கேரளாவில் 18 வயது இளம்பெண்ணின் மரணத்திற்கு காரணமான 'அனோரெக்சியா நெர்வோஸா' என்றால் என்ன?

    • எழுதியவர், சிராஜ்
    • பதவி, பிபிசி தமிழ்

அனோரெக்சியா நெர்வோஸா (Anorexia nervosa), இதுவொரு ஒரு உணவு சார்ந்த மனநலக் கோளாறு. இந்தப் பெயரை கேட்கும்போது சற்று அந்நியமாகத் தெரியலாம். ஆனால் அதன் விளக்கம் கேட்டால், மிகவும் பரீட்சயமான ஒன்று போல தோன்றும், அதன் அறிகுறிகளைக் கூட சிலர் எதிர்கொண்டிருக்கலாம்.

அனோரெக்ஸியா என்பது, எடை அதிகரித்துவிடுமோ என்ற கடுமையான பயத்தால் உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்வது அல்லது ஒல்லியாக இருந்தாலும் கூட 'மிகவும் குண்டாக இருக்கிறேன், அசிங்கமாக இருக்கிறேன்' என்ற எண்ணம் மீண்டும்மீண்டும் எழுவதால் உணவு உண்பதைத் தவிர்ப்பது அல்லது குறைப்பது.

சமீபத்தில் கேரளா மாநிலத்தின் தலச்சேரியில், அனோரெக்சியா நெர்வோஸா காரணமாக ஒரு 18 வயது பெண் உயிரிழந்துள்ளார்.

இந்த விவகாரம், உடல் தொடர்பான சமூகத்தின் பார்வைகள் குறித்தும், வேகமாக உடல் எடையைக் குறைப்பதற்காக பரிந்துரைக்கப்படும் புதிய வழிகள் குறித்தும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

"அந்தப் பெண் 5 முதல் 6 மாதங்கள் வரை, அனோரெக்ஸியாவால் பாதிக்கப்பட்டிருந்தார். எங்களிடம் அழைத்துவரப்பட்டப்போது, வெறும் 24 கிலோ எடையுடன், எழுந்து நடக்கமுடியாத நிலையில் இருந்தார். உடலில் சர்க்கரை, சோடியம் அளவுகளும், ரத்த அழுத்தமும் மிகவும் குறைவாக இருந்தது" என அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறியதாக, ஏஎன்ஐ செய்தி முகமையின் செய்தி கூறுகிறது.

அவர் கடந்த சில மாதங்களாக திட உணவுகளைத் தவிர்த்து, பெரும்பாலும் திரவ உணவுகளையே சார்ந்திருந்ததாகவும், தீவிர சிகிச்சை அளித்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

'அனோரெக்ஸியா- உயிருக்கு ஆபத்தானது'

'அனோரெக்ஸியா, உயிருக்கு ஆபத்தானது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மிகக் குறைவான உடல் எடையோடு இருந்தாலும் கூட, தான் மிகவும் குண்டாக இருப்பதாகவே எண்ணுவார்கள். எந்தவொரு மனநலக் கோளாறையும் விட இது அதிக இறப்பு விகிதத்தைக் கொண்டது. உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் இந்த நோய் கடுமையான, நீண்டகால உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.'

அமெரிக்காவின் புகழ்பெற்ற ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், அனோரெக்ஸியா குறித்த இவ்வாறு எச்சரிக்கிறது. அதன் அறிகுறிகளையும் பின்வருமாறு விவரிக்கிறது.

  • உடல் குறித்த பார்வையில் மாற்றம்
  • குறைவான எடை, உடல் எடை அதிகரிப்பது குறித்த அதீத பயம்,
  • அதிகப்படியான உடற்பயிற்சி, பசியைக் கட்டுப்படுத்துவது,
  • ஊட்டச்சத்து குறைபாடு, திரவ இழப்பு (நீரிழப்பு - dehydration),
  • மிகவும் ஒல்லியாக இருப்பது, வயிற்று வலி அல்லது வீக்கம்,
  • மலச்சிக்கல், அதிக சோர்வு, குளிரைத் தாங்கிக்கொள்ள இயலாமை,
  • லானுகோ (Lanugo) எனப்படும் மெல்லிய முடிகள் தோன்றுவது,
  • வறண்ட அல்லது மஞ்சள் நிற தோல், தலைமுடி பலவீனமடைவது அல்லது கொட்டுவது, பலவீனமான நகங்கள்,
  • மலட்டுத்தன்மை.

மனநலம் சார்ந்த அறிகுறிகள் என பார்க்கும்போது,

  • சமூகத்தில் இருந்து விலகி இருப்பது,
  • செக்ஸ் மீதான ஆர்வம் குறைவது,
  • அடிக்கடி கோபப்படுவது மற்றும் மனச்சோர்வு.

இதுகுறித்து பேசிய மருத்துவர் மற்றும் உணவுமுறை ஆலோசகர் அருண்குமார், "அனோரெக்ஸியா ஆபத்தான மனநோய் என்பதில் சந்தேகமில்லை. அதே சமயம் அறிகுறிகளை கவனித்து, முறையாக சிகிச்சை எடுத்துக்கொண்டால் பிரச்னையில்லை. சிலர் சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகு, சில மாதங்கள் கழித்து மீண்டும் உணவுகளைத் தவிர்க்கத் தொடங்குவார்கள், எனவே தொடர்ந்து கவுன்சிலிங் கொடுப்பதும் அவசியம்." என்கிறார்.

பாதிக்கப்பட்டவர்களோ அல்லது குடும்பத்தினரோ அறிகுறிகளை புறக்கணித்தால் அனோரெக்ஸியா தீவிரமடையும் என எச்சரித்த அவர், அதன் விளைவுகளை பட்டியலிட்டார்.

  • ரத்த சிவப்பணுக்கள் குறைவது (ரத்த சோகை)
  • இதயப் பிரச்னைகள் (அரித்மியா, மெதுவான இதயத் துடிப்பு, இதய செயலிழப்பு)
  • ரத்த அழுத்தம் குறைவது
  • சிறுநீரகப் பிரச்னைகள்
  • எலக்ட்ரோலைட் சமநிலையின்மை (உடலில் சத்துக்கள் குறைவது)
  • பெண்களுக்கு மாதவிடாய் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுவது
  • ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் குறைவது
  • எலும்புகள் பலவீனமடைவது
  • மூளை பாதிப்பு
  • உறுப்புகள் செயலிழப்பது
  • உயிரிழப்பு

ஆண்களை விட பெண்களே, அனோரெக்ஸியாவால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், குறிப்பாக 12 முதல் 20 வயது பெண்கள் என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. அதன்படி, மேற்கத்திய நாடுகளில் பொதுவாக இருக்கும் இந்த பிரச்னை, இப்போது இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது.

'எடையைக் குறைத்தபிறகே வெளியே செல்லவேண்டுமென நினைத்தேன்'

பானுரேகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), திருமணமான புதிதில் விருந்துக்காக அவரது கணவரின் உறவினர் வீட்டிற்கு சென்றபோது, உறவினர் ஒருவர் கூறிய வார்த்தைகள் அவரது வாழ்க்கையையே புரட்டிப் போட்டது.

"இன்னும் கொஞ்சம் எடை கூடினால், ஜோடியாக வெளியே செல்லும்போது, எல்லோரும் உன்னை இவனுடைய (கணவர்) அக்கா என நினைத்துக்கொள்வார்கள்."

அதற்கு பிறகு பானுரேகாவில் நிம்மதியாக சாப்பிடமுடியவில்லை. அந்த விருந்தில் மட்டுமல்ல, கணவர் வீட்டிற்கு திரும்பிய பிறகும்.

"இப்போது யோசித்தால் சிரிப்பாக இருக்கிறது. விருந்துண்ண அழைத்துவிட்டு, என் உடல் எடையை கேலி செய்த அந்த உறவினருக்கு என் கணவர் அன்றே பதிலடி கொடுத்திருந்தால், நான் இவ்வளவு கஷ்டப்பட்டிருக்க மாட்டேன். ஆனால், அவரும் உறவினர்களோடு சேர்ந்து சிரித்ததுதான், தாங்க முடியாமல் போனது" என்கிறார் பானுரேகா.

அந்த விருந்துக்குப் பிறகு, எப்படியாவது தனது உடலைக் குறைக்க வேண்டும் என்பதே பானுவின் குறிக்கோளாக மாறியது. கணவருடன் சேர்ந்து வெளியே செல்வதைக் குறைத்தார். எடை குறைத்த பிறகே, ஜோடியாக வெளியே செல்வேன் என மனதிற்குள் நினைத்துக்கொண்டார்.

"அவர் பலமுறை வற்புறுத்தியதால், ஒருமுறை திரைப்படம் பார்க்க அவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றேன். திரும்பி வரும்போது விபத்து ஏற்பட்டது. பெரிய காயம் ஏதும் இல்லாவிட்டாலும், என்னுடைய எடையின் காரணமாகதான், இருசக்கர வாகன விபத்து ஏற்பட்டது என முழு மனதாக நம்பிவிட்டேன்." என நினைவுகூறுகிறார் பானுரேகா.

ஒருவருக்கு அதிக உடல் எடை இருக்கிறது என்றால், அதை முறையாக (நிபுணரின் ஆலோசோனைப்படி) குறைப்பது ஆரோக்கியமான ஒன்றுதான் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் 5 அடி 7 அங்குலம் என்ற உயரம் கொண்ட பானுரேகாவின் அப்போதைய எடை 64 கிலோ, அதாவது பிஎம்ஐ முறைபடி (BMI- Body mass index) அது ஆரோக்கியமான எடையே.

"ஆனால், எனக்கு அப்போது நான் மிகவும் குண்டாக, அசிங்கமாக இருக்கிறேன் என்றே உறுதியா நம்பினேன், கண்ணாடி பார்க்கவே பயந்தேன். எனது கணவர் அல்லது குடும்பத்தார் முன் உணவு உண்பதை முடிந்தளவு தவிர்த்தேன்." என்கிறார் பானுரேகா.

ஆனால், தன் உடல் எடை கூடிவிடுமோ என்ற பயம் அவரை சில விபரீதமான முடிவுகளை எடுக்கவைத்தது. நீர் ஆகாரங்களையே விரும்பினார், அதுவும் மிகவும் அளவாக. அடிக்கடி கைப்பிடி அளவு சீரகத்தை மெல்வது, வெந்நீர் குடிப்பது, அவரது தினசரி பழக்கமாக மாறியது.

"நடைப்பயிற்சி சென்றேன், ஆனால் எளிதில் உடல் சோர்வடைந்ததால் அதைக் கைவிட்டேன். இன்னும் உணவுகளை குறைத்தேன். அப்போது எனக்கு இருந்த பெரும் பிரச்னை, மலச்சிக்கல். அதற்கு என சில நாட்டு மருந்துகளை எடுத்துக்கொண்டேன். ஒருபுறம் எடை வேகமாக குறையத் தொடங்கியது. முடி கொட்டுவது அதிகரித்தது.

அதே நேரம் எதிலும் நாட்டமில்லாத மனநிலை அதிகரித்தது. எடை 64இல் இருந்து 47க்கு சென்றது. அடுத்த சில வாரங்களில் 42 என ஆனது. மிகவும் பலவீனமாக உணரத் தொடங்கினேன். மாதவிடாய் விஷயத்திலும் மாற்றம் ஏற்படத் தொடங்கியது" என்கிறார் பானுரேகா.

சில மாதங்களில் அவர் 10 முதல் 15 கிலோ வரை குறைந்ததை முதலில் குடும்பத்தினர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை, அவர் பலவீனமடையத் தொடங்கியபிறகு, குறிப்பாக மாதவிடாய் விஷயத்தில் மாற்றங்கள் ஏற்பட்ட பிறகுதான் மருத்துவரை நாட வற்புறுத்தியுள்ளார்கள்.

"அதற்கு முன் என் கணவர் மருத்துவமனைக்கு அழைத்தும், நான் ஏதேதோ காரணங்கள் சொல்லி தவிர்த்து வந்தேன். ஒருநாள் மயங்கி விழுந்தபிறகு என்னை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.

மருத்துவர் என்னைப் பார்த்ததும், உடனடியாக தொடர் சிகிச்சை அளிக்க வேண்டும் என கூறினார். எனக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது (IV fluids). சில நாட்கள் மருத்துவமனையில் இருந்தேன், எனக்கு மனநல சிகிச்சையும் அளிக்கப்பட்டது. கணவரும் என்னுடன் கவுன்சிலிங் வந்தார்." என்கிறார் பானுரேகா.

இவ்வாறு சாப்பிடாமல், எடை கூடிவிடுமோ என பயந்துக்கொண்டே இருப்பது ஒரு மனநோய் என்பதை முழுமையாக உணர்ந்தபிறகு தன்னால் நன்றாக சாப்பிட முடிந்தது என்றும், பிறகு 6 மாதத்தில் 16 கிலோ வரை எடை கூடியது என்றும் அவர் கூறுகிறார்.

"அவ்வப்போது கவுன்சிலிங் சென்றேன். ஒரு வருடத்திற்கு பிறகே என்னால் அந்த எண்ணங்களில் இருந்து முழுமையாக மீள முடிந்தது. இதெல்லாம் நடந்து 2 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது, இப்போது சிக்கன் பிரியாணியில் எவ்வளவு கலோரிகள் உள்ளது என்றெல்லாம் நான் கூகிள் செய்து பார்ப்பதில்லை" என்று புன்னகையுடன் சொல்கிறார் பானுரேகா.

'எடை குறைப்புக்கு குறுக்கு வழியே கிடையாது'

"ஒரு பக்கம் புதுப்புது உணவுகளை உண்ண வேண்டும் என்ற ஆவல், மறுபக்கம் வேகமாக எடையைக் வேகமாக குறைக்க வேண்டும் என்ற உந்துதல். இரண்டுக்குமே பின்விளைவுகள் உண்டு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது" என்கிறார் உணவியல் நிபுணர், மருத்துவர் லக்ஷ்மி.

சமூக ஊடகங்களின் 'இன்ப்ளூயன்சர்கள்' கூறுவதைக் கேட்டு உடல்நலம் தொடர்பான ஆலோசனைகளை பின்பற்றுவது மிகவும் தவறு என்று கூறும் மருத்துவர் லக்ஷ்மி, "ஒவ்வொருவரின் உடல்நிலையும் தனிப்பட்டது. ரத்த அழுத்தம், சர்க்கரை அளவுகள், எடை, உயரம், உடலின் கொழுப்பு அளவுகள் என பல்வேறு அம்சங்களைக் கணக்கில் கொள்ள வேண்டும்." என்கிறார்.

தன்னிடம் உணவுமுறை ஆலோசனைக்காக வரும் பெண்களில் பலர், தங்கள் உடல் வடிவம் குறித்த தவறான எண்ணங்களை கொண்டிருப்பதாகக் கூறும் அவர், "அதிக உடல் பருமன் நல்லதல்லதான். அதே சமயம் ஒல்லியாக இருப்பது மட்டுமே ஆரோக்கியமும் அல்ல. உடல்நலனைக் பொருட்படுத்தாமல் அழகுக்காக அல்லது சமூக அழுத்தங்களுக்காக பெண்களே தங்களது உடலைப் பற்றி அதிகம் கவலைப்படுகிறார்கள்." என்கிறார்.

சில வாரங்களில் கிலோ கணக்கில் உடல் எடையைக் குறைப்பது, நீண்ட கால நோக்கில் நல்லதல்ல என்றும் எச்சரிக்கிறார் உணவியல் நிபுணர் லக்ஷ்மி.

"பிரபலங்கள் குறுகிய காலத்தில் எடையைக் குறைப்பதையும், கூட்டுவதையும் பார்த்து பலர் அவ்வாறு செய்ய நினைக்கிறார்கள். நாம் அறியாத ஒன்று அவர்களுக்கு பின்னால் இதற்கென்று ஒரு நிபுணர்கள் குழு இருக்கிறார்கள். எனவே முறையாக ஒரு உணவியல் நிபுணரை சந்தித்து, ஆலோசனை பெறாமல் இணையத்தில் பார்க்கும் டயட்டை பின்பற்றுவது ஆரோக்கியமானதல்ல" என்கிறார்.

"எடையைக் குறைக்க குறுக்கு வழி என்பதே கிடையாது. உணவுமுறை- உடற்பயிற்சி இரண்டுமே அவசியம், அதுவும் அன்றாட பழக்கமாக இருக்க வேண்டும். நீண்ட கால நோக்கில் அதுவே உடலுக்கு நல்லது" என்று அறிவுறுத்துகிறார் மருத்துவர் லக்ஷ்மி.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)