'கட்டடத்தின் மீது விழுந்த டிரோன்' - துபை, பஹ்ரைனில் 13வது நாளாக நடப்பது என்ன?

பட மூலாதாரம், Reuters
இரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போர் தற்போது 13-வது நாளில் நுழைந்துள்ள நிலையில், பிராந்தியத்தின் பல பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இரானின் புதிய அதி உயர் தலைவர் மொஜ்தபா காமனெயியின் அறிக்கை அந்நாட்டின் அரசு தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்டது,
'கொல்லப்பட்ட இரானியர்களின் ரத்தத்திற்காகப் பழிவாங்க இரான் தயங்காது' என்று மொஜ்தபா காமனெயி கூறுகிறார்.
போருக்கு மத்தியில் கப்பல் போக்குவரத்து மீதான சமீபத்திய தாக்குதல்களில், இராக் அருகே இரண்டு டேங்கர்கள் 'ஏவுகணைகளால்' தாக்கப்பட்டன.
அதே நேரத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அருகே ஒரு கொள்கலன் கப்பலும் 'ஏவுகணை' ஒன்றால் தாக்கப்பட்டது. இந்த ஏவுகணைகள் குறித்த விவரங்கள் தெரியவில்லை.
லெபனானில், சமீபத்திய இஸ்ரேலிய தாக்குதல்களால் பலர் உயிரிழந்துள்ளனர், இதில் பெய்ரூட்டின் கடற்கரைப் பகுதியில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்ததும் அடங்கும்.

பட மூலாதாரம், Telegram
அதேபோல, இராக், பஹ்ரைன் மற்றும் ஓமன் பகுதிகளில் இரானிய தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.
குவைத் சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து பல டிரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக, சிவில் விமானப் போக்குவரத்துக்கான பொது ஆணையத்தை மேற்கோள் காட்டி, நாட்டின் அரசு செய்தி முகமை தெரிவித்துள்ளது.

இரானின் புதிய அதி உயர் தலைவர் கூறியது என்ன?
இரானின் புதிய அதி உயர் தலைவர் மொஜ்தபா காமனெயியின் அறிக்கை அந்நாட்டின் அரசு தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்டது.
அவரது தந்தை ஆயதுல்லா அலி காமனெயிக்கு பின் அதி உயர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, இரானின் புதிய அதி உயர் தலைவரிடம் இருந்து வெளியாகும் முதல் செய்தி இதுவாகும்.
இரானின் புதிய தலைவர் மொஜ்தபா காமனெயியின் செய்தி இரானிய அரசு தொலைக்காட்சியில் ஒரு தொகுப்பாளரால் வாசிக்கப்படுகிறது.
"ஹோர்முஸ் நீரிணையை முடக்கும் உத்தியை இரான் தொடர்ந்து பயன்படுத்தும்" என்று காமனெயி கூறுகிறார்.
தொடர்ந்து அவர், "இரான் அண்டை நாடுகளுடன் 'நட்புடன்' இருக்க வேண்டுமென்ற கொள்கையைக் கொண்டுள்ளது, ஆனால் அமெரிக்க தளங்களை மூடுமாறு அவர்களுக்கு அறிவுறுத்துகிறோம். அந்தத் தளங்களை இரான் தொடர்ந்து குறி வைக்கும்" என்று கூறுகிறார்.
கொல்லப்பட்ட இரானியர்களின் ரத்தத்திற்காகப் பழிவாங்க இரான் தயங்காது என்று மொஜ்தபா காமனெயி கூறுகிறார்.
"குறிப்பாக மினாப் பகுதியில், ஒரு பள்ளிக்கு அருகில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் சுமார் 110 குழந்தைகள் உட்பட 168 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில்" என்று அவர் கூறுகிறார்.
அமெரிக்க ஏவுகணையால் அந்தப் பள்ளி தாக்கப்பட்டதாக இரான் கூறுகிறது.
இது குறித்து தாங்கள் விசாரித்து வருவதாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் கடந்த வாரம் பிபிசியின் டாம் பேட்மேனிடம் தெரிவித்தார்.
துபையில் நடத்தப்பட்ட தாக்குதல்
துபையில் உள்ள ஓர் உயரமான கட்டடத்தில், வியாழக்கிழமை காலை ஒரு பெரிய துளை காணப்பட்டது. ஒரு டிரோன் 'கட்டடத்தின் மீது விழுந்ததாக' உள்ளூர் அரசாங்கம் தெரிவித்ததை அடுத்து இந்த படம் வெளியாகியுள்ளது.
குறிப்பிடப்பட்ட அந்த டிரோன் எங்கிருந்து வந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
புதன்கிழமை (மார்ச் 11) இரவு, துபை கிரீக் ஹார்பர் அருகே நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக தேவையான நடவடிக்கை எடுத்து வருவதாக துபை அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்தது. பிபிசியால் சரிபார்க்கப்பட்ட வீடியோவில், கட்டடம் தாக்கப்பட்டதாகத் தோன்றும் இடத்தின் உள்ளே தீப்பிழம்புகள் தெரிவதைக் காட்டுகிறது.
வியாழக்கிழமை அதிகாலையில் வெளியிடப்பட்ட ஒரு தகவலில், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் துபை அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Reuters
பஹ்ரைனில் எச்சரிக்கை ஒலிகள்
பஹ்ரைன் உள்துறை அமைச்சகம் அந்த நாட்டில் எச்சரிக்கை ஒலி அமைப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறுகிறது.
எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில், "குடிமக்கள் அமைதியாக இருக்குமாறும், அருகிலுள்ள பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறும், அதிகாரப்பூர்வ சேனல்கள் மூலம் வெளியிடப்படும் செய்திகளைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.
எந்தப் பகுதியில் சைரன் ஒலிக்கப்படுகிறது அல்லது ஏன் ஒலிக்கப்படுகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. பஹ்ரைன் நாட்டின் தலைநகரான மனாமாவிற்கு மேலே புகை எழுவதை ஒரு புகைப்படம் காட்டுகிறது. அதே நேரத்தில் இந்த வார தொடக்கத்தில் எடுக்கப்பட்ட ஒரு படம் உயரமான கட்டடம் சேதமடைந்ததைக் காட்டியது.

பட மூலாதாரம், Reuters
எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் - இந்தியர் ஒருவர் உயிரிழப்பு
இராக்கில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள, இராக்கின் பாஸ்ரா அருகே கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற அமெரிக்க டேங்கர் கப்பல் தாக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
தூதரகத்தின் கூற்றுப்படி, இந்தத் தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இருப்பினும், இந்தத் தாக்குதலை நடத்தியது யார் என்று தூதரகம் தெரிவிக்கவில்லை.
"2026 மார்ச் 11 அன்று, மார்ஷல் தீவுகளின் பதிவு செய்யப்பட்ட அமெரிக்க கச்சா எண்ணெய் டேங்கர் கப்பலான 'சேஃப்சீ விஷ்ணு' (Safesea Vishnu), இராக்கின் பாஸ்ரா அருகே தாக்கப்பட்டது," என்று சமூக ஊடகத் தளமான எக்ஸ்-இல் இந்திய தூதரகம் கூறியுள்ளது.
கப்பலில் இருந்த எஞ்சிய 15 இந்தியப் பணியாளர்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாக்தாத்தில் உள்ள இந்தியத் தூதரகம், இராக் அதிகாரிகளுடனும் மீட்கப்பட்ட இந்திய மாலுமிகளுடனும் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
உயிரிழந்த பணியாளரின் குடும்பத்திற்கு தூதரகம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Royal Thai Navy
இராக் அருகே இரு கப்பல்கள் தாக்கப்பட்ட நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கடற்கரைக்கு அப்பால் ஒரு கப்பல் தாக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி காலை 06:19 மணிக்கு, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கடற்கரையிலிருந்து சுமார் 35 கடல் மைல் தொலைவில் - ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் - ஒரு கொள்கலன் கப்பல் 'அடையாளம் தெரியாத ஏவுகணையால் தாக்கப்பட்டு கப்பலில் சிறிய தீ விபத்து ஏற்பட்டதாக' பிரிட்டன் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பு (யூகேஎம்டிஓ) கூறுகிறது.
பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், AFP via Getty Images
வளைகுடா அலுவலகங்களை மூடும் சர்வதேச வங்கிகள்
பஹ்ரைனில், சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள எண்ணெய் மற்றும் எரிபொருள் தொட்டிகளை இரான் குறி வைத்ததை அடுத்து பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
புகை மிகவும் அடர்த்தியாக இருப்பதால், மக்கள் தங்கள் ஜன்னல்களை மூடி வைக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
ஓமனில், நேற்று (மார்ச் 11) சலாலா துறைமுகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் எரிபொருள் சேமிப்பு தொட்டிகளில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்புப் படையினர் இன்னும் பணியாற்றி வருகின்றனர்.
ஓமன் இப்போது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதன் எண்ணெய் ஏற்றுமதி முனையத்தில் உள்ள கப்பல்களை வெளியேற்றுமாறு உத்தரவிட்டுள்ளது.
இரானிய வங்கி மீதான தாக்குதலுக்குப் பிறகு, மேற்கத்திய நிதி நிறுவனங்கள் இப்போது தங்களது இலக்கு என்று இரானின் புரட்சிகர காவல் படை (IRGC) எச்சரித்துள்ளது.
சர்வதேச வங்கிகள் தங்கள் வளைகுடா அலுவலகங்களை மூடி வருகின்றன - கத்தாரில் எச்எஸ்பிசி (HSBC), துபையில் சிட்டி (Citi) மற்றும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் (Standard Chartered) - ஆகிய வங்கிகள் தங்களது பணியாளர்களை வீட்டிலேயே இருக்குமாறு கூறுகின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












