You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சுனிதா வில்லியம்ஸ் பயணித்த டிராகன் விண்கலம் திடீரென 7 நிமிடங்கள் பூமியுடன் தொடர்பை இழந்தது ஏன்?
- எழுதியவர், சிராஜ்
- பதவி, பிபிசி தமிழ்
மார்ச் 19, 2025 (இந்திய நேரப்படி அதிகாலையில்) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர், நிக் ஹேக், ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ், ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலத்தில் பூமிக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் பத்திரமாகத் தரையிறங்கும் தருணத்தை உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது, அதிகாலை 3.15 மணிக்கு, அந்த விண்கலத்துடனான பூமியின் தொடர்பு முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டது.
அப்போது விண்கலம், பூமியிலிருந்து 70 முதல் 40 கி.மீ உயரத்திலும், மணிக்கு சுமார் 27,000 கி.மீ வேகத்திலும் பயணித்துக் கொண்டிருந்தது. விண்கலத்தைச் சுற்றி 1927 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது.
ஆறு முதல் 7 நிமிடங்களுக்கு டிராகன் விண்கலத்தில் என்ன நடக்கிறது, அது எங்கு இருக்கிறது என்று நாசாவின் கட்டுப்பாட்டு அறையில் இருந்த எவருக்கும் தெரியவில்லை. 3.20 மணிக்கு, நாசாவின் WB57 எனும் கண்காணிப்பு விமானத்தின் கேமராக்கள் பூமியை நோக்கி வந்து கொண்டிருந்த டிராகன் விண்கலத்தைப் படம் பிடித்தன.
அதன் பிறகே, நாசா கட்டுப்பாடு அறையில் இருந்தவர்களால் நிம்மதிப் பெருமூச்சு விடமுடிந்தது. அடுத்த சில நிமிடங்களில் டிராகன் விண்கலத்துடனான தொடர்பு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.
பூமியை நோக்கி வரும் ஒவ்வொரு விண்கலமும், வளிமண்டல மறுநுழைவு எனும் ஆபத்தான செயல்முறையின் ஒரு பகுதியாக, சில நிமிடங்களுக்குக் கட்டுப்பாடு அறையுடனான தொடர்பை இழக்கின்றன.
இந்த சில நிமிடங்கள் 'Blackout time' என அழைக்கப்படுகிறது. இதுவொரு பொதுவான நடைமுறைதான் என்றாலும், முக்கிய விண்வெளி விபத்துகள் இந்தச் சில நிமிடங்களில்தான் நடந்துள்ளன.
அதற்குக் காரணம், அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் விண்கலத்தில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால், கட்டுப்பாட்டு மையத்தில் இருக்கும் நிபுணர்கள் குழுவால் விண்வெளி வீரர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்க முடியாது. அதேபோல விண்வெளி வீரர்களும் பூமியில் இருக்கும் குழுவுக்கு அவசரத் தகவல்களை அனுப்ப முடியாது.
ஒரு துயர உதாரணம், 2003இல் இந்திய வம்சாவளி வீரர் கல்பனா சாவ்லா உள்ளிட்ட நாசாவின் குழுவினர் 7 பேர் பயணித்த கொலம்பியா விண்கலம், பிளாக்அவுட் டைம் எனப்படும் இந்தச் சில நிமிடங்களில்தான் விபத்தைச் சந்தித்தது. அந்த விண்கலத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்தனர்.
- பத்திரமாக பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் - கடைசி நிமிடத்தில் நடந்தது என்ன?
- சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் தங்கியிருந்த 9 மாதங்களில் என்ன செய்தார்?
- சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்பியதும் ஸ்டிரெச்சரில் அழைத்துச் செல்லப்பட்டது ஏன்?
- பூமிக்கு வரும் விண்கலத்தின் வேகம் 39,000 கிலோமீட்டரில் இருந்து சில நிமிடங்களில் 800 கி.மீ.யாக குறைவது எப்படி?
'ரேடியோ பிளாக்அவுட்' ஏன் ஏற்படுகிறது?
ஒரு விண்கலம் பூமிக்குத் திரும்பும்போது, இந்த பிளாக்அவுட் டைம் அல்லது ரேடியோ பிளாக்அவுட் என்ற நிகழ்வை எதிர்கொள்வது ஏன் என்பது குறித்து மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் விளக்கினார்.
"ஒரு விண்கலம் தனது வளிமண்டல மறுநுழைவின்போது, அதீத வேகம் மற்றும் காற்றின் மூலக்கூறுகளுடனான உராய்வு விசை காரணமாக 1900 முதல் 2000 டிகிரி செல்சியஸ் என்ற அதீத வெப்பநிலையை எதிர்கொள்ளும். 1000 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை என்றாலே, விண்கலத்தைச் சுற்றி ஒரு பிளாஸ்மா ஷீத் (Plasma sheath) உருவாகிவிடும்.
