வேட்டையன்: ரஜினி-அமிதாப்-பகத் கூட்டணி எப்படி உள்ளது? தமிழ்நாடு, இலங்கை, துபாய் ரசிகர்கள் கூறுவது என்ன?

வேட்டையன் குறித்து ரசிகர்கள் சொல்வது என்ன

பட மூலாதாரம், X/@LycaProductions

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவான வேட்டையன் திரைப்படம் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு தவிர, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்டப் பல்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் வேட்டையன் வெளியாகியுள்ளது.

லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன் வேட்டையன் திரைப்படத்தை தயாரித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவையும், பிலோமின் ராஜ் படத்தொகுப்பையும் கையாண்டுள்ளார்கள்.

மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற 'ஜெய் பீம்' திரைப்படத்திற்கு பிறகு த.செ. ஞானவேலின் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதாலும், ரஜினிகாந்துடன் இணைந்து அமிதாப்பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியார், ராணா டகுபதி, ரீத்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி, கிஷோர் என பல நட்சத்திரங்கள் நடித்திருப்பதாலும், இப்படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு இருந்தது.

அந்த எதிர்பார்ப்பை வேட்டையன் திரைப்படம் பூர்த்தி செய்ததா? ரசிகர்கள் கூறுவது என்ன?

படம் பார்த்த ரசிகர்கள், அது குறித்து பிபிசி தமிழிடம் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ரஜினி ரசிகர்களை திருப்திபடுத்தியதா வேட்டையன்?

‘வேட்டையன்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்திருந்ததால், காலை 9 மணிக்கு திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டது.

ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் காலை 4 மணிக்கும், கேரளா மாநிலத்தில் காலை 7 மணிக்கும் சிறப்புக் காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

பெங்களூர் நகரத்தில் காலை 4 மணிக்கு வேட்டையன் திரைப்படத்தைப் பார்த்த பாஸ்கர் என்ற ரசிகர் ஒருவர், “கல்வி நிறுவனங்களின் குற்றங்கள், குற்றப்பிரிவு பற்றிய விவரங்கள், மனித உரிமை ஆணையம் குறித்த விஷயங்கள் என சிக்கலானவற்றை கூட எல்லோருக்கும் புரியும்படி கதையில் இணைத்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஞானவேல்” என தொலைபேசி மூலம் கூறினார்

“சமூக கருத்துகள் இருந்தாலும், ரஜினி ரசிகர்கள் விரும்பும் மாஸ் காட்சிகளும் படம் முழுவதும் உள்ளன. எனவே இப்படம் நிச்சயம் ரஜினி ரசிகர்களை திருப்திப்படுத்தும். தமிழ் சினிமாவின் வழக்கமான போலீஸ் ஹீரோ கதாபாத்திரம் போல அல்லாமல் ரஜினிகாந்தின் ‘என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்’ கதாபாத்திரம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது” என்று கூறினார்.

சென்னையில் ‘வேட்டையன்’ திரைப்படத்தை தனது மகனுடன் பார்த்துவிட்டு பேசிய கிருஷ்ணகுமார் என்பவர், “ரஜினி படங்களில் பிடித்த விஷயமே சிறுவர் முதல் பெரியவர் அனைவரையும் அவர் கவர்ந்துவிடுவார். நான் அப்பாவுடன் ரஜினி படம் பார்க்கச் செல்வேன். இப்போது என் மகனுடன் வந்துள்ளேன். திரைப்படம் மிகவும் நன்றாக உள்ளது, குடும்பத்துடன் நிச்சயம் பார்க்க வேண்டிய படம்” என்று கூறினார்.

வேட்டையன் குறித்து ரசிகர்கள் சொல்வது என்ன

பட மூலாதாரம், X/@LycaProductions

‘நல்ல கதையுடன் கூடிய கமர்ஷியல் திரைப்படம்’

“நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல கதையம்சம் கொண்ட ஒரு கமர்ஷியல் திரைப்படம். ரஜினி ரசிகர்களை மட்டுமல்லாது, அனைவரையும் திருப்திப்படுத்தும்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த லோகேஷ்.

வேட்டையன் திரைப்படத்தின் நீளம், 2 மணிநேரம் 43 நிமிடம். பெரிய திரைப்படம் என்றாலும் கூட, அந்த உணர்வு எங்குமே ஏற்படவில்லை என்கிறார் லோகேஷ்.

“அதற்கு திரைப்படத்தின் படத்தொகுப்பைதான் பாராட்ட வேண்டும். எங்கெல்லாம் படம் மெதுவாக செல்லத் தொடங்குவது போல தோன்றுகிறதோ, அங்கு உடனே அடுத்த காட்சிக்கு படம் நகர்ந்துவிடுகிறது. ஒரு நல்ல கதையை ரஜினிக்கு ஏற்றவாறு எடுத்ததற்கு இயக்குனரை பாராட்ட வேண்டும்” என்று கூறினார் லோகேஷ்.

சென்னையில் திரைப்படம் பார்த்த லக்ஷ்மி தேவி, “சமீபத்திய ரஜினி படங்களுடன் ஒப்பிடுகையில், இதில் கதை மிகச்சிறப்பாக இருந்தது. அதிலும் முதல் பாதி விறுவிறுவென சென்றது. இரண்டாம் பாதியில் கதையின் முக்கியப் பகுதியை அறிமுகப்படுத்துவதில் சிறிது நேரம் எடுத்துக்கொண்டதால், அங்கு சற்று மெதுவாக செல்வது போல இருந்தது. பிறகு மீண்டும் வேகமாக நகரத் தொடங்கி, கிளைமாக்ஸ் வரை போரடிக்காமல் இருந்தது” என்கிறார்.

“தர்பார், பேட்டை, ஜெயிலர் போன்ற இதற்கு முந்தைய ரஜினி படங்களில், அவரது ஸ்டைல் மற்றும் நடிப்பை வைத்தே கொண்டு சென்றார்கள். ஆனால் இதில் சமூகத்திற்கு தேவையான ஒரு முக்கியக் கருத்தை கதையோடு சேர்த்து, அதே நேரத்தில் பாடம் எடுக்காமல் ரசிக்கும்படி சொல்லியிருக்கிறார்கள்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த மணிகண்டன்.

வேட்டையன் குறித்து ரசிகர்கள் சொல்வது என்ன

பட மூலாதாரம், X/@LycaProductions

ரஜினி-அமிதாப்-பகத் கூட்டணி

வேட்டையன் திரைப்படம் ரஜினியின் 170-வது திரைப்படம். இதற்கு முன்பாக அந்தா கானூன், கிராஃப்தார், ஹம் ஆகிய இந்தி படங்களில் ரஜினியும் அமிதாப் பச்சனும் இணைந்து நடித்திருந்தனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தமிழில் முதல்முறையாக இந்தப் படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

அதேபோல ரஜினி மற்றும் பகத் பாசில் இணைந்து நடிப்பதும் இதுவே முதல்முறை.

“அமிதாப்பச்சன்- ரஜினி சேர்ந்து வரும் காட்சிகள் குறைவுதான், ஆனால் அந்த சில காட்சிகளும் மாஸாகவே உள்ளன. அவர்கள் இருவரும் பேசிக்கொள்ளும் வசனங்கள் ரசிகர்களின் கைதட்டலை அள்ளுகிறது. இது முழுக்க முழுக்க அமிதாப் பச்சனுக்காகவே எழுதப்பட்ட கதாபாத்திரம். அதை அவரும் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார்.” என்று கூறுகிறார் சென்னையைச் சேர்ந்த காயத்ரி.

“பகத் பாசில் கலக்கிவிட்டார். இந்த தலைமுறையின் சிறந்த நடிகர் நான்தான் என்பதை நிரூபிக்கும் விதத்தில் நடித்துள்ளார். அதிலும் அவருக்கும் ரஜினிக்கும் இடையிலான காம்போ காட்சிகள் நன்றாக் உள்ளன. ‘ஐ லவ் யூ பேட்ரிக்’ (பகத் பாசிலின் கதாபாத்திரத்தின் பெயர்) என ரஜினி சொல்லும் வசனத்தை மிகவும் ரசித்தேன்” என்று கூறினார் சென்னையைச் சேர்ந்த கோட்டீஸ்வரி.

சென்னையில் திரைப்படம் பார்த்த ஜெகன், “இந்த படத்தில் பல நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும், அவர்கள் அனைவருக்குமே போதுமான ஸ்பேஸ் இருந்தது. எந்த நட்சத்திரமும் தனியாகத் தெரியவில்லை” என்று கூறுகிறார்.

வேட்டையன் குறித்து ரசிகர்கள் சொல்வது என்ன

பட மூலாதாரம், X/@LycaProductions

'சமூக நீதி பேசும் வேட்டையன்’ - இலங்கை ரசிகர்களின் கருத்து

இலங்கையில் திரைப்படத்தை பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் சூப்பர், செம்ம, மாஸ் என ஒற்றை வார்த்தையில் தங்களின் கருத்தை பதிவு செய்தனர்.

ஒரு ரசிகர், “மிகவும் சாதாரண கதை தான். ரஜினிக்காக சில காட்சிகள் சேர்த்திருக்கின்றனர். அம்பேத்கர் கருத்தியல்களை சேர்த்திருக்கின்றனர். படம் ஓகேவாக இருக்கிறது. ஒருமுறை பார்க்கலாம்”

“படத்தின் கதை நன்றாக இருக்கிறது. ரஜினி ஒவ்வொரு ஃபிரேமிலும் மின்னுகிறார். ஜெயிலர் படத்தை போலவே இந்த படத்திலும் மாஸ் காட்டி இருக்கிறார். கண்டிப்பாக குடும்பத்தோடு வந்து பார்க்கலாம்” என்று கூறினார்.

“படம் ஃபுல் பேக்கேஜாக இருக்கிறது. கண்டிப்பாக பிளாக் பஸ்டர் ஹிட் ஆகும்” என்று மற்றொரு ரசிகர் நம்பிக்கையுடன் குறிப்பிட்டார்.

ஒரு ரசிகர், “வேட்டையன் படத்தில் ரஜினி, அமிதாப் பச்சன் என இரண்டு சூப்பர் ஸ்டார்கள் இணைந்து நடித்திருப்பது ரசிக்க வைக்கிறது. இந்த படம் போலீஸ் மீது மதிப்பை ஏற்படுத்துகிறது. மக்களுக்கு நல்ல சமூக கருத்தை பதிவு செய்திருக்கின்றனர்” என்றார்.

“வழக்கமான ரஜினி படங்களை போல இல்லாமல், சமூக கருத்தை முன்வைத்து படம் நகர்கிறது. முதல் பாதியை விட இரண்டாம் பாதி நன்றாக இருக்கிறது. கமர்ஷியல் நோக்கத்துடன் அதே சமயம் ஒரு நல்ல கருத்தையும் பதிவு செய்யும் நோக்கத்தில் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. கதைக்கு ரஜினி பலம் சேர்கிறார்” என்று ஒரு ரசிகர் விவரித்தார்.

“படத்தில் அனிருத் இசை அருமை. த.செ. ஞானவேல் இயக்கம் மிக அருமை. தொடக்கம் முதல் முடியும் வரை குடும்பத்தோடு ரசித்து பார்த்தோம்” என்றார்.

வேட்டையன் குறித்து ரசிகர்கள் சொல்வது என்ன

பட மூலாதாரம், X/@LycaProductions

படக்குறிப்பு, 'ஜெய் பீம்' திரைப்படத்திற்கு பிறகு த.செ. ஞானவேலின் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படம் ‘வேட்டையன்’

ஜெய்பீம் போன்ற திரைப்படம் அல்ல இது- துபாய் ரசிகர்களின் கருத்து

துபாயில் வேட்டையன் படத்தின் முதல் நாள் முதல் ஷோ பார்த்த பெண் ரசிகை ஒருவர், “படத்தில் ரஜினியின் நடிப்பு, ஸ்டைல் ரசிக்க வைக்கிறது. அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்னும் கருத்தை மையமாக வைத்தே படம் நகர்கிறது. படத்தில் வருவது போல் நாட்டில் இருக்கும் அனைவருக்கும் கல்வி கிடைத்தால் நன்றாக இருக்கும்.” என்றார்.

மற்றொரு ரசிகர், “இன்றைய காலகட்டத்துக்கு தேவையான கதைகளம். கல்வித் துறை பற்றி தெளிவாக படம் பேசியிருக்கிறது. ரஜினியில் கதாபாத்திரம் சமூகநீதி பேசுகிறது. ஜெயிலரை விட இந்த படம் நன்றாக இருக்கிறது.” என்று சொன்னார்.

“வேட்டையன் படம் மாஸ் ஹீரோ கதைகளத்துடன் இருக்கும் என்ற எதிர்பார்ப்போடு வந்தேன்” என்று குறிப்பிட்ட ஒரு ரசிகர், அவரின் எதிர்பார்ப்பு பொய்த்து விட்டதாகவும், நினைத்ததை விட படம் ஒரு நல்ல கருத்தோடு எடுக்கப்பட்டுள்ளதாக பாராட்டினார்.

“ஞானவேல் ஒரு நல்ல படத்தை சமூகத்துக்கு கொடுத்திருக்கிறார். படத்தின் நீளம் அதிகம் தான். ஆனால் விறுவிறுப்பாக நகர்வதால் நீளம் ஒரு பிரச்னையாக தெரியவில்லை” என்று ஒரு ரசிகர் குறிப்பிட்டார்.

மற்றொரு ரசிகர், “இது ஞானவேல் படம் என்பதால் ஜெய்பீம் படத்தை போன்று மெதுவாக நகரும் என நினைத்துவிட வேண்டாம். படம் விறுவிறுப்பாக நகர்கிறது. தொடக்கம் முதல் முடிவு வரை கொஞ்சம் கூட கதையில் தொய்வு ஏற்படவில்லை” என்றார்.

“படம் ஆரம்பிக்கும் போது அமிதாப் பச்சன் பேசும் ஒரு டயலாக் வரும். அவ்வளவுதான் அந்த ஒரு டயலாக் போதும் இந்த படத்தை முழுமையாக பார்க்க. ஞானவேல் சாதித்துவிட்டார்” என்று ஒரு ரசிகர் பாராட்டினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)