இந்தியா - சீனா நெருங்கி வருவதை பாகிஸ்தான் எப்படி பார்க்கிறது?

பட மூலாதாரம், Reuters
- எழுதியவர், அசாம் கான்
- பதவி, பிபிசி உருது, இஸ்லாமாபாத்
இந்திய பிரதமர் நரேந்திர மோதியும் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரிஃபும் பல்வேறு நாட்டு தலைவர்களுடன் சீனாவின் தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
மோதி சீன அதிபர் ஷி ஜின்பிங் உடன் இருதரப்பு சந்திப்பை மேற்கொண்டார். அப்போது ஷாபாஸ் ஷெரிஃப், தியான்ஜின் பல்கலைக்கழகத்தில் பாகிஸ்தான் - சீனா உறவுகள் பற்றி நீண்ட உரையாற்றினார்.
உலகளாவிய சூழ்நிலை மாறி வருவதாக மோதியுடனான சந்திப்பின்போது ஷி ஜின்பிங் தெரிவித்தார்.
சீனாவும் இந்தியாவும் பழமையான நாகரிகங்கள் மட்டுமல்ல, உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளாகவும் தெற்கு அரைக்கோளத்தில் முக்கிய அங்கமாகவும் உள்ளது எனத் தெரிவித்தார் ஜின்பிங்.
இருநாடுகளும் நல்ல நண்பர்களாக இருந்து ஒருவரின் வெற்றிக்கு இன்னொருவர் பங்களிக்கும் கூட்டாளிகளாகவும் இருக்க வேண்டும் என சீன அதிபர் கூறினார். யானையும் டிராகனும் ஒன்றாக வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.
சீனாவுடனான உறவுகளை மேம்படுத்த இந்தியா உறுதியுடன் இருப்பதாக பிரதமர் மோதி தெரிவித்துள்ளார். மேலும் அவர், "280 கோடி மக்களின் நலன்களும் இருநாடுகள் இடையேயான ஒத்துழைப்புடன் தொடர்புடையது" எனத் தெரிவித்தார்.
இந்தியா 50% அமெரிக்க வரியை எதிர்கொண்டுள்ளபோது இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
வல்லுநர்களின் கூற்றுப்படி, இந்த வரி இந்தியாவின் ஏற்றுமதி மீது கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
தற்போது இந்தியாவும் சீனாவும் கடந்த கால எல்லை மோதல்களுக்கு மாறாக தங்களின் உறவுகளுக்கு புதிய வடிவம் கொடுப்பதில் கவனம் செலுத்தி வருகின்றன.
சாத்தம் ஹவுஸ் என்கிற ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த கிஷிதிஜ் பாஜ்பாய், இருநாடுகளுக்கும் இடையேயான உறவுகள் தற்போது உலகத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்களைப் பொருத்து இருக்கும். மோதியின் சீனப் பயணம் இந்த உறவுகளின் ஒரு திருப்புமுனையாக உள்ளது" எனத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
இந்தியா - சீனா பரஸ்பரம் எதிர்பார்ப்பது என்ன?
சர்வதேச நாணய நிதியத்தின்படி இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக விரைவில் உருவெடுக்கும்.
சீனா உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது.
"சீன-அமெரிக்க உறவுகளுக்கு உலகம் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது" என பெய்ஜிங்கைச் சேர்ந்த வைசவா அட்வைசரி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சி-அன்-லியு கூறுகிறார்.
"தற்போது உலகின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பெரிய பொருளாதாரங்கள் (சீனா மற்றும் இந்தியா) எவ்வாறு இணைந்து வேலை செய்ய முடியும் என்பதில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது" என்று தெரிவித்தார்.
ஆனால் இருநாடுகளுக்கும் இடையேயான உறவுகள் மிகப்பெரிய சவாலாக உள்ளன. ஏனென்றால் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக தீர்க்கப்படாத எல்லைத் தகராறு உள்ளது.
ஆசியா டீகோட் என்கிற ஆய்வு மையத்தின் நிறுவனரும் பொருளாதார வல்லுநருமான பிரியங்கா கிஷோர், "இருநாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இது போல விசா மேலும் தளர்த்தப்பட்டு இதர வர்த்தக ஒப்பந்தங்களும் கையெழுத்தாகலாம்" எனக் கூறுகிறார்.
இன்ஸ்டிடியூட் ஆப் இன்டர்நேஷனல் ஸ்டடீஸில் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பாதுகாப்பு, உத்தி மற்றும் ராஜ்ஜிய விவகாரங்களுக்காண மூத்த ஆய்வாளராக உள்ளார் ஆண்டன் லெவெஸ்க்.
"தெற்காசியாவில் நிலைத்தன்மைக்காக இந்தியா மற்றும் சீனாவை எதிர்நோக்கும் நாடுகளின் எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்ய இருநாடுகளுக்கும் (இந்தியா மற்றும் சீனா) இடையே பேச்சுவார்த்தை நடக்க வேண்டும்" எனத் தெரிவிக்கிறார் ஆண்டன்.
எல்லை மோதலுக்கு அப்பாலும் இருநாடுகளுக்கும் இடையே வேறு பல சர்ச்சைகளும் உள்ளன.
அவற்றுள், இந்தியாவில் வசித்து வரும் திபெத் பௌத்த மத தலைவரான தலாய் லாமா மீதான சர்ச்சை மற்றும் பிரம்மபுத்திரா நதி சர்ச்சை ஆகியவை முதன்மையாக உள்ளன. பிரம்மபுத்திரா நதியில் உலகின் மிகப்பெரிய நீர்மின் நிலையத்தை சீனா நிர்மாணிக்கிறது. இந்தியா இதை விரும்பவில்லை.
அதேபோல் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே உள்ள பதற்றமும் இந்த உறவுகளில் ஒரு சவாலாக உள்ளது. சமீப காலங்களில், இந்தியா அதன் அண்டை நாடுகளுடன் நல்ல உறவுகள் கொண்டிருக்கவில்லை. அதே வேளையில் பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானின் முக்கிய வர்த்தக கூட்டாளியாக சீனா உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இந்தியா - சீனா நெருங்கி வருவதை பாகிஸ்தான் எப்படி பார்க்கிறது?
எஸ்சிஓ உச்சிமாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர். ஆனால் இவை அனைத்தையும் தாண்டி சீனாவில் எந்த நாட்டின் தலைவருக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கிறது என்பது பற்றி இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் சமூக ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டன.
தியான்ஜின் விமான நிலையம் வந்தடைந்த பிறகு பல புகைப்படங்களை பதிவிட்ட மோதி "எஸ்சிஓ உச்சிமாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களைச் சந்திப்பதை எதிர்நோக்கி உள்ளேன்" என அந்த பதிவில் தெரிவித்திருந்தார்.
ஷாபாஸ் ஷெரிஃபின் எக்ஸ் பக்கத்தில் அவரின் புகைப்படம் ஒன்று பதிவிட்டிருந்தது. அதில், "பிரதமர் தியான்ஜினில் எஸ்சிஓ மாநாட்டிலும் பெய்ஜிங்கில் இரண்டாம் உலகப் போரில் பாசிசத்தை வெற்றி கொண்டதன் 80வது ஆண்டு கொண்டாட்டத்திலும் கலந்து கொள்ள இருக்கிறார்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
"பாகிஸ்தான் - சீனா நட்பு பரஸ்பர நம்பிக்கை, மரியாதை மற்றும் உண்மையான அன்பைச் சார்ந்தது. நம்முடைய நட்பு அனைத்து சோதனைகளையும் கடந்து நிற்கிறது. பாகிஸ்தானும் சீனாவும் அனைத்து கடினமான நேரங்களிலும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவளித்துள்ளன" என ஷெபாஸ் ஷெரிஃப் ஞாயிறு அன்று தியான்ஜின் பல்கலைக்கழகத்தில் பேசினார்.
மேலும் அவர், "இந்த நேரத்தில் உலகில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஆனால் நமது நட்பு மேலும் வலுவாகி வருகிறது, நம்முடைய இலக்கு ஒன்றாக உள்ளது. இஸ்லாமிய உலகில், சீன மக்கள் குடியரசை அங்கீகரித்த முதல் நாடு பாகிஸ்தான். பெய்ஜிங் சென்ற முதல் சர்வதேச விமானம் 60 ஆண்டுகளுக்கு முன்பு கராச்சியிலிருந்து தான் புறப்பட்டுச் சென்றது" எனத் தெரிவித்தார்.
பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு செயலாளர் இஜாஸ் அகமது சௌத்ரி சீனா உடனான இந்தியாவின் உறவுகள் பாகிஸ்தான் மீது எந்த எதிர்மறையான தாக்கமும் கொண்டிருக்காது எனத் தெரிவித்தார். சீனா உடனான பாகிஸ்தானின் உறவு மிக வலுவாகவும் உத்தி சார்ந்ததாகவும் உள்ளது என்றும் கூறினார்.
சீனாவை ஆய்வு செய்து வரும் சர்வதேச விவகாரங்கள் வல்லுநரான முனைவர் ஃபஸ்லுர் ரஹ்மான் பிபிசியிடம் பேசுகையில், "சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான நட்பு எந்த வெளிப்புற காரணிகளுக்கும் அப்பாற்பட்டது. சீனா உடனான இந்தியாவின் உறவுகள் நிச்சயம் முன்னேறும், ஆனால் அதற்கு பெரிய நோக்கம் எதுவும் கிடையாது" எனத் தெரிவித்தார்.
தற்போது இரு நாடுகளுக்கும் இடையேயான வர்ததக உறவுகள் 100 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளதாக கூறும் அவர், இந்தியா அதனை மேலும் அதிகரித்து சீனாவிலிருந்து தொழில்நுட்ப பரிமாற்றம் பெறவும் விரும்புகிறது எனத் தெரிவித்தார்.
"இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் திறன் பாகிஸ்தானிடம் இல்லை. ஏனென்றால் அத்தகைய உள்கட்டமைப்பு தற்போது நம்மிடம் இல்லை" எனக் கூறுகிறார் ரஹ்மான்.
எஸ்சிஓவின் தாக்கம் என்பது அளவானது, ஏனென்றால் இதில் சம்மந்தப்பட்டுள்ள நாடுகளுக்கு இடையேயான உறவுகள் நன்றாக இல்லை என அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
மற்றுமொரு பாகிஸ்தான் முன்னாள் ராணுவ செயலாளரான ஜோஹர் சலிம் கூறுகையில், "பிரதமர் மோதி பல வருடங்களாக எஸ்சிஓ கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை. மோதி அவரின் அமைச்சர்களில் ஒருவரைத் தான் அனுப்பி வந்தார்." என்றார்.
அவரின் கருத்துப்படி அமெரிக்கா உடனான உறவுகள் பதற்றமடைகிறபோது தனக்கு வேறு வாய்ப்புகள் இருக்கிறது என காண்பிக்க இந்தியா விரும்புகிறது.
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான பதற்றத்துக்கான காரணத்தையும் அவர் விவரித்தார்.
"அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் வேலை செய்வது தான் பதற்றத்துக்கு காரணம், இதனால் வேலை வாய்ப்புகள் அமெரிக்காவை விட்டு வெளியே செல்கின்றன. இவை போக, பாகிஸ்தானுடனான போர்நிறுத்தத்திற்கு அமெரிக்காவுக்கு எந்த அங்கீகாரமும் இந்தியா கொடுக்கவில்லை. ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது போன்ற பிரச்னைகளால் டிரம்ப் கோபத்தில் உள்ளார்" என்று கூறினார்.
இந்தியா இவை அனைத்தையும் ஒரு காட்சிக்காக செய்வதாக கூறும் ஜோஹர் சலிம் அதில் ஆழம் இல்லை என்கிறார். எனினும் இந்தியாவுக்கும் சீனாவுக்குமான வர்த்தக உறவுகள் மிகவும் ஆழமானவை என்றும் தெரிவித்தார்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே உத்தி சார்ந்த மோதல் நடைபெற்று வருகிறது, இது நீண்ட காலம் நீடிக்கும் என்றும் ஜோஹர் சலிம் தெரிவித்தார்.
"இந்தியா வல்லரசாகும் லட்சியத்துடன் உள்ளது. இந்தப் போட்டியில் சீனாவை தனது எதிரியாகவும் தடையாகவும் கருதுகிறது. இந்தியாவுக்கு சீனாவுடன் மூலாபாய கூட்டுக்கான எந்த வாய்ப்புகளும் இல்லை. இறுதியாக இந்தியா தனது இலக்குகளை அடைய மேற்கத்திய நாடுகளை நோக்கிய பழைய அணுகுமுறையை ஏற்றுக்கொள்ள வேண்டி வரும்" என்கிறார் ஜோஹர் சலிம்.
பாகிஸ்தான் மற்றும் சீனாவின் நலன்கள் ஒன்றாக உள்ளதாகக் கூறுகிறார் ஜோஹர் சலிம்.
"இந்தியாவுக்கென கொள்கைகள் உள்ளன, சில நேரங்களில் அமெரிக்கா உடன் மிகவும் நெருக்கமாக செல்கிறது, சில நேரங்களில் விலகிச் செல்கிறது. இது பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளுடனான உறவுகளையும் பதற்றமாக்கியுள்ளது" என்கிறார் இஜாஸ் அகமது.
மோதி கடந்த ஏழு வருடங்களாக சீனாவிற்குச் செல்லவில்லை எனக் கூறும் அவர் தற்போதைய சூழலில் சென்று வருவதால் அவரால் எந்த பெரிய மாற்றமும் கொண்டு வர முடியாது என்கிறார்.
பிராந்தியத்தில் நிலைத்தன்மையும் அமைதியும் வேண்டும் என சீனா விரும்புவதால் அந்நாட்டுடன் இந்தியா இணங்கிச் செல்வது பாகிஸ்தான் மீது நேர்மறையான தாக்கம் கொண்டிருக்கும் என ஒப்புக்கொள்கிறார் ஜோஹர் சலிம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












