'திருடப்பட்ட புனிதக் கல்லில்' முடிசூட்டிக் கொள்கிறதா பிரிட்டன் அரச குடும்பம்? - சர்ச்சைக்குரிய கல்லின் வரலாறு

பட மூலாதாரம், Historic Environment Scotland
- எழுதியவர், லிஸ்ஸி என்ஃபீல்ட்
- பதவி, பிபிசி டிராவல்
2023 மே 6 ஆம் தேதி, மூன்றாம் சார்ல்ஸ் புனித ஸ்டோன் ஆஃப் ஸ்கோனில் முடி சூட்டப்படவுள்ளார். இந்த ஸ்டோன் ஆஃப் ஸ்கோன் என்பது, பாரம்பரியத்துக்கும் சர்ச்சைக்கும் பெயர் போன, பண்டைய ஸ்காட்லாந்து இறையாண்மையின் சின்னமாகக் கருதப்படுகிறது.
வெஸ்ட்மின்ஸ்டர் அபே என்பது உலகின் மிகப் பிரபலமான கட்டடங்களுள் ஒன்று. லண்டனின் மிக முக்கிய சுற்றுலாத் தலமும் ஆகும். 1040-ல் எட்வர்ட் த கன்ஃபெஸ்ஸரால் கட்டப்பட்ட இது, 1066 முதல் அரச பரம்பரையின் முடிசூட்டுத் தளமாக இருந்து வருகிறது. மறைந்த ராணி எலிசபெத் II இன் இறுதிச் சடங்கைப் பார்த்த எவரும் அதன் நேர்த்தியான வெளிப்புறம், அற்புதமான வால்ட் கூரைகளைக் கண்டிருப்பார்கள். இதைப் பார்வையிடவரும் பயணிகளும், ஜெஃப்ரி ஷாசர், தாமஸ் ஹார்டி, ருட்யார்ட் கிப்லிங், ஷேக்ஸ்பியர் மற்றும் ப்ரான்டே சகோதரிகள் உள்ளிட்ட புகழ்பெற்ற கலைஞர்கள், எழுத்தாளர்களின் கல்லறைகள் மற்றும் நினைவுச்சின்னங்கள் வழியாகவே நடந்து சென்றிருப்பார்கள்.
இந்த ஆண்டு, பிரிட்டனின் புதிய அரசர் மூன்றாம் சார்ல்ஸின் முடிசூட்டுவிழாவை எதிர்நோக்கியிருப்பவர்கள் அதிக கவனம் செலுத்துவது அந்த முடிசூட்டு இருக்கையின் மீது தான். 1308 முதல் ஆங்கிலேய அரசர்கள் இதில் அமர்ந்து தான் முடி சூட்டிக்கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது.
"செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் கண்ணாடிக்குப் பின்னால், அபேயின் கிரேட் வெஸ்ட் கதவுகளுக்கு அருகில், ரிச்சர்ட் II இன் உருவப்படத்திற்கு அருகில் நீங்கள் அதைக் காணலாம்" என்று லண்டன் மற்றும் அபே-க்கான ப்ளூ பேட்ஜ் சுற்றுலா வழிகாட்டியான சூ கிங் கூறினார்.
"நீங்கள் பார்ப்பது ஒரு பழைய பழுப்பு நிற மர நாற்காலி, ஆனால் அதில் அரசர்கள், இலைகள் மற்றும் பறவைகளின் உருவங்களால் வரையப்பட்டது, பொன்னிறமானது மற்றும் விலையுயர்ந்த கற்களால் பொருத்தப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. இது இங்கிலாந்தில் இன்னும் பயன்பாட்டில் உள்ள பழமையான தளபாடங்கள் ஆகும்."
அத்தனை பழைமையானது என்றாலும் முடிசூட்டு விழாவின் ஓர் அங்கமாகத் தான் இது இருக்கிறது. இந்த இருக்கைக்கு அடியில், ஒரு மர மேடை உள்ளது. 1296 ஆம் ஆண்டில் ஸ்காட்லாந்தில் இருந்து கொண்டு வரப்பட்ட, மர்மமான மூலம் கொண்ட கொண்ட புனிதப் பாறையான முடிசூட்டுக் கல்லை வைப்பதற்காக, இந்த மேடை கிங் எட்வர்ட் I என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இப்போது இதன் மேல், வெஸ்ட்மின்ஸ்டர் பள்ளியின் குறும்புக்கார பள்ளி மாணவர்கள் தங்கள் முதலெழுத்துகளைச் செதுக்கியிருப்பதைக் காணலாம்.
அந்த மேடை தற்போது காலியாக உள்ளது - ஆனால் மே 6 ஆம் தேதி முடிசூட்டு விழாவிற்கு முன், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தின் மன்னராக மூன்றாம் சார்லஸ் முடிசூட்டப்படும் போது, எடின்பர்க் கோட்டையிலிருந்து (ஸ்காட்லாந்தின் அரச குடும்ப நகைகளுடன் வைக்கப்பட்டிருக்கிறது) இது, அபேக்கு கொண்டு வரப்படும்.
இந்த முடிசூட்டுக்கல் - ஸ்டோன் ஆஃப் ஸ்கோன் அல்லது ஸ்டோன் ஆஃப் டெஸ்டினி என்றும் அழைக்கப்படுகிறது. இது ஸ்காட்லாந்து நாட்டின் இறையாண்மையின் பண்டைய சின்னமாகும், இது அயர்லாந்து மற்றும் ஸ்பெயினுடனும் தொடர்புகளைக் கொண்டுள்ளதாகவும் ஆங்கிலேயர்களால் திருடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. விவிலியக் கதைகளிலும் இதற்கான குறிப்புகள் காணப்படுகின்றன.
இருப்பினும், இது ஒரு நீண்ட சர்ச்சைக்குரிய வரலாற்றைக் கொண்டிருந்தாலும், அது உண்மையில் ஒரு சாதாரணமான பாறை போல் தான் தெரிகிறது: இளஞ்சிவப்பு நிற மணற்கல்லின் ஒரு செவ்வக அடுக்கு சுமார் 152 கிலோ எடையுள்ள ஒரு சிறிய சூட்கேஸின் அளவு. அதன் ஒரே அலங்காரம் சுமாராக வெட்டப்பட்ட ஒரு சிலுவை. ஒவ்வொரு முனையிலும், இரும்பு வளையங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவை எப்போது இணைக்கப்பட்டன என்பதோ கல்லை நகர்த்துவதை எளிதாக்குவதற்காகவா அல்லது சங்கிலியால் பிணைப்பதற்காகவா என்பது பற்றி யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை. கல்லைச் சுற்றியுள்ள பல மர்மங்களில் இதுவும் ஒன்று.
இஸ்ரேலியர்களின் தந்தை என்று கருதப்படும் ஜேகப் என்ற விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆளுமை, பெத்தேலில், சொர்க்கத்துக்கு இட்டுச் செல்லும் ஏணியைக் கனவில் கண்டபோது பயன்படுத்தப்பட்ட தலையணை தான் இந்தக் கல் என்ற பழங்கதையும் வழக்கில் உள்ளது. இங்கிருந்து, ஜேக்கப்பின் மகன்களில் ஒருவர் அதை எகிப்துக்கு எடுத்துச் சென்றதாகவும் அங்கிருந்து அது ஸ்பெயினுக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது. மேலும், ஸ்பெயின் மன்னரின் மகன் சைமன் ப்ரெக், கி மு 700-ல் அயர்லாந்து தீவின் மீது ஆக்கிரமிப்பு செய்த போது இக்கல் அயர்லாந்துக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
மியாத் கவுன்டியில் உள்ள ஸ்க்ரைனுக்கு அருகில் உள்ள புனித தாரா மலையில் இது வைக்கப்பட்டது. அரசராக உரிமை கோரும் நபர் உண்மையில் அரச வம்சத்தவராக இருந்தால் இக்கல் உரத்த குரலெழுப்பும் என்றும் பொய்யராக இருந்தால் அமைதியாக இருக்கும் என்றும் நம்பப்பட்டது. இதனால், லியா ஃபெய்ல் அல்லது பேசும் கல் என்று இது அழைக்கப்பட்டது.
"பண்டைய ஐரிஷ் வரலாற்றில் பல லியா ஃபெயில் கற்களின் குறிப்புகள் உள்ளன" என்று அல்ஸ்டர் ஸ்காட்ஸ் வரலாற்றாசிரியரும், பத்திரிகையாளரும் மற்றும் ஒளிபரப்பாளருமான டாக்டர் டேவிட் ஹியூம் கூறினார். "கி.பி 496 இல், ஐரிஷ் கடலில் பரவி மேற்கு ஸ்காட்லாந்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய டால்ரியாடா அரசை ஆண்ட அரசர் ஃபெர்கஸ் மோர் மேக் ஏர்க் என்பவரின் வசம் இது போன்ர ஒரு கல் இருந்தது."
ஃபெர்கஸ் பொது ஆண்டு 498-ல் ஆர்கில்லில் உள்ள டன்னாட்டுக்குத் தனது அரசை மாற்றிய போது, அயர்லாந்திலிருந்து லியா ஃபெய்ல் கல்லை ஸ்காட்லாந்திற்கு எடுத்துச் சென்றதாகவும் ஒரு கதை உண்டு. இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.
பொது ஆண்டு 1320-ல் ஸ்காட்டிஷ் சுதந்திரத்தை அங்கீகரிப்பதற்காக போப்பிற்கு ஸ்காட்டிஷ் பிரபுக்கள் கையொப்பமிட்ட ஆர்ப்ரோத் ஸ்காட்டிஷ் பிரகடனத்தில் அதற்கான முக்கிய ஆதாரம் உள்ளது. இதில், இஸ்ரேலில் இருந்து மத்தியதரைக் கடல் வழியாக வந்த ஒரு "கௌரவம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மை எதுவாக இருந்தாலும், ஸ்காட்லாந்து மற்றும் பிக்டிஷ் ராஜ்ஜியங்களை ஒன்றிணைத்து, ஸ்காட்லாந்தின் முதல் மன்னராக அறியப்பட்ட கென்னத் I, பொது ஆண்டு 840-ல் மேற்கு ஸ்காட்லாந்திலிருந்து ஸ்கோனுக்கு தனது தலைநகரை மாற்றிய பிறகு, இக்கல், பெர்த்ஷயரில் உள்ள ஸ்கோன் அபே-க்கு கொண்டு செல்லப்பட்டது என்று அறிகிறோம். இந்த "விதியின் கல்" பல நூற்றாண்டுகளாக ஸ்காட்டிஷ் மன்னர்களின் முடிசூட்டு விழாக்களில் பயன்படுத்தப்பட்டது.
ஆனால் 1296 இல் டன்பார் போரில் அவர் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இங்கிலாந்தின் மன்னர் முதலாம் எட்வர்ட் வடக்கே அணிவகுத்துச் சென்று, ஸ்கோன் அபேயிலிந்து கல்லைக் கைப்பற்றி, ஆங்கிலேயர்களும் பிற்காலப் பிரித்தானிய மன்னர்களும் முடிசூட்டிக்கொண்ட, பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட மர முடிசூட்டு நாற்காலியின் கீழ் பொருத்தினார்.
இந்த வரலாறும் சர்ச்சைக்குரியதாகவே உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
ஸ்கோன் அரண்மனையில் உள்ள துறவிகள் உண்மையில் அசல் கல்லை டே நதியில் மறைத்து, ஆங்கிலேய துருப்புக்களை ஏமாற்றி அவர்களைப் போலி கல்லை எடுத்துச் செல்லச் செய்ததாகவும் ஒரு வதந்தி உள்ளது. மேலும், புவியியலாளர்கள் எட்வர்ட் I ஆல் கைப்பற்றப்பட்ட கல் விவிலிய யூதேயாவில் அல்லாமல் ஸ்கோனின் அருகாமையில் இருந்து தான் வெட்டப்பட்டது என்பதை நிரூபித்துள்ளனர்.
அயர்லாந்தின் அரசர்களுக்கு முடிசூட்டுவதற்கு மிகவும் பழமையான கல் பயன்படுத்தப்பட்டிருக்கலாம், இது முதலில் தாராவிலிருந்து ஆன்ட்ரிமிற்கும் பின்னர் ஸ்காட்லாந்திற்கும் மன்னர் ஃபெர்கஸால் கொண்டு வரப்பட்டிருக்கலாம், ஆனால் சிறிது காலத்திற்குப் பிறகு அந்தக் கல்லில் இடத்தில் தற்போதைய கல் கொண்டு வரப்பட்டிருக்கலாம்.
இருப்பினும், மறைக்கப்பட்ட கல்லை யாரும் கண்டுபிடிக்கவில்லை, ஸ்காட்லாந்து இன்று ஐக்கிய ராஜ்ஜியத்தின் (யூ கே) ஒரு பகுதியாக இல்லாவிட்டாலும், எட்வர்ட் எடுத்து வந்த கல் குறியீடாக ஸ்காட்லாந்தின் மீது வருங்கால ஆங்கில மன்னர்களின் ஆதிக்கத்தைக் காட்டியது. இதன் காரணமாக, முடியாட்சியின் அடையாளமாக ஆக்கப்பட்ட இக்கல், பல ஆண்டுகளாக, அரசியல் ஆர்வலர்களின் இலக்காக மாறியுள்ளது.
1914 ஆம் ஆண்டில், பெண்கள் வாக்குரிமை ஆதரவாளர்கள், இந்த நாற்காலியின் கீழ் ஒரு குண்டு வெடிப்பை நடத்தினர். இரண்டாம் உலகப் போரின் போது, ஜெர்மன் குண்டுவெடிப்பு பற்றிய அச்சத்தால் இக்கல், வெஸ்ட்மின்ஸ்டர் அபேயின் கீழ் ரகசியமாகப் புதைக்கப்பட்டு, போர் முடிவடையும் வரை முடிசூட்டு நாற்காலி குளோசெஸ்டர் கதீட்ரலுக்கு மாற்றப்பட்டது.
1950 கிறிஸ்துமஸ் விழாவிற்கு முந்திய மாலை, ஸ்காட்டிஷ் தேசியவாத மாணவர்களின் குழு ஒன்று அபேயில் நுழைந்து, அந்தக் கல்லை அகற்றினர்; அப்போது அது உடைந்துவிட்டது (அநேகமாக, குண்டு வெடிப்பில் சேதமடைந்திருக்கலாம்). அதைச் சீர் செய்யும் வரை அதை மறைத்து வைத்தனர். நான்கு மாதங்களுக்குப் பிறகு, இது பாழடைந்த அர்ப்ரோத் அபேயில் உள்ள உயரமான பலிபீடத்தில் வைக்கப்பட்டது – இந்தக் கட்டடம் ஸ்காட்டிஷ் சுதந்திரத்துடன் நீண்ட காலமாகத் தொடர்புடையது.

பட மூலாதாரம், Getty Images
கல், வெஸ்ட்மின்ஸ்டருக்கு திருப்பி அனுப்பப்பட்டாலும், மாணவர்கள் மீது குற்றம் சாட்டப்படவில்லை. ஸ்காட்டிஷ் சுதந்திரத்திற்கான குரல்களும் தொடர்ந்து அதிகரித்து வந்தன. 1996 ஆம் ஆண்டில், அப்போதைய பிரிட்டிஷ் பிரதம மந்திரி ஜான் மேஜர், இந்தக் குரல்களை ஒடுக்க முனைந்தார். அடுத்தடுத்த முடிசூட்டு விழாக்களில் பயன்படுத்த வெஸ்ட்மின்ஸ்டருக்கு மீண்டும் கொண்டு வரப்படும் என்ற நிபந்தனையின் பேரில் கல் ஸ்காட்லாந்திற்குத் திருப்பித் தரப்படும் என்று அவர் அறிவித்தார்.
இதற்கு அனுமதி வழங்குவது என்பது பாதி கிணறு தாண்டுவது போல தான். கல்லை அகற்றுவதே கடினமான பணியாக இருந்தது.
"1996 இல் ஸ்காட்லாந்திற்கு இக்கல் திருப்பி அனுப்பப்பட்டபோது, நாற்காலியில் இருந்து அதை அகற்றும் செயல்முறையின் போது இரண்டுக்கும் சேதம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளப்பட்டது” என்று ஸ்காட்லாந்தின் வரலாற்றுச் சூழல் சேகரிப்புகள் மற்றும் பயன்பாட்டுப் பாதுகாப்புத் தலைவர் கேத்தி ரிச்மண்ட் விளக்கினார். முடிசூட்டு நாற்காலியில் இருந்து கல்லை அகற்றும் நுட்பமான பணி அதிக நேரத்தையும் கவனத்தையும் எடுத்துக்கொண்டது. சேகரிப்பு மற்றும் பாதுகாப்பு நிபுணர்கள் அதிகாலையிலிருந்தே பணியில் ஈடுபட வேண்டியிருந்தது.
இந்த ஆண்டு, சார்ல்ஸ் மன்னருக்கு முடிசூட்டுவதற்காக லண்டனுக்கு கல் கொண்டு வரப்படும் போது இதே நடைமுறை மீண்டும் பின்பற்றப்படும். முடிசூட்டு நாற்காலியின் கீழ் கல் போடப்பட்டவுடன், இரண்டும் சேர்த்து, மேற்கு கதவு வழியாக முடிசூட்டு அரங்கிற்கு மாற்றப்படும். இது வெஸ்ட்மின்ஸ்டர் அபேயின் நடுவில் அபே கட்டப்பட்டுள்ள சிலுவையின் கோடுகளின் மையத்தில் உள்ளது. வரலாற்று ரீதியாக இந்தப் பகுதி பிரகாசமான சுவர் ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இன்று அதன் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் காஸ்மதி நடைபாதை என்று அழைக்கப்படும் ஒரு எடுப்பான இடைக்கால மொசைக் தளமாகும்.
"இங்கே அரசருக்கு கேன்டர்பரி பேராயர் முடிசூட்டுவார்." என்றார் மன்னர். "விழாவின் இந்த தனிப்பட்ட பகுதிக்காக, நாற்காலியின் மீது, நான்கு மாவீரர்களால் ஒரு விதானம் வைக்கப்பட்டுள்ளது. அப்போதைய அரசருக்குப் புனித வாளும் (அதை அவர் திருப்பிக் கொடுத்துவிடுவார்.) பின்னர் அவர் முன் இறையாண்மை செங்கோலும் தங்க உருண்டையும் ஒப்படைக்கப்படும். இறுதியாக எட்வர்டின் கிரீடம் சூட்டப்படும்."

பட மூலாதாரம், Getty Images
முடிசூட்டு அலங்காரத்தின் இந்தப் பொருட்கள் தான் லண்டன் டவரில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள கிரவுன் ஜூவல்ஸ் சேகரத்தின் முக்கிய அம்சம். ஆனால் தற்போது இக்கோபுரத்துக்கு வரும் பார்வையாளர்கள் இவை அனைத்தையும் கண்டு களிக்க இயலாது. மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு ஏற்றவாறு கிரீடம் மறுஅளவாக்கம் செய்யப்படும்; மேலும் பல பொருட்கள் அரச குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் அணிவதற்காக இங்கிருந்து எடுக்கப்படும்.
விதியின் கல் அகற்றப்படும்போது எடின்பர்க் கோட்டையைப் போலவே மே 6 ஆம் தேதி வரையிலான நாட்களில் அபே-வும் பொதுமக்களுக்கு மூடப்படும். கல்லின் வரலாறு மற்றும் முக்கியத்துவத்தை மனதில் கொண்டு, அது எப்போது, எப்படி கொண்டு செல்லப்படும் என்பதற்கான சரியான விவரங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும்.
ஆனால் இந்தப் பழங்காலக் கட்டடங்கள் மற்றும் கலைப்பொருட்கள் இங்கிலாந்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை காந்தம் போன்று கவரும் நிலையில், முடிசூட்டு விழா அவர்களின் வரலாற்றை நினைவூட்டுவதாக இருக்கும் – இந்த வரலாறு பிரிட்டிஷ் ஐல்ஸ் மற்றும் இஸ்ரேலியர்களின் முன்னோர்களைப் பிணைப்பதாகவும் இருக்கும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












