You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஓநாய்-மனித நோயால் பாதிக்கப்பட்ட 17 வயது மாணவர் - இந்த நோய் ஏற்பட என்ன காரணம்?
“சின்ன வயதிலிருந்தே எனக்கு இப்படித்தான் முடி இருக்கிறது. கண்ணில் முடி விழும், சாப்பிடும் போதெல்லாம் மிகவும் கஷ்டமாக இருக்கும். மருத்துவரிடம் காட்டியபோது, இப்போதைக்கு இதற்கு சிகிச்சை எதுவும் இல்லையென்று கூறிவிட்டார். ஆனால், எனக்கு 21 வயதாகும்போது பிளாஸ்டிக் சர்ஜரி செய்யலாம் எனக் கூறியுள்ளார்.
முதலில் முகத்திலுள்ள முடியைப் பார்த்து என்னை அனுமன் என்றார்கள். நான் சிறுவனாக இருந்தபோது அனைவரும் அஞ்சினார்கள். பிறகு கூடவே இருப்பதால் பழகிக் கொண்டார்கள். எனக்கு இந்த நோய் சரியாவதற்கு அரசாங்கம் உதவ முடிந்தால் நன்றாக இருக்கும்,” என்று கூறுகிறார் 17 வயதான மாணவர் லலித்.
லலித் ஓர் அரிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். அந்த நோயின் பெயர் ஓநாய்-மனித நோய். அதாவது வேர்வுல்ஃப் சிண்ட்ரோம். அவருடைய முகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் நீளமாக முடி வளர்கிறது. இதுவோர் அரிய வகை நோய். இதன் காரணமாக லலித்தால் தன் வயதை ஒத்த இளைஞர்களைப் போல் இயல்பு வாழ்க்கை வாழ முடியவில்லை.
இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் மாணவர் லலித்தின் தாத்தா தன் பேரன் பிறந்ததிலிருந்தே இப்படித்தான் இருப்பதாகவும், அதைக் கண்டு ஆரம்பக்காலத்தில் கிராமத்திலுள்ள அனைவரும் அஞ்சினார்கள் என்றும் கூறுகிறார்.
ஓநாய்-மனித நோய் என்றால் என்ன?
ஓநாய்-மனித நோய் (Werewolf Syndrome) என்பது ஹைபர்டிரைகோசிஸ் என்ற மிகவும் அரிதான ஒரு பாதிப்பின் பொதுப் பெயர். ஒரு நபரின் உடலில் எங்காவது அளவுக்கு அதிகமான முடி வளர்ந்திருந்தால் அதை இதன் கீழ் மருத்துவர்கள் வகைப்படுத்துகின்றனர்.
இது பாலின வேறுபாடின்றி யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அசாதாரண முடி வளர்ச்சி முகத்தையோ அல்லது உடல் பகுதியையோ மூடிவிடும் அளவுக்கு அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதியில் திட்டு திட்டாக இருக்கும் அளவுக்கு ஏற்படலாம்.
ஹைபர்டிரைகோசிஸ் பிறக்கும்போதே இருக்கலாம் அல்லது காலப்போக்கில் உட்கொள்ளும் மருந்துகளின் பக்கவிளைவுகள் காரணமாக இது உருவாகக்கூடும்.
இதில் பல வகைகள் உள்ளன. பிறவியிலேயே தோன்றக்கூடியது அதில் ஒன்று. முதலில் குழந்தை பிறக்கும்போது உடலில் மெல்லிய முடிகள் இருக்கும்.
ஆனால், வழக்கமாக நடப்பதைப் போல் அடுத்தடுத்த வாரங்களில் உதிர்ந்துவிடுவதற்குப் பதிலாக, அந்த மெல்லிய மயிர்கள் குழந்தையின் உடலில் தொடர்ந்து அதிகமாக வளர்கின்றன.
பிறவியிலேயே அசாதாரணமான முடி வளர்ச்சி தொடங்குவதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பிறக்கும்போது தொடங்கி வாழ்நாள் முழுவதுமே அசாதாரண முடி வளர்ச்சி இருந்து கொண்டிருக்கும்.
முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் இதனால் பாதிக்கப்பட்ட நபரின் முகத்தையும் உடலையும் மறைக்கும் அளவுக்கு வளரும்.
இது இரண்டு வகையான அதீத முடி வளர்ச்சியை உருவாக்குகிறது. ஏதேனும் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் அதீதமாக முடி வளர்வது அதில் ஒன்று. மற்றொன்று, முடி வளரக்கூடிய அனைத்து பகுதிகளிலுமே அளவுக்கு அதிகமான முடி வளர்ச்சி நிகழ்வது.
இதுபோக, ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் அதிகப்படியான முடி வளர்ச்சி நிகழ்வது, பெண்களுக்கு மட்டுமே நிகழக்கூடிய பொதுவாக முடி இல்லாத முகம், மார்பு, முதுகு போன்ற இடங்களில் அடர்த்தியான முடி வளர்வது போன்றவையும் இந்த ஓநாய்-மனித நோயின் கீழ் வருகின்றன.
கனவுகளைச் சுமந்து வாழும் லலித்
2013ஆம் ஆண்டில், நேபாளில் இதனால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் அவருடைய மூன்று குழந்தைகளைப் பற்றி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. தேவி புத்ததோகி என்பவரும் அவருடைய மூன்று குழந்தைகளும் ஓநாய்-மனித நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
தேவிக்கு, கன்ஜெனிட்டல் ஹைபர் டிரைகோசிஸ் லானுகினோசா என்றழைக்கப்படும் பிறவியிலேயே மெல்லிய முடியாகத் தோன்றி பிறகு நாளடைவில் அடர்த்தியாக அவர்களுடைய முகம் முழுக்க முடி வளர்ந்துவிடக்கூடிய பிரச்னை இருந்தது.
அவருடைய நிலைக்குத் தீர்வு எதுவும் இல்லை. ஆனால், லேசர் முடி அகற்றும் சிகிச்சை மூலம் அதன் அறிகுறிகளைக் குறைக்கலாம் என்று அந்த செய்தி கூறியது.
தோல் மருத்துவர் தர்மேந்திர கர்ன், 38 வயதான தேவி, அவருடைய 12 வயது மகன் நீரஜ், 14 வயது மகள் மஞ்சுரா, 7 வயது மகள் மந்திரா ஆகியோருக்கு சிகிச்சையளித்தார்.
அந்த சிகிச்சை அவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்க, அவர்கள் பல அமர்வுகள் செல்ல வேண்டும். ஒரு முடி அகற்றும் சிகிச்சை அமர்வை முடித்துவிட்டு வந்த பிறகு, திரும்பவும் முடி வளர்ந்துவிடும். அதை அகற்றுவதற்கு அவர்கள் மீண்டும் சிகிச்சைக்குச் செல்ல வேண்டும்.
இதுமாதிரியான சம்பவங்கள் மிகவும் அரிதிலும் அரிது என்கிறார் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவர் சிவகுமார். “உடலின் ஏதாவதொரு பகுதியில் பெரிய மச்சமும் அதன்மீது மிக அதிகளவிலான முடியும் இருப்பது ஒரு வகை.
இந்த வகையைப் பொறுத்தவரை, நமக்கு வழக்கமாக ஒன்றிரண்டு மிமீ பரப்பளவில் மச்சம் இருக்குமல்லவா! ஆனால், கை, கால், அல்லது முகத்தில் பல செ.மீட்டர்களுக்குப் பெரிய மச்சமாக இருந்து, அந்த மச்சத்தைச் சுற்றி அதிகளவிலான முடி முளைத்திருக்கும்.
இதில், முடியில் இருக்கக்கூடிய மெலனின் மிக ஆழமாக ஊடுருவிச் செல்வதால், சில நேரங்களில் புற்றுநோயால் பாதிக்கப்படும் அபாயமும் இருக்கும். இந்த பாதிப்பை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும்.
அறுவை சிகிச்சையின்போது, அதீத முடியும் மச்சமும் இருக்கக்கூடிய பகுதியை அகற்றிவிட்டு, அதைச் சுற்றி அருகில் இருக்கும் திசுக்களை இழுத்து சிகிச்சை செய்து, உடலின் வேறு பகுதியிலிருந்து தோலை எடுத்து வைத்து சிகிச்சை செய்து அல்லது செயற்கை தோலை பயன்படுத்தி அறுவை சிகிச்சை மேற்கொண்டு சரிசெய்ய முடியும்,” என்கிறார்.
இந்த நோய் ஒரு பரம்பரைக் குறைபாடு எனக் கூறும் மருத்துவர் சிவகுமார், “குழந்தை பிறக்கும்போது, எக்ஸ் எக்ஸ் குரோமோசோம்கள் அம்மாவிடமிருந்தும் எக்ஸ் ஒய் குரோமோசோம்கள் அப்பாவிடமிருந்தும் வருகின்றன.
குழந்தையின் மரபணுக் கட்டமைப்பை உருவாக்கும் இவற்றில் குறைபாடு இருந்தால் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது. இது மரபணுப் பிறழ்வால் ஏற்படுகிறது,” எனக் கூறுகிறார்.
மேலும், மச்சம் போன்று எதுவுமின்றி பிறவியிலேயே அதிகளவு முடி வளர்ச்சியோடு பிறப்பவர்களுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ய முடியாது, அதற்கு லேசர் சிகிச்சை தான் செய்ய வேண்டும் என்கிறார் சிவகுமார்.
நேபாளின் தேவி குடும்பத்தைப் போல, அதீத முடி வளர்ச்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் கன்ஜெனிட்டல் வகை குறைபாட்டிற்கு, பல அமர்வுகள் லேசர் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
“அந்த சிகிச்சையின்போது, ஓர் அமர்வில் மிகவும் இடைப்பட்ட வயதைக் கொண்ட முடி முதல் முதிர்ச்சியடைந்த முடி வரை அனைத்தும் விழுந்தாலும், புதிதாக வளர்ந்து கொண்டிருக்கும் முடி விழாது. அதை அடுத்த அமர்வில் வளர்ச்சியடையும்போது தான் அகற்ற முடியும்.
இப்படியாக சிறுகச் சிறுக முடிகளைப் பல அமர்வுகளில் அகற்றி சரி செய்ய வேண்டும். இருப்பினும், இதில் முழு முற்றாக அகற்ற முடியாது. ஓரளவுக்கு காலத்திற்கும் முடி முளைத்துக் கொண்டுதான் இருக்கும். அதைச் சவரம் செய்வதன் மூலம் தான் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கும்,” என்று கூறுகிறார்.
மாணவர் லலித் நிலைமையைப் பொறுத்தவரை, தற்போது ரத்லாம் மருத்துவக் கல்லூரி சார்பாக இலவச சிகிச்சையளிக்க முன்வந்துள்ளனர். ரத்லாம் மருத்துவக் கல்லூரியின் டீன் ஜிதேந்திர குப்தா, “அவர்களுடைய குடும்பம் விரும்பினால், இலவச சிகிச்சையளிக்க நாங்கள் தயார்,” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “எங்களிடம் அனைத்து வகை மருத்துவ வசதிகளும் உள்ளன. அனுபவம் வாய்ந்த சரும நோய்த்துறை, அறுவை சிகிச்சை நிபுணர்கள், குழந்தைகள் மருத்துவத் துறை என்று அனைத்தும் உள்ளன. இந்த சிகிச்சையை முடிந்தளவுக்கு 15 நாட்களுக்குள் முடிப்பதற்கு முயற்சி செய்வோம்,” என்று கூறியுள்ளார்.
இந்த அரிய நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் லலித்தை உள்ளூர் மக்கள் பார்த்துப் பழகியிருந்தாலும், வெளியாட்கள் அவரைக் கண்டதும் அதிர்ச்சியடைவதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.
இத்தனை சவால்களுக்கு இடையிலும் லலித் தனது கனவுகளைக் கைவிடவில்லை. அவருக்கு எலக்ட்ரானிக்ஸ், கணினி ஆகியவை மிகவும் பிடிக்கும். தான் ஒரு யூட்யூபர் ஆக வேண்டும் என்று அவர் கனவு காண்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்