர் மற்றும் வழக்கறிஞர் பாலமுருகன்.
அதிகாரிகள் தரப்பினர் சொல்வது என்ன?
வாச்சாத்தி வன்முறை வழக்கில் தொடர்புடைய 54 அதிகாரிகள் இறந்துவிட்டனர் என்றாலும், மீதமுள்ள அதிகாரிகள் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பை எதிர்பார்த்துள்ளனர். பலமுறை தொடர்பு கொண்டபோதும், வழக்கில் தொடர்புள்ள அதிகாரிகள் பலரும் பேச முன்வரவில்லை.
சென்னை உயர்நீதிமன்றத்தில் 43 அதிகாரிகளின் சார்பாக ஆஜராகும் வழக்கறிஞர் காந்திகுமாரை சந்தித்தோம். 1992இல் ஜூனியர் வழக்கறிஞராகத் தனது பயணத்தைத் தொடங்கியவர் காந்திகுமார். தற்போது சீனியர் வழக்கறிஞராக வளர்ந்துள்ளார். அன்றிலிருந்து வழக்கு குறித்த எல்லா ஆவணங்களையும் தனிப் பெட்டியில் அடுக்கி வைத்திருக்கிறார்.
உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கில் அதிகாரிகள் விடுதலை பெறுவார்கள் என்று நம்புவதாகக் கூறும் காந்திகுமார், தவறும் பட்சத்தில், உச்சநீதிமன்றத்திற்குச் செல்லவும் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
சந்தன மரக்கடத்தலில் ஈடுபட்ட ஆண்களைக் கைது செய்வதற்காக, அவர்களைத் தேடியபோது, பலர் மலைப்பகுதிக்குச் சென்று ஒளிந்துகொண்டதால் தான், பெண்களை அதிகாரிகள் கைது செய்தனர் என்கிறார் காந்திகுமார்.
''இன்றளவும் காவல்துறையில் இதுபோன்ற நடைமுறையைத்தான் கடைபிடிக்கிறார்கள். குறைந்தபட்சம் தங்களது மனைவி, குழந்தைகளைப் பார்க்க வரும் நேரத்தில் ஆண்களைக் கைது செய்யலாம் என்று அதிகாரிகள் நினைத்தார்கள்.
அதுதான் அவர்கள் செய்தது, மற்றபடி அவர்கள் தங்களது கடமையைச் செய்தார்கள், அதற்கு எப்படி தண்டனை தரமுடியும்?''என்று கேள்வி எழுப்புகிறார் காந்திகுமார்.
வாச்சாத்தி கிராமத்தில் என்ன மாற்றம்?
வன்கொடுமை நடந்த நேரத்தில் இடிக்கப்பட்ட சில வீடுகள் அப்படியே இருக்கின்றன. சிதிலமடைந்த அந்த வீடுகளைச் சீரமைக்கத் தேவையான நிதி இல்லாமல், பாதிக்கப்பட்டவர்கள் அந்த வீடுகளை அப்படியே விட்டுச் சென்றுவிட்டனர்.
ஒரு சிலர், அந்த வீடுகள் மீண்டும் மீளாத்துயரை ஒவ்வொரு நாளும் நினைவுபடுத்தும் என்பதால், அவற்றைப் புனரமைக்கவில்லை என்கிறார்கள்.
வாச்சாத்தி வழக்கு காரணமாக, பலமுறை பல நீதிமன்றங்களுக்குச் சென்ற காரணத்தால், வாச்சாத்தி கிராமத்துப் பெண்கள் பலருக்கும் நீதிமன்ற நடைமுறைகள் தெரிந்திருக்கிறது.
பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் வசதியுள்ள பள்ளிக்கூடம் அமைந்துள்ளதால் 30ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது போல குழந்தைகள் மத்தியில் இடைநிற்றல் இல்லை என்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.
முப்பது ஆண்டுகளுக்கு முன் அங்கிருந்த பெரும்பாலான ஓலைக் குடிசைகள் ஓட்டு வீடுகளாக மாறியுள்ளன. நீண்ட தெருக்களில் வரிசையாகக் காரை வீடுகள் நிற்கின்றன.
இளைஞர்கள் நீண்ட தூரத்தில் உள்ள கல்லூரிகளுக்குச் செல்கின்றனர். படித்து முடித்த சில இளைஞர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாடு காவல்துறையில் சேர்ந்துள்ளனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)