அரை கிலோ எடையில் 5வது மாதத்திலேயே பிறந்த குழந்தை உயிர் பிழைத்தது எப்படி?

பெண்கள், ஆரோக்கியம், குழந்தை

பட மூலாதாரம், RACHEL STONEHOUSE

எங்கள் குழந்தை உயிர் பிழைப்பதற்கு 10சதவீதத்திற்கும் குறைவான வாய்ப்புகள்தான் இருக்கிறது என மருத்துவர்கள் கூறினர். ஆனால் எங்களது மகள் அவர்களின் கணிப்பை பொய்யாக்கிவிட்டள் என்று கூறுகின்றனர் ரேச்சல், கோரே தம்பதியினர்.

கடந்தாண்டு செப்டெம்பர் 6ஆம் தேதி, வேல்ஸ் நாட்டின் பிரிட்ஜெண்ட் (Bridgend) பகுதியில், ஒரு மாலை பொழுதில் சுவான்சீஸ் சிங்கிள்டன்(Swansea's Singleton) மருத்துவமனையில் வெறும் 515 கிராம் எடையில் இமோகின் என்னும் பெண் குழந்தை பிறந்தாள்.

தன் தாயின் வயிற்றிலிருந்து ஐந்தாவது மாதத்திலேயே இமோகின் பிரசவித்ததுதான் அத்தனை குறைந்த எடைக்கு காரணம். பிரசவ காலத்திற்கு முன்னதாக வெகு சீக்கிரமே அவள் பிறந்துவிட்டதால், அவள் உயிர் பிழைப்பதற்கு வாய்ப்பு குறைவு என மருத்துவர்கள் கூறியிருந்தார்கள்.

”ஆனால் அப்படி எந்த அசம்பாவிதமும் நிகழவில்லை, அவள் தற்போது நலமுடன் வளர்ந்து வருகிறாள்” என்கின்றனர் அந்த சின்னஞ்சிறு குழந்தையின் பெற்றோர்.

கிட்டத்தட்ட 132 நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த பிறகு, தற்போது தங்களது குழந்தையுடன் வீடு திரும்பியிருக்கின்றனர் ரேச்சல் மற்றும் கோரே தம்பதியினர்.

இமோகினின் தாய் ரேச்சல் இதுகுறித்து கூறும்போது, “எங்களது மொத்த வாழ்நாளில் நாங்கள் இதுவரை அனுபவித்த துயரங்களை விட அதிகமான துயரத்தை, எங்களது குழந்தை பிறந்தவுடன் மொத்தமாக அனுபவித்து விட்டாள்” என்று தெரிவிக்கிறார்.

இதற்கு முன்னர் வரை, கர்டிஸ் சை கெய்த் என்னும் அமெரிக்காவைச் சேர்ந்த குழந்தைதான் மிகவும் குறைந்த நாட்களில் பிறந்த குறைமாத சிசுவாக(Premature baby) அறியப்பட்டது. அந்த குழந்தை 21வாரங்களில் பிறந்தது. அதாவது இமோகினை விட 11நாட்கள் முன்னதாக அந்த குழந்தை பிறந்திருந்தது.

மேற்கத்திய நாடுகளில் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தெரியப்படுத்துவதற்காக ’Gender reveal Party’ என்ற நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். ரேச்சலும் தன்னுடைய கர்ப்ப காலத்தில் இப்படியொரு நிகழ்ச்சியை நடத்தினார்.

ஆனால் இந்த நிகழ்ச்சி நடந்து முடிந்த அடுத்த நாள் ரேச்சலுக்கு வலி ஏற்பட்டது. அவரது பனிக்குட நீர் உடைந்தது. எனவே அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் ரேச்சலின் கணவர் கோரே.

பெண்கள், ஆரோக்கியம், குழந்தை

பட மூலாதாரம், RACHEL STONEHOUSE

தனக்கு ஐந்தாவது மாதத்திலேயே வலி ஏற்பட்டு, பனிக்குடம் உடைந்தது மிகுந்த பதற்றத்தையும், பயத்தையும் ஏற்படுத்தியதாக கூறுகிறார் ரேச்சல்.

”அந்த வலி மிக கொடுமையாக இருந்தது. என்னால் அந்த வலியை தாங்க முடியவில்லை. ஆனால் எனக்காகவும், எனது குழந்தைக்காகவும் நான் உயிர் பிழைக்க வேண்டும். எனவே அந்த கொடுமையான வலியிலும் மூச்சு விடுவதற்கு முயற்சி செய்து வந்தேன்” என்கிறார் ரேச்சல்.

மருத்துவமனைக்குள் நுழைந்த அடுத்த சில நிமிடங்களிலேயே இமோகின் பிறந்துவிட்டாள். அவளை உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த இன்குபேட்டருக்குள் மருத்துவர்கள் வைத்தனர்.

மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளை வைப்பதற்காகவே பிரத்யேகமாக இருக்கும் தீவிர சிகிச்சைப் பிரிவிற்குள் (NICU) இருந்த, தன்னுடைய சின்னஞ்சிறு குழந்தையை முதன்முறையாக பார்த்தபோதும், அவளது அந்த இளகுவான பிஞ்சு உடலை தொட்டபோதும் ஏற்பட்ட உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்கிறார் ரேச்சல்.

பெண்கள், ஆரோக்கியம், குழந்தை

பட மூலாதாரம், RACHEL STONEHOUSE

”இந்த குழந்தை இப்போது என்னுடைய வயிற்றுக்குள் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவள் எனக்கு முன்னால் படுத்திருக்கிறாள். எனது கர்ப்பத்தில் இருந்த கரு இப்போது எனது கைகளில் சிசுவாக இருக்கிறது. இப்போது என்னை சுற்றியுள்ளவர்கள் மீதும், கடவுளின் மீதும் நம்பிக்கை கொள்ள வேண்டும்” என்று இமோகினை முதன்முறையாக பார்த்தபோது தன்னுடைய மனதிற்குள் நினைத்துகொண்டதாக குறிப்பிடுகிறார் ரேச்சல்.

இமோகினின் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பதாக ரேச்சல் மற்றும் கோரேவிடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அது அவர்களிடம் மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

“தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த முதல் 98 நாட்கள், இமோகின் கடுமையான போராட்டத்தில் இருந்தாள். அவளது உடல்நிலை சற்று மோசமாக இருந்தது. எண்ணற்ற தடைகளை அவள் கடக்க வேண்டியிருந்தது. அவளது இதய துடிப்பு சீராக இல்லை. அதேபோல் அவளுக்கு நரம்பியல் பிரச்னையும், உடம்பில் சில புண்களும் இருந்தன.

ஒவ்வொரு நாளும் சிகிச்சைக்காக அவளது உடலில் பலமுறை ஊசியை செலுத்த வேண்டியிருந்தது. அது அவளுக்கு பெரும் அசௌகரியத்தை உண்டாக்கியிருக்கும். ஆனால் இது அனைத்தும் அவளது உடல்நலத்தை மேம்படுத்துவதற்காகத்தான் என்று நினைத்து என் மனதை தேற்றி கொள்வேன்” என்று வேதனையுடன் தெரிவிக்கிறார் ரேச்சல்.

பெண்கள், ஆரோக்கியம், குழந்தை

பட மூலாதாரம், RACHEL STONEHOUSE

செவிலியர்களின் உதவியோடு இமோகினுக்கு தாய்ப்பால் அளித்திருக்கிறார் ரேச்சல். கிட்டத்தட்ட 16 வாரங்கள் வரை இமோகினுக்கு அவர் தாய்ப்பால் அளித்திருக்கிறார்.

ரேச்சல் மற்றும் கோரே தம்பதியினரை மனதளவில் சோர்வடையாமல் வைத்துகொள்வதற்கும், முடிந்தளவு அவர்களை இமோகின் பக்கத்திலேயே இருக்க செய்வதற்கும், 13 வாரங்கள் வரை இந்த தம்பதியினரை மருத்துவமனையிலேயே வைத்து பார்த்துகொண்டது மருத்துவமனை நிர்வாகம்.

98 நாட்களுக்கு பிறகு ஜனவரி 15ஆம் தேதி, பிரின்ஸஸ் ஆஃப் வேல்ஸ் என்ற மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாள் இமோகின். அங்குதான் அவள் அடுத்த 34 நாட்களை கழித்தாள்.

”என் வாழ்க்கையிலேயே இதுதான் மிகவும் அச்சமான நாட்களாக இருந்தன. ஆனால் மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் எங்களுக்கு மிகவும் துணையாக இருந்து உதவி செய்தனர். ஒரு தாயாக எனது உணர்வுகள் எப்படி இருக்கும் என்பதை அவர்கள் நன்கு அறிந்து செயல்பட்டனர்” என்கிறார் ரேச்சல்.

இப்போது இமோகின் வீட்டிற்கு வந்துவிட்டாள். ஆனால் அவளுக்கு இன்னமும் செயற்கை சுவாசக் கருவி பொருத்த வேண்டிய நிலை இருக்கிறது. அதேசமயம் அவளது உடல் உறுப்புகள் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இமோகினின் பார்வை மற்றும் செவித்திறனும் நன்றாக இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

”இன்று வரைக்கும் எனக்கு ஏன் குறைமாதத்தில் பிரசவம் ஏற்பட்டது என்பது குறித்து சரியான காரணம் தெரியவில்லை. ஆனால் இதேபோல் மீண்டும் குறைமாத பிரசவம் ஏற்படுவதற்கு 40சதவீதம் வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்” என்று கவலையுடன் கூறுகிறார் ரேச்சல்.

ஆனால் இந்த நிமிடம் வரை தன்னுடைய சின்னஞ்சிறு குழந்தையுடன் மிகவும் மகிழ்ச்சியாக நேரத்தை செலவழித்து வருகிறார் ரேச்சல். அதற்காக மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் தான் எப்போதும் நன்றிக் கடன்பட்டிருப்பதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார் .

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: