You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கருப்பையை இடம்மாற்றி கருத்தரிக்க வைக்கும் புதிய நுட்பம் - புற்றுநோய் நோயாளிகளுக்கு வரமாக அமையுமா?
- எழுதியவர், ப்ரூனா அல்வெஸ்
- பதவி, பிபிசி
இனப்பெருக்க உறுப்புகளை நேரடியாகத் தாக்காதவரை புற்றுநோய் என்பது குழந்தையின்மையை ஏற்படுத்தக் கூடிய நோயல்ல. ஆனால், கதிர்வீச்சு சிகிச்சை கருமுட்டைகளை இறக்கச் செய்யலாம் அல்லது இனப்பெருக்க உறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தி மலட்டுத்தன்மைக்கு வழிவகுக்கலாம்.
இதைக் கருத்தில் கொண்டு, பிரேசிலின் பரானாவில் உள்ள ரோபோடிக் அறுவை சிகிச்சை நிறுவன ஆராய்ச்சியாளரும் புற்றுநோயியல் அறுவை சிகிச்சை நிபுணருமான ரெய்டன் ரிபேரோ ஒரு புதிய நுட்பத்தை கண்டுபிடித்தார். சோதனைக் கட்டத்தில் உள்ள இந்த நுட்பம் கருப்பை இடமாற்றம் என பரவலாக அறியப்படுகிறது.
ஆராய்ச்சி நெறிமுறைக்களுக்கு உட்பட்டு செய்யப்படும் இந்த சிகிச்சையில் கருப்பை, ஃபலோபியன் குழாய்கள் ஆகிய இனப்பெருக்க உறுப்புகள் அடிவயிற்றின் மேல் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்படுகின்றன. சிகிச்சைக்குப் பிறகு அவை மீண்டும் பழைய இடத்திற்கு கொண்டுவரப்படும்.
இந்த சிகிச்சை மூலம் பயனடைந்தவர்களில் 33 வயதான ஒப்பனை கலைஞர் கேம் டாஸ் சாண்டோஸும் ஒருவர்.
இவருக்கு கொழுப்பு திசுக்களில் உருவாகும் அரிய வகை கட்டியான லிபோசர்கோமா இடுப்பில் இருப்பது 2018ஆம் ஆண்டு ஜூனில் தெரியவந்தது. இதையடுத்து, அவர் கதிர்வீச்சு சிகிச்சை எடுக்க வேண்டியிருந்தது.
இந்த சிகிச்சையில் அவரது கருப்பை கதிர்வீச்சால் பாதித்து, எதிர்காலத்தில் குழந்தை பிறக்காமலும் போகலாம்.
``எனக்கு ஆண் நண்பரோ குழந்தையோ கிடையாது. ஆனால், 30 வயதிற்குப் பிறகு இல்லற வாழ்க்கையைத் தொடங்க திட்டமிட்டிருந்தேன். அதனால் இந்தச் செய்தி மிகுந்த கவலை அளித்தது. இது விஷயத்தில் முடிவெடுக்க கதிரியக்க சிகிச்சை மருத்துவர் எனக்கு அவகாசம் கொடுத்தார்`` என நினைவுகூர்கிறார் கேம் டாஸ் சாண்டோஸ்.
அந்தச் சமயத்தில் கருப்பை மாற்றும் நுட்பத்தைப் பற்றி அவருக்குத் தெரியவந்தது.
``இது இன்னும் சோதனைக் கட்டத்தில் இருப்பதாகவும், இதுவரை எந்தப் பெண்களும் இதற்குப் பிறகு கருத்தரிக்கவில்லை என்பதால் எந்த உறுதியும் அளிக்க முடியாது என மருத்துவர் வெளிப்படையாக சொன்னார். ஆனால், என் மனது சொல்வதைக் கேட்டு நான் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன்`` என்கிறார் கேம் டாஸ் சாண்டோஸ்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகான முதல் 15 நாட்கள் அதிக வலி இருந்ததாகவும், அதன் பிறகு எந்தப் பிரச்னையும் இல்லை என்கிறார் கேம் டாஸ் சாண்டோஸ். மூன்று மாதங்களுக்குப் பின்னர், அவரது உறுப்புகள் மீண்டும் பழைய இடத்திற்கு கொண்டுவரப்பட்டன.
``தற்போது அது குறித்து நான் யோசித்துப் பார்க்கிறேன். அது என் வாழ்க்கையில் நான் எடுத்த சிறந்த முடிவு. ஏனெனில், நான் தற்போது தாயாகியுள்ளேன். தைரியமும் நம்பிக்கையும் எனக்கு முக்கியமானவையாக இருந்தன. நாம் இது குறித்து பேச வேண்டும், ஏனெனில் இது பல பெண்களின் கனவாக உள்ளது`` என்கிறார் கேம் டாஸ் சாண்டோஸ்.
கருப்பை வாய் புற்றுநோய்
2020ஆம் ஆண்டு 33 வயதான ஏஞ்சலிகா ஹோடெக்கர் அசம்புஜாவிற்கு கருப்பை வாய் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.
புற்றுநோய் இருப்பதோடு தன்னுடைய தாய்மை கனவை அடைய முடியாது என்ற செய்தியை கிரகித்துக்கொள்வது தனக்கு கடினமாக இருந்ததாக ஏஞ்சலிகா கூறுகிறார்.
``நான் மனமுடைந்துவிட்டேன், ஏனெனில் ஒரு பெண் தாய்மை அடைய விரும்பாமல் கூட இருக்கலாம். ஆனால், உன்னால் இனி குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது, உனக்கு அந்த வாய்ப்பே இல்லை என்று மற்றவர்கள் சொல்லும் போது அது உங்களை மிகவும் பாதிக்கும்`` என்கிறார் ஏஞ்சலிகா.
பின்னர், அவரது கருப்பை வாயின் ஒரு பகுதியை அகற்ற அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுக்கப்பட்டது.
ஆனால், ஏஞ்சலிகாவிற்கு அதில் திருப்தியில்லை. மாற்று தீர்வை தேடிய போது கருப்பை இடமாற்றம் குறித்து அவருக்குத் தெரியவந்தது.
'`முதலில் நான் இது குறித்து மிகவும் பயந்தேன். ஏனெனில் இது புதுமையான ஆய்வு, இது பயனளிக்குமா என்பதும் எனக்குத் தெரியாது`` என்கிறார் ஏஞ்சலிகா.
எனினும், கருப்பை இடமாற்ற சிகிச்சையை அவர் எடுத்துக்கொண்டார். அதன் பின்னர், 15 நாட்களுக்குப் பிறகு அவருக்கு கீமோதெரபி மற்றும் ரேடியோ தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது.
``கீமோ மற்றும் ரேடியோ தெரபி சிகிச்சை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உறுப்பு மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்டது. அந்த அறுவை சிகிச்சை சிறப்பாக நடந்தது. நான் சீராக குணடைந்தேன்`` என்கிறார் ஏஞ்சலிகா.
2021 அக்டோபரில் நோயிலிருந்து முற்றிலும் குணமடைந்த அவர், தற்போது குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என முடிவெடுத்தார். ஆச்சர்யமளிக்கும் விதமாக அதே ஆண்டில் ஏஞ்சலிகா கர்ப்பம் தரித்தார்.
``கருப்பை இடமாற்றம் எனக்கு இருந்த சிறந்த வாய்ப்பு மற்றும் நானும் என் கணவரும் எடுத்த சிறந்த முடிவு`` என்கிறார் ஏஞ்சலிகா.
கருப்பை இடமாற்றம் எப்படி செய்யப்படுகிறது?
இது ரோபோடிக் தொழில்நுட்பத்துடன் செய்யப்படும் சிறிய அறுவை சிகிச்சை. இந்த சிகிச்சையில் கருப்பை, ஃபலோபியன் குழாய்கள் இருக்கும் இடத்திலிருந்து அகற்றப்பட்டு, தற்காலிகமாக வயிற்றின் மேல் பகுதியில் வைக்கப்படும்.
நேரடியாக கருப்பையில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டாலும் கதிரியக்க சிகிச்சையின் பக்க விளைவுகள் கருமுட்டையை பாதிக்கலாம். இது மலட்டுத்தன்மை மற்றும் முன்கூட்டியே மாதவிடாய் நிற்றலை ஏற்படுத்தலாம்.
``இந்த சிகிச்சை குறைந்த ஆபத்துகள் கொண்டது, சிகிச்சைக்குப் பிறகு ஓரிரு நாளில் நோயாளிகள் வீடு திரும்பிவிடலாம்`` என்கிறார் இந்தச் சிகிச்சையைக் கண்டறிந்த பிரேசிலிய அறுவை சிகிச்சை நிபுணர் ரிபேரோ.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு வலி மற்றும் சில அசௌகரியம் இருக்கலாம். ஆனால், கருப்பை இடம்மாறி இருந்தாலும் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் இருக்காது என்றும் அவர் கூறுகிறார்.
