You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தென் கொரியாவில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் நபர் - பெண் இலக்கியவாதி ஹான் காங்கின் தனித்துவ படைப்புகள்
- எழுதியவர், அன்னாபெல் ரக்காம்
- பதவி, கலாசார செய்தியாளர்
தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங்கிற்கு (Han Kang) இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
53 வயதான புனைகதை எழுத்தாளர் ஹான் காங், 2007-ஆம் ஆண்டு எழுதிய தி வெஜிடேரியன்’ (The Vegetarian) என்னும் நாவலுக்காக 'மேன் புக்கர்’ சர்வதேச பரிசுப் பெற்றார்.
''வரலாற்று பெரும் துயரங்களையும், மனித வாழ்வின் பலவீனத்தையும் கவித்துவமான மொழியில் அவர் எழுதும் ஆழமான உரைநடைக்காக'' பரிசு அறிவிக்கும் நிகழ்வின்போது அவர் பாராட்டப்பட்டார்
நோபல் பரிசுக் குழு 1901-ஆம் ஆண்டு முதல் இலக்கிய விருதை வழங்கி வருகிறது. 18வது முறையாக ஒரு பெண் எழுத்தாளர், இலக்கிய பரிசை வென்றுள்ளார்.
ஹான் 11 மில்லியன் க்ரோனா (£810,000) வென்றுள்ளார். இது இந்த ஆண்டு நோபல் பரிசு பெற்ற ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் தொகையாகும்.
தென் கொரியாவிலிருந்து இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்ற முதல் நபர் ஹான் காங். நோபல் பரிசு வாரியம் ஹானை "இசை மற்றும் கலைகளுக்காக தன்னை அர்ப்பணித்தவர்" என்று விவரித்தது.
''அவரது கலைக்கு எல்லைகள் கிடையாது. ஆணாதிக்கம், துயரம், வன்முறை போன்ற பல்வேறு தலைப்புகளில் அவரின் படைப்புகள் இருக்கும்” என்றும் நோபல் பரிசு வாரியம் பாராட்டியுள்ளது.
2016-ஆம் ஆண்டில் அவரது தொழில் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அவரது 'தி வெஜிடேரியன்’ நாவலுக்கு சர்வதேச மேன் புக்கர் பரிசுக் கிடைத்தது.
இந்த நாவல் வெளியான பல ஆண்டுகளுக்கு பிறகு 2015-ஆம் ஆண்டில் டெபோரா ஸ்மித்தால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.
உணவு உட்கொள்ளும் விதிமுறைகளுக்கு அடிபணிய மறுக்கும் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் வன்முறையான விளைவுகளை இந்த நாவல் சித்தரிக்கிறது.
ஹானின் மற்ற படைப்புகளில் 'தி ஒயிட் புக்’, 'ஹ்யூமன் ஆக்ட்ஸ்’ மற்றும் 'கிரீக் லெசன்ஸ்’ ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
ஸ்வீடிஷ் அகாடமியின் நிரந்தர செயலாளர் மேட்ஸ் மால்ம், ''அவர் உண்மையில் இந்த பரிசை வெல்வார் என எதிர்பார்க்கவில்லை'' என்று விழாவில் கூறினார்.
ஸ்வீடிஷ் அகாடமியின் கமிட்டி தலைவர் ஆண்டர்ஸ் ஓல்சன், "வரலாற்றின் அதிர்ச்சிகரமான துயர் நிறைந்த அனுபவங்களை ஹானின் படைப்புகள் எதிர்கொள்கிறது. அவரது ஒவ்வொரு படைப்புகலும், மனித வாழ்க்கையின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது" என்றார்.
ஹானை "சமகால உரைநடையில் ஒரு புதுமைப்புகுத்தியவர்” என்றும் அவரது "கவிதை மற்றும் தனித்துவமான பாணி" பாராட்டுக்குரியது என்றும் ஆண்டர்ஸ் புகழ்ந்தார்.
உடலுக்கும் ஆன்மாவிற்கும், உயிருள்ளவர்களுக்கும் இறந்தவர்களுக்கும் இடையிலான தொடர்புகள் பற்றிய தனித்துவமான விழிப்புணர்வு ஹானுக்கு இருப்பதாக அவர் கூறினார்.
2022-ஆம் ஆண்டு பிரெஞ்சு எழுத்தாளர் ஆனி எர்னோ (Annie Ernaux) இலக்கியத்துக்கான நோபல் பரிசை பெற்றார். அதன் பிறகு இலக்கியப் பரிசைப் பெறும் பெண் இலக்கியவாதி ஹான்தான்.
இந்த ஆண்டு நோபல் பரிசு பெற்ற முதல் பெண் இவர்தான்.
ஹான் நாவலாசிரியர் ஹான் சியுங்-வோனின் மகள் ஆவார். தென் கொரிய நகரமான குவாங்ஜூவில் பிறந்தார்.
அவர் தனது இளம் வயதிலேயே தலைநகர் சியோலுக்கு குடிபெயர்ந்தார். நகரத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் கொரிய இலக்கியம் படித்தார்.
1993-இல் வெளியிடப்பட்ட அவரின் முதல் படைப்பு ஐந்து கவிதைகளை உள்ளடக்கியது. அடுத்த ஆண்டு ஒரு சிறுகதை மூலம் அவர் புனைகதை எழுத்தாளராக அறிமுகமானார்.
ஹான், இப்போது தனது ஆறாவது நாவலை எழுதி கொண்டிருக்கிறார். அவரது படைப்புகள் 30 க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை நார்வே எழுத்தாளர் யூன் ஃபோஸ்ஸ (Jon Fosse) வென்றார். முந்தைய வெற்றியாளர்களில் டோனி மோரிசன், டோரிஸ் லெசிங், கசுவோ இஷிகுரோ, கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் மற்றும் பாப் டிலான் ஆகியோர் அடங்குவர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)