உதாரணத்திற்கு வானத்தில் தோன்றும் மின்னலில் இந்த பிளாஸ்மா இருக்கும். இந்த பிளாஸ்மா ஷீத் காரணமாகவே, பூமிக்கும் விண்கலத்துக்குமான ரேடியோ தொடர்பு துண்டிக்கப்படுகிறது," என்கிறார் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்.
இந்த பிளாஸ்மா, விண்கலத்தைச் சுற்றி ஒரு கவசம் போல சூழ்ந்து கொள்ளும் என்று விவரித்த அவர், "நமது தொலைத்தொடர்பு அமைப்புகள் மின்காந்த அலைகளைச் சார்ந்துள்ளன. இந்த பிளாஸ்மா ஷீத் காரணமாக எந்த மின்காந்த அலையும் பயணிக்க முடியாது. அதாவது விண்கலத்தில் இருந்து பூமிக்கோ அல்லது பூமியிலிருந்து விண்கலத்திற்கோ, தொடர்பு முற்றிலுமாகத் துண்டிக்கப்படுவது இதனால்தான்" என்று கூறினார்.
இந்தச் செயல்முறையே, விண்கலம் பூமியை நோக்கி வரும்போது ஒரு நெருப்புப் பந்து போலத் தோன்றக் காரணம் என்று நாசா கூறுகிறது.
பிளாக்அவுட் டைம் எனப்படும் இந்தச் சில நிமிடங்களில் விண்கலத்திற்குள் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடியாது என்று கூறிய முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன், "கண்காணிப்பு அமைப்புகளின் தொலைநோக்கிகளில் பார்த்தால் வெள்ளை அல்லது நீல நிறத்தில் ஒரு பந்து போன்ற அமைப்பு வருவதை மட்டுமே பார்க்க முடியும்" என்றார்.
விண்கலத்தின் முதல் தொகுதி பாராசூட்கள் விரிக்கப்படும் வரை இந்த பிளாஸ்மா ஷீத் இருக்கும் என்றும், அதன் பிறகு கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பு மீண்டும் புதுப்பிக்கப்படும் என்றும் அவர் கூறுகிறார்.
"விண்வெளிப் பயண வரலாற்றில், வளிமண்டல மறுநுழைவின்போது ஏற்பட்ட விபத்துகள் இந்தச் சில நிமிடங்களில்தான் நிகழ்ந்துள்ளன" என்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன்.
'பிளாக்அவுட் டைம்' விபத்துகள்
பிப்ரவரி 1, 2003 அன்று, கொலம்பியா விண்கலம் 16 நாட்கள் விண்வெளிப் பணிகளை முடித்துவிட்டு பூமிக்குத் திரும்பியது. ஐந்து ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் என ஏழு பேர் கொண்ட நாசாவின் குழுவினர் அதில் பயணித்தனர்.
ஆனால், 16 நாட்களுக்கு முன்பே அவர்களது முடிவு நிர்ணயிக்கப்பட்டுவிட்டது என்று அவர்களுக்கு அப்போது தெரியவில்லை.
கொலம்பியா விண்கலம் 2003, ஜனவரி 16ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டபோதே, அதன் வெளிப்புற எரிபொருள் கலனில் இருந்து ஒரு ஃபோம் பகுதி (Foam Insulation) பிரிந்து, விண்கலத்தின் இடது இறக்கையின் மீது விழுந்தது. இதனால் வெப்பத்தைத் தாங்கும் சில டைல்களில் (Tiles) சேதம் ஏற்பட்டது.
"கொலம்பியா போன்ற மறுபயன்பாட்டு விண்கலங்களில், டைல்ஸ் வடிவில்தான் வெப்பக் கவசங்களுக்கான அமைப்புகள் இருந்தன. அதாவது நமது வீட்டின் சுவற்றில் பதிக்கும் டைல்களை போல, அதீத வெப்பத்தைத் தாங்கக்கூடிய பிரத்யேக டைல்களை விண்கலத்தின் மீது பதிப்பார்கள்.
அதுவே ரஷ்யாவின் சோயுஸ் போன்ற ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் விண்கலங்களில் ஒரு முழு வெப்பக் கவச அமைப்பு இருக்கும். கொலம்பியா விண்கலத்தின் டைல் வெப்பக் கவச அமைப்பில் ஏற்பட்ட சேதமே விபத்திற்குக் காரணம்" என்கிறார் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்.
