You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆயுள்கைதி தயாரித்த சோலார் ஆட்டோ - கோவை சிறையில் எப்படி பயன்படுகிறது?
- எழுதியவர், சேவியர் செல்வக்குமார்
- பதவி, பிபிசி தமிழ்
கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை பெற்ற சிறைவாசி ஒருவர் தயாரித்துள்ள சோலார் ஆட்டோ பல தரப்பிலும் பாராட்டைப் பெற்றுள்ளது.
கோவை மத்திய சிறை டிஐஜி சண்முகசுந்தரம் கூறிய தகவலின்படி, கோவை சிறையில் தற்போது 2420 சிறைவாசிகள் உள்ளனர். அவர்களில் 1000 பேர் தண்டனை சிறைவாசிகள்; 150 பேர் தடுப்புக் காவலில் உள்ளனர். மற்றவர்கள் விசாரணைக் கைதிகள் உள்ளிட்டோர். இந்த கைதிகளில் 500க்கும் மேற்பட்டோர், பள்ளிப்படிப்பு முதல் பட்டப்படிப்பு வரை முடித்தவர்களாக உள்ளனர்.
''கோவை மத்திய சிறையில் டாக்டர்கள், வழக்கறிஞர்கள், இன்ஜினியர்கள், எம்பிஏ படித்த சிறைவாசிகள் பலரும் இருக்கின்றனர். ஆயுள்கைதியாக இங்கிருக்கும் யுக ஆதித்தன் என்ற 32 வயது நபர், ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் படித்தவர்.
அவர்தான் தற்போது சோலார் ஆட்டோ ஒன்றைத் தயாரித்துள்ளார். அது சிறப்பாகச் செயல்படுகிறது. டிஜிபி உள்ளிட்ட பலரும் அதைப் பாராட்டியுள்ளனர்.'' என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் கோவை மத்திய சிறைக் கண்காணிப்பாளர் செந்தில்குமார்.
எதற்காக தயாரிக்கப்பட்டது சோலார் ஆட்டோ?
சோலார் ஆட்டோ தயாரிக்க முடிவெடுத்தற்கான காரணத்தைப் பற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய கோவை மத்திய சிறை டிஐஜி சண்முகசுந்தரம், ''சிறைவாசிகளைப் பார்க்க வரும் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் பலரும் சிறையின் நுழைவாயில் பகுதியிலிருந்து சிறை சந்திப்புப் பகுதிக்கு வெகுதுாரம் நடந்து வர வேண்டியுள்ளது.
அவர்களுக்காக ஒரு சோலார் வாகனம் தயாரிக்க நினைத்தோம். சிறை வளாகத்திலிருந்து, வெளியே ஒரு மூலையில் சிறை மருத்துவமனை உள்ளது. ஏதாவது அவசரம் என்றாலும், தகவல் தெரிவித்து, வெளியிலிருந்து ஆம்புலன்ஸ் வர தாமதமாகிறது. பல நேரங்களில் ஆட்களை துாக்கிக் கொண்டு வரவேண்டியுள்ளது. அதனால் சிறைவாசிகள் அல்லது ஊழியர்களை விரைவாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லஒரு வாகனம் தேவைப்பட்டது'' என்றார்.
சிறை வளாகத்துக்குள் வேறு எந்த வாகனத்தையும் பயன்படுத்துவதில்லை என்று தெரிவித்த டிஐஜி சண்முகசுந்தரம், ''சிறையை ஆய்வு செய்ய வரும் குழுவினர், நீதிபதிகள், அமைச்சர்கள், உயரதிகாரிகள் பலரும் சிறை வளாகம் முழுவதும் செல்வதற்கும் ஒரு வாகனம் அவசியமாக இருந்தது. இப்படி பல விதமான பயன்பாட்டுக்காகவே சோலார் வாகனம் தயாரிக்க முடிவு செய்தோம்.'' என்று தெரிவித்தார்.
இதற்கு முன்னோட்டமாக நடந்த சில நிகழ்வுகளையும் பகிர்ந்து கொண்டார் சண்முகசுந்தரம்
''சிறைவாசிகளுக்கு தினமும் பல ஆயிரம் சப்பாத்தி தயாரிக்க ஒரு மெஷின் வாங்கியிருந்தோம். அது பழுதாகி விட்டது. அதை யுக ஆதித்தன் மிக எளிதாகச் சரி செய்து விட்டார். அப்போதுதான் அவருடைய பொறியியல் திறன் தெரியவந்தது.
அதன்பின், கடந்த ஆண்டில் ஒரு இ சைக்கிள் தயாரித்தார். அதை மின்சாரத்திலும் சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம்; சோலார் பேனலிலும் சார்ஜ் ஆகும்; வாகனத்தை இயக்கினால் தானாகவே சார்ஜ் ஆகிவிடும்.
அந்த இ சைக்கிள், இங்குள்ள வார்டன்களுக்குப் பெரிதும் பயன்படுகிறது. அதற்குப் பின்பே, அவரை வைத்து சோலார் ஆட்டோ ரிக் ஷா தயாரிக்கத் திட்டமிட்டோம்.'' என்றார் டிஐஜி.
ஈரோடு மாவட்டம் கோபிச் செட்டிபாளையம் அருகேயுள்ள கவுந்தப்பாடியைச் சேர்ந்த யுக ஆதித்தன், கடந்த 2014 ஆம் ஆண்டில் நடந்த ஒரு கொலை தொடர்பாக சேலம் மாவட்ட நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்.
அப்போதிலிருந்து கோவை மத்திய சிறையில் ஆயுள் கைதியாக இருக்கிறார்.
டிஐஜி மற்றும் சிறைக் கண்காணிப்பாளர் கூறிய தகவல்களின்படி, இந்த சோலார் வாகனத்துக்குத் தேவையான மூலப் பொருட்களை யுக ஆதித்தன் பட்டியல் போட்டுக் கொடுத்துள்ளார்.
சிறைக்குள் இருந்த இரும்பு, கம்பிகள் போன்றவை போக, மோட்டார் போன்ற சில பொருட்கள் மட்டுமே வெளியில் வாங்கித் தந்துள்ளனர்.
அதன்பின் சிறைவாசிகள், தொழில்நுட்பம் தெரிந்த சிறை அலுவலர் ஒருவர் என சிலரின் உதவியுடன் இந்த வாகனத்தை யுக ஆதித்தன் தயாரித்துக் கொடுத்துள்ளார்.
இந்த சோலார் ஆட்டோ ரிக்ஷா, இடைவிடாமல் 200 கி.மீ. வரை இயங்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. மணிக்கு 35 கி.மீ. வேகத்தில் இயங்கும் இந்த வாகனத்தைத் தயாரிப்பதற்கு, மொத்தமே ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவானதாகச் சொல்கிறார்கள் அதிகாரிகள்.
வெளிமாநில சிறைத்துறை அதிகாரிகளின் பாராட்டு!
''கடந்த வாரத்தில் கோவை மத்திய சிறைக்கு வந்த சிறைத்துறை டிஜிபி மகேஸ்வர தயாள், இந்த வாகனத்தில் சிறை வளாகத்துக்குள் வலம் வந்து வெகுவாகப் பாராட்டினார். சில திருத்தங்கள் செய்யவும், இதன் செலவை இன்னும் குறைத்து, மற்ற மத்திய சிறைகளுக்குள் இதைப் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கவும் ஆலோசனை தெரிவித்துள்ளார். வேலுாரில் உள்ள சிறைத்துறை பயிற்சி மையத்தில் பயிற்சி எடுக்க வந்த மிசோராம் உள்ளிட்ட வடகிழக்கு மாநில அதிகாரிகள் பலரும், கோவைக்கு வந்தபோது இந்த சோலார் வாகனத்தைப் பார்த்து விட்டு பாராட்டிச் சென்றனர்.'' என்றார் டிஐஜி சண்முகசுந்தரம்.
வாகனத்தின் தயாரிப்புச் செலவைக் குறைப்பதற்கான வழி குறித்து அவர் கூறுகையில், ''இந்த வாகனத்துக்கு மிகவும் சக்திவாய்ந்த மோட்டாரைப் பயன்படுத்தியுள்ளோம். மிகவும் கனமுள்ள இரும்புகளைப் பயன்படுத்தியுள்ளோம். இவற்றைக் குறைத்தால் ஒரு லட்ச ரூபாய்க்கு இதைத் தயாரித்து விடலாம். இந்த வாகனத்தில் ஒரே நேரத்தில் 6 பேர் அமர்ந்து பயணம் செய்யலாம்.'' என்றார்.
கோவையில் ஏராளமான தொழிற்சாலைகள் இருப்பதால், அவற்றில் பயன்படுத்தும் வகையில் சோலார் ஆட்டோ தயாரிப்பதற்கு யாராவது ஆர்டர் கொடுத்தால், அதையும் டிஜிபியிடம் அனுமதி பெற்று செய்து தரவும் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார் கோவை மத்திய சிறைக்கண்காணிப்பாளர் செந்தில்குமார்.
இ சைக்கிள், சோலார் ஆட்டோ ரிக் ஷாவை தொடர்ந்து, யுக ஆதித்தன் உதவியுடன் அடுத்ததாக மின்சார ஆம்புலன்ஸ் வாகனத்தைத் தயாரிக்கவும் கோவை மத்திய சிறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதே சிறைவாசிகளைக் கொண்டு, வேறு பல திட்டங்களையும் சிறைத்துறை செயல்படுத்தி வருகிறது.
செக்கு எண்ணெய் முதல் ஸ்வீட் பிரெட் வரை!
அதிகாரிகள் கூறிய தகவல்களின்படி, கோவை சிறை சார்பில் இரண்டு பெட்ரோல் நிலையங்கள் செயல்படுகின்றன. ஒண்டிப்புதுார் பகுதியில் 30 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. அங்குள்ள 900 தென்னை மரங்களில் இருந்து தேங்காய் எடுத்து செக்கு தேங்காய் எண்ணெய் அங்கேயே தயாரிக்கப்படுகிறது. சிறை வளாகத்தில் செக்கு நல்லெண்ணெய், கடலை எண்ணெய் தயார் செய்யப்படுகிறது.
சிறைவாசிகள் தயாரிக்கும் ஸ்வீட் பிரெட், கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, திருப்பூர் அரசு மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் உள்ள உள் நோயாளிகளுக்கு தினமும் உணவாக வழங்கப்படுகிறது.
கோப்புகள் உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்கள் தயாரித்து, அரசு அலுவலகங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. சிறைவாசிகள் தயாரிக்கும் குளிர் ஆடைகள், ரெயின் கோட் போன்றவையும் வெளியில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த பணிகளைச் செய்யும் சிறைவாசிகளுக்கு, சிறைத்துறையால் ஊதியமும் தரப்படுகிறது.
''சோலார் ஆட்டோ தயாரித்த யுக ஆதித்தனுக்கு ஊதியத்துடன் பாராட்டுச் சான்றும் கொடுத்துள்ளோம். இப்போது அவரால் மற்றவர்களும் தொழில் பயிற்சி பெறுகின்றனர்.'' என்றார் டிஐஜி சண்முகசுந்தரம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்,எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)