You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சஸ்பெண்ட் செய்த வி.சி.க.வில் இருந்து முழுமையாக விலக ஆதவ் அர்ஜூனா முடிவு - திருமா பற்றி கூறியது என்ன?
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
வி.சி.க.வில் இருந்து 6 மாத காலம் இடைநீக்கம் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜூனா, அந்த கட்சியில் இருந்து முழுமையாக விலக தீர்மானித்துள்ளார்.
ஆதவ் அர்ஜூனா தனது எக்ஸ் பக்கத்தில், விசிக தலைவர் திருமாவளவனுக்கு எழுதிய கடிதத்துடன், பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், விசிக கட்சியில் இருந்து விலகும் முடிவு ஏன் என்பது குறித்து அவர் குறிப்பிட்டுள்ளார்.
"எளிய மக்கள் குறிப்பாக, 'சாதிய ஆதிக்கத்தினால் காலம்காலமாக புறக்கணிக்கப்பட்ட மக்கள் அதிகாரத்தை அடைய வேண்டும்' என்ற நோக்கில்தான் நான் என்னை நமது கட்சியில் இணைத்துக்கொண்டேன். விடுதலைச் சிறுத்தைகளின் கொள்கைகளிலும் நிலைப்பாடுகளிலும் எனக்கு எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை. குறிப்பாக, கட்சியின் வளர்ச்சி என்ற ஒற்றைக் காரணியைத் தாண்டி எனக்கு வேறு எந்த செயல் திட்டங்களும் இந்த நிமிடம் வரை இல்லை என்பதை தங்களுக்குத் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
எனக்குள் எழுந்த சில நியாயமான கோபங்கள் மற்றும் மக்கள் நலனுக்கு எதிரான விவகாரங்களில் என்னிடமிருந்து வெளிப்படும் கருத்துகள் விவாதப்பொருளாக மாறுகிறது. அது ஒருகட்டத்தில் எனக்கும், உங்களுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தும் போக்காக மாறுவதை நான் விரும்பவில்லை. ஏற்கனவே, கட்சியிலிருந்து என்னை ஆறு மாதம் இடை நீக்கம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இதுபோன்ற வீணான விவாதங்களுக்கு வழிவகுக்க கூடாது என்று எண்ணுகிறேன்." என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர், "என்னைப் பற்றிய தேவையற்ற விவாதங்கள் பொதுவெளியில் தொடராமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து முழுமையாக என்னை விடுவித்துக் கொள்வது என்று முடிவெடுத்துள்ளேன்.
அரசியல் களத்தில் என்னைப் பயணப்பட வைத்து, நேரடியாகக் களமாடச் செய்த தங்களுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தோழர்களுக்கும் எனது நன்றியையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன். கட்சியிலிருந்து வெளியேறும் இந்த கனமான முடிவை கனத்த இதயத்துடன் காலத்தின் சூழ்நிலைக் கருதியே எடுத்துள்ளேன். இனி வரும் காலங்களில் உங்கள் வாழ்த்துகளுடன், மக்களுக்கான ஜனநாயகம், சமத்துவம், சமநீதி என்ற அடிப்படையில் எனது அரசியல் பயணம் தொடரும்" என்றும் தெரிவித்துள்ளார்.
வி.சி.க-வின் துணைப் பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜூனாவை ஆறு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்துள்ளதாக, கடந்த திங்கள் அன்று (டிசம்பர் 9) அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்தார். கட்சி மற்றும் தலைமையின் மீதான நம்பகத்தன்மையை ஆதவ் அர்ஜூனாவின் செயல்பாடுகள் கேள்விக்குள்ளாக்கியதே அவர் இடை நீக்கம் செய்யப்படுவதற்கான காரணம் என்று திருமாவளவன் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
வி.சி.க-வில் இணைந்த குறுகிய காலத்தில் ஆதவ் அர்ஜூனாவின் பெயர் சர்ச்சைகளில் அடிபட்டது ஏன்? அவரது பின்னணி என்ன?
ஆதவ் அர்ஜூனா யார்?
விளையாட்டு வீரர், தேர்தல் வியூக வகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகத்தன்மை கொண்ட ஆதவ் அர்ஜுனா, திருச்சியை பூர்வீகமாகக் கொண்டவர். 1982 ஆம் ஆண்டு எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். இவரது தாயும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி திலகவதியும் சகோதரிகள்.
தன் தாய் காதல் திருமணம் செய்துகொள்ள விரும்பியதாகவும் ஆனால் தன்னுடைய பாட்டி அதற்கு ஒத்துக்கொள்ளாமல் அவருக்கு வேறொருவரை கட்டாயமாக திருமணம் செய்து வைத்ததாகவும் சமீபத்தில் நிகழ்ந்த அம்பேத்கர் புத்தக வெளியீட்டு நிகழ்வில் ஆதவ் அர்ஜுனா பகிர்ந்துகொண்டார்.
திருமணத்திற்கு பிறகு வறட்சி காரணமாக, வருமானம் இன்றி வீட்டில் குடும்ப வன்முறையை எதிர்கொண்ட தன் தாய், தன்னுடைய 5 வயதிலேயே தற்கொலை செய்துகொண்டதாக அந்நிகழ்ச்சியில் நினைவுகூர்ந்தார்.
பெற்றோரின் அரவணைப்பு இல்லாததால், உறவினர் ஒருவரின் பாதுகாப்பில் ஆதவ் அர்ஜுனா வளர்க்கப்பட்டுள்ளார். கூடைப்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உடையவராக இருந்ததால், அதனை திலகவதி ஊக்குவித்து வந்துள்ளார்.
மாவட்ட மற்றும் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகளில் ஆதவ் பங்கெடுத்துள்ளார். மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியில் அரசியல் அறிவியல் பிரிவில் படிக்கும்போது, விளையாட்டில் தீவிர கவனம் செலுத்தியுள்ளார்.
பின்னர், கோவையை பூர்வீகமாகக் கொண்ட லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டினின் மகள் டெய்ஸியை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.
தேர்தல் வியூக பணிகளில் ஈடுபாடு
மார்ட்டினின் தொழில் வட்டத்துக்குள் சென்ற பிறகும் கூடைப்பந்து விளையாட்டில் கவனம் செலுத்தி வந்தார் ஆதவ். இதன் காரணமாக, தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத்தின் தலைவர், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆகிய பொறுப்புகளை ஆதவ் அர்ஜுனா வகித்தார்.
தற்போது இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவராக இருக்கிறார். தொழில், விளையாட்டு என கவனம் செலுத்தி வந்த ஆதவ் அர்ஜுனா, கடந்த 2016, 2019, 2021 ஆகிய தேர்தல்களை மூன்று யுத்தங்கள் எனக் குறிப்பிடும் ஆதவ், மதப் பெரும்பான்மை வாதத்திற்கு எதிராகத் தேர்தலில் பங்கெடுத்ததாக தன்னை எப்போதும் முன்னிறுத்தி வருகிறார்.
அதோடு, கடந்த 2011 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில், ஸ்டாலின் மேற்கொண்ட 'நமக்கு நாமே' பயணத் திட்டத்தைச் செயல்படுத்தியவர்களில் இவரும் ஒருவர் என்று ஆதவ் அர்ஜுனாவின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
அதுமட்டுமின்றி, கடந்த 2019ஆம் ஆண்டில் ஒன் மைண்ட் இந்தியா என்ற நிறுவனத்தை அவர் தொடங்கினார். அதோடு, 2021ஆம் ஆண்டில் தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோருடன் அவர் இணைந்து திமுகவுக்கு பணியாற்றியதாகவும் அவரது உதவியாளர்கள் கூறுகின்றனர்.
பிரசாந்த் கிஷோர் மற்றும் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் ஆகியோருடன் அவர் இருப்பது தொடர்பான வீடியோ ஒன்று, செவ்வாய் அன்று (டிசம்பர் 10) ஆதவ் அர்ஜுனாவின் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன் ஊடக நேர்காணல் ஒன்றில் தன்னை பற்றி விளக்கிய ஆதவ் அர்ஜுனா, "2015ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை திமுகவின் தேர்தல் பிரசாரங்களுக்கு நான் பணியாற்றியது எல்லோருக்கும் தெரிந்ததே. அங்கிருக்கும் போதே, 2020ம் ஆண்டு நான் விசிகவுக்கு பணி செய்ய விரும்புகிறேன் என்பதை பதிவு செய்திருந்தேன், திருமாவளவனும் அதை பதிவு செய்திருந்தார்" என்றார்.
இதைத்தொடர்ம்து, 2021 சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் வேலை செய்தவர்களை கொண்டு, 'வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்' என்ற தேர்தல் வியூக மற்றும் கொள்கை உருவாக்க நிறுவனம் தொடங்கப்பட்டது என்று அவர் அதில் தெரிவித்தார்.
"2021 தேர்தலுக்கு எப்படி பணி செய்தோமோ அப்படி வேலை பார்க்க வேண்டும், கட்சியை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று தலைவர் (திருமாவளவன்) பேசியிருந்தார்" என்றும் ஆதவ் அப்பேட்டியில் தெரிவித்திருந்தார்.
முதலில் 'வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்' என்ற நிறுவனமாக தான் விசிகவுடன் பணியாற்றியதாகவும், விசிக நடத்திய 'வெல்லும் ஜனநாயக' மாநாட்டை ஒருங்கிணைத்ததில் முக்கிய பங்காற்றியதாகவும் அவர் கூறியிருந்தார்.
கடந்த ஜனவரி 26ம் தேதி திருச்சியில் நடைபெற்ற அந்த மாநாடு மிகப் பெரிய வெற்றியடைந்ததாக, மேடையிலேயே திருமாவளவன் தெரிவித்தார்.
ஒரு வருடத்துக்குள் துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு
'வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்' என்ற நிறுவனத்தின் தலைவராக விசிகவுடன் பணியாற்றி வந்த ஆதவ் அர்ஜுனா, இந்த ஆண்டு ஜனவரி மாதம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்தார்.
மிகக்குறுகிய காலத்திலேயே, பிப்ரவரி 15 ஆம் தேதி விசிகவின் துணைப் பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜுனா அறிவிக்கப்பட்டார்.
ரெய்டு சர்ச்சை
திமுக வட்டாரத்தில் ஆதவ் அர்ஜுனா இருந்த காலகட்டங்களில் (2023 ஏப்ரல்) வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை சோதனைகளை எதிர்கொண்டார்.
இந்த சோதனையில் மார்ட்டினுக்கு சொந்தமான 451.07 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியதாக, அமலாக்கத் துறை தெரிவித்தது.
லாட்டரி சீட்டுகள் விற்று பணக்காரரான 'லாட்டரி கிங்' என்றழைக்கப்படும் தொழிலதிபர் சாண்டியாகோ மார்ட்டின், ஆதவ் அர்ஜுனாவின் மாமனார். சாண்டியோகா மார்ட்டினின் நிறுவனமான ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட், ஏப்ரல் 2019 மற்றும் ஜனவரி 2024க்கு இடையில் சுமார் 1,368 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியது. இதன் மூலம், இந்தியாவின் அரசியல் கட்சிகளுக்கு அதிக நன்கொடை வழங்கிய நபரானார்.
"எனது மாமனாரின் தொழிலுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. அரசியலுக்கு வருவதற்கு முன்பாக நான் உருவாக்கிய தொழில்களின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நான் ராஜினாமா செய்துவிட்டேன். என்னுடைய கிட்டத்தட்ட 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தொழில்களிலிருந்து ராஜினாமா செய்துவிட்டு வந்துள்ளேன்," என்று சில மாதங்களுக்கு முன் வழங்கிய அந்த ஊடக நேர்காணலில் அர்ஜுனா பேசியிருந்தார்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் குடும்ப பின்புலம், தேர்தல் வியூக வகுப்பாளர் என்ற அடையாளம் ஆகியவை, விசிகவுக்குள் ஆதவ் அர்ஜுனாவுக்கு தனி அடையாளத்தைக் கொடுத்தது.
ஆனால், அதுவும் ஒரே மாதத்தில் அடுத்த சர்ச்சைக்கு விதைபோட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் விசிக ஏற்கனவே வெற்றிபெற்ற தொகுதிகளான சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இரண்டு தனி தொகுதிகளுடன் ஒரு பொதுத் தொகுதியை விசிகவுக்கு திமுக ஒதுக்க உள்ளதாக பேசப்பட்டது.
இதற்காக, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளில் ஒன்றை ஒதுக்குமாறு விசிக தரப்பில் திமுக நிர்வாகிகளிடம் விருப்பப் பட்டியல் அளிக்கப்பட்டது. 'இதில் எதாவது ஒரு பொதுத்தொகுதியில் ஆதவ் அர்ஜுனா களமிறங்கலாம்' என பெரிதளவில் பேசப்பட்டது.
இதற்கு மறுப்பு தெரிவித்த திமுகவின் தேர்தல் பேச்சுவார்த்தைக் குழு, 'சிட்டிங் தொகுதிகளை மட்டும் ஒதுக்குகிறோம். கூடுதலாக தொகுதியை ஒதுக்கினால், கூட்டணியில் உள்ள இடதுசாரிகளும் மதிமுகவும் கேட்பார்கள்' எனக் கூறியதாக தகவல் வெளியானது.
தொடர்ந்து, கடந்த மார்ச் 8 ஆம் தேதியன்று சிட்டிங் தொகுதிகளை மட்டும் பெற்றுக் கொண்டு விசிக தலைமை தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட்டது. இதுதொடர்பாக, செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டி அளித்த திருமாவளவன், "திமுக பொதுத்தொகுதியை ஒதுக்காததற்கு உள்நோக்கம் கற்பிக்க விரும்பவில்லை" என்றார்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் விசிகவின் தேர்தல் வெற்றிக்காக ஆதவ் அர்ஜுனா பணி செய்தார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு விசிகவுக்கு மாநில கட்சி என்ற அந்தஸ்து கிடைத்தது.
இதற்கு 'வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்' அமைப்பின் தேர்தல் செயல்பாடு ஒரு காரணம் என, ஆதவ் அர்ஜுனா ஆதரவாளர்கள் தரப்பில் கூறப்பட்டது.
இரண்டு சம்பவங்கள்
தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்கவில்லை எனத் தெரிந்த பிறகே, திமுக மீதான விமர்சனத்தை ஆதவ் அர்ஜுனா அதிகப்படுத்தியதாக கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் கா.அய்யநாதன். அதற்கேற்ப, கடந்த செப்டம்பர் மாதம் இரண்டு சம்பவங்கள் நடந்தன.
முதல் சம்பவம், 'ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு' என திருமாவளவன் பேசும் வீடியோ, செப்டம்பர் 14 அன்று அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றப்பட்டு, பின்னர் நீக்கப்பட்டது. ஆனாலும் அந்த வீடியோ பின்னர் மீண்டும் பதிவேற்றப்பட்டது.
இதுதொடர்பாக, மதுரையில் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்த திருமாவளவன், 'செங்கல்பட்டில் நான் பேசியதை எனது அட்மின் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்' எனக் கூறினார்.
இதன்பிறகு, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்த ஆதவ் அர்ஜுனா, "நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர், துணை முதலமைச்சர் ஆகும்போது, 40 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்ட திருமாவளவன் துணை முதலமைச்சர் ஆகக் கூடாதா?" எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்தப் பேட்டி திமுக வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. "ஆதவ் அர்ஜுனா மீது திருமாவளவன் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என, திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா வலியுறுத்தியிருந்தார்.
இதனால் திமுக - விசிக இடையே சலசலப்பு ஏற்பட்டது. ஆனால், "அப்படி எந்த விரிசலும் இல்லை; அதற்கான வாய்ப்பும் இல்லை" என திருமாவளவன் விளக்கம் அளித்தார்.
"துணை முதலமைச்சர் பதவி குறித்துப் பேசிய ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?" என்ற கேள்விக்குப் பதில் அளித்த திருமாவளவன், 'கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்போம்' என்றார். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சலசலப்பை ஏற்படுத்திய நூல் வெளியீடு
இதையடுத்து, விகடன் பிரசுரம் மற்றும் 'வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்' நடத்திய 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூல் வெளியீட்டு விழா, ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் பயணத்தில் சரிவை ஏற்படுத்தியது.
அந்த நூலை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிடப் போகிறார் என்ற தகவல் வெளியானதும், "இந்த நிகழ்ச்சியில் திருமாவளவன் பங்கேற்பாரா?" என்பதே பேசுபொருளாக மாறியது. காரணம், கூட்டணிக்குள் இணையும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என, விக்கிரவாண்டி மாநாட்டில் தவெக தலைவர் விஜய் உறுதியளித்திருந்தார்.
இதே கருத்தை விசிகவும் மையப்படுத்தி பேசி வந்ததால், நூல் வெளியீட்டு விழாவுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், நிகழ்ச்சியில் பங்கேற்பதை திருமாவளவன் தவிர்த்துவிட்டார்.
'என்னை ஒரு கருவியாகக் கொண்டு தமிழக அரசியல் களத்தில் அரசியல் எதிரிகள் காய் நகர்த்தப் பார்க்கிறார்கள் என்பதை அறிந்த பின்னர், அதற்கு எவ்வாறு இடம் கொடுக்க முடியும்?' என, எட்டு பக்கங்களுக்கு அவர் விளக்கமும் அளித்தார்.
மன்னராட்சி சர்ச்சை
கட்சித் தலைமை புறக்கணித்த விழாவில், ஆதவ் அர்ஜுனா முன்வைத்த கருத்துகள், விசிகவில் புயலை கிளப்பியது.
"மன்னர் பரம்பரை உருவாவதற்கு இனி ஒருபோதும் தமிழகம் இடம் தராது. 2026 ஆம் ஆண்டுக்கான தேர்தல் பணிகள், மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும். இங்கு பிறப்பால் ஒருவர் முதலமைச்சர் ஆகக் கூடாது" என திமுகவை மறைமுகமாக ஆதவ் அர்ஜுனா விமர்சித்தார்.
இந்தக் கருத்துக்கு துணை முதலமைச்சர் உதயநிதி கோபத்துடன் பதில் அளித்தார். செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, "பிறப்பால் யாரும் இங்கே முதலமைச்சர் ஆகவில்லை. மக்களால் தேர்ந்தெடுத்துதான் பொறுப்புகளில் இருக்கிறோம். இங்கே மக்களாட்சிதான் நடக்கிறது" என்றார்.
"மன்னராட்சி அமைவதற்கு உதவி செய்தது யார்? தேர்தல் பணிகளில் ஈடுபட்டதாக ஆதவ் அர்ஜுனாவே கூறுகிறார். முதலமைச்சர் மாமல்லபுரம் வரை வார இறுதி நாட்களில் சைக்கிளில் சென்ற போது அவருக்குப் பின்னால் சென்றவர்களில் ஆதவ் அர்ஜுனாவும் ஒருவர். எந்த மன்னருடன் நகர்வலம் சென்றாரோ, இன்று அவரை பார்த்தே மன்னராட்சி என்று விமர்சிக்கிறார்," என்கிறார் அரசியல் விமர்சகர் எஸ்.பி. லக்ஷ்மணன்.
மன்னராட்சி விமர்சனம் தொடர்பாக, கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் பேசி முடிவெடுக்கப்பட உள்ளதாக திருமாவளவன் கூறியிருந்தார்.
"குறுகிய காலக்கட்டத்தில் விசிகவில் தன்னை வேகமாக ஆதவ் அர்ஜுனா முன்னிலைப்படுத்திக் கொண்டது, அக்கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதை திருமாவளவனும் உணர்ந்து கொண்டார்," என பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார், மூத்த பத்திரிகையாளர் கா.அய்யநாதன்.
அதற்கேற்ப, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதாகக் கூறி, கட்சியில் இருந்து ஆறு மாதங்களுக்கு ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்படுவதாக திருமாவளவன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆதவ் அர்ஜுனாவின் செயல்பாடுகள், கட்சி மற்றும் தலைமையின் மீதான நன்மதிப்பை கேள்விக்குள்ளாக்குவதாக கூறியுள்ளார்.
ஆனால், "நான் கட்சியில் என்ன பணி செய்தேன் என்பதை அடிமட்டத் தொண்டர்கள் அறிந்திருப்பார்கள்," எனக் கூறியுள்ள ஆதவ் அர்ஜுனா, அந்த தொண்டர்களின் குரலாக தாம் இருப்பதாகக் கூறியுள்ளார்.
முக்கியத்துவம் கிடைத்தது ஏன்?
"கடந்த பிப்ரவரி மாதம் வாக்குப் பதிவு இயந்திரம் (EVM) தேவையில்லை எனக் கூறி விசிக ஆர்பாட்டம் நடத்தியது. அந்தக் கூட்டத்தில் திருமாவளவனுக்கு முன்னதாக ஆதவ் அர்ஜுனா பேசினார். அந்தளவுக்கு விசிகவில் ஆதவ் அர்ஜுனாவுக்கு அவர் இடம் கொடுத்தார்" என்கிறார், கா.அய்யநாதன்.
"திமுக கூட்டணியை உடைப்பதற்கு ஆதவ் அர்ஜுனா முயற்சி எடுப்பதாக வெளியான தகவல் தான் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது. அவர் விசிகவுக்குள் போர்க்கொடி உயர்த்தியிருந்தால் இப்படியொரு முக்கியத்துவம் கிடைத்திருக்க வாய்ப்பில்லை" என்கிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.
வசதியான பின்புலத்தில் இருந்து வருவதால் ஆதவ் அர்ஜுனாவின் வளர்ச்சிக்கு சமூக ஊடகங்கள் உதவுவதாகக் கூறுகிறார், ஷ்யாம்.
"விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநாடு, கட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு பொருளாதார ரீதியாக அவர் செலவு செய்ததால் கட்சிக்கு பலம் கிடைக்கும் என விசிக நினைத்தது. நடிகர் விஜய்க்கு ரசிகர் பலம் உள்ளது. ஆதவிடம் அப்படி எந்தப் பலமும் இல்லை" என்கிறார் ஷ்யாம்.
"அனைத்துக் கட்சிகளின் இலக்கும் சமூக சீர்திருத்தம் அல்ல, தேர்தல் தான். அதை நோக்கித் தான் அவர்கள் பயணப்பட முடியும்" எனக் கூறும் மாலன், "விசிகவில் தலித் அல்லாதவர்களை நீக்கும்போது அது கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும்" என்கிறார்.
"அதேநேரம், தன்னுடைய நம்பகத்தன்மையை பாதிக்கும் விஷயம் என திருமாவளவன் கூறுவதையும் கவனிக்க வேண்டும். ஒரு கட்சியின் அடிப்படை வாக்குவங்கியின் பின்னணியில் தலைவருக்கான நன்மதிப்பு என்பது முக்கியமானது" எனக் கூறுகிறார், மாலன்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)