You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எண்ணூர் - பழவேற்காடு: தென் அமெரிக்க சிப்பிகள் ஆக்கிரமிப்பால் சிங்க இறால், நெத்திலி மீனுக்கு ஆபத்து
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி நியூஸ்
எண்ணூர் முதல் பழவேற்காடு வரையுள்ள 15 மீனவ கிராமங்களில் கடற்கரையை தென் அமெரிக்காவைச் சேர்ந்த சிப்பி இனம் ஒன்று ஆக்கிரமித்துள்ளது. இதன் காரணமாக பல ஆண்டுகளாக அங்கு பிடிபடும் சிங்கஇறால், நெத்திலி, கிழங்கான் மீன் உள்பட உள்ளூர் மீன், இறால் மற்றும் சிப்பி வகைகள் கிடைப்பது மிகவும் குறைந்து வருவதாக மீனவர்கள் கூறுகிறார்கள்.
அதோடு கடல்பரப்பில் மாசுபாடும் அதிகரித்துள்ளது என்று கூறி மீனவர்கள் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். வெளிநாட்டு சிப்பி பரவல் காரணமாக மீன்பிடி தளங்களில் சிப்பியின் கழிவு மேடுகள் உருவாகியுள்ளன.
இந்த சிப்பிகள் கடல் நீரில் உள்ள பாசிகள், மீன் மற்றும் இறால் குஞ்சுகளின் வளர்ச்சியை தடுக்கின்றன என்றும் மெர்க்குரி, காரீயம் உள்ளிட்ட கன உலோகங்கள் உள்ள தனது கழிவுகளை சிப்பிகள் தண்ணீரில் வெளியேற்றுகிறன என்றும் சூழலியலாளர்கள் கூறுகின்றனர்.
எண்ணூர் முதல் பழவேற்காடு வரை அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் சிப்பியை மீனவர்கள் -'காக்கா ஆழி' என்று குறிப்பிடுகின்றனர். இந்த வெளிநாட்டு சிப்பியின் பாதிப்பு குறித்து கண்டறிய மீன் மார்க்கெட் பகுதிகள் மற்றும் கடற்பரப்பில் மீன்பிடி தளங்களில் பிபிசி தமிழ் பயணம் செய்தது.
அந்த பயணத்தில் கண்ட காட்சிகளை படங்களாக தொகுத்து வாசகர்களிடம் பகிர்ந்து கொள்ளும் புகைப்பட களச்செய்தி இது.
கடலில் உள்ள மீன்பிடி தளங்களை 'பாடு' என்று மீனவர்கள் சொல்வார்கள். ஒவ்வொரு மீனவ கிராமத்திற்கும் குறிப்பிட்ட பாடு என்ற மீன்பிடி தளம் மீனவ சங்கங்களால் முடிவு செய்யப்பட்டு ஒதுக்கீடு செய்யப்படும். அதன்படி, எண்ணூர் பகுதியில் 16 பாடுகள் உள்ளன.
அதில், எண்ணூர் கழிமுகம் அருகே உள்ள யானை பாடில் நாம் கண்ட காட்சி இது. கை நிறைய காக்கா ஆழி கசடுகளை அள்ளிக் காட்டுகிறார் ஒரு மீனவர். இந்த சிப்பியின் பரவல் அதிகரித்துக்கொண்டு வருகிறது. சிப்பி வெளியேற்றும் கழிவுகள் கடல் பரப்பில் குவிந்துகொண்டு வருகிறது. இந்த சிப்பி வேர்விட்டு பரவிவருவதை மீனவர்கள் நம்மிடம் காட்டினர்.
தென் அமெரிக்க மஸ்ஸல் என்ற இந்த சிப்பிகளின் பரவல் காரணமாக உள்ளூர் வகை மீன்கள் மற்றும் இறால் வகைகள், மட்டி வகை உயிரினங்களின் வளர்ச்சி தடுக்கப்படுவதாக கூறி, எண்ணூர் மீனவர் குமரேசன் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்.
இவரது வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் துறை மற்றும் மீன்வளத்துறை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். இதற்கான தீர்வு குறித்து தீர்க்கமாக முடிவு செய்யவேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எண்ணூர் முதல் பழவேற்காடு வரை பரவியுள்ள சிப்பிகள் பல இடங்களில் மேடு போல கழிவுகளை சேர்த்துள்ளன. இதனால் மீனவர்கன் தங்களது படகுகளை கொண்டு செல்ல தடங்கல் ஏற்படுகிறது. இந்த மேடு பகுதி சுமார் நான்கு முதல் ஐந்து அடி வரை வளர்ந்துள்ளதை நாம் நேரில் பார்த்தோம்.
இந்த படத்தில் உள்ள பகுதி பந்தல் பாடு என்ற பகுதி ஆகும். பலமுறை படகுகள் இந்த மேடுகளில் முட்டுவதால், மீனவர்கள் தண்ணீரில் இறங்கி படகை தள்ளிச் செல்லும் நிலைமையும் ஏற்படுகிறது.
மீனவர் ஒருவர் கழிவுகளை அப்புறப்படுத்தி தனது படகை எடுத்துச்செல்லும் நேரத்தில், அவரது கால்கள் முழுவதும் சிப்பியின் கழிவுகள் ஒட்டியிருந்தது. இந்த கழிவு மீனவர்களின் கால்களில் அரிப்பை ஏற்படுத்துகிறது. சில நேரம், தேங்கியுள்ள சிப்பியின் கூர்மையான பகுதிகள் குத்தி மீனவர்கள் பாதங்களில் காயங்களும் ஏற்படுகின்றன.
இந்த கழிவுகள் தண்ணீரின் தன்மையில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக சுற்றுச்சூழலியலாளர் ரஞ்சித் டேனியல் நம்மிடம் உறுதிப்படுத்தினார். கழிவில் கனஉலோகங்கள் இருப்பதால், அவை மீனவர்களுக்கு நேரடியாக பிரச்னை ஏற்படுத்துகிறது என்றும் பிற கடல் வாழ் உயிரினங்களையும் பாதிக்கிறது என்றும் அவர் கூறினார்.
15 வயதில் இருந்து மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவர் சிவன்படை கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார். 50 வயதை எட்டியுள்ள இவர், மீன்பிடி தளங்களில் பல மாற்றங்களை பார்த்தவர். ஆனால் வெளிநாட்டு சிப்பி படையெடுப்பு மோசமான விளைவுகளை ஏற்படுத்தி, தனது வருமானத்தை கணிசமாக குறைத்துவிட்டது என்கிறார்.
நாம் சமந்தூர் முனை பாடில் அவரை சந்தித்த நேரத்தில், அப்போது பிடித்த கருந்திலேபி மீன்களுடன் அவரது மணிவலையில் தேங்கியிருந்த சிப்பிகளை அகற்றி காட்டினார். குறைந்த அளவே மீன் பிடிப்பதால், பல நேரங்களில் அவர் பிடித்த மீன்களை விற்பதை விடுத்து தனது உணவுக்காக மட்டுமே எடுத்துச்செல்வதாக கூறினார்.
எண்ணூர் முதல் பழவேற்காடு வரை பல இடங்களில் பறவைகள் கூட்டம் கூட்டமாக உணவு தேடுவதை பார்க்கமுடிந்தது. சிறிய மீன்கள் மற்றும் இறால் வகைகள் ஆற்றங்கரையோரம் உள்ள சேற்று பகுதிகளுக்கு வரும்போது, இந்த பறவைகள் மிக எளிதாக தங்களுக்கான உணவை எடுத்துக்கொள்ளும்.
தற்போது சிப்பிகள் வளர்வதால், அங்கு மீன் மற்றும் இறால் வகைகள் தங்குவதில்லை. அதனால், பறவைகளுக்கான உணவு கிடைப்பதிலும் சிக்கல்கள் உருவாகியுள்ளன. மீன் மற்றும் இறால் சார்ந்த உணவுச் சங்கிலியில் மாற்றம் ஏற்பட தொடங்கியுள்ளது என்பது ஒரு முக்கியமான சமிக்ஞையாக மீனவர்கள் கருதுகின்றனர்.
மஞ்ச மட்டி என்ற உள்ளூர்வகை சிப்பி நல்ல வருமானத்தை தரும் கடல் உணவுப் பொருளாக உள்ளது. ஆனால் வெளிநாட்டு சிப்பியின் வளர்ச்சி அதிகரித்த காரணத்தால், உள்ளூர் சிப்பிகள் மீது கழிவுகள் தேங்கி, மஞ்சமட்டியின் ஓடுகள் கருப்பு நிறத்தில் மாறிவிட்டதை மீனவ இளைஞர் முனுசாமி நம்மிடம் காட்டினார்.
அவர் கையில் ஏந்தியுள்ள மஞ்சமட்டியின் விலை ரூ.50 முதல் ரூ.80 வரை மீன் மார்க்கெட்டில் விற்கப்படுவதாக சொல்கிறார். ஆனால், காக்கா ஆழி சிப்பிகளின் வருகையால், மஞ்சமட்டி வாங்குவோர் முன்பை விட குறைந்த அளவில் வாங்கிச்செல்வதாக கூறுகிறார் முனுசாமி.
பழவேற்காடு பகுதியில் பல இடங்களில் நீர் தெளிவாக தெரியும் விதத்தில் இருந்தது. அதாவது காக்கா ஆழி சிப்பிகள் நீரில் உள்ள கழிவுகளை உள்வாங்கி, தெளிந்த நீராக மாற்றிவிடுகிறது.
பின்னர் தனது கழிவுகளை வெளியேற்றுகிறது. அந்த கழிவுகள் கடலின் அடிப்பகுதியில் ஒட்டிக்கொள்கிறது. இதனால் அங்கு வேறு எந்த உயிர்களும் வளர்வதில்லை.
பழவேற்காடு மீனவர் தேசிங்கு சின்னையன் கடல்பாசி மற்றும் கடல்புல் வகைகள் எவ்வாறு காக்கா ஆலியால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்று விளக்கினார். அவர் கையில் வேர் பிடித்த சிப்பிகள், பாசிகளுடன் ஒட்டியிருந்தன. அவரது இடது புறத்தில் காக்கா ஆழி கழிவுகள் தேங்கி மேடு ஏற்பட்டுள்ளது.
அதனால், சதுப்பு மணலில் முன்பை போல இறால் தென்படுவதில்லை. இறால் செல்லும் பாதைகளும் மாறிவிட்டதால், பகல் நேரம் அல்லது இரவு பொழுதுகளில் எது இறால்பிடிக்கு சரியான நேரம் என கணிக்கமுடியவில்லை என்கிறார் தேசிங்கு.
தாழங்குப்பம் மீன் மார்க்கெட் பகுதியில் நாம் சென்ற நேரத்தில் ஏலம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. சிங்க இறால், கிழங்கான் மீன், செமக்ரா மற்றும் வெள்ரா வகை இறால் வருவது குறைந்துவருவது பற்றி நம்மிடம் பேசினார் மீனவ பெண் சரசு.
தினமும் ஏலம் விடப்படும் மீன் மற்றும் இறால் வகைகளுடன் சமீப காலமாக காக்கா ஆழி சிப்பிகள் இருப்பதை பார்ப்பதாக அவர் சொல்கிறார்.
ஏலம்விடுவதற்கு வைக்கப்பட்டிருந்த கூடைகளை நாம் பார்த்தோம். பலமுறை தூய்மை செய்த பிறகும் ஒரு சில சிறிய காக்கா ஆழி சிப்பிகள் இறாலுடன் சேர்ந்து வருவதை விற்பனை செய்யவந்த பெண்கள் நம்மிடம் காட்டினர். இதனால் இறால் விற்பனை விலையை குறைக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அந்த பெண்கள் தெரிவித்தனர்.
தென்னிந்தியாவில் முதலில் கேரளாவில்தான் இந்த சிப்பிகள் காணப்பட்டன. தற்போது தமிழ்நாட்டின் கடல்பரப்பிலும் இவை தென்படுகின்றன. இந்த தென்னமெரிக்க சிப்பி வகை குறித்த ஆய்வில் ஈடுபட்ட நீர்வாழ் உயிரியல் மற்றும் மீன்வளம் ஆய்வாளர் பிஜூகுமார், இந்த சிப்பிகள் வேகமாக இனப்பெருக்கம் செய்யும் என்றும் மிகவும் சகிப்புத்தன்மை கொண்டவையாக இருக்கின்றன என்றும் கூறினார்.
மேலும் கடல் நீர், நன்னீர் என பலவகையான நீரிலும் இவை உயிர்வாழ முடியும் என்கிறார். இவை உள்ளூர் மட்டிகள் வளரும் வாழ்விடங்களில் வளர்ந்து ஒரு கட்டத்தில் அந்த இடத்தை முழுவதுமாக தனதாக்கிக் கொள்ளும் தன்மை கொண்டவை, இவற்றை முழுவதுமாக அழிப்பதும் சவாலான காரியம் என்றார் அவர். குறைந்தபட்சம் அவை தென்படும் இடங்களில் இருந்து அவற்றை அகற்றுவதுதான் தற்போதுள்ள ஒரே வாய்ப்பு என்கிறார்.
தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்களாகவே குழுக்கள் அமைத்துக்கொண்டு அவ்வப்போது, சிப்பி மேடுகளை அகற்றி வருகின்றனர். தமிழ்நாடு அரசிடம் இருந்து எந்த பயனுள்ள உதவியும் வந்துசேரவில்லை என்றும் அவர்கள் விமர்சிக்கின்றனர்.
சிப்பி பரவல் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் பேசினோம். இருவரும் அதிகாரிகளிடம் பேசி, விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.
சிப்பிகளின் பாதிப்பு குறித்து ஆய்வு எதுவும் நடத்தப்பட்டதா என்று கேட்டு பலமுறை தொடர்புகொண்ட போதும், சுற்றுச்சூழல் துறை செயலர் சுப்ரியா சாஹுவிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை. மீன்வளத் துறையிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்.
மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் பேசியபோது, சிப்பிகளின் தேக்கம் மீன்பிடி தொழிலை பாதிப்பது குறித்து இதுவரை தன்னிடம் யாரும் புகார் தெரிவிக்கவில்லை என்றும், அதிகாரிகளும் எதுவும் சொல்லவில்லை என்றும் கூறினார். ஆனால், மீனவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பலமுறை புகார் மனுக்கள் அனுப்பியுள்ளதாகவும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கை நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)