தலைநகரம் 2 விமர்சனம்: 17 ஆண்டுகளுக்குப் பிறகு வந்துள்ள 'ரைட்' - தலை தூக்கினாரா?

நடிகர்கள் சுந்தர்.சி, பாலக் லால்வாணி, தம்பி ராமையா மற்றும் பலரது நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படமான ‘தலைநகரம் 2’ இன்று வெளியாகியுள்ளது. இந்தத் திரைப்படத்தை இயக்குநர் வி.இசட்.துரை இயக்கியுள்ளார்.

கடந்த 2006ஆம் ஆண்டு இயக்குநர் சுந்தர்.சி முதன்முதலில் நடிகராக அறிமுகமான திரைப்படம் ’தலைநகரம்’.

அன்றைய காலத்தில் மக்களிடையே பெரும் வரவேற்பையும், வசூலையும் பெற்ற இந்தப் படத்தின் இரண்டாம் பாகமாக தற்போது ‘தலைநகரம்-2’ உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

‘தலைநகரம் 2’ - கதைக் கரு என்ன?

தலைநகரம் முதல் பாகத்தில், சென்னையில் மிகப்பெரும் ரவுடியாக வலம் வரும் ‘ரைட்’ எனும் கதாபாத்திரத்தில் சுந்தர்.சி நடித்திருப்பார். தனது நண்பன் போஸ் வெங்கட்டின் மரணத்திற்குப் பிறகு, மனம் திருந்தி சுயமாகத் தொழில் செய்பவராக அவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

தற்போது வெளியாகியிருக்கும் தலைநகரம் இரண்டாம் பாகத்தில், தம்பி ராமையாவுடன் இணைந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்பவராக சுந்தர்.சி வருகிறார். அதேநேரம் சென்னையில் அதிகாரத்தைக் கைப்பற்றுவது குறித்து மூன்று பெரிய ரவுடிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது.

இந்த ரவுடிகளுக்கிடையில் நிலவும் போட்டி, சுந்தர்.சியின் வாழ்க்கையையும் பாதிக்க, அவர் மீண்டும் ரவுடி அவதாரம் எடுக்கிறார். இப்போது இந்த 4 ரவுடிகளுக்கும் இடையில் பிரச்னை எப்படி சூடு பிடிக்கிறது, இவர்களில் யார் தலைநகரத்தின் அதிகாரத்தைக் கைப்பற்றுகிறார் என்பதே கதை.

தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது என்ற செய்தி வெளியானவுடன், அந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. இந்த நிலையில், மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், தலைநகரம் பாகம் 2 இருக்கிறதா, இல்லையா என்பதை ஊடக விமர்சனங்களின் மூலம் பார்க்கலாம்.

சண்டைக் காட்சிகளும் வன்முறைகளும்

'தலைநகரம் 2' முழுக்க முழுக்க சண்டைக் காட்சிகளாலும், வன்முறைகளாலும் நிரம்பி வழிகிறது’ என டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சித்துள்ளது.

“இத்தகைய சண்டை காட்சிகளும், வன்முறை காட்சிகளும் இந்தப் படத்தின் கதைக்குத் தேவைதான் என்றாலும், பாஷா, ஜான் விக் போன்ற திரைப்படங்களின் ’மேஷ் அப்’ போல இந்தப் படம் இருக்கிறது. அதேபோல் மனதில் நிற்பது போன்ற காட்சிகள் எதுவும் இப்படத்தில் இடம்பெறவில்லை" என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா தனது விமர்சனத்தில் குறிப்பிடுகிறது.

“படம் தொடங்கியதுமே மூன்று ரவுடிகளையும் அறிமுகம் செய்கிறார்கள். இந்த அறிமுகமே அரைமணி நேரம் செல்கிறது. ஒவ்வொரு ரவுடிக்கும் ஒரு ஃப்ளாஷ்பேக், அதற்குள் மற்றொரு ஃப்ளாஷ்பேக் எனக் காட்சிகள் செல்கின்றன,” என இந்து தமிழ் விமர்சித்துள்ளது.

அதேபோல் ஓய்வுபெற்ற ரவுடியாக இருக்கும் சுந்தர்.சிக்கு அதிகமான பில்டப் கொடுக்கப்படுவதாகவும், அவருடைய சில சண்டைக் காட்சிகள் ஜான் விக் திரைப்படங்களை நினைவூட்டும் வகையில் அமைந்திருப்பதாகவும் இந்து தமிழ் தனது விமர்சனத்தில் குறிப்பிடுகிறது.

நடிகராக ஈர்க்கிறாரா சுந்தர்.சி

"படத்தின் முன்னணி கதாபாத்திரங்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்” என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறியுள்ளது.

“நடிகை பாலக் லால்வாணி திரையில் அழகாகத் தெரிகிறார். இப்படத்தில் அவர் நடிப்பதற்கான காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன, அதில் அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்,” என்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா குறிப்பிட்டுள்ளது.

"சுந்தர்.சி வழக்கம்போல தனக்கு எது வருமோ அதைச் சிறப்பாக செய்திருக்கிறார்,” என்று இந்து தமிழ் விமர்சித்துள்ளது.

அதேபோல், "தம்பி ராமையாவும், அவரது மகளாக வரும் ஆயிராவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால் பாலக் லால்வானி, 'பாகுபலி' பிரபாகர், ஜெய்ஸ் ஜோஸ், விஷால் ராஜன், சேரன் ராஜ் ஆகியோரின் நடிப்பைப் பற்றி குறிப்பிட்டுச் சொல்ல ஏதுமில்லை” என்றும் இந்து தமிழ் கூறியுள்ளது.

இசையும் தொழில்நுட்ப குழுவும்

தலைநகரம் 2 படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

ஆனால் அவருடைய இசை இந்தப் படத்திற்கு எந்த வகையிலும் உதவவில்லை என்று இந்து தமிழ் கூறியுள்ளது.

இதே கருத்தை முன்வைத்துள்ள டைம்ஸ் ஆஃப் இந்தியா, “திரைப்படத்தில் வரும் காட்சிகளின் தரத்தை உயர்த்துவதற்கு தொழில்நுட்பக் குழுவினர் உழைத்திருக்கின்றனர். ஆனால் இந்தப் படத்திற்கு ஜிப்ரானின் இசை பெரிதாக உதவவில்லை,” என்று குறிப்பிட்டுள்ளது.

இயக்கம், திரைக்கதை எப்படி?

தலைநகரம் 2 படத்தின் இயக்கமும், திரைக்கதையும் பல தடுமாற்றங்களைச் சந்தித்திருப்பதாக ஊடக விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.

"ஆக்‌ஷன் படத்துடைய திரைக்கதையின் பலமே வலுவான வில்லன்தான். ஆனால், இங்கே ஒன்றுக்கு மூன்று வில்லன்கள் இருந்தும் திரைக்கதை திக்கு தெரியாமல் திண்டாடுகிறது. வில்லன்களுக்கும் நாயகனுக்கும் இடையே உருவாகும் பிரச்னைகளை எளிமையாகச் சொல்லாமல் வளவள என்ற குழப்பியடித்திருக்கிறார் இயக்குநர்” என்று இந்து தமிழ் விமர்சித்துள்ளது.

அதேபோல் "பிரபல நடிகையான நாயகிக்கு (பாலக் லால்வானி) நாயகன் மீது காதல் வரும் காட்சியெல்லாம் படு அபத்தம். அதிலும் க்ளைமாக்ஸில் மூன்றாம் பாகத்துக்கான குறிப்போடு படத்தை முடித்திருப்பதெல்லாம் அசாத்திய துணிச்சல்” என்று கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது இந்து தமிழ்.

"படத்தின் இடைவேளைக்குப் பிறகு கதை சற்று சுவாரஸ்யமாக சென்றபோதும், அதை தக்க வைத்துக்கொள்ள இயக்குநர் முயலவில்லை. பார்வையாளர்களுக்கு மீண்டும் அயற்சியை ஏற்படுத்துகிறார்.

அதேபோல் சுந்தர்.சி-க்கும், பாலக் லால்வாணிக்கும் இடையிலான காதல் காட்சிகள், படத்தின் வேகத்தை மேலும் தொய்வடையச் செய்கிறது” என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சித்துள்ளது.

"முகவரி, தொட்டி ஜெயா உள்ளிட்ட படங்களை இயக்கிய வி.இசட். துரை, முழுக்க முழுக்க ஆக்‌ஷன் பாணியில் ஒரு படத்தை எடுக்க விரும்பியுள்ளார். ஆனால், ரத்தம் கொப்பளிக்கும் வன்முறைக் காட்சிகளில் காட்டிய நுணுக்கங்களைக் கொஞ்சம் திரைக்கதையிலும் காட்டியிருந்தால் ‘தலைநகரம் 2’ தப்பியிருக்கும்,” என்று இந்து தமிழ் குறிப்பிட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: