சயத் முஸ்தாக் அலி டி20 கோப்பை: திரிபுரா அணிக்கு எதிராக தமிழ்நாடு அபார வெற்றி

சயத் முஸ்தாக் அலி கோப்பை: தமிழ்நாடு - திரிபுரா

பட மூலாதாரம், Getty Images

இந்தூரில் நடந்து வரும் சையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான டி20 தொடரில் இன்று நடந்த பி பிரிவு ஆட்டத்தில் திரிபுரா அணியை 43 ரன் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி வென்றுள்ளது.

முதலில் பேட் செய்த தமிழ்நாடு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் சேர்த்தது. கடின இலக்குடன் களமிறங்கிய திரிபுரா அணி 9 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.

இந்த வெற்றி மூலம் பி பிரிவில் 4 புள்ளிகளுடன் தமிழ்நாடு அணி முதலிடத்தில் இருக்கிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தமிழ்நாடு அணி மிகப்பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு பாபா இந்திரஜித்(78), விக்கெட் கீப்பர் நாராயண் ஜெகதீசன்(50) ஆகியோரின் பார்ட்னர்ஷிப் முக்கியக் காரணமாகும்.

அதிரடியாக ஆடிய இந்திரஜித் 39 பந்துகளில் 5 சிக்ஸர், 5 பவுண்டரிகள் உள்பட 78 ரன்கள் சேர்த்தார். ஜெகதீசன் 30 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரி என 50 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைத்தனர்.

தமிழ்நாடு அணிக்கு புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட ஷாருக்கான் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என அதிரடியாக 18 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். விஜய் சங்கர் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகள் என 17 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். இருவரின் கேமியோ தமிழக அணியின் ஸ்கோரை 200 ரன்களுக்கு மேல் கொண்டு சென்றது.

ரித்திக் ஈஸ்வரன் 17, சோனு யாதவ் ஒரு ரன்னுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். திரிபுரா தரப்பில் அஜய் சர்க்கார், முராசிங் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

235 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடினமான இலக்குடன் திரிபுரா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்கார்கள் விக்ரம்குமார் தாஸ், ஸ்ரீதம் பால் அதிரடியான தொடக்கத்தை அளித்தனர்.

விக்ரம்குமார் நிதானமாக பேட் செய்ய, ஸ்ரீதம் பால் அதிரடியாக ஆடி தமிழக வீரர்களின் பந்துவீச்சில் பவுண்டரி, சிக்ஸர் என விளாசினார். 4 ஓவர்களில் திரிபுரா அணி 50 ரன்களை எட்டியது. சாய்கிஷோர் சுழற்பந்துவீச்சில் விக்ரம்குமார் 10 ரன்னில் இந்திரஜித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அதன்பின் திரிபுரா அணி மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. 51 ரன்கள் வரை விக்கெட் இழப்பின்றி ஆடிய திரிபுரா அடுத்த 26 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. 51 முதல் 59 ரன்களுக்கள் 3 விக்கெட்டுகளை இழந்தது திரிபுரா அணி.

நடுவரிசை பேட்ஸ்மேன்கள் தேஜஸ்வி ஜெய்ஸ்வால்(1), கேப்டன் மன்தீப் சிங்(9)ஸ்ரீநிவாஸ் சரத்(26) ஆகியோரின் விக்கெட்டுகளை சாய் கிஷோர், சக்ரவர்த்தி ஆகியோர் வீழ்த்தி திரிபுரா அணியை நெருக்கடியில் தள்ளினர்.

சயத் முஸ்தாக் அலி கோப்பை: தமிழ்நாடு - திரிபுரா

பட மூலாதாரம், Getty Images

ஆனால், ரஜத்தேய், மணிசங்கர் முராசிங் இருவரும் அணியைச் சரிவிலிருந்து மீட்கப் போராடினர். 6-வது விக்கெட்டுக்கு 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர். முராசிங் 37 ரன்களில் விஜய் சங்கர் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். ரஜத் தேய் 37 ரன்களில் சந்தீப் வாரியர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இருவரும் ஆட்டமிழந்ததுதான் திருப்புமுனையாகும், இருவரின் விக்கெட்டை வீழ்த்தியதும் தமிழக அணியின் வெற்றி உறுதியானது.

அதன்பின் அடுத்த 21 ரன்களில் மளமளவென 3 விக்கெட்டுகளை திரிபுரா அணி இழந்து தோல்வி அடைந்தது.

தமிழக அணி தரப்பில் விஜய் சங்கர், சாய் கிஷோர், வருண் சக்ரவர்த்தி, குர்ஜப்நீத் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சந்தீப் வாரியர் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

சாய்கிஷோர், வரும் சக்ரவர்த்தி பந்துவீச்சு திரிபுரா பேட்ஸ்மேன்களை பெரிதாக கட்டுப்படுத்தவில்லை. 4 ஓவர்களை வீசிய வருண் 49 ரன்களை வாரி வழங்கினார், சாய் கிஷோர் 4 ஓவர்களில் 34 ரன்களை வழங்கினார். குர்ஜப்நீத் சிங் மட்டுமே ஓரளவுக்கு சுமாராக பந்துவீசி 4 ஓவர்களில் 28 ரன்களை வழங்கினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)