You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பஞ்சாப் கிராமத்தில் தலை வழுக்கை சிகிச்சைக்கு சென்றவர்கள் கண் நோயால் அவதி - என்ன நடந்தது?
- எழுதியவர், சரண்ஜீவ் கெளசல்
- பதவி, பிபிசிக்காக
"அந்த முகாமுக்கு ஏற்பாடு செய்தது யார் என்று எனக்குத் தெரியாது. ஒரு நண்பர் என்னிடம் கூறினார், அவருடன் சென்றேன். மருந்தை போட்டு சுமார் அரைமணி நேரம் கழித்து இந்த நோய்த் தொற்று தொடங்கியது."
பஞ்சாப் மாநிலம் சங்ரூரில் முடி வளரச் செய்வதாகக் கூறிய முகாம் ஒன்றுக்குச் சென்று, அங்கு கொடுக்கப்பட்ட மருந்தை தலையில் போட்டுக்கொண்ட பின்னர் கண் நோய்த் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரதீப்பின் வார்த்தைகள் இவை.
"முடி வளரச் செய்வதாகக் கூறிய இந்த பைத்தியக்கார மோசடியில் நான் சிக்கிக்கொண்டேன். அவர்கள் என் தலையில் மருந்தைத் தடவிய அரை மணிநேரத்தில் என் கண்களில் வலி ஏற்பட்டது. இப்போது என்னால் கண்களைத் திறக்கக்கூட முடியவில்லை," என்கிறார் பிரதீப்.
பிரதீப்புக்கு மட்டுமல்ல, சங்ரூரில் உள்ள பொதுமருத்துவமனையை அடைந்த பலருக்கும் இதே நிலைதான். தான் முகாமுக்குச் சென்றபோது அங்கு 300-400 பேர் இருந்ததாக பிரதீப் சொல்கிறார். பிரதீப் சிங் தவிர மேலும் பலரும் கண் வலியுடன் மருத்துவமனையை நாடியுள்ளனர்.
இதற்கிடையில், கண்கள் கட்டப்பட்டிருந்த சந்தீப், மருந்து போடப்பட்ட 10 நிமிடத்திற்குப் பிறகு அவர் தலையைக் கழுவும்படி கூறியதாகச் சொல்கிறார்.
"நான் என் வாயில் தண்ணீர்கூட வைக்கவில்லை, ஆனால் என் கண்கள் எரிச்சலடையத் தொடங்கின. முதலில் அது வலித்தது. எனக்கு சளி பிடித்ததைப் போல் இருந்தது. ஆனால் அது பொறுக்க முடியாத அளவுக்கு வலிக்கத் தொடங்கிய பிறகு நான் மருத்துவமனைக்குச் சென்றேன்."
முகாமில் மருந்தை ஒரு பெரிய பாத்திரத்தில் தயாரித்ததாகவும், அதில் இருந்தே அனைவரும் மருந்தைப் போட்டுக்கொண்டதாகவும் சந்தீப் சொல்கிறார்.
என்ன பிரச்னை?
மார்ச் 16ஆம் தேதி, பஞ்சாப் மாநிலம் சங்ரூரில் உள்ள காளி மாதா கோவிலில் வழுக்கைத் தலைக்கு சிகிச்சை அளிக்க ஒரு இலவச முகாம் நடத்தப்பட்டது. இதில் சுமார் 100 பேரின் கண்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன.
அதன் பின்னர், சங்ரூரில் உள்ள பொது மருத்துவமனையில் கண் தொற்றுடன் ஏராளமான நோயாளிகள் குவிந்தனர். அவர்கள் கண் தொற்றால் பாதிக்கப்பட்டதுடன் கடும் வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தனர்.
காளிமாதா கோவிலில் வழுக்கையை குணப்படுத்த யாரோ மருந்து கொடுத்தபோது மக்கள் பக்க விளைவுகளை எதிர்கொண்டதாக சங்ரூர் பொது மருத்துவர் சஞ்சய் கம்ரா சொல்கிறார்.
- உயிரை பணயம் வைத்து இந்தியா வந்து இவர்கள் சிறுநீரகங்களை விற்பது ஏன்?
- இந்தியாவில் இரண்டாம் ஆண்டு மருத்துவ மாணவர்களை அதிகம் பாதிக்கும் 'செகண்ட் இயர் சிண்ட்ரோம்' பற்றி தெரியுமா?
- மகாராஷ்டிரா: பெண்ணின் கருவில் இருந்த குழந்தை வயிற்றில் ஒரு கரு உருவானது எப்படி?
- உங்களால் இரவில் தூங்க முடியவில்லையா? - நீங்கள் செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும் என்ன?
"யார் அந்த முகாமை நடத்தினர் என்பது எங்களுக்குத் தெரியாது. எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி அது அனுமதியின்றி நடத்தப்பட்டுள்ளது. நாங்கள் ஞாயிறு இரவு முதல் அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளைக் கவனித்து வருகிறோம்" என்று மருத்துவர் சஞ்சய் கம்ரா தெரிவித்தார்.
"எங்கள் கண் மற்றும் சரும மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருகின்றனர். நோயாளிகள் கண் வீக்கம், கண்ணில் நீர் வடிதல், தோல் தொற்று போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்," என்றும் அவர் நிலைமையை விவரித்தார்.
நோயாளிகள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதாகவும், சிகிச்சையைப் பெற்ற பின்னர் வீடு திரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதைப் பற்றி கூடுதல் தகவல் அளித்த அவர், "எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி, கண் முகாம், ரத்த தான முகாம் ஆகியவற்றுக்கு அனுமதி பெறப்படுகிறது. ஆனால் இதைப் பற்றி எங்களுக்கு எதுவும் தெரிய வரவில்லை" என்றார்.
தொற்று ஏற்படுவதற்கான காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை எனவும் மருத்துவர் சஞ்சய் கம்ரா கூறினார். அதோடு, இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு இருப்பதாகவும், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பர் எனவும் அவர் தெரிவித்தார்.
முகாமுக்கு ஏற்பாடு செய்தது யார்?
வழுக்கையைக் குணப்படுத்துவதாகக் கூறி சங்ரூரின் பிலாஸ்பூர் கிராமத்தைச் சேர்ந்த அமன்தீப் சிங் என்பவர் இந்த முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த முகாமில் வழுக்கையால் பாதிக்கப்பட்டவர்களின் தலையில் எண்ணெய் போன்ற ரசாயனத்தைத் தடவியுள்ளனர்.
தங்கள் தலைகளில் இந்த ரசாயனத்தைப் பூசிக்கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் கண் எரிச்சல் மற்றும் வலியால் பாதிக்கப்பட்டனர்.
அதன் பின்னர் சுமார் 70 பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்குச் சென்றனர். பெரிய எண்ணிக்கையிலான மக்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறச் சென்றனர்.
காவல்துறையில் புகார் பதிவு
பாதிக்கப்பட்ட சுக்பீர் சிங் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் சங்ரூர் காவல்துறையினர் ஒரு வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அமன்தீப் சிங் மற்றும் தஜிந்தர் பாலுக்கு எதிராக பிரிவு 124இன் கீழ் காவல்துறை முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது.
இந்த முகாமின் புரவலராக தஜிந்தர் சிங் இருந்தார்.
இதுபற்றி தகவல் அளித்த சங்ருர் டிஎஸ்பி, வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் விரைவில் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு