இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க நினைத்து வங்கதேசம் பெரும் இழப்பை சந்திக்கப்போகிறதா?

வங்கதேசம், இந்தியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவிலிருந்து தரை வழியாக நூல் இறக்குமதிக்கு வங்கதேசம் தடை விதித்துள்ளது.
    • எழுதியவர், ரஜ்னீஷ் குமார்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றதிலிருந்து உலகம் முழுவதும் வர்த்தகப் போர் வெடித்துள்ளது. இது இந்தியாவையும் நேரடியாகப் பாதிக்கிறது.

ஆனால், இவை எல்லாவற்றையும் தாண்டி, இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையே வேறு வகையான வர்த்தகப் போர் நடந்து வருகிறது.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற ஆறாவது பிம்ஸ்டெக் (BIMSTEC) உச்சிமாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கும் வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸுக்கும் இடையிலான சந்திப்பிற்குப் பிறகு இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் மேம்படும் எனத் தோன்றியது.

ஆனால், அந்த சந்திப்பிற்கு மூன்று நாட்களுக்குப் பிறகு இந்திய அரசாங்கம் 2020 முதல் நடைமுறையில் உள்ள வங்கதேசப் பொருட்களை இந்தியா வழியாக ஏற்றுமதி செய்யும் வசதியினை (transshipment facility) திரும்பப் பெற்றது.

இந்த வசதி மூலமாகதான், வங்கதேசம் தன்னுடைய தயாரிப்புகளை வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இந்திய விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களைப் பயன்படுத்தி வந்தது.

வங்கதேசத்திற்கு வழங்கப்பட்டு வந்த இந்த வசதியை நிறுத்திக் கொள்வதற்கான காரணத்தை இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவிக்கையில், இந்திய விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் போக்குவரத்து அதிகமாகிவிட்டது, அதனால்தான் இந்த முடிவை எடுக்க வேண்டியிருந்தது என்று கூறியிருந்தார்.

இந்த நெரிசல் இந்திய ஏற்றுமதிகளின் செலவு மற்றும் தாமதத்தை அதிகரித்துள்ளதாக ஜெய்ஸ்வால் தெரிவித்திருந்தார். இந்தியாவின் முடிவு வங்கதேச ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தது.

வங்கதேசத்தின் முன்னணி ஆங்கில செய்தித்தாளான டாக்கா ட்ரிப்யூன் வெளியிட்ட ஒரு செய்திக் கட்டுரையில், "வங்கதேசத்திற்கு வழங்கப்பட்ட சரக்கு ஏற்றுமதி வசதி அரிதாகவே பயன்படுத்தப்பட்டு வந்தது. இது பிராந்திய ஒத்துழைப்பில் அடையாள ரீதியாக முக்கியமானதாகக் கருதப்பட்டது." என்று எழுதியுள்ளது.

வங்கதேசம், இந்தியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முகமது யூனுஸ் மார்ச் 26 முதல் 29 வரை சீனப் பயணத்தில் இருந்தார். இந்த பயணத்தின்போது, இந்தியாவை கோபமடையச் செய்யும் கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.

வங்கதேசத்தின் முடிவு

தற்போது இதற்கு பதிலாக வங்கதேசமும் ஒரு முடிவை எடுத்துள்ளது. இந்தியாவிலிருந்து தரை வழியாக நூல் இறக்குமதிக்கு வங்கதேசம் தடை விதித்துள்ளது.

இந்தியாவிலிருந்து வரும் மூலப் பொருட்களிலிருந்து வங்கதேசத்தின் ஜவுளி துறையை பாதுகாக்கவே தேசிய வருமான வாரியம் இந்த முடிவை எடுத்துள்ளதாக வங்கதேசத்தின் ஆங்கில செய்தித்தாளான தி டெய்லி ஸ்டார் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் இந்த முடிவு வங்கதேசத்திற்கே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இந்த முடிவு வங்கதேசத்தின் ஜவுளி ஆலை உரிமையாளர்களால் வரவேற்கப்படுவதாகவும் ஆனால் ஏற்றுமதியாளர்களால் எதிர்க்கப்படுவதாகவும் தி டெய்லி ஸ்டார் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியான கட்டுரையின்படி, தேசிய வருமான வாரியம் இந்தியாவிலிருந்து பெனாபோல், போமாரா, பங்ளாபந்தா, பரிமாரி மற்றும் சோனாமஸ்ஜித் ஆகிய பகுதிகள் வழியாக நூல் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளதாக தி டெய்லி ஸ்டார் குறிப்பிட்டுள்ளது.

"இது நல்ல முடிவு இல்லை. வங்கதேசம் ஏற்கனவே அமெரிக்க ஏற்றுமதிக்கு 10 சதவிகித வரியை எதிர்கொண்டுள்ளது. இந்திய பொருட்களிடமிருந்தும் நமக்கு போட்டி ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையில் இந்தியாவிலிருந்து நூல் இறக்குமதி மீதான எந்தத் தடையும் வங்கதேசத்தின் ஏற்றுமதியை பாதிக்கும். நாம் இந்தியாவிலிருந்து நூல் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். ஒரு திறந்த சந்தையில் இத்தகையை தடைக்கு எந்த அர்த்தமும் இல்லை", என்று ப்ளூமி பேஷன்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் முகமது ஃபஸ்லுல் ஹக் கூறுகிறார்.

வங்கதேசத்தின் இந்த முடிவு இந்தியாவுக்கும் நல்லதாகக் கருதப்படவில்லை. இந்தியா கடந்த ஆண்டு 1.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள நூலை வங்கதேசத்திற்கு ஏற்றுமதி செய்துள்ளது.

மேலும் கூடுதலாக 8.5 கோடி டாலர்கள் மதிப்பிலான மனிதர்களால் உருவாக்கப்பட்ட செயற்கை நார்களும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான இந்த நூல்கள் தரை வழியாக வங்கேசத்திற்குச் சென்றுள்ளன.

பருத்தி ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் நிர்வாக இயக்குநர் சித்தார்த் ராஜகோபால் ஆங்கில செய்தித்தாளான தி இந்துவிடம் கூறுகையில், "இந்தியாவிலிருந்து வங்கதேசத்திற்கு செல்லும் 32% பருத்தி ஏற்றுமதி தரை வழியாக நடக்கிறது. வங்கதேசத்தின் இந்த முடிவு மிகவும் கவலையளிக்கிறது." என்றார்.

"வட இந்தியாவில் ஜவுளி ஆலைகள், செலவு குறைவு என்பதால் தரை வழியாகத்தான் வங்கதேசத்திற்கு நூலை ஏற்றுமதி செய்து வந்தன. தற்போது அவை முந்ரா, தூத்துக்குடி அல்லது நஹவா சேவா துறைமுகங்கள் மூலம்தான் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும். அத்தகைய சூழ்நிலையில் செலவு அதிகமாகும். இந்தியாவிலிருந்து நூல் இறக்குமதி செய்யும் வங்கதேசத்தின் ரெடிமேட் ஆடை ஏற்றுமதியாளர்கள் அதிக பணம் செலுத்த வேண்டும் மற்றும் விநியோகத்திலும் தாமதம் ஏற்படும்." என்கிறார் சித்தார்த் ராஜகோபால்.

இந்திய ஜவுளித் துறை கூட்டமைப்பின் தலைவர் ராகேஷ் மெஹ்ரா தி இந்துவிடம் பேசுகையில், "இந்தியாவின் 45 சதவிகித நூல் ஏற்றுமதி வங்கதேசத்திற்குச் செல்கிறது. வங்கதேசத்தின் இந்த முடிவால் இந்தியாவில் நூல் ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்படும்." என்றார்.

வங்கதேசம், இந்தியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முகமது யூனுஸ் முன்னரும் கூட இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியை சந்திக்க விரும்பினார்.

வங்கதேசத்திற்குத்தான் இழப்பா?

குளோபல் ட்ரேட் ரிசெர்ச் இனிஷியேடிவ் ஆய்வு மையத்தின் நிறுவனர் அஜய் ஸ்ரீவாஸ்தவா பிபிசியிடம் பேசுகையில், "வங்கதேசத்தின் ஏற்றுமதியில் 80 சதவிகிதம் ஆடைகள்தான். வங்கதேச மக்கள் நல்ல தரமான ஆடைகளைத் தயாரிக்கிறார்கள். ஆடைகளைத் தயாரிக்க இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று சீனாவிலிருந்து துணியை இறக்குமதி செய்து அதை தொழிலாளர்கள் மூலம் வெட்டி, தைத்து சந்தைக்கும் அனுப்பலாம். ஆனால், இதில் எந்த மதிப்பு கூட்டலும் இல்லை. இரண்டாவது வழி என்பது நூலைக் கொண்டு வந்து துணியை உருவாக்கி அதை ஆடையாக மாற்றலாம்." என்றார்.

"இதில் அதிக மதிப்பு கூட்டல் உள்ளது மற்றும் அதிகமான மக்கள் வேலை வாய்ப்பு பெறுவர். வங்கதேச ஜவுளி வணிகர்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவிலிருந்து 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான நூலை வாங்கி வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், நூலிலிருந்து துணியை உருவாகும் நிறைய தொழிற்சாலைகள் வங்கதேசத்தில் இயங்கி வருகின்றன. தற்போது அவர்கள் சீனாவிலிருந்து நேரடியாக துணியை இறக்குமதி செய்து ஆடைகளைத் தயாரிப்பார்கள். இத்தகைய சூழ்நிலையில், வங்கதேசத்தில் அதிக அளவிலான மக்கள் தங்களின் வேலைகளை இழப்பார்கள். இதிலிருந்து சீனா பலனடையும் ஆனால் வங்கதேசம் இழப்புகளைச் சந்திக்கும்", என்கிறார் அஜய் ஸ்ரீவாஸ்தவா.

இந்தியா இந்த ஏற்றுமதி தடை தொடர்பான முடிவை தளவாட பிரச்னைகளால்தான் எடுத்ததாக வாதிடுகிறது, ஆனால் புவிசார் அரசியலின் சிக்கலுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட நேரம் முக்கியமானது.

மறுபுறம், வங்கதேசம் உள்ளூர் ஜவுளித் துறையின் நலனுக்காகவே இந்த முடிவை எடுத்ததாகக் கூறுகிறது, ஆனால் இந்த முடிவின் நேரமும் பல்வேறு விஷயங்களைச் சொல்கிறது.

முகமது யூனுஸ் மார்ச் 26 முதல் 29 வரை சீனப் பயணத்தில் இருந்தார். இந்த பயணத்தின்போது, இந்தியாவை கோபமடையச் செய்யும் கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.

முகமது யூனுஸ் நிலத்தால் சூழப்பட்ட வடகிழக்கு இந்தியாவை பற்றி குறிப்பிட்டிருந்தார். வடகிழக்கு இந்தியாவுக்கு கடலுடன் எந்த இணைப்பும் இல்லை மற்றும் வங்கதேசம்தான் அந்த பிராந்தியத்தின் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும் முகமது யூனுஸ், "இந்தியாவின் செவன் சிஸ்டர்ஸ்' (ஏழு வட கிழக்கு மாநிலங்களையும் சேர்ந்து Seven Sisters என்று அழைக்கப்படுகின்றன) நிலத்தால் சூழப்பட்டுள்ளன. கடலுடன் எந்த இணைப்பும் இல்லை.

இந்த பிராந்தியத்தில் உள்ள கடல் பகுதியின் ஒரே பாதுகாவலர் நாங்கள்தான். சீனாவின் பொருளாதாரத்திற்கு இங்கு போதுமான திறன் உள்ளது. சீனா இங்கு நிறைய பொருட்களை உற்பத்தி செய்து உலகம் முழுவதும் விநியோகம் செய்யலாம்." என்று பேசினார்.

வட கிழக்கு இந்தியா பல தசாப்தங்களாக கிளர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளது மற்றும் இந்த மாநிலங்களில் கிளர்ச்சியை ஊக்குவிப்பதாக வங்கதேசத்தின் மீதும் குற்றச்சாட்டு உள்ளது.

வடகிழக்கு இந்தியாவில் கிளர்ச்சி கட்டுப்பாட்டில் இருந்தாலும், ஒரு விதமான அமைதியின்மை தற்போதும் தென்படுகிறது. இந்தியாவின் இந்த பகுதி மிகவும் பதற்றமானதாகக் கருதப்படுகிறது.

குறிப்பாக சிலிகுரி வழித்தடம் முக்கியமானதாக கருதப்படுகின்றது. 22 கிலோமீட்டர் மட்டுமே உள்ள இந்த வழித்தடம், வடகிழக்கு இந்தியாவை நாட்டின் மற்ற பகுதிகளுடன் தரை வழியாக இணைக்கும் ஒரே வழியாகும். வங்கதேசமும் நேபாளும் இந்த வழித்தடத்தையொட்டிதான் தங்களுடைய எல்லைகளைப் பகிர்ந்து கொள்கின்றன. இது 'சிக்கன் நெக் (Chicken Neck)' என்றும் அழைக்கப்படுகிறது. பூடானும் சீனாவும் கூட இந்த வழித்தடத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில்தான் உள்ளன.

வங்கதேசம், இந்தியா

பட மூலாதாரம், Getty Images

சீனாவுக்கு பலன்

கடந்த ஆண்டு, லல்மோனிர்ஹாட் பகுதியில் சீனாவின் உதவியுடன் கட்டப்பட்ட பழைய விமானதளம் ஒன்றை வங்கதேசம் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதாக சமூக ஊடகங்களில் நிறைய விவாதங்கள் எழுந்தன.

இது இந்திய எல்லையிலிருந்து வெறும் 12 - 15 கிலோமீட்டர்கள் தொலைவிலும் மற்றும் சிலிகுரி வழித்தடத்திலிருந்து 135 கிலோமீட்டர்கள் தொலைவிலும் இருக்கிறது.

எனினும், இந்தத் தகவல்கள் அனைத்தும் போலியானவை என மறுக்கப்பட்டன. ஆனால், முகமது யூனுஸின் சீனப் பயணத்தையொட்டி இந்த விவாதம் மீண்டும் தொடங்கியுள்ளது.

வடகிழக்கு இந்தியாவை நிலத்தால் சூழப்பட்டது என குறிப்பிடுவதன் மூலம், இந்த பகுதியின் பதற்றத்தை வங்கதேசம் சாதகமாக்கிக் கொள்ளப் பார்க்கிறதா என்கிற விவாதத்தை முகமது யூனுஸ் மீண்டும் தொடங்கி வைத்துள்ளார்.

குளோபல் ட்ரேட் ரிசெர்ச் இனிஷியேடிவ்வின் நிறுவனர் அஜய் ஸ்ரீவஸ்தவா, முகமது யூனுஸ் வேண்டுமென்றே வடகிழக்கு இந்தியாவை குறிப்பிட்டதாகத் தெரிவிக்கிறார்.

மேலும் அஜய் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், "இது இந்தியாவின் பதற்றமான பகுதி என்பது முகமது யூனுஸிற்குத் தெரியும். சீனா தன்னுடைய கருத்தை முகமது யூனுஸைச் சொல்ல வைத்ததாகத் தெரிகிறது. சீனாவை அழைப்பதன் மூலம், முகமது யூனுஸ் இந்தியாவை சீண்ட முயற்சிக்கிறார். இந்தியாவைத் தவிர வங்கதேசத்திற்கு சீன வாய்ப்பும் இருப்பதாகத் தெரிவிக்க யூனுஸ் முயற்சிக்கிறார்." என்றார்.

முகமது யூனுஸ் முன்னரும் கூட இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியை சந்திக்க விரும்பினார், ஆனால் இந்தியா எந்த நேர்மறையான நகர்வையும் மேற்கொள்ளவில்லை.

ஆனால், இந்த முறை முகமது யூனுஸ் சீனப் பயணத்திலிருந்து திரும்பிய பிறகு, பிரதமர் மோதியும் தாய்லாந்தில் அவரைச் சந்திக்க ஒப்புக் கொண்டார்.

வங்கதேசம், இந்தியா

பட மூலாதாரம், Getty Images

இந்த அழுத்தத்தால் யார் பாதிக்கப்படுவார்கள்?

தி டிப்ளோமேட் இதழின் தெற்கு ஆசிய விவகாரங்களின் ஆசிரியர் சுதா ராமச்சந்திரன், "பாங்காக்கில் பிரதமர் மோதி உடனான முகமது யூனுஸின் சந்திப்பு வங்கதேசத்தில் வெற்றியாகப் பார்க்கப்பட்டது. முகமது யூனுஸின் சீனப் பயணம் அவரைச் சந்திக்க இந்தியப் பிரதமர் மோதியை நிர்ப்பந்தித்தது. ஆனால் சமீபத்திய நிகழ்வுகள் எல்லாம் இந்தியாவிற்குச் சாதகமாகச் செல்வதாகத் தெரிகிறது." என்று எழுதியுள்ளார்.

"டிரம்ப் வங்கதேசத்திற்கு எதிராக 37 சதவிகித வரியை அறிவித்துள்ளபோது, இந்தியா இந்த ஏற்றுமதி வசதியை நிறுத்தியுள்ளது. இது பாங்காக்கில் மோதி மற்றும் யூனுஸின் சந்திப்பிற்கு சில நாட்களுக்குப் பிறகே நிகழ்ந்துள்ளது. இந்தியாவின் முடிவு சர்வதேச வர்த்தகத்தில் வங்கதேசத்தை பாதிக்கலாம்.

இந்தியாவின் முடிவு தென்கிழக்கு ஆசியா, மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் வங்கதேசத்தின் வர்த்தகத்தைப் பாதிக்கும். வங்கதேச ஏற்றுமதியாளர்களுக்கு ஒப்பந்தம் இனி மேலும் விலையுயர்ந்ததாக ஆகும், தாமதங்கள் அதிகரிக்கும் மற்றும் வணிகப் பாதைகள் தொடர்பான நிலையற்றத் தன்மை அதிகரிக்கும்." என்று எழுதியுள்ளார்.

"இதன் விளைவாக, ஜவுளி தொழிற்சாலைகள் மூடப்படலாம் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் வேலை இழக்கலாம். இந்தியா மீதான முகமது யூனுஸின் நிலைப்பாடு சீனாவிடமிருந்தும் மற்றும் வங்கதேசத்திற்குள்ளும் கூட அவருக்கு பாராட்டைப் பெற்றுத் தரலாம். ஆனால், இந்தியாவுடன் அதிகரித்து வரும் அவநம்பிக்கையால் அவர் இழப்புக்களைக் சந்திக்கக்கூடும்."

சீனா, வங்கதேசத்துக்கு இந்தியாவை போல ஆக முடியாது என்கிறார் அஜய் ஸ்ரீவாஸ்தவா.

மேலும் அவர், "இந்தியா உடனான தனது பெரும் பகுதியிலான வர்த்தகம் தினசரி தேவைகளுக்கானது என்பதை வங்கதேசம் உணர வேண்டும். சீனா உடன் இது சாத்தியம் இல்லை. இந்தியா வங்கதேசத்திற்கு பெரிய சலுகை வழங்கியுள்ளது. சிகரெட்டுகள் மற்றும் மதுபானத்தைத் தவிர அனைத்தும் வங்கதேசத்திலிருந்து வரி இல்லாமல்தான் வருகின்றன. இந்தியா இத்தகைய முடிவை 2006-ல் எடுத்தது. வங்கதேச மக்கள் சீனாவிலிருந்து வரியில்லாமல் துணிகளை வாங்கி அவற்றை ஆடையாகச் செய்த பிறகு இந்தியாவுக்கு அனுப்பி வைக்கின்றனர். இது நம்முடைய உள்ளூர் தொழிற்துறைக்கு பிரச்னைகளை ஏற்படுத்துகிறது, ஆனால் இவை அனைத்தையும் தாங்கிய பிறகும், நாம் வங்கதேசத்திற்கு இந்த வசதியை வழங்கியுள்ளோம்." என்றார்.

"சீனா தான் சொல்ல விரும்பாதவற்றை, அடிக்கடி பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் மூலமாகச் சொல்கிறது. இந்தியா வங்கதேச பொருட்கள் மீதான வரியில்லை என்கிற பிரிவை நீக்கினால், அது அவர்களுக்கு கடினமாகிவிடும். ஐரோப்பாவுக்கு வரியில்லா ஏற்றுமதி செய்கிற வசதியும் இரண்டு ஆண்டுகளுக்குள் முடிவடைகிறது, ஏனென்றால் வங்கதேசம் வளர்கின்ற நாடு என்கிற பிரிவின் கீழ் வந்துவிடும். அத்தகைய சூழ்நிலையில் வங்கதேசத்திற்கான பாதை அவ்வளவு எளிமையானதாகத் தெரியவில்லை." என்கிறார் அஜய் ஸ்ரீவாஸ்தவா.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு