இலங்கை அரசியல்வாதிகளின் தவறால் மலையக மக்கள் புறக்கணிப்பா?

மலையக மக்கள் புறக்கணிக்கப்படுவது, அரசியல்வாதிகளின் குறையா?
    • எழுதியவர், ரஞ்ஜன் அருண் பிரசாத்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

தமிழர் பிரச்னைக்கு எதிர்வரும் பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி சுதந்திர தினத்திற்கு முன்னதாக தீர்வை பெற்றுக்கொடுக்கும் எதிர்பார்ப்புடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சர்வகட்சி சந்திப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தமிழ் கட்சிகளை அழைத்து அண்மையிலும் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

தமிழர் பிரச்னை குறித்த பேச்சுவார்த்தைகளில் வடக்கு மற்றும் கிழக்கு தமிழர்கள் மாத்திரம் கருத்தில் கொள்ளப்படுகின்றார்கள் எனவும், தென் பகுதியில் வாழும் மலையக தமிழர்கள் கைவிடப்பட்டுள்ளதாகவும் தற்போது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

தேசிய இனப் பிரச்னை விவகாரத்தில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ்க் கட்சிகளுடன் மாத்திரமே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவிக்கின்றார்.

நுவரெலியா பகுதியில் இடம்பெற்ற சந்திப்பொன்றிலேயே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய இனப் பிரச்னை விவகாரத்தில் அரசியல் தீர்வு திட்டம் தொடர்பாக மலையக கட்சிகளுடனும், ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அவ்வாறு மலையக தமிழ் கட்சிகள் புறக்கணிக்கப்படும் பட்சத்தில், சர்வகட்சி மாநாட்டை தமிழ் முற்போக்கு கூட்டணி புறக்கணிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

''வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கு மாத்திரமே பிரச்னை உள்ளது என இதுவரை காலமும் நினைத்துக்கொண்ருந்தோம். வடக்கு, கிழக்கு பற்றி பேசுவது தப்பில்லை. ஆனால், மலையகத்தை மறந்து விட்டனர். இந்த நிலைமை தற்போது மாறியுள்ளது." என மனோ கணேசன் தெரிவிக்கின்றார்.

இந்த விடயம் தொடர்பில் தானும், நாடாளுமன்ற உறுப்பினர் திகாம்பரமும் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அவர் கூறுகின்றார்.

மலையக மக்கள் புறக்கணிக்கப்படுவது, அரசியல்வாதிகளின் குறையா?
படக்குறிப்பு, மனோ கணேசன்

மலையக மக்கள் மீதும் அக்கறை கொள்ள வேண்டும் என தாம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்ததாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

''வடக்கு, கிழக்கு தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு நடத்துகின்றீர்கள். தேசிய இனப்பிரச்னையானது வடக்கு, கிழக்குக்கு மட்டும் உரித்தானது அல்ல. எங்களிடமும் பேசுங்கள் என்றோம். எமது மக்களுக்கும் அரசியல், சமூக மற்றும் கலாசார அபிலாஷைகள் உள்ளன. தேவைப்பாடுகள் உள்ளன. எனவே, எங்கள் பிரச்னை பற்றியும் கண் திறந்து பாருங்கள், காது கொடுத்து கேளுங்கள் எனவும் குறிப்பிட்டோம்." என அவர் கூறுகின்றார்.

இந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த விவகாரம் தொடர்பில் மலையக கட்சிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றால், சர்வகட்சி மாநாட்டை தமிழ் முற்போக்கு கூட்டணி புறக்கணிக்கும் என மனோ கணேசன் தெரிவிக்கின்றார்.

அரசியல் ஆய்வாளரின் பார்வை

இந்த சந்தர்ப்பத்தில் தப்பித்தல்வாதத்தை பயன்படுத்தாமல், மலையக மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மலையக அரசியல் தலைவர்கள் முன்னெடுக்க வேண்டும் என அரசியல் ஆய்வாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

''இனப் பிரச்னை தீர்வு என்றாலே, அது வடக்கு மக்களுக்கான பிரச்னையின் தீர்வு என்ற ஒரு தோற்றப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அது மாத்திரம் இனப் பிரச்னை அல்ல. இலங்கையிலுள்ள எல்லா இன மக்களுக்கும் பிரச்னை இருக்கின்றது என்பதை சொல்லும் பொறுப்பு, அந்தந்த குறிப்பிட்ட இனத்தை பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய அரசியல் தலைவர்களின் பொறுப்பு. வடக்கு அல்லது வடகிழக்கு பிரச்னையை மாத்திரம் ஜனாதிபதி பேசுகின்றார் என உணர்வார்களாயின், அது யாராக இருந்தாலும், அவ்வாறு உணர்வார்களாயின், அது பலவீனமான அம்சம். இந்த பலவீனமான அம்சத்தின் பெரும்பங்கை இந்த அரசியல் தலைவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய நிலைப்பாடு. 

ஏனெனில், தங்களுடைய இனப் பிரச்னைகளும் தீர்க்கப்பட வேண்டும் என்ற செய்தியை அழுத்தமாக இவர்கள் அரசுக்கு சொல்லவில்லை. அதை உணர செய்யவில்லை. சர்வதேசத்திற்கு உணர செய்யவில்லை. குறைந்த பட்சம், இந்தியாவிற்கு கூட இவர்கள் உணர செய்யவில்லை. தமிழ் முற்போக்கு கூட்டணி என்பது, இந்தியாவின் செல்ல பிள்ளையாக இலங்கையில் இயங்கக்கூடிய ஒரு கூட்டணி. அவர்கள் கூட கூட்டணியாக 6 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், இந்தியாவிற்கு பிரச்னையை உணர செய்யவில்லை. 

மலையக மக்கள் புறக்கணிக்கப்படுவது, அரசியல்வாதிகளின் குறையா?
படக்குறிப்பு, எம்.திலகராஜ்

இது எல்லாம் பலவீனத்தின் குறிக்காட்டியாகும். மற்ற விடயம், எதிர்கட்சியில் இருக்கக்கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைத்து பேசுகின்றார்கள் என்றால், அதே போல எதிர்கட்சியில் இருக்கக்கூடிய இவர்களை அழைத்து பேசவில்லை என்றால், நாடாளுமன்ற குழு பலவீனமாக இருக்கின்றது. தங்களின் பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் உயர்த்தி பேசவில்லை.

மூன்றாவது விடயம் என்னவென்றால், ஒரு ஆசனத்துடன் வருகைத் தந்த ஒருவர் தற்போது ஜனாதிபதியாக பதவி வகிக்கின்றார். அந்த ஒரு ஆசனத்தை வைத்துக்கொண்டே இனப் பிரச்னையை தீர்க்க போகின்றேன் என கூறி வேலைகளை செய்கின்றார் என்றால், ஐந்து ஆசனத்தை வைத்துக்கொண்டிருப்பவர்கள் அந்த ஒரு ஆசனத்தை எப்படி பயன்படுத்த வேண்டும். அதை செய்யாது. புறக்கணிப்பது என்பது தப்பித்தல்வாதம். 

இப்போது தப்பிப்பதை செய்யக்கூடாது, எப்படி உள்ளே போவது என்பதை யோசிக்க வேண்டும். பிப்ரவரி 4ஆம் தேதிக்கு முன்னர் இனப் பிரச்னையை முடிப்பதாக ஜனாதிபதி உறுதி அளித்துள்ளார். அவர் முடிக்கின்றாரா? இல்லையா? என்பது வேறு விடயம். அது நடக்காது என்பது வேறு விடயம். ஆனால், பிப்ரவரி 4ஆம் தேதி என்ற காலக்கேடு விதித்து, தீவிர பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போது, ஒரு சமூகத்தின் பிரதிநிதியாக தங்களை முன்னிலைப்படுத்த தெரியாத தலைவர்கள், தங்களின் பலவீனத்தை வெளிப்படுத்துகின்றார்கள்.

 மறுபக்கமாக ஒரேயொரு ஆசனத்தில் தேசிய பட்டியல் ஊடாக வந்துக்கொண்டு, இத்தனை வருட கால இனப் பிரச்னையை தீர்ப்பதற்கான காலக்கெடுவை மூன்று மாதத்திற்குள் வைத்திருக்கின்றனேன் என சொல்ல வருவது, ஒரு தைரியத்தை கொடுக்கின்றது. பொருளாதார நெருக்கடி காலப் பகுதியில் இப்படியாக விடயத்தை ஜனாதிபதி கூறுகின்றார்.

அது கிடைக்கும், கிடைக்காது என்பதற்கு அப்பால், தங்களையும் உள்ளீர்த்துக்கொண்டு, அந்த பிரச்னையை தீர்த்துக்கொள்ளும் பொறுப்பு இந்த அரசியல் தலைவர்களுக்கு உரித்தானது. நான் ஒரு வேண்டுக்கோள் அல்லது சவாலாக ஒரு விடயம்தை முன்வைக்கின்றேன். குறைந்த பட்சம், நாளை ஜனாதிபதி இவர்களை அழைத்து விடுவாராக இருந்தால், மலையக மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதற்கான இவர்கள் வைத்திருக்கும் முன்மொழிவுகள் என்ன?" என அரசியல் ஆய்வாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

மூத்த ஊடகவியலாளரின் பதில்

மலையக மக்கள் புறக்கணிக்கப்படுவது, அரசியல்வாதிகளின் குறையா?

பட மூலாதாரம், ஆர்.சிவராஜா

படக்குறிப்பு, ஆர்.சிவராஜா

மலையக மக்களின் பிரச்னை தீர்க்கும் விடயத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது தவறுகள் எதுவும் கிடையாது என மூத்த ஊடகவியலாளர் ஆர்.சிவராஜா தெரிவிக்கின்றார்.

''அரசியல் தீர்வு என்று பார்க்கும் போது, போரால் பாதிக்கப்பட்ட நேரடியான சமூகமாகவே வடக்கு மக்களை பார்க்கின்றார்கள். அடுத்த கட்டமாக மலையக பிரச்னைகள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். இந்த விடயத்தில் ரணில் மீது தவறு இல்லை. இது இவர்கள் மீதே தவறு காணப்படுகின்றது. ஆரம்பத்திலேயே தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து, மலையக கட்சிகள் ஒன்றிணைந்து பிரச்னையை தீர்ப்பதற்கு இவர்கள் எந்தவொரு ஏற்பாட்டையும் செய்யவில்லை. 

மலையக தமிழ் அரசியல் கட்சிகள், அல்லது மலையக புத்திஜீவிகள் சேர்ந்து, இதற்கான ஒரு ஏற்பாட்டை செய்திருக்க வேண்டும். அப்படியொன்றை செய்யவில்லை. இந்த விடயத்தில் ரணிலை குறை சொல்வது என்பது இரண்டாவது விடயம். அதற்கான முதல் ஏற்பாட்டை மலையக புத்திஜீவிகள் சமூகமோ அல்லது அரசியல் சமூகமோ செய்திருக்க வேண்டும். 

ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்ப கூட்டம் நடைபெற்றது. அந்த நேரம் மலையகத்தையும் உள்ளடக்க வேண்டும் என்று இவர்கள் சொல்லியிருக்க வேண்டும். அப்போது ஏன் இவர்கள் அதை சொல்லவில்லை. இது மலையக அரசியல்வாதிகளின் தவறு கிடையாது. அது இவர்களின் குறைபாடாகும். அந்த குறையை இவர்கள் நிவர்த்தி செய்திருக்க வேண்டும். மலையக மக்களின் பிரச்னைகளை தீர்க்கும் விடயத்தில், மலையக அரசியல் கட்சிகள் அல்லது மலையக புத்திஜீவிகள் கடைபிடிக்கும் அணுகுமுறை மாற்றப்பட வேண்டும் என நான் கூறுகின்றேன்." என மூத்த ஊடகவியலாளர் ஆர்.சிவராஜா குறிப்பிடுகின்றார். 

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: