டொயோட்டா கார்களை அதிகம் விரும்பும் ஆப்கன் தாலிபன்கள் - விநியோகிக்க மறுக்கும் நிறுவனம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அலி ஹுசைனி
- பதவி, பிபிசி நியூஸ்
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட அரசு மாற்றம், அதிபர் மாளிகை அல்லது அமைச்சகங்களில் மட்டும் பிரதிபலிக்கவில்லை, சாலைகளில் உள்ள பல்வேறு வாகன மாடல்களிலும், பிராண்டுகளிலும் பிரதிபலிக்கிறது.
ஆப்கானிஸ்தானில், அதிகார மாற்றத்தின் தாக்கம், ராணுவ படையினரால் பயன்படுத்தப்படும் வாகனங்களில் எப்போதும் பிரதிபலித்து வந்துள்ளது.
கடந்த காலத்தில், ஆப்கானிஸ்தானில் சோவியத் மற்றும் அமெரிக்க படைகளின் இருந்தபோதும், அதிகார மாற்றங்களின் போதும் அந்த நாட்டின் ராணுவம் பல நிறுவனங்களின் பல்வேறு மாடல் வாகனங்களை பயன்படுத்தியது.
இப்போது ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபன் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் அமெரிக்க நிறுவனத்தின் ரேஞ்சர் வாகனங்களை விட்டுவிட்டு, வேறு மாடல் வாகனங்களைப் பயன்படுத்த விரும்புகிறது.
ஆப்கானிஸ்தானின் தாலிபன் அரசாங்கம் புதிய வாகனங்களை வாங்க ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா மோட்டார்ஸை அணுகியுள்ளது. அந்த நாட்டில் டொயோட்டா வாகனங்களின் உள்ளூர் டீலர்ஷிப் 'ஹபீப் குல்சார் மோட்டார்ஸ்' வசம் உள்ளது. தங்களை தாலிபன் அரசு வாகனங்களுக்காக அணுகியதை பிபிசியிடம் அந்நிறுவனம் உறுதி செய்ததோடு, தாலிபன் அரசின் கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றும் கூறியது.
டொயோட்டாவின் மறுப்பு
ஆப்கன் தாலிபன் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு, செப்டம்பர் 27ஆம் தேதி டொயோட்டாவை தொடர்புகொண்டதாக நிறுவனத்தின் இயக்குநர் அஹமத் ஷாகீர் ஆதில் பிபிசியிடம் கூறினார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள டொயோட்டாவின் பிரதிநிதி நிறுவனத்திற்கு "ஆப்கனில் உள்ள சர்வதேச நிறுவனங்கள், சில அரசு சாரா அமைப்புகள் (NGOs) மற்றும் தூதரகங்களுக்கு மட்டுமே கார்களை விற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக" அவர் கூறினார்.
தாலிபனின் கோரிக்கைக்கு நிறுவனம் அளித்த பதில் என்ன என்று பிபிசி கேட்டபோது, "நாங்கள் மறுத்துவிட்டோம்" என்று கூறினார்.
தாலிபன் அரசின் உள்துறை அமைச்சகம், அமெரிக்க நிறுவனமான ஃபோர்டு தயாரித்த ரேஞ்சர் வாகனங்களை மாற்றி, வேறு வாகனங்களை வாங்குவதற்கு முடிவு செய்துள்ளது. இருப்பினும் அதற்குப் பதிலாக எந்த வாகனங்களை வாங்குவார்கள் என்பது இன்னும் தெரியவில்லை.
ஜப்பானிய நிறுவனமான டொயோட்டாவின் வாகனங்கள் தாலிபனின் தேர்வுகளில் ஒன்றாக இருக்கும் என்று கருதப்பட்டது. முன்னதாக, இடைக்கால அரசின் உள்துறை அமைச்சகம் பிபிசியிடம், மாற்று மாடல் குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என்று கூறியிருந்தது.
அவர்கள், "வேறு வாகனங்களை வாங்குவதற்கு எந்த பட்ஜெட்டும் அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால் காவல்துறையின் புதிய சீருடைகள் டொயோட்டாவின் ஹைலக்ஸ் மாடலை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன" என்று கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
முடிவுக்கு வந்த அமெரிக்க வாகனங்களின் சகாப்தம்
கடந்த இருபது ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய படைகளின் ஆதரவுடன் செயல்பட்ட அரசுகள் அமெரிக்க தயாரிப்பான ரேஞ்சர் வாகனங்களை பெரிய அளவில் பயன்படுத்தி வந்தன.
அமெரிக்க நிறுவனமான ஏஎம்எஸ் ஆப்கானிஸ்தானில் வாகனங்களைச் சீரமைக்கவும், பராமரிக்கவுமான ஒப்பந்தத்தைப் பெற்றிருந்தது. அந்த நிறுவனத்தின், பெயர் குறிப்பிட விரும்பாத, முன்னாள் ஊழியர் ஒருவர் ரேஞ்சர் வாகனங்கள் குறிப்பாக ஆப்கானிஸ்தானின் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டன என பிபிசியிடம் தெரிவித்தார்.
இந்த வாகனங்களின் பெரும்பாலான பாகங்கள் தாய்லாந்தில் தயாரிக்கப்பட்டு, பின்னர் ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு வரப்பட்டன என்று அவர் கூறினார்.
ஆப்கானிஸ்தானில் ராணுவ வாகனங்களைச் சீரமைத்தல் மற்றும் பராமரிப்புப் பணிகளைச் செய்து வந்த நிறுவனம், 2017 மற்றும் 2021க்கு இடையில் ராணுவம் மற்றும் காவல்துறை ஒரு லட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்களைச் சீரமைத்ததாகக் கூறுகிறது.
ஆப்கானிஸ்தானில் தாலிபன் அரசாங்கம் வருவதற்கு முன்பு, அமெரிக்க அரசாங்கம் ஆப்கன் ராணுவத்திற்கு நிதி உதவியளித்து வந்தது.
ஆப்கானிஸ்தானின் உள்ளூர்வாசிகளில் சிலரால் இந்த வாகனங்களைச் சீரமைக்க முடியும் என்றும், ஆனால் இப்போது அத்தகையவர்களில் பெரும்பாலானோர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர் என்றும் ஏஎம்எஸ் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் கூறுகிறார்.
அவர், "அமெரிக்க வாகனங்களின் உதிரி பாகங்கள் கிடைப்பது கடினமாகிவிட்டதுடன் கிடைக்கும் பாகங்களும் அதிக விலை கொண்டவையாக இருப்பதால் அமெரிக்க வாகனங்களை மாற்ற ஆப்கன் தாலிபன்கள் விரும்புகிறார்கள்," என்று கூறினார். தாலிபன் அரசின் மீது சர்வதேச பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. எனவே அது ஃபோர்டு நிறுவனத்துடன் எந்த ஒப்பந்தத்தையும் செய்ய முடியாது.
டொயோட்டாவின் மறுப்புக்குப் பிறகு, தாலிபனின் அடுத்த தெரிவு என்னவாக இருக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும் அவர்கள் சந்தையில் கிடைக்கும் வேறு வாகனங்களையும் வாங்கலாம்.
பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் ஆப்கானிஸ்தானுக்கு அதிக எண்ணிக்கையில் இறக்குமதி செய்யப்படுகின்றன, அவற்றில் பெரும்பாலானவை டொயோட்டாவின் தயாரிப்பு வாகனங்கள் ஆகும். பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான வாகனங்கள் துபை, இரான் வழியாக இறக்குமதி செய்யப்பட்டன.
டொயோட்டாவின் ஹைலக்ஸ், லேண்ட் க்ரூஸர் வாகனங்கள், வளைகுடா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு, மூன்று வகைகளில் விற்கப்படுகின்றன.

முல்லா ஒமர் மற்றும் மோட்டார் சைக்கிள்
பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் தனது 'இன் தி லைன் ஆஃப் ஃபயர்' என்ற புத்தகத்தில் ஆர்வமூட்டும் ஒரு சம்பவத்தைப் பற்றிக் கூறியுள்ளார்.
"கடந்த 2001ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில், முல்லா முகமது ஒமர் தோல்வியை ஒப்புக்கொண்டு ஹோண்டா மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடினார். ஜப்பானிய பிரதமர் முல்லா ஒமர் எங்கே என்று என்னிடம் கேட்டபோது, அவர் ஹோண்டா மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டார் என்று சொன்னேன்," என அவர் எழுதியுள்ளார்.
"முல்லா ஒமர் ஹோண்டாவில் பயணித்து, அவரது தாடி காற்றில் பறந்தால், அது ஹோண்டாவுக்கு கிடைத்த மிகவும் அற்புதமான விளம்பரமாக இருக்கும் என்று சிரித்துக்கொண்டே சொன்னேன்" என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆப்கன் தாலிபனின் நிறுவனர் முல்லா ஒமர் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடினாரா அல்லது காரில் தப்பி ஓடினாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் எதுவாக இருந்தாலும் அவரது வாகனம் ஜப்பானிய நிறுவனம் ஒன்றின் தயாரிப்புதான்.
அக்டோபர் 2012இல், தாலிபன் ஜபுல் மாகாணத்தில் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து ஒரு டொயோட்டா கார் மீட்கப்பட்டதாகக் கூறியது. 2002இல் ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க தாக்குதலுக்குப் பிறகு முல்லா ஒமர் கந்தஹாரில் இருந்து வெளியேறி மாயமான வாகனம் இதுதான் என்று தாலிபன் கூறியது.
ஜப்பானிய வாகனங்களுக்கும் தாலிபன்களுக்கும் இடையிலான உறவு அவர்களின் ஆரம்ப நாட்களில் இருந்தே இருந்து வருகிறது, அது மேலும் தொடர வாய்ப்புள்ளது.

பட மூலாதாரம், Getty Images
ஆப்கானிஸ்தானில் ராணுவ உபகரணங்கள் மற்றும் வெளிநாட்டு உதவி
கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக, ஆப்கானிஸ்தானில் ராணுவத்தால் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் நாட்டின் அரசியல் நிலைமைகள் மற்றும் வெளிப்புறத் தலையீட்டுடன் நேரடித் தொடர்பு கொண்டுள்ளன.
கடந்த 1978 முதல் 1992 வரை காபூலில் சோவியத் சார்பு அரசாங்கங்கள் இருந்தபோது, ரஷ்ய காமாஸ் டிரக்குகள் போன்ற ராணுவ உபகரணங்கள் சோவியத் யூனியனுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான ராணுவ உறவுகளை பிரதிபலித்தன.
இருப்பினும் அதே நேரத்தில் சோவியத் ஆதரவு பெற்ற நாடுகளுக்கு எதிரான போரின்போது களத்தில் ஜப்பானால் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.
ஆப்கன் போரில் டொயோட்டா முதல்முறையாக ஈடுபட்டது அப்போதுதான். தாலிபனின் எழுச்சி மற்றும் அது அதிகாரத்திற்கு வந்த காலகட்டத்தில், டொயோட்டா அதிகம் பயன்படுத்தப்பட்ட வாகனங்களில் ஒன்றாக இருந்தது.
செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களுக்குப் பிறகு, அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை தாக்கி அங்கு ஒரு ஜனநாயக அமைப்பை நிறுவியபோது, அங்கிருந்த அமெரிக்க வாகனங்களில் இருந்து மேற்கத்திய நாடுகள், குறிப்பாக அமெரிக்காவின் இருப்பை எளிதாகக் கணிக்க முடிந்தது.
இந்த நேரத்தில் ஆப்கன் ராணுவம் பல விதமான வாகனங்களைப் பயன்படுத்தியது. கடந்த இருபது ஆண்டுகளாக அமெரிக்க நிறுவனமான ஃபோர்டு தயாரித்த ரேஞ்சர் கார் ஆப்கன் உள்துறை அமைச்சகத்தில் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான வாகனமாக இருந்தது.
ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் படைகள் அமெரிக்க வாகனங்களைப் பயன்படுத்திய நிலையில், இப்போது ஆப்கன் தாலிபன்கள் ஹோண்டா மோட்டார் சைக்கிள்கள் மற்றும் டொயோட்டா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஃபீல்டர் கார்களில் பயணிக்கின்றனர்.

பட மூலாதாரம், IS/FILE
ஆப்கன் தாலிபன்கள் ஏன் ஜப்பானிய கார்களை வாங்க விரும்புகிறார்கள்?
9/11 தாக்குதல் நடந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அமெரிக்க நாளிதழான நியூயார்க் டைம்ஸ், தாலிபன்கள் லேண்ட் க்ரூஸர் ஓட்டுவதை காணொளிகளில் காண முடிந்தது என்று தனது செய்தியில் கூறியது.
இதற்குப் பிறகு, ஜப்பானிய நிறுவனமான டொயோட்டா அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான் ஒரேயொரு லேண்ட் க்ரூஸரை மட்டுமே சட்டபூர்வமாக இறக்குமதி செய்ததாகக் கூறியது.
மேலும் அந்த நிறுவனம், "ஆப்கானிஸ்தானில் உள்ள டொயோட்டா தயாரிப்புகள் அண்டை நாடுகளில் இருந்து முறைசாரா வழிகளில் வரவழைக்கப்படுகின்றன" என்றும் கூறியது. அதாவது அந்த வாகனங்கள் கடத்தப்பட்டவை என்று தெரிவித்தது.
இந்த விவகாரத்தில், தாலிபன் மற்றும் அல்-கொய்தாவுடன் தங்கள் வாகனங்களைத் தொடர்புபடுத்துவது டொயோட்டாவுக்கு பிடிக்கவில்லை. அதனால்தான் இப்போது தாலிபன்கள் அதிகாரத்தில் இருக்கும்போதும், அந்த நிறுவனம் அவர்களுக்கு வாகனங்களை விற்க மறுத்துவிட்டது.
ஆப்கானிஸ்தானில் தங்களுக்குப் பிரதிநிதிகள் யாரும் இல்லை என்றும், நிறுவனம் அங்கு வாகனங்களை ஏற்றுமதி செய்வதில்லை என்றும் டொயோட்டா கூறுகிறது.
நியூயார்க் டொயோட்டாவின் செய்தித் தொடர்பாளர் வேட் ஹாய்ட், "இது எங்கள் பொருட்களுக்கான மிக மோசமான விளம்பரம். ஆனால் தாலிபன்களும் மற்ற வாடிக்கையாளர்களைப் போலவே நம்பகமானதும், நீடித்து உழைப்பதுமான பொருட்களைத் தேடுகிறார்கள் என்பதை இது காட்டுகிறது" என்று கூறியிருந்தார்.
உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிக் ஸ்டேட் என்று அழைக்கப்படும் குழுவின் பிரசார வீடியோக்களை நீங்கள் பார்த்திருந்தால், அவர்கள் டொயோட்டா ஹைலக்ஸ் மாடல் கார்களை ஓட்டுவதைக் கட்டாயம் பார்த்திருப்பீர்கள்.
அக்டோபர் 2014இல் சிரியா மற்றும் இராக்கில் இஸ்லாமிக் ஸ்டேட் என்று அழைக்கப்படும் குழு அதன் உச்சத்தில் இருந்தபோது, தனது பல பிரசார வீடியோக்களில் லேண்ட் க்ரூஸர் மற்றும் ஹைலக்ஸ் வாகனங்களைப் பயன்படுத்தியது.

பட மூலாதாரம், AFP via Getty Images
'டொயோட்டா போர்'
டொயோட்டா இணையத்தில், "போர் மண்டலங்களில் டொயோட்டா வாகனங்களைப் பயன்படுத்துவது குறித்த அறிக்கைகள்" என்ற தலைப்பில் ஒரு சிறப்பு கேள்வி-பதில் பக்கத்தை உருவாக்கியது.
இந்தத் தளத்தில் டொயோட்டா, "நாங்கள் பணிபுரியும் நாடுகளில் உள்ள சட்டங்களைப் பின்பற்றுகிறோம். மேலும் நிறுவனத்திற்கு தெரியாமல், நிறுவனத்தின் ஒப்புதல் இல்லாமல் ராணுவ பயன்பாட்டிற்காக வாகனங்களை விற்பது தடை செய்யப்பட்டுள்ளது" என்று கூறியது.
ஆயுதக் குழுக்களால் பயன்படுத்தப்படும் அவர்களின் வாகனங்கள் முறைசாரா வழிகள் அல்லது பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் என்ற வகையில் கடத்தப்படுவதாக டொயோட்டா தெளிவுபடுத்தியது.
டொயோட்டா, சிரியாவுக்கு தங்கள் கார்களை அனுப்புவதில்லை என்றும், லிபியா மற்றும் இராக்கில் தங்கள் தயாரிப்புகளை முன்கூட்டியே அடையாளம் கண்ட நுகர்வோருக்கு மட்டுமே வழங்குவதாகவும் கூறியது.

இது டொயோட்டாவுக்கு ஒரு பெரிய பிரச்னையாக மாறியது. இதனால் வாகனங்களை வாங்கிய ஓர் ஆண்டுக்கு வேறு யாருக்கும் விற்கக் கூடாது என்று சில நாடுகளில் டொயோட்டா தனது வாடிக்கையாளர்களுக்கு நிபந்தனையை விதித்தது.
'சக்தி வாய்ந்த இன்ஜின், மலை மற்றும் பாலைவனப் பகுதிகளிலும், கரடுமுரடான சாலைகளிலும் பயணிக்கும் திறன், குறைந்த எரிபொருள் நுகர்வு, உதிரி பாகங்கள் எளிதாகக் கிடைப்பது மற்றும் பல வகையான ஆயுதங்களை இணைக்கும் வசதி' - இவைதான் டொயோட்டா வாகனங்கள் ஆயுதக் குழுவினருக்கு மிகவும் பிடித்தமானவையாக இருப்பதற்கான சிறப்பம்சங்கள்.
கடந்த 1977இல் சாட் மற்றும் லிபியா இடையே நடந்த போர் 'டொயோட்டா போர்' என்று அறியப்பட்டது.
அந்த நேரத்தில் டொயோட்டா பிக்கப் டிரக்குகள் (குறிப்பாக ஹைலக்ஸ் மற்றும் லேண்ட் க்ரூஸர்) பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டதால் அந்தப் போர் 'டொயோட்டா போர்' என்று அழைக்கப்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












