ராஜஸ்தானில் 18 வயது பெண் உடன்கட்டை ஏற்றப்பட்ட வழக்கில் 8 பேர் விடுதலை - 37 ஆண்டுக்கு முன் என்ன நடந்தது?

    • எழுதியவர், திரிபுவன்
    • பதவி, மூத்த செய்தியாளர், பிபிசி ஹிந்தி

ராஜஸ்தான் மாநிலம் திவராலா பகுதியில், 37 ஆண்டுகளுக்கு முன்பு 18 வயதான ரூப் கவர் என்ற பெண் உடன்கட்டை ஏற்றிக் கொல்லப்பட்டார். அந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 8 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தீர்ப்பு எதிர்காலத்தில் சதி எனப்படும் உடன்கட்டை ஏற்றுதல் போக்கு அதிகரிப்பதற்கு வழிவகை செய்யும் என்று 14 பெண்கள் அமைப்புகள் இடம்பெற்றுள்ள குழு கூறியுள்ளது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் அந்தக் குழு முன்வைத்துள்ளது.

பலராலும் திவராலா சதி என்று நினைவு கூறப்படும் இந்த நிகழ்வு அரங்கேறும் போது ரூப் கவரின் வயது 18. அவரது வயதைவிட இரண்டு மடங்கு ஆண்டுகள் அவகாசம் எடுத்துக்கொண்ட நீதிமன்றம், 37 ஆண்டுகள் கழித்து இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

மேக்னா கார்ட்டா (இங்கிலாந்தில் குடிமக்களுக்கு உரிமைகளை வழங்கிய சாசனம்) ஒப்பந்தம் கையெழுத்தான 1215ஆம் ஆண்டில் இருந்தே இதுபோன்ற நிகழ்வுகள் வழக்கத்தில் இருக்கின்றன என்று கூறுகிறார் சமூக நீதிக்காகவும் பெண்களின் உரிமைக்காகவும் தொடர்ச்சியாகப் போராடி வரும் கவிதா ஶ்ரீவஸ்தவா.

"தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம். 37 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் தீர்ப்பால் என்ன பயன்? 2004ஆம் ஆண்டு தொடர்புடைய காங்கிரஸ் மற்றும் பாஜக உறுப்பினர்கள் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட போது வசுந்த்ரா ராஜேவின் அரசு மேல்முறையீடு செய்ய மறுத்துவிட்டது. தற்போதும் அதேபோல் எந்தவிதமான மேல் முறையீடும் இருக்காது என்பது போல் தெரிகிறது" என்று அவர் கூறுகிறார்.

ரூப் கவர் உடன்கட்டை ஏற்றப்பட்ட நிகழ்வால் அப்போது ராஜஸ்தான் முதல்வராக இருந்த ஹரிதேவ் ஜோஷி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய நேர்ந்தது. ஆனாலும்கூட இந்த வழக்கில் தொடர்புடைய நபர்கள் ஒவ்வொருவராக வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். திவராலா பகுதியில் இந்த வழக்கு தொடர்பாக மௌனமே நீடித்து வருகிறது.

மக்கள் அனைவரும் பேச முடியாதவர்களாக மாறிவிட்டார்கள். உலகமெங்கும் விவாதத்தை ஏற்படுத்திய இந்த நிகழ்வு தொடர்பாக, அது நடந்தேறிய கிராமத்தில் இருந்து உடன்கட்டை ஏற்றப்படுவதற்கு எதிராக ஒரு குரல்கூட எழவில்லை.

பெண்கள் அமைப்பு கூறுவது என்ன?

14 பெண்கள் அமைப்புகள் ஒன்றுசேர்ந்த குழு, இந்த தீர்ப்பிற்கு பிறகு கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், முதல்வர் பஜன்லால் இந்த தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும், ஏதேனும் நடவடிக்கைகள் மேற்கொண்டு நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

உடன்கட்டை ஏற்றும் பழக்கத்தை ஊக்குவிக்கக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

2004ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் தேதி அன்று இந்த வழக்கில் தொடர்புடைய 17க்கும் மேற்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

அவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களில் அன்றைய ராஜஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேந்திர சிங் ரத்தோர், உணவு மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் ப்ரதாப் சிங் கச்சாரியாவாஸ், சதி தர்ம ரக்‌ஷ சமிதி, ராஜ்புத் சபா பவன் போன்ற அமைப்புகளின் தலைவர்களும் அடங்குவார்கள் என்று வர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்று, இவர்கள் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக அரசு தரப்பு மேல்முறையீடு செய்யவில்லை என்ற போதிலும் பெண்கள் அமைப்புகள் தங்களால் இயன்ற அளவு இதற்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

"இந்த வழக்கு மிகவும் கவனமற்ற முறையில் கையாளப்பட்டது. காவல்துறையோ, நீதித்துறையோ, உடன்கட்டை ஏறுதல் தடுப்பு சிறப்பு நீதிமன்றமோ இந்த வழக்கில் நேர்மையுடன் நடந்து கொள்ளவில்லை. இது நிச்சயமாக மேல் முறையீட்டிற்கு சென்றிருக்க வேண்டும். ஆனால் அன்றைய முதல்வர் வசுந்தரா ராஜே இந்த வழக்கில் மேல் முறையீடு ஏதும் தேவையில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்திருந்தார்," என்றும் அந்த அமைப்பு தெரிவித்தது.

"எங்களிடம் வேறு வழி ஏதும் இல்லை. நாங்களும் இதர 14 அமைப்புகளும் சேர்ந்து இதற்கு எதிராக ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தோம். கடந்த இருபது ஆண்டுகளாக எங்களின் மனு கிடப்பில் போடப்பட்டுள்ளது" என்று அந்த குழு கூறியுள்ளது.

திவராலாவில் நிலைமை எவ்வாறு உள்ளது?

ரூப் கவரை உடன்கட்டை ஏற்றிய நிகழ்வு திவராலா கிராமத்தில் மூலை முடுக்கெல்லாம் பரவியிருக்கிறது. இருப்பினும் இது பற்றி ஏதேனும் கேட்டால் அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்பது போல் கிராம மக்கள் நடந்து கொள்கிறார்கள்.

இந்த சம்பவம் 1987ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4-ஆம் தேதி அன்று திவராலாவில் அரங்கேறியது. கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி அன்று உடன்கட்டை ஏற்றுதல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் ரூப்பை உடன்கட்டை ஏற்றிய நிகழ்வில் தொடர்புடைய 8 பேரை வழக்கில் இருந்து விடுவித்தது. இந்த கிராமமே தற்போது அமைதியாக இருக்கிறது.

இது தொடர்பாக பல்வேறு காலங்களில் தொலைக்காட்சியில் பேசிய மக்கள் கூட அச்சத்தில் உள்ளனர். அவர்கள் தற்போது எந்தவிதமான சர்ச்சையிலும் மாட்டிக் கொள்ள விரும்பவில்லை. நாங்கள் ஏதேனும் பேசினால் இங்குள்ள மக்கள் ஆத்திரமடைவார்கள் அல்லது காவல்துறை எங்களை துன்புறுத்தும் என்று கூறுகின்றனர்.

ராஜஸ்தான் மற்றும் நாட்டின் நவீனத்துவத்திற்கு அடியாய் அமைந்த அந்த நிகழ்வு அரங்கேறி 37 ஆண்டுகள் ஆன போதும் மக்கள் மனதில் நேற்று நடந்தது போல் அதன் நினைவுகள் உள்ளன.

ஆனால் இந்த கிராமத்தில்தான், 18 வயதான ரூப் கவர் இறந்து போன அவரின் கணவருடன் உயிருடன் எரிக்கப்பட்டார் என்று யாரும் கூற தயாராக இல்லை.

நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

உடன்கட்டை ஏற்றுதல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றங்களை நிரூபிக்க இயலவில்லை.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் அமன் சைன் சிங் செகாவத், "தற்போது வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள், சம்பவம் நடந்த போது 12-14, 17-28 வயது நிரம்பிய பள்ளி மாணவர்கள். அவர்கள் உடன்கட்டை ஏற்றுதலுக்கு ஆதரவாக பேசினார்கள் என்பதை நிருபிக்க எந்தவிதமான ஆதாரமும் கண்டுபிடிக்கப்படவில்லை" என்று கூறினார்.

கடந்த 2004-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ஆம் தேதியன்று, இதே நீதிமன்றம் 25 பேரை வழக்கில் இருந்து விடுவித்தது. பாஜகவின் ராஜேந்திர சிங் ரத்தோர், காங்கிரஸ் தலைவர் ப்ரதாப் சிங் கச்சரியாவாஸ், ரூப்பின் சகோதரர் கோப்பா சிங் ரத்தோர் உள்ளிட்டோர் இதில் அடங்குவார்கள்.

இந்த வழக்கில் 1996-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சிகரின் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தால் 32 பேர் விடுவிக்கப்பட்டனர்.

ராஜஸ்தானின் அரசியல் போக்கை இந்த நிகழ்வு வெகுவாக மாற்றியது. ஹரிதேவ் ஜோஷி போன்ற பெரிய அரசியல் தலைவர்கள் இந்த நிகழ்விற்கு பிறகு காணாமல் போனார்கள்.

அன்றைய அரசின் நிலைப்பாடு என்ன?

அந்த மாநிலத்தில் உள்ள ராஜ்புத் சமூகத்தினர் இந்த விவகாரத்தில் ஆத்திரமடைந்தனர். உடன்கட்டை ஏற்றும் போக்கு அவர்களின் மத விவகாரம் என்றும் அதில் அரசு தலையிடக் கூடாது என்றும் நம்பினார்கள்.

இந்த விவகாரத்தில் அரசியல் தலைவர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் ராஜ்புத் சமூகத்தினருக்கு ஆதரவாக இருந்தனர். ஆனால் ராஜ்புத் சமூகத்தை சேர்ந்தவரும் அன்று பாஜக தலைவராகவும் இருந்த பைரோன் சிங் செகாவத் இதற்கு எதிராக நின்றார். இது மிகவும் தவறான பண்பாடு, நவீன சமூகம் இதுபோன்ற பண்பாட்டை வளர்த்தெடுக்க கூடாது என்று கூறினார்.

ராஜ்புத் சமூகத்தினர் நடத்திய ஊர்வலத்திற்கு அவர் செல்லவில்லை. அது தொடர்பாக தன்னுடைய அதிருப்தியையும் அவர் வெளியிட்டார்.

அன்றைய அரசியல் நிகழ்வுகளை தொடர்ந்து கவனித்து வந்த பலரும், அன்றைய ராஜஸ்தான் முதல்வரான ஹரிதேவ் ஜோஷி உடன்கட்டை ஏற்றுதலை நம்பினார் என்றும் இந்த இறுதி சடங்கை குடும்பத்தினர் நடத்துவதை தடுக்கக் கூடாது என்றும் நினைத்தாகவும் கூறுகின்றனர்.

ராஜஸ்தானின் அன்றைய உள்துறை அமைச்சர் குலாப் சிங் செகாவத் இந்த மொத்த விவகாரமும் மதம் தொடர்புடையது என்று கூறி அதில் தலையிட மறுத்துவிட்டார்.

அதில் தலையிடுவது காங்கிரஸ் கட்சியில் உள்ள ராஜ்புத் சமூகத்தினரை ஆத்திரமடைய வைக்கும் என்று நம்பினார் ஜோஷி. அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் இது சரியான பார்வை இல்லை என்றும் நம்பினார். எனவே நிர்வாகம் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும் என்றும் இந்து முறைப்படி எந்தவிதமான தடையும் இன்றி இறுதிச் சடங்குகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் நம்பினார்.

அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் பூட்டா சிங் இது போன்ற சடங்குகள் நடைபெறுவதை உடனடியாக மாநில அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறினார். அவரது ஆலோசனையை ஹரிதேவ் ஏற்றுக்கொள்ளவில்லை. அவருக்கு எதிராக அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியிடம் புகார்கள் முன்வைக்கப்பட்டன. ராஜீவ் காந்தியும் இந்த விவகாரத்தில் ஹரிதேவ் மீது கோபத்துடன் இருந்தார்.

மத்திய அரசின் அழுத்தத்திற்கு பிறகு புதிய சட்டம்

இந்த விவகாரம் தொடர்பாக அரசுக்கும் உடன்கட்டை ஏற்றுதலை ஆதரிக்கும் நபர்களுக்கும் இடையே தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்று வந்தன. உடன்கட்டை ஏற்றும் வழக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நபர்களிடம் இருந்தும், மத்திய அமைச்சர் பூட்டா சிங்கிடம் இருந்தும் தொடர்ச்சியாக வந்த அழுத்தத்திற்கு பிறகு 1988-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3-ஆம் தேதி அன்று உடன்கட்டை ஏற்றுதல் தடுப்பு சட்டம் ராஜஸ்தானில் அமல்படுத்தப்பட்டது.

ஆனால் ரூப்பின் முதலாமாண்டு நினைவஞ்சலியின் போது, அவர் எரிக்கப்பட்ட இடத்தில் 1988-ஆம் ஆண்டு சுன்ரி மஹா உத்சவம் என்ற திருவிழா நடத்தப்பட்டது. அதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். இது மேலும் ஒரு விவாதத்தை ஏற்படுத்தியது.

காவல்துறை அனுமதியுடன் எந்தவிதமான பிரச்னையும் இன்றி இந்த விழாவை நடத்த ஜோஷி அரசு அனுமதி வழங்கியது.

இந்த விவகாரம் தொடர்பாக பேசிய மூத்த பத்திரிகையாளர் சீதாராம் ஜலாணி, "உடன்கட்டை ஏற்றுதல் விவகாரம் ராஜ்புத் சமூகத்தினர் காங்கிரஸில் இருந்து முற்றிலுமாக புறம்தள்ளப்படுவார்கள் என்று அஞ்சினார் ஜோஷி. இறுதியில் அது தான் நடந்தது," என்று மேற்கோள்காட்டுகிறார்.

ராஜஸ்தானின் வாக்கு வங்கியில் திருப்பத்தை ஏற்படுத்தும் நிகழ்வாக இது காணப்பட்டது. ராஜ்புத் சமூகத்தினர் ஜெய்ப்பூர் வீதிகளில் கையில் வாள்களுடன் பேரணிகள் நடத்தி எல்லை மீறினார்கள்.

பேரணி எந்தவிதமான தடையுமின்றி நடைபெற வேண்டும் என்று அன்றைய முதல்வர் ஜோஷி ராஜஸ்தான் மாநில டி.ஜி.பிக்கு உத்தரவு பிறப்பிக்க, தேவைப்பட்டால் ராணுவத்தைக் கொண்டு இந்த பேரணியை தடுத்து நிறுத்துவோம் என்று பூட்டா சிங் கூறினார்.

உடன்கட்டை ஏற்றுதல் பழக்கத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் கடுமையான விமர்சனத்தை காங்கிரஸ் அரசு எதிர்கொண்டது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நரேந்திர சிங் பாட்டி ஜோஷியின் ஆட்சியை விமர்சனம் செய்தார்.

உடன்கட்டை ஏற்றும் போக்கை ஆதரிக்கும் வகையில் சுன்ரி மஹா உத்சவம் நடத்தப்பட்டதாகக் கூறி அதனை எதிர்த்து பெண்கள் அமைப்புகள் போராட்டம் நடத்தின.

உயர் நீதிமன்ற தடையை மீறி விழா

இந்த சுன்ரி விழாவை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறி சமூகநல ஆர்வலர்களும் வழக்கறிஞர்களும் அன்றைய ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மாவுக்கு கடிதம் அனுப்பினர்.

1987-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி அன்று வர்மா அந்த கடிதத்தை பொது நல வழக்காக கருதி அந்த விழாவுக்கு தடை விதித்தார். உயர் நீதிமன்றம் இந்த விழாவை உடன்கட்டை ஏற்றும் பழக்கத்தை புகழும் ஒரு நிகழ்வாக கருதியது. எந்த ஒரு காரணம் கொண்டும் இந்த விழாவை நடத்தவிடக் கூடாது என்றும் மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.

இருப்பினும் செப்டம்பர் 15-ஆம் தேதி அன்று ஆயிரக்கணக்கான மக்கள் திவராலா கிராமத்தில் குவிந்து இந்த விழாவில் பங்கேற்றார்கள். இது காங்கிரஸ் கட்சியின் பிம்பத்தை ராஜஸ்தானில் உடைத்தது. நாடு முழுவதும் அக்கட்சி விமர்சனத்திற்கு ஆளானது.

அமைச்சர் குலாப் சிங் செகாவத் தலைமையில் குழு ஒன்றை முதல்வர் ஹரிதேவ் அமைத்தார். அக்டோபர் 1ம்-ஆ தேதி அன்று உடன்கட்டை ஏற்றும் பழக்கத்தை தடுக்கும் வகையில் அவசரச் சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டது.

பெண்ணுரிமை தொடர்பாக குரல் கொடுக்கும் அமைப்புகளின் அழுத்தம் காரணமாக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது என்று விவரிக்கிறார் கவிதா ஶ்ரீவஸ்தவா.

கணவரை இழந்த பெண்களை உடன்கட்டை ஏற தூண்டும் நபர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை வழங்க வழிவகை செய்தது இந்த சட்டம். இந்த வழக்கத்தை ஆதரிக்கும் நபர்களுக்கு 7 ஆண்டுகள் சிறையும் ரூ. 30 ஆயிரம் அபராதமும் விதிக்க சட்டம் வழிவகை செய்தது.

பதற்றமான சூழல் நிலவியது. ராஜஸ்தான் முழுவதும் இந்த பழக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் நபர்கள் வாள்களுடன் போராட்டங்களை நடத்தினார்கள் என்று கூறுகிறார் அன்று நவ்பாரத் டைம்ஸில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் ஷக்கீல் அக்தர்.

தற்போது இந்த கிராமத்தின் தலைவராக உள்ள முன்னாள் ராணுவ வீரர் பஞ்ச் மங்கு சிங் செகாவத், "அனைத்தும் அமைதியாக இருக்கிறது. தற்போது இது போன்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை" என்று கூறினார். ஆனால் அவர் உட்பட பல கிராம மக்களும் இது தொடர்பாக பேச தயங்குகின்றனர்.

ஆனால் அங்கே இருந்த முதியவர் ஒருவர், "18 வயதான் ரூப் அந்த தீயில் எரிந்து போனார். மிகவும் கோரமான நிகழ்வு அது. ஆச்சர்யமளிக்கும் விசயம் என்னவென்றால் அதனை பார்க்க தொலை தூரங்களில் இருந்தும் மக்கள் கிராமத்திற்கு குவிந்த வண்ணம் இருந்தனர்," என்று நினைவு கூறுகிறார். மக்கள் மாறுபட்ட கருத்தை இதில் தெரிவிக்கின்றனர். ரூப் விருப்பப்பட்டே உடன்கட்டை ஏறினார் என்று ஒரு சிலர் கூறுகின்றனர்.

யார் இந்த ரூப் கவர்?

ஊடகங்களும், காவல்துறை அறிக்கைகளும் ரூப் சொந்த விருப்பத்தில் தான் உடன்கட்டை ஏறினார் என்று கூறுகின்றன. அவர் இறப்பதற்கு 7 மாதங்களுக்கு முன்பு மல் சிங் என்பவரை திருமணம் செய்தார்.

தன்னுடைய குடும்பத்தினருடன் திவராலாவில் வசித்து வந்த மல் சிங் அப்போது இளங்கலை மாணவர். ரூப்பின் தந்தை ஒரு பள்ளி ஆசிரியர். ரூப் கல்வி அறிவற்ற பெண் இல்லை. ஜெய்ப்பூரில் உள்ள ட்ரான்ஸ்போர்ட் நகரில் அவர் பள்ளி படிப்பை முடித்தார். பழமையான விசயங்களில் நம்பிக்கை அற்றவராகவே அவர் இருந்தார்.

உடன்கட்டை ஏறுவார் என்று ஒருவராலும் நினைத்தும் கூட பார்த்திருக்க இயலாது. திருமண புகைப்படங்களில் கலாசார வழக்கப்படி முக்காடு அணிவதற்கு மாறாக அவர் இருந்தார். அவர் சதி தேவியை தினமும் நான்கு மணி நேரம் பிரார்த்தனை செய்தார் என்று கிராமத்தினர் நம்பினர். பகவத் கீதையையும், அனுமன் சலிசாவையும் அவர் வாசிப்பார். மந்திரங்களை கூறுவார் என்றும் அவர்கள் கூறுகின்றனர். விருப்பப்பட்டே அவர் உடன்கட்டை ஏறினார் என்று அவர்கள் நம்புகின்றனர்.

மூத்த ஓய்வு பெற்ற காவலர் ஒருவர், "செப்டம்பர் 4 முதல் 6 வரை மாநில அரசு ஸ்தம்பித்துவிட்டது. சுன்ரி விழா நடைபெறும் வரை உள்துறை அமைச்சர் குலாப் சிங் செகாவத் இது ஒரு மதம் தொடர்பான விவகாரம் என்றும் இதில் தலையிட முடியாது என்றும் கூறினார். உண்மையில் காவல்துறையினர் இந்த விவகாரத்தில் தலையிடக் கூடாது என்பது தான் அவரின் உத்தரவு," என்றார்.

அந்த விழாவில் ரூப்பின் தந்தை பல் சிங் ரத்தோரும் பங்கேற்றார். ஒரே நாளில் இரண்டு லட்சம் பேர் குவிந்தனர். விழா முடியும் போது கிட்டத்த 5 லட்சம் பேர் பங்கேற்றிருந்தார்கள்.

ரூப்பின் மாமனார் சுமெர் சிங், அவரின் சகோதரர் மங்கேஷ் சிங், மல் சிங்கின் சகோதரரான 10 வயதான் பூபேந்திர சிங், அந்த குடும்பத்தில் உள்ள ஆண்களுக்கு மொட்டையடித்த பன்சிதர், இறுதி சடங்குகளை நடத்திய பூசாரி பாபு லால் ஆகியோர் கைது செய்யப்பட்டர்.

மெதுவாக ஒவ்வொருவரும் விடுதலை செய்யப்பட்டனர். அரசின் உத்தரவுகள் தொடர்பாக முறையாட வாதிடவும் ஒருவரும் இல்லை. இதில் தொடர்புடைய எவருக்கும் தண்டனை பெற்றுத்தர அரசு தரப்பு வழக்கறிஞர்களும் வாதிடவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)