1.2 லட்சம் ஆண்டுகளில் இந்த ஜூலைதான் வெப்பமான மாதமா? காலநிலை மாற்றம் பற்றி ஐ.நா. என்ன சொல்கிறது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மாட் மெக்ராத் & மார்க் பாய்ண்டிங்
- பதவி, பிபிசி நியூஸ் காலநிலை & அறிவியல்
உலகளவில் வெப்பநிலை உயர்ந்து வரும் நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வியாழனன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ், இது தொடர்பாக அழுத்தமான உரையை நிகழ்த்தினார்.
தற்போதைய சூழலை 'பூமி கொதித்துக்கொண்டிருக்கும் காலம்'(Era of global boiling) என்று குறிப்பிட்ட அவர், காலநிலை தொடர்பாக உடனடி நடவடிக்கை தேவை என்றும் வலியுறுத்தினார்.
"காற்றை சுவாசிக்க முடியவில்லை, வெப்பத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை, கரிம எரிபொருள் மூலம் எட்டப்படும் லாபத்தையும் பருவநிலை தொடர்பாக எதுவும் செய்யாமல் இருப்பதையும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை," என்று அன்டோனியோ பேசினார்.
மேலும், "இதன் விளைவுகள் தெளிவானவை மட்டுமல்ல சோகமானவையும்கூட. பருவமழையால் குழந்தைகள் அடித்துச் செல்லப்படுகின்றனர். குடும்பங்கள் தீப்பிழம்புகளில் இருந்து தப்பி ஓடுகின்றன.
தொழிலாளர்கள் வெப்பத்தில் சரிகின்றனர். காலநிலை மாற்றத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது. இது வெறும் ஆரம்பம் மட்டுமே," என்று தனது வேதனையை அவர் வெளிப்படுத்தினார்.

பட மூலாதாரம், Reuters
நம்மிடம் இருக்கும் தரவுகளின்படி, இந்த ஜூலைதான் பூமியின் வெப்பமான மாதம் என்று உலக வானிலை நிறுவனம் கூறியதைத் தொடர்ந்து, அன்டோனியோ குட்டரஸ் இத்தகைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
நடப்பு ஆண்டின் ஜூலை மாதத்தில் இதுவரையிலான காலகட்டத்தில் மூன்று நாட்களில் இதுவரை இல்லாத அளவு வெப்பம் பதிவாகியுள்ளது.
இதுவரை நாம் பதிவு செய்துள்ளதிலேயே இந்த ஜூலையின் முதல் மூன்று வாரங்கள்தான் அதிக வெப்பமானது என்று கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற சேவையின் இயக்குநர் கார்லோ பியூன்டெம்போ ஜெனிவாவில் நடைபெற்ற கூட்டத்தில் கூறியுள்ளார்.
காலநிலை - கூடுதல் நிதி தேவை
அன்டோனியோ குட்டரஸ் தனது உரையில் உலக தலைவர்களின் உணர்ச்சியைத் தொடுவதை நோக்கமாக கொண்டிருந்தார். அதே நேரத்தில் காலநிலை தொடர்பான பிரச்னையைச் சமாளிக்க கூடுதல் நிதி வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் வைத்தார்.
பாரிஸ் உடன்படிக்கையின் கீழ், காலநிலை மாற்றத்தைத் தணிக்க வளரும் நாடுகளுக்கு ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர்கள் வழங்க பணக்கார நாடுகள் உறுதியளித்தன. மாசு வெளியேற்றாத எரிபொருள்களுக்கும், தொழில்நுட்பங்களுக்கும் மாறுவதற்காகவும், மாறிவரும் காலநிலைக்கும் ஏற்ப மாற்றங்களை உருவாக்க உதவுவதற்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டது. 2020க்குள் இதைச் சாத்தியமாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இந்த இலக்கு எட்டப்படாமல் உள்ளது.
தற்போது வெப்பநிலை அதிகரித்து வரும் சூழலில், ஜி20 உறுப்பு நாடுகள் தங்கள் கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கான புதிய இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும் என்று குட்டரஸ் கேட்டுக் கொண்டார்.
OECD நாடுகளுக்கு 2030க்குள் நிலக்கரியிலிருந்து வெளியேறவும், 2040ஆம் ஆண்டுக்குள் உலகின் பிற நாடுகள் நிலக்கரி பயன்பாட்டிலிருந்து வெளியேறவும் நம்பகமான திட்டங்கள் தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.
கூடுதலாக, காலநிலை மாற்றத்தின் தாக்கத்திற்கு ஏற்ப வெள்ளத்திற்கு எதிரான தடுப்புகளை அமைத்தல், கடுமையான வெப்பத்தைச் சமாளிக்கும் நகரங்களை வடிவமைத்தல் போன்ற நடவடிக்கைகள் குறித்தும் அவர் பேசினார்.

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவின் பதில் என்ன?
இந்த விவகாரம் தொடர்பாகப் பேசியுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், காலநிலை மாற்றத்தை அச்சுறுத்தல் என்று குறிப்பிட்டார்.
அதீத வெப்பம் காரணமாக அமெரிக்காவுக்கு ஆண்டு ஒன்றுக்கு ஒரு பில்லியன் டாலர் அளவுக்கு இழப்பு ஏற்படுகிறது என்றும், இதுவரை இல்லாத வெப்பநிலை காரணமாக 10 கோடி அமெரிக்கர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பேசினார்.
"காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை இனி யாரும் மறுக்க முடியாது" என்று பைடன் தெரிவித்தார்.
இதுவரை இல்லாத வெப்பம்
கடந்த 1,20,000 ஆண்டுகளில் இந்த ஜூலைதான் மிகவும் வெப்பமான மாதமாக இருக்கும் என்று சில நிபுணர்கள் நம்புகின்றனர்.
உலகின் வெப்பம் மிகுந்த நாள் நடப்பு ஆண்டு ஜூலையில் பதிவாகியுள்ளது. இதேபோல், கடந்த 2016ஆம் ஆண்டு அதிகபட்ச உலகளாவிய சராசரி வெப்பநிலை பதிவானது. அந்த சாதனையும் இந்த ஆண்டு முறியடிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய யூனியனின் காலநிலை கண்காணிப்பு நிறுவனமான கோபர்நிகஸ் கருத்துப்படி, இந்த ஆண்டு ஜூலை 6ஆம் தேதி, உலக சராசரி வெப்பநிலை 17.08 டிகிரி செல்சியஸை எட்டியது. இது இதுவரை இல்லாத அளவாகும்.
புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டுடன் இந்த அதீத வெப்பநிலைக்கு தொடர்பு உள்ளது என்பதை விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்கிறார்கள்.
இந்த எரிபொருட்களால் உருவாகும் மாசு சூரிய ஒளியை தடுத்து பூமியைச் சுற்றி ஒரு பசுமை இல்லமாக செயல்படுவதோடு தீவிர வானிலை நிகழ்வுகளை வலுப்படுத்துகிறது.

பட மூலாதாரம், Getty Images
"ஜூலையில் பல கோடி மக்களைப் பாதித்த தீவிர வானிலை என்பது துரதிர்ஷ்டவசமாக, காலநிலை மாற்றத்தின் அப்பட்டமான உண்மை மட்டுமல்ல எதிர்காலம் குறித்த முன்னறிவிப்பும் கூட " என்று உலக வானிலை அமைப்பின் பொதுச் செயலாளர் பெட்டேரி தாலாஸ் தெரிவித்தார்.
"பசுமை இல்ல வாயு உமிழ்வை முன்னெப்போதும் இல்லாததை விட அவசரமாக குறைக்க வேண்டிய அவசியம் உள்ளது. காலநிலை தொடர்பான நடவடிக்கை என்பது ஆடம்பரமானது அல்லது, இது ஒரு கடமை" என்றும் அவர் கூறுகிறார்.
புவி மெப்பமடைதல் ஒரு பக்கம் இருக்க, எல் நினோ காரணமாக கிழக்கு பசிபிக் சமுத்திரம் வெப்பமடைந்துள்ளது. இது வளிமண்டலத்தில் வெப்பத்தை வெளியிடுகிறது. இதனால், 2023 அல்லது 2024 மிகவும் வெப்பமான ஆண்டாக பதிவாக வாய்ப்பு உள்ளது.
"மோசமானதை நம்மால் தடுத்து நிறுத்த முடியும். அவ்வாறு செய்வதற்கு நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். காலநிலை தொடர்பான நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்" என்று குட்டரஸ் வலியுறுத்துகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