இடம்மாறி இருந்தாலும் கருப்பை தன்னுடைய வழக்கமான பணியை தொடர்ந்து செய்யும்.
குடல், மலக்குடல், சிறுநீர்ப்பை, புணர்புழை, பிறப்புறுப்பு ஆகிய உறுப்புகளில் உள்ள வீரியம் மிக்க கட்டிகளுக்கு சிகிச்சை அளிக்க கதிர்வீச்சு சிகிச்சை தேவைப்படும். எனவே மேற்கண்ட உறுப்புகளில் பிரச்னை உள்ள நோயாளிகளுக்கு இடமாற்ற சிகிச்சை தேவைப்படும்.
அதே நேரம் உறுப்பு இடமாற்ற சிகிச்சையில் முரண்பாடுகளும் உள்ளன.
``கருப்பை மற்றும் ஃபலோபியன் குழாய்கள் நோயினால் பாதிக்கப்படாமல் இருப்பது அவசியம். கருப்பை முழுமையான செயல்திறனுடன் இல்லாத பட்சத்தில் அதை இடமாற்றம் செய்வது சாத்தியமற்றது. அதேபோல, ஏற்கனவே இடுப்பில் கதிரியக்க சிகிச்சை செய்திருந்தாலும் இந்த அறுவை சிகிச்சையைச் செய்வது சாத்தியமற்றது`` என்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இஸ்ரேலிய மருத்துவமனையின் மகளிர் மருத்துவ ரோபோடிக் அறுவை சிகிச்சை திட்ட ஒருங்கிணைப்பாளர் ரெனாடோ மோரேட்டி மார்க்ஸ்.
கருப்பை இடமாற்றம் சோதனை முயற்சியே
சில அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டிருந்தாலும் கருப்பை இடமாற்றம் என்பது சோதனை முயற்சியாகவே உள்ளது.
இந்த நுட்பம் 2016ஆம் ஆண்டு ஒரு சர்வதேச மகளிர் மருத்துவ புற்றுநோயியல் மாநாட்டில் முன்மொழியப்பட்டது. இது தொடர்பான ஆய்வு இதழில் வெளியிடும் கட்டத்தில் உள்ளது.
முதல் அறுவை சிகிச்சை 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரேசிலில் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜெர்மனி, ரஷ்யா, அர்ஜெண்டினா, கொலம்பியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இந்த முறை பின்பற்றப்பட்டது.
பல நோயாளிகள் இந்த சிகிச்சையை எடுத்துக்கொண்டுள்ளனர். பிரேசிலில் மட்டும் 20 பேர் இந்த சிகிச்சை செய்துள்ளனர்.
எனினும், நோயாளியின் உறுப்புகளுக்கு கிடைக்கும் ஊட்டச்சத்தை தடுக்கக் கூடிய வகையில் தமனியில் உறைவு ஏற்பட்டு, அதன் மூலம் கருப்பை பலவீனமடைந்த சில நிகழ்வுகளும் நடந்துள்ளன.
இந்த ஆய்வு நோயாளிகளிடம் நேரடியாக செய்யக் கூடிய மூன்றாம் கட்ட சோதனையில் உள்ளது.
"அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளை நீண்ட காலத்திற்கு மதிப்பீடு செய்ய வேண்டிய வகையில் தற்போது நாங்கள் 3ஆம் கட்ட ஆய்வுகளில் இருக்கிறோம். ஏனெனில் இன்னும் கர்ப்பம் தரிக்க முயற்சிக்காத இளம் நோயாளிகள் உள்ளனர்" என்கிறார் ரிபேரோ.
புற்றுநோயியல் சிகிச்சையின் நோக்கம் நோயாளியை குணப்படுத்துவது மட்டுமல்ல, சிகிச்சைக்கு முன்பு இருந்த அதே வாழ்க்கைத் தரத்தை உறுதிப்படுத்துவதும் என்கிறார் ரிபேரோ. இதுதான் இடமாற்று அறுவை சிகிச்சை நோக்கி அவரைத் தள்ளிய முக்கிய உந்து சக்தி.
"பத்து வருடத்திற்கு முன்பு, புற்று நோயை எப்படியாவது குணப்படுத்திட வேண்டும் என்று முயற்சி செய்தோம். ஆனால், இன்றைக்கு ஒரு புற்றுநோயாளியை குணப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அவர்கள் சாதாரண வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசைப்படுறோம்`` என்கிறார் ரிபேரோ.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்