You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விஸ்வகர்மா திட்டம் - கலைஞர் கைவினைத் திட்டம் இரண்டும் ஒன்றா? தமிழ்நாடு அரசு கூறுவது என்ன?
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
'கலைஞர் கைவினைத் திட்டம்' என்ற புதிய திட்டத்தை செவ்வாய் அன்று (டிசம்பர் 10) தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் மீது ஸ்டிக்கர் ஒட்டி பெயரை மாற்றி தி.மு.க அரசு திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
'இரண்டு திட்டங்களும் வேறுவேறு; எந்த தொடர்பும் இல்லை' என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.
மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்துக்கும் தமிழ்நாடு அரசின் கலைஞர் கைவினைத் திட்டத்துக்கும் என்ன வேறுபாடு?
விஸ்வகர்மா யோஜனா திட்டம்
மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டம், கடந்த ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி துவக்கப்பட்டது. இதற்காக ரூ.13 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
திட்டத்தின்படி, 'பொற்கொல்லர்கள், தச்சர்கள், குயவர்கள், சிற்பிகள், காலணி தைக்கும் தொழிலாளிகள், கூடை, பாய் தயாரிப்பவர்கள், கயிறு தயாரிப்போர், சலவைத் தொழிலாளர்கள், தையல் தொழிலாளர்கள், இரும்புக் கொல்லர்கள், பூட்டு தயாரிப்போர் என பதினெட்டு வகையான தொழில்களைச் செய்வோர் பலன் பெறலாம்' என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இத்தொழில்களை மேற்கொள்ளும் தொழிலாளிக்கு முதல் தவணையாக ஒரு லட்ச ரூபாய் வரை வட்டியில்லா கடனும் இரண்டாம் கட்டமாக இரண்டு லட்ச ரூபாயும் வழங்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
திட்டத்தின்படி, "விண்ணப்பிக்கும் நபருக்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முன்பே அந்த தொழிலில் ஈடுபட்டிருக்க வேண்டும். திட்டத்தில் இணைந்த பிறகு அடிப்படை மற்றும் உயர்நிலை பயிற்சிகள் வழங்கப்படும்" என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பயிற்சி காலத்தில் நாளொன்றுக்கு ரூ.500 வழங்கப்படும் எனவும் மத்திய அரசின் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
விஸ்வகர்மா திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு ஏன்?
விஸ்வகர்மா யோஜனா திட்டம், 18 வயதுக்கு முன்பே இளைஞர்களை குடும்ப தொழிலில் ஈடுபடத் தூண்டும் வகையில் உள்ளதாகக் கூறி இத்திட்டத்தில் இணைய தமிழ்நாடு அரசு மறுத்துவிட்டது.
தமிழ்நாட்டைப் போலவே மேற்குவங்க அரசும் இத்திட்டத்தில் இணைய மறுத்துவிட்டதாக, செப்டம்பர் மாதம் கோவையில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.
திட்டம் தொடர்பாக, மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்துறை அமைச்சர் ஜிதன்ராம் மஞ்சிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், விஸ்வகர்மா யோஜனா திட்டம் என்பது சாதி அடிப்படையிலான தொழில்முறையை வலுப்படுத்தும் என்பதைக் கருத்தில் கொண்டு திட்டத்தை ஆய்வு செய்வதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக ஸ்டாலின் கூறியிருந்தார்.
தமிழ்நாடு அரசு அமைத்த குழுவினர், விரிவான ஆய்வு நடத்தி மாற்றங்களை மேற்கொள்வது தொடர்பாக பரிந்துரைத்துள்ளதாகவும் கடிதத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.
'எந்தவொரு தொழிலையும் மேற்கொள்ள விரும்பும் யாரும் இந்த திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற தகுதியானவராக இருக்க வேண்டும். திட்டத்தில் பயன்பெறும் குறைந்தபட்ச வயது வரம்பை 35 ஆக உயர்த்த வேண்டும்' எனவும் கடிதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.
இதுதொடர்பாக கடந்த ஜனவரியில் எழுதிய கடிதத்துக்கு கடந்த மார்ச் 15 ஆம் தேதி மத்திய அரசிடம் இருந்து பதில் கடிதம் வந்துள்ளதாக கூறியுள்ள ஸ்டாலின், மாநில அரசு பரிந்துரைத்த திருத்தங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பதால் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது என்று தெரிவித்துள்ளார்.
அதேநேரம், சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டாமல் கைவினைக் கலைஞர்களை உள்ளடக்கி விரிவான திட்டத்தைக் கொண்டு வர தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாகவும் ஸ்டாலின் கூறினார்.
கலைஞர் கைவினைத் திட்டம்
தமிழ்நாடு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், கடந்த 10ஆம் தேதி செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், கலைஞர் கைவினைத் திட்டம் பற்றி அவர் குறிப்பிட்டுள்ளார்.
குடும்பத் தொழில் அடிப்படையில் அல்லாமல் 25 கைவினைக் கலைகள் மற்றும் தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார்.
இத்திட்டத்தின் மூலம் புதிய தொழிலைத் தொடங்கவும் செய்யும் தொழிலை மேம்படுத்தவும் கடன் உதவி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அரசின் செய்திக் குறிப்பு கூறுகிறது.
இதற்காக அதிகபட்சமாக 3 லட்ச ரூபாய் வரையில் கடன் உதவி பெறலாம். அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் மானியம் வழங்கப்படும், 5 சதவீதம் வரையில் வட்டி மானியமும் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் பயனாளிகள், குறைந்தபட்சம் 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு, படகு தயாரித்தல், மர வேலைகள், உலோக வேலை, மண் பாண்டம், கட்டட வேலை, கயிறு, பாய் பின்னுதல், மலர், பொம்மை வேலைகள், அழகுக்கலை, நகை தயாரிப்பு, துணி வெளுத்தல், துணி தேய்த்தல், இசைக்கருவி தயாரித்தல், பனை ஓலை, பிரம்பு வேலைப்பாடு, ஓவியம் வரைதல் உள்பட 25 வகையான தொழில்களைப் பட்டியலிட்டுள்ளது.
திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்களை மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் தலைமையிலான குழு சரிபார்த்து வங்கிகளுக்கு பரிந்துரை செய்யும் எனவும் மாநில அரசின் செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.
இரண்டு திட்டங்கள் - சர்ச்சையாவது ஏன்?
மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தின் மீது ஸ்டிக்கரை ஒட்டி பெயரை மாற்றி தி.மு.க அரசு வெளியிட்டுள்ளதாக, செவ்வாய் அன்று (டிசம்பர் 10) தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்த முடியாமல் குழப்பம் ஏற்படுத்தியதால் தமிழக மக்களின் கோபத்தை தி.மு.க எதிர்கொள்ள நேர்ந்தது என, தனது எக்ஸ் பக்கத்தில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
உண்மையான பயனாளிகளுக்கு பிரதமரின் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் மானியங்களின் நோக்கத்தை தி.மு.க அரசு நீர்த்துப் போகச் செய்துள்ளதாக கூறியுள்ள அண்ணாமலை, "மக்களுக்கு பயன் அளிக்காத அரசியல் அர்த்தமற்றது என்பதை ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும்" எனவும் கூறியுள்ளார்.
இதையே பிபிசி தமிழிடம் கூறிய பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், "முன்கூட்டியே இந்த திட்டத்தை தி.மு.க அரசு கொண்டு வந்திருந்தால் சிக்கல் இல்லை. மத்திய அரசு கொண்டு வந்த பின்னர், புதிதாக கொண்டு வந்ததுபோல காட்டிக் கொள்கிறது" என்கிறார்.
இந்தக் கருத்தை மறுத்து பிபிசி தமிழிடம் பேசிய தி.மு.க செய்தித் தொடர்பு மாநில தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே.எஸ்.இளங்கோவன், "தொழிலில் கல்வி கற்பதற்கு கொடுக்கும் நிதி உதவி வேறு. தொழிலில் பயிற்சி பெறுவதற்கு கொடுக்கும் நிதி உதவி வேறு. மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களுக்குள் இருக்கும் வேறுபாடு இதுதான்" என்றார்.
இரண்டும் ஒரே திட்டமா? மாநில அரசு சொல்வது என்ன?
'விஸ்வகர்மா திட்டமும் கலைஞர் கைவினைத் திட்டமும் வேறுவேறு' என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்புக் குழு (TN FACT CHECK) தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, விஸ்வகர்மா திட்டம் தொடர்பான விதிமுறைகளை அக்குழு பதிவிட்டுள்ளது.
தங்கள் குடும்ப தொழிலில் 18 வயதுக்கு முன்பே ஒருவர் ஈடுபடத் தூண்டும் வகையில் இது உள்ளதாகக் கூறியுள்ள தகவல் சரிபார்ப்புக் குழு, "இது மாணவர்களை உயர்கல்வி கற்கும் ஆர்வத்தைக் குறைத்து குலத் தொழிலில் தள்ளும் என்பதால் இதில் தமிழ்நாடு அரசு இணையவில்லை" எனக் கூறியுள்ளது.