கொலம்பியா விண்கலம், 2003 பிப்ரவரி 1ஆம் தேதி பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்தவுடன், அதைச் சுற்றி உருவான பிளாஸ்மா ஷீத் மற்றும் அதீத வெப்பம், கல்பனா சாவ்லா உள்ளிட்ட ஏழு விண்வெளி வீரர்களின் உயிரைப் பறித்தது.
கொலம்பியா விண்கலத்தின் இடது இறக்கையில் ஏற்பட்ட துளை மூலமாக, வளிமண்டலத்தின் அதீத வெப்ப வாயுக்கள் உள்ளே நுழைந்தன. இதனால் விண்கலம் நிலைகுலைந்து, உடைந்து சிதறியது என்று நாசா கூறுகிறது.
அதிலும், 'ரேடியோ பிளாக்அவுட்' தொடங்கி 41 நொடிகளுக்கு உள்ளாகவே, விண்கலம் தங்களது கட்டுப்பாட்டில் இல்லை என்பதை உணர்ந்த கல்பனா சாவ்லா உள்ளிட்ட ஏழு பேர், அவசரக்கால நடவடிக்கைகளை எடுத்தனர் என்றும், ஆனால் அவர்களால் மீண்டும் விண்கலத்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியவில்லை என்றும் நாசாவின் அறிக்கை கூறுகிறது.
'ரேடியோ பிளாக்அவுட்டை' குறைக்க நாசா எடுக்கும் முயற்சிகள்
அதேபோல மற்றோர் உதாரணம், 1971இல் மூன்று விண்வெளி வீரர்களுடன் பூமிக்குத் திரும்பிக் கொண்டிருந்த ரஷ்யாவின் சோயுஸ் 11 விண்கலம். அது 'வளிமண்டல மறுநுழைவின்' போது, சில நிமிடங்களுக்கு பூமியுடனான தொடர்பை இழந்தது. பிறகு பாராசூட்கள் விரிக்கப்பட்டு, அது வெற்றிகரமாகத் தரையிறங்கியது.
ஆனால், மீட்புக் குழுவினர் சோயுஸ் விண்கலத்தின் கதவுகளைத் திறந்தபோது, உள்ளே இருந்த 3 வீரர்களும் உயிரிழந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
விண்கல கேபினின் காற்று அழுத்தம் குறைந்ததால் 3 ரஷ்ய விண்வெளி வீரர்கள் உயிரிழந்தனர் என்று பின்னர் தெரிவிக்கப்பட்டது. 'ரேடியோ பிளாக்அவுட்' காரணமாகக் கட்டுப்பாட்டு மையத்தின் எந்த வழிகாட்டுதல்களையும் அவர்களால் பெற முடியவில்லை.
உறுதியான மற்றும் நவீன வெப்பக் கவசங்கள் மூலம் பிளாஸ்மா ஷீத்தின் விளைவுகளைக் குறைக்க நாசா முயன்று வருகிறது. ஒரு விண்கலத்தின் வேகத்தைப் பொறுத்தே இந்த 'ரேடியோ பிளாக்அவுட்டின்' நேரம் கூடும். அதேநேரம் அதிக வேகம், அதிக வெப்பத்திற்கு வழிவகுக்கும்.
அதன் அர்த்தம், அதிக வேகம் > அதிக வெப்பம் > அதிக 'பிளாக்அவுட் டைம்'. எனவே அதற்கு ஏற்றார் போல விண்கலங்களின் வெப்பக் கவசங்கள் வடிவமைக்கப்பட வேண்டும்.
உதாரணத்திற்கு, நாசாவின் ஓரியன் விண்கலம் 'வளிமண்டல மறுநுழைவு' வெப்பத்தில் இருந்து அதன் குழுவினரைப் பாதுகாக்க, அவ்கோட் (Avcoat) என்ற டைல்களை வெப்பக் கவச அமைப்பில் பயன்படுத்துகிறது. இந்தப் பிரத்யேக டைல்கள் 2760 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பத்தை எதிர்கொள்ளக் கூடியவை.
"விண்வெளிப் பயணங்களில் இந்த 'ரேடியோ பிளாக்அவுட்' மிகவும் சவாலான ஒன்றுதான். அந்தச் சில நிமிடங்களை மேலும் குறைப்பதற்கு நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் போன்ற நிறுவனங்கள் பல முயற்சிகளை எடுத்து வருகின்றன. ஆனால், இன்னும் பெரிய அளவில் முன்னேற்றங்கள் ஏற்படவில்லை என்பதே உண்மை.
அதனால்தான், வளிமண்டல மறுநுழைவில் ஏற்படும் பாதிப்புகளை, குறிப்பாக வெப்பத்தில் இருந்து விண்வெளி வீரர்களைப் பாதுகாப்பதில் அவை அதிக கவனம் செலுத்துகின்றன" என்கிறார் பேராசிரியர், முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு