You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குழந்தை பிறந்த உடனேயே உடல் எடையைக் குறைக்க நினைத்தால் ஆபத்து
- எழுதியவர், அமாண்டா ருகேரி
- பதவி, பிபிசிக்காக
பிரிட்டனின் யார்க்க்ஷயரில் வாழ்ந்துவரும் ஷேரன் ஓக்லீ 2018ம் ஆண்டில் தன் ஆண் குழந்தையை பெற்றெடுத்த சில மாதங்களிலேயே அவரை சுற்றி இருந்த அனைவரும் குழந்தை பிறப்புக்குப் பின்பு அவர் எடை குறைந்திருந்ததை வெகுவாக பாராட்டினர்.
ஆனால், கர்ப்ப காலத்தில் அதிகரித்த உடல் எடையை குறைப்பதற்கு அவர் எதிர்கொண்ட பிரச்னைகள் வேறாக இருந்தன. ஓட்டப்பயிற்சியில் ஆர்வம் கொண்ட ஷேரன், குழந்தை பிறப்புக்கு பின் ஆறு மாதங்கள் தன் மகனை குழந்தைகளுக்கான ஸ்ட்ரோலரில் வைத்துக்கொண்டு ஜாகிங் சென்று உடல் எடையைக் குறைத்துள்ளார்.
ஆனால், இதனால் கட்டுப்படுத்த முடியாமல் தானாக சிறுநீர் வெளியேறும் பிரச்னை அவருக்கு உருவாகியுள்ளது. அலுவலகத்தில் பணியாற்றும்போதும் இந்த பிரச்னையை எதிர்கொண்டுள்ளார் அவர்.
அவருக்கு மலக்குடல் மற்றும் கருப்பை பலவீனமடைந்திருப்பது (இடுப்பு வளையத்தில் உள்ள உறுப்புகள் பலவீனமடைந்து சரியான இடத்தில் இல்லாமல் விலகி காணப்படுவது - pelvic organ prolapse) மருத்துவப் பரிசோதனைகளின் வாயிலாகத் தெரியவந்தது.
நான்கு ஆண்டு கால சிகிச்சைக்குப் பின் அவர் நிலைமை முன்னேறியுள்ளது. ஆனாலும் அவ்வப்போது அடக்க முடியாமல் சிறுநீர் வெளியேறுவது உண்டு. இதனால் மற்றொரு உள்ளாடை ஒன்றையும் எப்போதும் அவர் உடன் வைத்துக்கொள்வதுண்டு. ஓட்டப்பயிற்சி செய்யும்போது கவலையுடனேயே இருப்பார். இதனால் வேலையிலிருந்து வெளியேற வேண்டிய நிலை வந்துவிடுமோ என்றுகூட அவர் நினைத்தது உண்டு.
உடல் ரீதியாக ஏற்படும் பிரச்னைகள்
ஷேரனின் பிரச்னை பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் பிரச்னையாக உள்ளது. இடுப்பு வளையத்தில் உள்ள உறுப்புகள் பலவீனமடைந்து சரியான இடத்தில் இல்லாமல் விலகி காணப்படுவது மட்டும் குழந்தை பிறப்புக்கு பிந்தைய நிலையில் உள்ள பெண்களை 90 சதவீதம் பாதிக்கிறது.
கர்ப்ப காலத்தில் மலக்குடல் அடிவயிற்று தசைகள் நீட்டப்படாமல் பிரிக்கப்படும் போது ஏற்படும் டயாஸ்டிசிஸ் ரெக்டி எனும் பிரச்னை 60% பெண்களை பாதிக்கிறது. இதனால், சிறுநீர் அடிக்கடி வெளியேறுதல், மலச்சிக்கல், வலி உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன.
அதிகரிக்கும் மன அழுத்தம்
ஆனால், இத்தகைய பிரச்னைகளை கருத்தில் கொள்ளாமல் குழந்தை பிறந்தவுடனேயே ஓய்வெடுக்கக்கூடாது என்றும் உடனேயே கர்ப்ப காலத்திற்கு முந்தைய உடல் தோற்றத்திற்கு வருமாறும் பலரும் அறிவுரை கூறுகின்றனர்.
போதுமான மருத்துவம் மற்றும் கவனிப்பும் இன்றி உடனடியாக உடல் எடையை குறைக்க வேண்டும் என்று கூறுவதால் ஏற்படும் அழுத்தம் பல தாய்மார்களுக்கு மனவலியை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது. இதனால், அவர்களின் உடல் மற்றும் மன நலத்திலும் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
பேறுகால விடுப்பு, குழந்தை நல கொள்கைகள் முறையாக இல்லாத நாடுகளை சேர்ந்த பெண்கள், பொருளாதார தேவைகளுக்கு தன் துணையை சார்ந்திருக்கும் பெண்களுக்கு இது மேலும் அழுத்தத்தை அதிகரிக்கிறது. மீண்டும் அலுவலகம் திரும்பும் பெண்களும் தங்களை தாய்மை எந்த விதத்திலும் மாற்றிவிடவில்லை என்று நிரூபிக்க முயல்வதால் அவர்களின் பணி பாதிக்கப்படுகிறது.
இதனால் பெரும்பாலான பெண்கள் குழந்தை பிறப்புக்கு பிந்தைய மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர்.
கர்ப்ப காலத்திற்கு முந்தைய உடல் தோற்றத்திற்கு வேகமாக மீண்டும் வருவதற்காக பெண்கள் மீது அதிக அழுத்தம் கொடுக்கப்படுகிறது.
உணவின் அளவை குறைக்கும் பெண்கள்
“வேகமாக உடல் எடையை குறைப்பதற்காக, குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களும் தாங்கள் உண்ணும் உணவின் அளவை வெகுவாக குறைத்துக்கொள்வதை பார்த்திருக்கிறேன், இதனால் குழந்தைக்கு போதுமான தாய்ப்பால் கிடைப்பதில்லை” என்கிறார், அமெரிக்காவை சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ஜெனிஃபர் லிங்கன்.
கர்ப்ப காலம் மற்றும் பிரசவத்தின்போது பல்வேறு காயங்களால் பெரும்பாலான பெண்கள் பாதிக்கப்படுவர். சிசேரியனால் ஏற்படும் காயங்களும் இதில் அடங்கும். இந்த காயங்கள் ஆறுவதற்கு சில காலம் ஆகும்.
இத்தகைய காரணங்களுக்காக குழந்தை பிறப்புக்கு பின்னர் சில வாரங்களிலேயே பெண்கள் பழைய தோற்றத்தை அடைவது என்பது சாத்தியம் இல்லாதது மற்றும் ஆபத்தானது.
அமெரிக்காவின் இண்டியானாவை சேர்ந்த ஷெல்பி ஆலே, குழந்தை பிறப்பதற்கு முன்பே உடல் எடையை குறைப்பதற்கான அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளார். இதனால் குழந்தை பிறந்ததுமே தான் உண்ணும் உணவின் அளவை குறைத்துக்கொண்டுள்ளார். இதனால் தாய்ப்பால் சுரப்பது வெகுவாக குறைந்துள்ளது.
‘மேற்கத்திய கலாசாரமும் காரணம்’
பல்வேறு பிரபலங்களும் குழந்தை பிறப்புக்கு பின்னர்தான் உடல் எடையை குறைத்தது குறித்து பொது வெளியில் பகிர்கின்றனர். இதனால், குழந்தை பிறப்புக்கு பிந்தைய உடல் எடை குறைப்பு கலாசாரம் ஊடக கவனம் பெறுகிறது. அதுகுறித்த உரையாடல்கள் நடக்கின்றன. இதனாலும் பிரபலம் அல்லாத பெண்களுக்கு உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற அழுத்தம் ஏற்படுகிறது.
கனடாவை சேர்ந்த பிசியோதெரபிஸ்டும் குழந்தை பிறப்புக்கு பிந்தைய உடல் எடை குறைப்பு பயிற்சியாளருமான சுரபி வெயிட்ச், மேற்கத்திய கலாசாரம் காரணமாக இது வேகமாக மற்ற நாடுகளுக்கும் பரவிவருவதாக கூறுகிறார். “மேற்கத்திய கலாசாரத்தை இந்தியா உள்வாங்கிக்கொள்வதால் மெலிந்த, வற்றிய வயிற்றுடன் காணப்படுவதற்கான அழுத்தம் அங்கும் அதிகரித்துள்ளது” என்கிறார். கொரிய, சீன, ஜப்பானிய கலாசாரத்திலும் இக்கலாசாரம் பரவிவருவதை காண்பதாக அவர் கூறுகிறார்.
சந்தை கலாசாரம்
தாய்மார்களை நோக்கிய சந்தை கலாசாரமும் இந்த அழுத்தம் உருவாக காரணமாக உள்ளது. உடற்பயிற்சி வகுப்புகள் மற்றும் உணவு அட்டவணை குறித்த விளம்பரங்கள் தாய்மார்களை நோக்கியதாக உள்ளன.
இடுப்பளவை குறைப்பதற்காக குழந்தை பிறப்புக்குப் பின் பெரும்பாலான பெண்கள் இடுப்பை சுற்றி அணிந்துகொள்ளும் பெல்ட்டுகள் குறித்து கூறும் எலும்பியல் பிசியோதெரபிஸ்ட் மார்கோ குவாயாட்கோவ்ஸ்கி, “அந்த பெல்டுகள் உங்களின் இடுப்பளவை குறைக்கப்போவதில்லை,” என்கிறார். அது பிரச்னைகளையே கொண்டுவரும் என்றும் அவர் கூறுகிறார்.
“இத்தகைய சந்தை கலாசார தாக்கத்திலிருந்து ஒருவர் தற்காத்துக்கொள்ள முடியாது,” என்றும் அவர் கூறுகிறார். குழந்தை பிறப்புக்கு பின்னர் உடல் எடையை குறைப்பதற்கான அழுத்தம் பெரும்பாலும் அந்த பெண்களின் குடும்ப உறுப்பினர்களாலேயே உருவாக்கப்படுகிறது.
பழைய தோற்றத்தை அடைய முடியுமா?
பெரும்பாலான பெண்கள் எவ்வளவு உடற்பயிற்சி, டயட் உள்ளிட்டவற்றை செய்தாலும் கர்ப்பத்திற்கு முந்தைய தோற்றத்தை அவர்களால் அடைய முடிவதில்லை என்பதும் யதார்த்தம்.
“நான் கர்ப்ப காலத்திற்கு பிந்தைய உடலை பூப்பெய்தலுடன் ஒப்பிடுவேன். பூப்பெய்திய ஒரு பெண்ணின் உடல் 9 அல்லது 10 வயதிலிருந்தது போன்று இருக்காது. நமது உடல் முழுவதுமாக மாறிவிட்டது என்பதை நாம் அறிவோம்” என்கிறார் வெயிட்ச். “கர்ப்ப காலம் அல்லது குழந்தை பிறப்புக்கு பிந்தைய காலத்தில் நமது உடல் முற்றிலும் மாறிவிடுவதில்லை. மாறாக, அதிகளவில் மாற்றம் அடைகிறது. எனவே, பெரும்பாலான பெண்கள் முன்பிருந்த அதே தோற்றத்தை அடைய மாட்டார்கள்” என்கிறார் அவர்.
ஆனால், கர்ப்ப காலத்திற்கு முந்தைய தோற்றத்தை அடைவதும் ஆரோக்கியமாக இருப்பதும் அனைத்து பெண்களுக்குமானது என்ற கலாசாரத்திற்கிடையில், மெலிந்த தோற்றத்தை கொண்டிராமல் இருப்பது தோல்வியாக கருதப்படுகிறது.
பிரிட்டிஷ் தொலைக்காட்சி தொகுப்பாளரும் சமூக ஊடக பிரபலமுமான ஆஷ்லே ஜேம்ஸ் என்பவர் இத்தகைய கலாசாரத்திற்கு எதிராக சமூக ஊடகங்களில் பதிவுகளை பகிர்ந்து வருகிறார். குழந்தை பிறப்புக்குப் பின் தன்னுடைய உடல் எதிர்கொண்டு வரும் மாற்றங்களை பகிர்ந்து வருகிறார்.
“கர்ப்பமாக இருக்கும் 9 மாதங்களும் நாம் எவ்வாறு பிரகாசிக்கிறோம், அழகாக இருக்கிறோம் என்பது குறித்து மற்றவர்கள் பேசுவார்கள். ஆனால், குழந்தை பிறந்ததற்கு பின்பு அதற்கு எதிராக பேசுவார்கள்,’ என்கிறார் அவர். “வெளி தோற்றத்தில் நாம் எப்படி இருக்கிறோம் என்பது முக்கியமல்ல. மாறாக அவர்கள், ‘இந்த உலகத்திற்கு ஓர் உயிரை கொண்டு வந்ததற்கு நன்றி’ என கூற வேண்டும்” என்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: • ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக் • டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர் • இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம் • யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்