அதேநேரம், 'கலைஞர் கைவினைத் திட்டம்' என்பது தமிழ்நாடு அரசின் நிதியில் செயல்படுத்தப்படுகிறது. இதில் இணைவதற்கு குறைந்தபட்ச வயது வரம்பு 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குடும்பம்/வகுப்பு அடிப்படையில் அல்லாமல் 25 கைவினைத் தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தொழிலில் ஈடுபடுவோருக்கு மட்டும் உதவும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.' என்று அக்குழு குறிப்பிட்டுள்ளது.
இந்த இரண்டு திட்டத்திற்கும் உள்ள வேறுபாடுகளைப் புரிந்து கொள்ளாமல் பலரும் தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகவும் அக்குழு தெரிவித்துள்ளது.
தி.மு.க - பா.ஜ.க சொல்வது என்ன?
மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை குலக்கல்வி என்று தி.மு.க செய்தித் தொடர்புத் துறை தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் விமர்சித்துள்ளார்.
இந்த வாதத்தை மறுத்து பிபிசி தமிழிடம் பேசிய தமிழக பா.ஜ.க பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், "தொழில் தொடர்பான அனுபவமும் அறிவும் இருக்க வேண்டும் என்று தான் மத்திய அரசு கூறுகிறது. இந்தப் பட்டியலில் குறிப்பிட்ட சாதி அல்லாதவர்களும் உள்ளனர்" என்கிறார்.
"அனுபவம் உள்ளவர்கள் மற்ற சாதியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு நிதி உதவி கொடுப்பது தான் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் நோக்கம். விஸ்வகர்மா என்ற குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டும் கொடுத்தால் இவர்கள் விமர்சிக்கலாம்" என்கிறார் எஸ்.ஆர்.சேகர்.
மாநில அரசின் தகவல் சரிபார்ப்புக் குழு கூறும் 18 வயது சர்ச்சை குறித்துப் பேசும் எஸ்.ஆர்.சேகர், "பள்ளியில் படித்துக் கொண்டிருப்பவர்கள், படிப்பார்கள். ஆனால், மத்திய அரசின் திட்டம் என்பது அனுபவத்தின் அடிப்படையில் தொழில் செய்து வரும் நபர்களுக்கானது" என்கிறார்.
"அவர்கள் தங்களின் தொழிலை மட்டும் கவனித்து வருகின்றனர். படிப்பவர்களை இத்துடன் பொருத்திப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை" என்கிறார் எஸ்.ஆர்.சேகர்.
தொழில்துறையினர் சொல்வது என்ன?
தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் (TACT) கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸிடம் பிபிசி தமிழ் பேசியது.
"மத்திய, மாநில அரசுகளின் இரண்டு திட்டங்களையும் நாங்கள் வரவேற்கிறோம். இந்தியாவின் வளர்ச்சிக்கு இவை உதவி செய்யும். ஆனால், அதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன" என்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "கடன் திட்டத்துக்குள் செல்லும் போது வங்கி சார்ந்த கெடுபிடிகள் கடன்களைப் பெற முடியாமல் செய்துவிடுகின்றன. பிணையற்ற கடன் என மாநில அரசு கூறுகிறது. ஆனால், அந்தக் கடனைக் கொடுக்கப் போவது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தான்.
சில வங்கிகளின் மேலாளர்கள், கடன் கொடுத்து வராவிட்டால் அவர்களின் ஓய்வு காலத்தில் சிக்கல் ஏற்படும் என்பதால் கடன் தர மறுக்கின்றனர். இதற்கு உரிய வழிமுறைகளை அரசு செய்தால் தான் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க முடியும்" என்கிறார்.
"தமிழ்நாடு அரசு திட்டத்தின்படி, வங்கிகள் மூலமாக கடன் கொடுப்பதில் எந்த சிக்கலும் இருக்கப் போவதில்லை" என்கிறார், தி.மு.க செய்தித் தொடர்புத் துறை தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன்.
"வங்கிகளில் கடன் வாங்குவது சற்று சிரமமான விஷயம் தான். இதனை சரிசெய்யும் வகையில் வங்கி அதிகாரிகளுடன் மாநில அரசின் நிதித்துறை அதிகாரிகள் பேசி கடன்களை வழங்க ஏற்பாடு செய்து கொடுப்பார்கள்" என்கிறார்.
இதுதொடர்பாக விளக்கம் கேட்க தமிழ்நாடு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனை பிபிசி தமிழ் தொடர்பு கொண்ட போது அவர் பதிலளிக்கவில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)