பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் - துப்பாக்கிச் சுடுதலில் மனு பாக்கர் வெண்கலம் வென்றார்

பாரிஸ் ஒலிம்பிக்ஸ், இந்தியா, மனு பாக்கர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாரிஸ் ஒலிம்பிக்ஸில் வெண்கலப் பதக்கத்துடன் மனு பாக்கர்

பாரிஸ் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலம் வென்றதன் மூலம் 140 கோடி இந்தியர்களையும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளார்.

சனிக்கிழமை (ஜூலை 28) நடந்த தகுதிச்சுற்றுப் போட்டியில் மனு பாக்கர் 580 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்து இன்றைய இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றார்.

சற்று முன் நடைபெற்ற இறுதிச்சுற்றில் அவர் மொத்தம் 221.7 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடம் பிடித்தார். இதன் மூலம் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. இந்தப் போட்டியில் தென் கொரிய வீராங்கனை ஓ யீ ஜின் 243.2 புள்ளிகள் சேர்த்து தங்கமும், மற்றொரு தென் கொரிய வீராங்கனை கிம் யெஜி 241.3 புள்ளிகள் சேர்த்து வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

பாரிஸ் ஒலிம்பிக்ஸ், இந்தியா, மனு பாக்கர்

பட மூலாதாரம், PARIS OLYMPICS WEBSITE

பிபிசியின் வளரும் வீராங்கனை-2020 விருது வென்றவர்

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை வென்றுள்ள மனு பாக்கர் 2020-ஆம் ஆண்டுக்கான பிபிசியின் 'வளரும் வீராங்கனை'க்கான விருதைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிபிசியின் இந்த ஆண்டிற்கான சிறந்த இந்திய வீராங்கனை விருதுகள் பட்டியலில் வளரும் இளம் வீராங்கனை ஒருவர் 'பிபிசி வளரும் வீராங்கனை' விருது வழங்கி கவுரவிக்கப்படுவார்.

சிறந்த இந்திய வீராங்கனைகளையும் அவர்களது சாதனைகளையும் கௌரவிப்பதே 'பிபிசி சிறந்த இந்திய வீராங்கனை' விருதின் நோக்கம். அத்துடன், வீராங்கனைகள் எதிர்கொள்ளும் சவால்களை விவாதிப்பதும், அவர்களது சாதனைப் பயணத்தை உலகிற்கு தெரியப்படுத்துவதும் இதன் நோக்கம் ஆகும்.

மனு பாக்கர், பாரிஸ் ஒலிம்பிக்ஸ்
படக்குறிப்பு, பிபிசி வளரும் வீராங்கனை-2020 விருதுடன் மனு பாக்கர்

'நாடே பெருமிதம் கொள்கிறது'

மனு பாக்கர் ஒலிம்பிக் பதக்கம் வென்றதும், செய்தியாளர்களிடம் பேசிய அவரது தந்தை ராம் கிஷன் பாக்கர், "மனுவை நினைத்து நாடே பெருமிதம் கொள்கிறது. அவர் பங்கு பெற வேண்டிய நிகழ்வுகள் இன்னும் இரண்டு உள்ளன. அவற்றில் அவர் இன்னும் சிறப்பாகச் செயல்படுவார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்றார்.

மேலும், “மனுவுக்கு அரசாங்கம் மற்றும் கூட்டமைப்பிலிருந்து நிறைய ஆதரவு கிடைத்தது. நாட்டு மக்களின் ஆசீர்வாதத்தால் மட்டுமே அவர் இதை அடைந்திருக்கிறார். இது மிகப்பெரிய சாதனை,” என்றார்.

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இந்தியாக்காக முதல் பதக்கத்தை வென்றுள்ள மனு பாக்கருக்கு பிரதமர் மோதி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

16 வயதில் 2 தங்கம் வென்ற மனு பாக்கர்

ஹரியானா ஜாஜர் மாவட்டத்தின் கோரியா எனும் கிராமத்தில் பிறந்தவர் மனு. இவரது தாய் பள்ளி ஆசிரியை, தந்தை மரைன் என்ஜினியர்.

2018-இல் மனு மெக்சிகோவில் நடந்த சர்வதேசத் துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டுக் கூட்டமைப்பு (ISSF) போட்டியில் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றார்.

பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் முதல் தங்கப்பதக்கம் வென்றார். பிறகு இரண்டாவது தங்கப்பதக்கத்தை 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்புப் பிரிவில் (Mixed) வென்றார் மனு.

16 வயதில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஒரே நாளில் இரண்டு தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார் மனு. இந்தச் சாதனையைப் படைத்த இளம் வீராங்கனை மனு ஆவார்.

அப்போதைய போட்டிக்குப் பிறகு பிபிசியின் நிருபர் சரோஜ் சிங், மனுவின் தந்தை ராம் கிஷன் பாக்கரிடம் பேசினார்.

இந்தக் கலந்துரையாடலில், தான் ஒரு மரைன் என்ஜினீயர் என்றும், அந்த வேலையில் இருந்து நின்றுவிட்டதாகவும் கூறினார் ராம் கிஷன்.

காணொளிக் குறிப்பு, பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் வென்ற மனு பாக்கர் - காணொளி

மகளுக்காக வேலையை விட்ட தந்தை

பாரிஸ் ஒலிம்பிக்ஸ்

பட மூலாதாரம், RAM KISHAN BHAKAR

படக்குறிப்பு, தந்தையுடன் மனு பாக்கர்

பள்ளி பயிலும் போது முதல் முறை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கலந்து கொண்ட மனு, துல்லியமாகக் குறிவைத்து சுட்டதை கண்டு ஆசிரியர்கள் வியந்தனர் என மனுவின் தந்தை ராம் கிஷன் கூறுகிறார்.

பிறகு, பயிற்சி மேற்கொண்டு பல்வேறு இடங்களில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளால் பங்கெடுக்கத் துவங்கினார்.

ஆனால், மனு உரிமம் பெற்ற துப்பாக்கியுடன் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்வது பிரச்னையாக இருந்தது. மேலும், அப்போது அவர் வாகனம் ஓட்டும் உரிமத்தைப் பெறுவதற்கான வயதை எட்டவில்லை. ஆகவே, அவர் போட்டி நடக்கும் இடங்களுக்குத் தனியாக வாகனம் ஓட்டிச் செல்ல இயலவில்லை.

எனவே, மகளின் கனவை நினைவேற்ற மனுவின் தந்தை ராம் கிஷன் தனது வேலையை விட்டு நின்றுவிட்டார்.

வேலையை ராஜினாமா செய்த பிறகு, மனு பாக்கரை துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடக்கும் இடங்களுக்கு அழைத்துச் சென்று வந்துள்ளார் ராம் கிஷன்.

"துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்குபெற நிறைய பணம் செலவாகும். ஒரு பிஸ்டலின் விலை 2 லட்சம் ரூபாய். இதுவரை நாங்கள் மனுவுக்காக 3 துப்பாக்கிகள் வாங்கியுள்ளோம். மனுவின் விளையாட்டுக்காக மட்டும் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வரை செலவு செய்தோம்," என்று ராம் கிஷன் பாக்கர் கூறுகிறார்.

பாரிஸ் ஒலிம்பிக்ஸ், இந்தியா, மனு பாக்கர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாரிஸ் ஒலிம்பிக்ஸில் 10 மீ. துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் சுடுவதற்காக குறி வைக்கிறார்.

பிஸ்டல் உரிமம் பெறப் போராடிய மனு

இந்தியாவுக்காக மெக்சிகோவில் 2 தங்கப்பதக்கம் வென்ற போது மனு பாக்கர் பயன்படுத்திய துப்பாக்கிக்கு உரிமம் பெற இரண்டரை மாதங்கள் காத்திருந்துள்ளார்.

பொதுவாக, வீரர்கள் ஒரே வாரத்தில் இதற்கான உரிமம் பெறுவர்.

அந்த நிகழ்வினை நினைவுகூர்ந்து பெரிய ராம் கிஷன் பாக்கர், "2017-ஆம் ஆண்டு மே மாதம், வெளிநாட்டில் இருந்து ஒரு பிஸ்டலை இறக்குமதி செய்ய விண்ணப்பித்திருந்தோம். ஆனால், எங்கள் விண்ணப்பத்தை ஜாஜர் மாவட்ட நிர்வாகம் நிராகரித்தது,” என்றார்.

"பின்னர் இந்தச் செய்தி ஊடகங்களில் வெளியானது. அப்போது உரிமம் பெறுவதற்கான விண்ணப்பத்தில் ‘தற்காப்புக்காக’ என்று காரணம் குறிப்பிடப்பட்டது தெரியவந்தது,” என்றார்.

இதன் பிறகே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த விஷயம் குறித்து விசாரித்து, 7 நாட்களில் உரிமம் வழங்கப்பட்டது.

மனு பாக்கரின் வகுப்பு தோழர்கள், இவரை ‘ஆல்-ரவுண்டர்’ என அழைத்து வந்துள்ளனர். ஏனெனில், மனு பாக்கர் குத்துச்சண்டை, தடகளம், ஸ்கேட்டிங், கராத்தே, ஜூடோ என பல்வேறு போட்டிகளில் பங்கெடுத்து வந்துள்ளார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)