மணிப்பூரில் இருந்து மனைவி, குழந்தைகளுடன் சென்னைக்கு தப்பி வந்தது எப்படி? 3 வார திகில் பயணம் பற்றி தமிழர் பேட்டி

- எழுதியவர், லிங்கேஷ் குமார். வே
- பதவி, பிபிசி தமிழுக்காக
மணிப்பூர் மாநிலத்தில் நடக்கும் கொடூரங்களை ஒரேயொரு வீடியோ நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்திவிட்டது.
அந்த ஒற்றை வீடியோ வெளியான பிறகு அங்கு நடைபெற்று வரும் கலவரம், பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்த செய்திகள் அடுத்தடுத்து வந்துகொண்டிருக்கின்றன.
இந்நிலையில், மணிப்பூர் மாநிலம் காக்சிங் மாவட்டத்தில் அமைந்துள்ள சக்னு என்ற சிறிய கிராமத்தில் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஜோசப் வசித்து வந்துள்ளார்.
அவர் மணிப்பூர் வன்முறைக்கு நடுவே பல்வேறு அபாயங்களில் இருந்து தப்பி தற்போது தமிழ்நாட்டிற்கு வந்து தஞ்சமடைந்துள்ளார்.
பிழைப்புக்காக மணிப்பூர் சென்ற தமிழர்
61 வயதான ஜோசப். அவரது இயற்பெயர் கண்ணன். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
இவரது தந்தை ராமசாமியும் தாய் கங்கம்மாளும் 50 ஆண்டுகளுக்கு முன்பே பிழைப்புக்காக மணிப்பூர் சென்றுவிட்டனர். ஜோசப்புக்கு நினைவு தெரிந்த வயதிலிருந்தே மணிப்பூரில்தான் வசித்து வந்துள்ளார்.
பிறகு அங்கேயே மணிப்பூர் பெண் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டு சொந்த வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார்.
இவரது மனைவி காம்லியங் நியங், இரண்டு மகன்கள் அலெக்ஸ், மங்கல்யன், மருமகள் லிந்தா, அவர்களுடைய இரண்டு வயது குழந்தை நன்சேன் மோன் உட்பட அவரது குடும்பத்தில் மொத்தம் ஒன்பது பேர்.
சுக்னு கிராமத்தில் சொந்த வீட்டில் சிறிய கடையுடன் பிளாஸ்டிக் பொருட்கள் வியாபாரம் செய்து வந்துள்ளார் ஜோசப்.

உயிர் தப்பி வந்த திகில் அனுபவம்
"நான் 8 வயதில் மணிப்பூர் சென்றேன். எனது பெற்றோர் அங்கேயே இறந்துவிட்டார்கள். மணிப்பூர் பெண்ணையே திருமணம் செய்துகொண்ட நான் அங்கேயே வாழ்ந்து வந்தேன்," என்று தனது பின்னணி குறித்துக் கூறினார் ஜோசப்.
அவர் தனது குடும்பத்தினருடன் சுக்னு கிராமத்தில் வசித்து வந்துள்ளார்.
"பிழைப்புக்காக அங்கு ஒரு பிளாஸ்டிக் கடை நடத்திக் கொண்டிருந்தேன். எனது மகன் பள்ளி வாகனம் ஓட்டும் பணியைச் செய்துகொண்டிருந்தான்."
கடந்த மே மாதம் கடைசி வாரத்தில் தங்கள் பகுதியிலும் கலவரம் பரவத் தொடங்கியதாகவும், இரவு நேரத்தில் கேட்ட துப்பாக்கிச் சத்தம், மரண ஓலம் தங்களுக்கு உயிர் பயத்தை ஏற்பத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டுக்கு தப்பி வர திட்டம்
மணிப்பூரில் வன்முறை ஒவ்வொரு கிராமமாகப் பரவி வந்தது. எந்த நேரமும் தங்கள் கிராமத்தில் உள்ள வீடுகள் தீக்கு இரையாகலாம் என்ற நிலையில் சுக்னு கிராமமும் இருந்தது.
ஆகவே, எப்படியாவது உயிர்பிழைத்தால் போதும் என்று எண்ணியபோது தமிழ்நாட்டுக்குச் சென்று விடலாம் என முடிவெடுத்துள்ளார் ஜோசப். தனது இரண்டு வயது பேரக்குழந்தை உட்பட குடுப்பத்தினர் 9 பேருடன் மணிப்பூரை விட்டுக் கிளம்பியுள்ளார்.
மூன்று வார திகில் பயணம்
மணிப்பூரில் இருந்து வெளியேறுவது என்று முடிவு செய்த பிறகுதான் அது அவ்வளவு எளிதான காரியமில்லை என்பதை ஜோசப் உணர்ந்துள்ளார்.
வழியெங்கும் கலவரம் எப்போது வேண்டுமானாலும் கலவரக்காரர்களால் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்ற நிலை. முதலில் சுக்னு கிராமத்தின் அருகிலுள்ள தேவாலையம் ஒன்றில் குடும்பத்தாருடன் தஞ்சம் அடைந்துள்ளார் ஜோசப்.
சுமார் ஒரு வாரத்திற்குப் பிறகு சான்டல் என்ற கிராமத்திற்குச் சென்று தான் சொந்தமாக வைத்திருந்த இரண்டு வாகனங்களைச் சொற்ப விலைக்கு விற்றுள்ளார்.
அதோடு ஏற்கெனவே வைத்திருந்த சிறிய தொகையையும் எடுத்துக்கொண்டு தமிழ்நாட்டை நோக்கித் தங்கள் பயணத்தை ஜோசப் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடங்கியுள்ளனர்.
"எங்கள் வீடு, உடைமைகள், எல்லாவற்றையும் இழந்து போகும் இடம் தெரியாமல் தலைமறைவாக காடுகளில் இருந்தோம். பிறகு சான்டலில் மிசோரம் சென்று அங்கிருந்து கவுகாத்திக்கு சென்றோம்," என்று தனது பயண அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

உறவினர்கள் உதவிக்கரம்
தமிழ்நாட்டிற்கு வர முடிவு செய்த நிலையில் சென்னை செங்குன்றம் அருகே வசிக்கும் தனது அண்ணன் மூர்த்தியை தொடர்பு கொண்டு விவரத்தைச் சொல்லியதாக ஜோசப் கூறினார்.
சென்னைக்கு வந்துவிடலாம் என்று முடிவு செய்த நிலையில், கையிலிருந்த பணம் தீர்ந்துவிட்டதாகவும், அந்த நேரத்தில் ராணுவ வீரர் ஒருவர் தங்களுக்கு உதவியதாகவும் கூறுகிறார் ஜோசப்.
அந்தப் பண உதவியைக் கொண்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்த அவர்களை ஜோசப்பின் அண்ணன் மூர்த்தி அழைத்து வந்து, செங்குன்றத்தில் ஒரு சிறிய வீட்டில் தங்க வைத்துள்ளார்.
ஜோசப்பின் குடும்பம், அந்த உதவியைக் கொண்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.
ஜோசப்பின் சகோதரர் மூர்த்தியும் அவரது சகோதரியும் செங்குன்றம் பகுதியில் வசித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், அவருடன் நீண்டகாலமாகத் தொடர்பில் இல்லாத நிலையில், தற்போது மணிப்பூரில் இருந்து தப்பி வந்த தனக்கு உறவினர்கள் உதவிக்கரம் நீட்டி வருவதாகவும் ஜோசப் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தனிப்பிரிவில் மனு
மணிப்பூரில் நல்லபடியாக வசித்து வந்த நிலையில், தற்போது பச்சிளம் குழந்தையுடன் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் தங்களுக்கு முதல்வர் உதவி செய்யவேண்டும் என்று முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளார் ஜோசப்.
தங்கள் குடும்ப உறுப்பினர்கள் கல்வியில் மிகவும் பின் தங்கியுள்ளதாகவும் தாங்கள் வாழ்ந்து வந்த வீடு கடைமற்றும் உடைமைகளை இழந்து நிற்கிறது ஜோசப்பின் குடும்பம்.
ஆகவே, "இறுதியாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளதாகவும். தமிழ்நாடு முதலமைச்சர் பொருளாதார ரீதியாக உதவி செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

துணை ஆட்சியர், அதிகாரிகள் நேரில் விசாரணை
முதல்வரின் தனிப்பிரிவில் ஜோசப் மனு அளித்த நிலையில், அந்தத் தகவலின் அடிப்படையில் சென்னை மாவட்ட துணை ஆட்சியர், சுகாதாரத் துறை அதிகாரிகள், பாடியநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் நேரில் வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.
ஜோசப் மற்றும் அவரது குடும்பத்தினருக்குத் தேவையான உணவுப் பொருட்கள், அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்துள்ளனர்.
மேலும் தற்போது பாடியநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவருடைய பரிந்துரையின் பேரில் தனது மகன்கள், மகள்களுக்கு தனியார் நிறுவனங்களில் தற்காலிக வேலை கிடைத்துள்ளதாகவும் ஜோசப் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












